ரூபேஷ் மொஹர்கர் 20-களில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களின் குழுவை சிறிய கலந்துரையாடலுக்கு அழைக்கிறார்.
"கவனமாக இருங்கள்," என்று 31 வயதான அவர் முழங்குகிறார். அவருடைய சுருக்கமான உரையை இளைஞர்கள் கவனமாகக் கேட்கிறார்கள். "சோம்பலுக்கு இடமில்லை!" தற்போதைய வாய்ப்பை விடக் கூடாது என அவர்களுக்கு நினைவூட்டுகிறார்.
ஆமோதிப்பது போல் தலையசைத்து, கவனமாக முகத்தை வைத்துக் கொண்டு, கூட்டத்தினர் வெற்றி முழக்கமிடுகின்றனர். அனைவரும் உற்சாகமடைந்து, ஒரு மாதமாக செய்து வரும் ஓடுதல் போன்ற உடற்பயிற்சிக்கு திரும்புகின்றனர்.
ஏப்ரல் மாத அதிகாலை 6 மணி. நகரின் ஒரே பொது மைதானமான பந்தாராவில் உள்ள சிவாஜி ஸ்டேடியம், உற்சாகமான இளைஞர்களால் நிரம்பி வழிகிறது. வியர்வை சிந்தியபடி 100 மீட்டர், 1,600 மீட்டர் என அவர்கள் ஓட்டப்பயிற்சியில் உள்ளனர். உடல் வலிமையை மேம்படுத்த குண்டு எறிதல் மற்றும் பிற பயிற்சிகளை செய்கின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் தேர்தலில் போட்டியிடும் நிலையில், பொதுத் தேர்தல் நெருங்கி வருவது அவர்களின் கவனத்தில் இல்லை. பண்டாரா-கோண்டியா நாடாளுமன்றத் தொகுதியில் ஏப்ரல் 19, 2024 அன்று நீண்ட, கடினமான மற்றும் வியர்வை நிறைந்த தேர்தல் பருவத்தின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தேர்தல் மோதல்களுக்கு அப்பால், இந்த இளைஞர்களும், இளம்பெண்களும் வரவிருக்கும் மாநில காவல்துறை தேர்வுக்கு தயாராவதில் கவனம் செலுத்துகின்றனர். இதற்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 15 வரை பெறப்படுகின்றன. போலீஸ் கான்ஸ்டபிள்கள், கான்ஸ்டபிள் டிரைவர்கள், மாநில ரிசர்வ் போலீஸ் படை, போலீஸ் பேண்ட்மேன்கள் மற்றும் சிறை கான்ஸ்டபிள்களுக்கான காலியிடங்களை நிரப்ப உடல் மற்றும் எழுத்துத் தேர்வுடன் இணைந்த தேர்வு ஓரிரு மாதங்களில் நடத்தப்படும்.













