மத்தியப்பிரதேசத்தின் பன்னாவில், புலிகள் சரணாலயப் பகுதியிலும் அருகாமை காட்டுப் பகுதிகளிலும் இருக்கும் சட்டவிரோத சுரங்கங்களில் இளைய, முதிய தொழிலாளர்கள், தம் வாழ்க்கைகளை மாற்றக் கூடிய கல் ஒன்றை கண்டுபிடித்து விட முடியுமென்ற நம்பிக்கையுடன் வேலை பார்க்கிறார்கள்.
வைரச் சுரங்கங்களில் பெற்றோர் பணிபுரிந்து கொண்டிருக்க, மண்ணை இங்கு கிளறிக் கொண்டிருக்கும் குழந்தைகள் பெரும்பாலும் கோண்ட் சமூகத்தை (பட்டியல் பழங்குடியாக மாநிலத்தில் வரையறுக்கப்பட்ட சமூகம்) சேர்ந்தவைதாம்.
“வைரம் ஏதாவது கிடைத்தால், என் மேற்படிப்புக்கு அதை பயன்படுத்திக் கொள்வேன்,” என்கிறார் அவர்களில் ஒருவர்.
குழந்தைத் தொழிலாளர் (தடை மற்றும் ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம் (
2016
), அபாயம் நிறைந்த தொழிலாக பட்டியலிட்டிருக்கும் சுரங்கத் தொழிலில், குழந்தைகள் (14 வயதுக்கு கீழ்) மற்றும் பதின்வயதினர் (18 வயதுக்கு கீழ்) ஆகியோரை வேலைக்கு அமர்த்துவதை தடை செய்கிறது.
கிட்டத்தட்ட 300 கிலோமீட்டர் தொலைவில், உத்தரப்பிரதேச மிர்சாப்பூர் குழந்தைகளும் தங்களின் பெற்றோரோடு பணியிடத்துக்கு வருகின்றனர். இங்கு, சட்டவிரோத சுரங்கங்களில் பணிபுரிய வருகின்றனர். இக்குடும்பங்களில் விளிம்புநிலை சமூகங்களை சார்ந்த பல குடும்பங்கள், சுரங்கங்களுக்கு அருகே ஆபத்தான நிலையில் வாழ்கின்றன.
”என் வீடு இந்த சுரங்கத்துக்கு பின்னால் இருக்கிறது,” என்னும் சிறுமி, “நாளொன்றுக்கு ஐந்து முறை வெடி வைக்கப்படுகிறது,” என்கிறார். (ஒருநாள்) ஒரு பெரும் பாறை விழுந்து (வீட்டின்) நான்கு சுவர்களையும் உடைத்து விட்டது.”
இப்படம், கல்வியுரிமை மறுக்கப்பட்டு பள்ளிக்கு செல்லாமல் அமைப்பு சாரா சுரங்கப் பணிகளில் பணியாற்றும் எண்ணற்ற குழந்தைகள் பற்றிய கதையை சொல்கிறது.
தமிழில்: ராஜசங்கீதன்