இலுப்பை (Madhuca longifolia) பூக்கும் பருவம் இரண்டு மூன்று மாதங்களுக்கே இருக்கும். மத்திய இந்தியா முழுவதிலும் காணப்படும் இந்த உயரமான மரங்கள் கோடை காலத் தொடக்கத்தில் தனது அற்புதமான மலர்களை உதிர்க்கும்.
பளிச்சென்ற பச்சை நிற மலர்களை பொறுக்குவது சத்தீஸ்கரில் ஒரு திருவிழா நிகழ்வு. சிறு குழந்தைகள் முதல் பலரும் காட்டில் தரையில் இருந்து இந்தப் பூக்களை பொறுக்கும் வேலையில் ஈடுபட்டிருப்பார்கள். “இது கடினமான வேலை. நாங்கள் இலுப்பைப் பூவை அதிகாலையில் பொறுக்குகிறோம். மீண்டும் மலையிலும் பொறுக்குகிறோம்,” என்கிறார் பூபிந்தர். தம்தாரி மாவட்டம் சாங்காவ்ன் என்ற இடத்தைச் சேர்ந்தவரான இவர், இந்தப் பூ பொறுக்கும் வேலையில் உதவி செய்வதற்காக தனது பெற்றோருடன் வந்திருக்கிறார். ஏராளமானவர்கள் சூழ்ந்திருக்க இங்கே ஒரு திருவிழா போன்ற சூழ்நிலை நிலவுகிறது.
பூ பூக்கும் காலத்தில் இலுப்பையின் நறுமணம் இந்தப் பகுதி முழுவதும் கமழும். ராய்கர் மாவட்டத்தின் தரம்ஜெய்கர் என்ற இடத்தில் இருந்து சத்தீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்பூர் நோக்கி நூற்றுக்கணக்கான இலுப்பை மரங்களுக்கு அடியிலேயே பயணித்தபோது ஊர் மக்கள் அந்தப் பூக்களை திரட்டுவதில் பரபரப்பாக ஈடுபட்டிருந்தார்கள். இந்தப் பூக்களை அவர்கள் உலர்த்தி மாவு தயாரிக்கவும், மது தயாரிக்கவும் வேறு பலவற்றுக்காகவும் பயன்படுத்துவார்கள்.
“காட்டில் இருந்து நாங்கள் திரட்டும் மிக முக்கியமான பொருள் இலுப்பைப் பூ. பட்டினிக் காலத்தில் இது உணவாகப் பயன்படுத்தப்பட்டது. ஒருவருக்குப் பணம் வேண்டுமானால் அவர் கொஞ்சம் இலுப்பையை விற்பார்,” என்கிறார் கங்காராம் பைங்க்ரா. இவர் அம்பிகாபூரைச் சேர்ந்த பழங்குடித் தலைவரும் சமூக செயற்பாட்டாளரும் ஆவார். கூலி வேலை கிடைக்காத காலத்தில் மக்கள் இந்தப் பூக்களை நம்பி வாழ்ந்ததைப் பற்றி இவர் கூறுகிறார்.













