மகன் விட்டுச் சென்ற இரண்டு மகன்கள் மற்றும் ஆறு மகள்கள் பற்றி பல முறை கவலை கொள்கிறார் பாட்டியான புதெ மஜி. இளம் குழந்தையான ஜானகிக்கு வயது ஆறு. “அவர்களை எப்படி வளர்க்கப் போகிறோம் எனத் தெரியவில்லை,” என்கிறார் 70 வயது கோண்ட் பழங்குடியான அவர். ஒடிசாவின் பலாங்கிர் மாவட்டத்திலுள்ள ஹியால் கிராமத்தில் வசிக்கிறார்.
சிறுநீரக கோளாறாக குடும்பம் நம்பும் குறைபாட்டுக்கு, இரு வருடங்களுக்கு முன் அவரது 50 வயது மகன் பலியானார். புலம்பெயர் தொழிலாளர்களாக அவரும் அவரது மனைவியான 47 வயது நமனியும் செங்கல் சூளைகளில் வேலை பார்க்க தெலெங்கானா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு போன்ற பகுதிகளுக்கு செல்வார்கள்.
“நவம்பர் 2019-ல் செங்கல் சூளையில் வேலை பார்க்க நாங்கள் சென்னைக்கு சென்றோம்,” என்கிறார் நமனி. அவர்களின் குடும்பத்திலிருந்து 10 பேர் சென்றதாக குறிப்பிடுகிறார். அவரின் கணவரான 50 வயது ந்ருபா, அவர்களின் மூத்த மகனான 24 வயது ஜுதிஷ்திர் மற்றும் அவரின் மனைவியான 21 வயது பர்மிளா, 19 வயது பூர்ணிமா, 16 வயது சஜ்னே, 15 வயது குமாரி மற்றும் அவரின் கணவரான 21 வயது தினேஷ் உள்ளிட்டோர் சென்றனர். “உள்ளூர் ஒப்பந்ததாரரால் எங்கள் ஒவ்வொருவருக்கும் 25,000 ரூபாய் முன்பணம் கொடுக்கப்பட்டது,” என்கிறார் அவர். 10 வயது சபித்ரியும் ஆறு வயது ஜானகியும் உடன் சென்றனர். அவர்களுக்கு பணம் கிடையாது.
ஜூன் 2020-ல் கோவிட் காரணமாக அவர்கள் அனைவரும் கிராமத்துக்கு திரும்பினர். தற்காலிக மருத்துவத்துக்கும் பராமரிப்புக்கும் பள்ளிகளிலும் சமூக நலக் கூடங்களிலும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ஏற்பாடுகளை ஒடிசா அரசாங்கம் செய்திருந்தது. “கிராமப் பள்ளியில் நாங்கள் 14 நாட்கள் தங்கியிருந்தோம். என் கணவரும் நானும் தலா 2,000 ரூபாய் இங்கு தங்கியிருந்ததற்கு (ஒடிசா அரசாங்கத்திடமிருந்து) பெற்றோம்,” என நினைவுகூருகிறார் நமனி.












