“ஒரு நாள் நான் இந்தியாவுக்காக ஒலிம்பிக் பதக்கம் வெல்ல விரும்புகிறேன்,” என்கிறார் அந்தப் பெண் – தன்னுடைய விளையாட்டுப் பள்ளியைக் கடந்து செல்லும் தார்ச்சாலையில் தனது ஓட்டப் பயிற்சியை முடித்த கையோடு மூச்சு வாங்கப்பேசுகிறார் அவர். அவரது சோர்வடைந்த, காயமடைந்த கால்கள் நான்கு மணி நேரப் பயிற்சிக்குப் பிறகு மைதானத்தில் ஓய்வெடுக்கின்றன.
அந்த 13 வயது நீண்ட தொலைவு ஓட்டப் பந்தய வீரர் ஏதோ ஒரு நவீன கால டிரெண்டுக்காக வெறும் காலோடு ஓடவில்லை. “என் அப்பா அம்மாவால் விலை மிகுந்த ஓட்டப்பந்தய ஷூ வாங்கித் தர முடியாது என்பதால்தான் நான் அப்படி ஓடுகிறேன்,” என்கிறார் வர்ஷா கதம் என்கிற அந்தப் பெண்.
மகாராஷ்டிரத்தின் வறட்சி பீடித்த மராத்வாடா பகுதியில் உள்ள மிகுந்த ஏழ்மையான மாவட்டங்களில் ஒன்றான பர்பணி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளிகளான விஷ்ணு – தேவ்ஷாலா இணையரின் மகள் அவர். மகாராஷ்டிராவில் பட்டியல் சாதியாக வகைப்படுத்தப்பட்டுள்ள மாதங் சமூகத்தை சேர்ந்தது அவரது குடும்பம்.
“ஓடுவது எனக்குப் பிடிக்கும்,” என்று கூறும்போது அவரது கண்கள் மின்னுகின்றன. “5 கி.மீ. தூர புல்தானா நகர்ப்புறக் காட்டுவழி மாரத்தான் போட்டிதான் 2021ல் நான் கலந்துகொள்ளும் முதல் ஓட்டப் பந்தயம். இதில் நான் இரண்டாவதாக வந்து என்னுடைய முதலாவது பதக்கத்தை வென்றபோது மகிழ்ச்சியாக இருந்தது,” என்கிறார் அந்த மன உறுதிமிக்க இளம் பெண்.
அவருக்கு 8 வயது இருக்கும்போதே அவரது ஆர்வத்தை அடையாளம் கண்டார்கள் அவரது பெற்றோர். “என் தாய் மாமா பராஜி கெய்க்வாட் மாநில அளவிலான தடகள வீரர். அவர் தற்போது ராணுவத்தில் இருக்கிறார். அவரைப் பார்த்து நானும் ஓடத் தொடங்கினேன்,” என்கிறார் அவர். 2019-ல் மாநில அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான 4 கி.மீ. தூர கிராஸ் கண்ட்ரி ஓட்டப் பந்தயத்தில் இரண்டாம் இடம் பிடித்தார் அவர். “அது ஓட்டப்பந்தயத்தை தொடர்ந்து மேற்கொள்ள எனக்கு மிகுந்த ஊக்கத்தை அளித்தது,” என்கிறார் அவர்.
















