கட்சிரோலி மக்களவை தொகுதியில் ஏப்ரல் 19ம் தேதி நடந்த முதல் கட்ட வாக்குப்பதிவுக்கு ஒரு வாரத்திற்கு முன், மாவட்டத்தின் 12 தாலுகாக்களை சேர்ந்த 1450 கிராம சபைகள், நிபந்தனையற்ற ஆதரவை காங்கிரஸ் வேட்பாளர் நம்தேவ் கிர்சனுக்கு எதிர்பாராதவிதமாக வழங்கியிருக்கின்றன.
வெளிப்படையாக கூட அரசியல் நிலைப்பாடுகளைப் பேச பழங்குடிகள் தயங்கும் ஒரு மாவட்டத்தில், கிராம சபைகளின் ஆதரவு காங்கிரஸுக்கு ஆச்சரியத்தையும் பாரதீய ஜனதா கட்சிக்கு அதிர்ச்சியையும் அளித்திருக்கிறது. அத்தொகுதியின் மக்களவை உறுப்பினரான பாஜகவின் அஷோக் நேடேதான் இம்முறையும் மூன்றாவது முறையாக அத்தொகுதியில் போட்டி போடுகிறார்.
ஏப்ரல் 12ம் தேதி, கட்சிரோலி நகரத்திலுள்ள சுப்ரபாத் மங்கள் காரியாலயா திருமண மண்டபத்தில் கிராம சபையின் ஆயிரக்கணக்கான பிரதிநிதிகளும் அலுவலர்களும் காங்கிரஸ் வேட்பாளருக்கும் தலைவர்களுக்கும் இடையிலான பேச்சு முடிய, பொறுமையாக நாள் முழுக்கக் காத்திருந்தனர். தென்கிழக்கு ஒன்றியமான பாம்ரகாரைச் சேர்ந்த பழங்குடி குழுவான பாடியாவை சேர்ந்த வழக்கறிஞரும் செயற்பாட்டாளருமான லால்சு நகோட்டி மாலையில் நிதானமாக நிபந்தனைகளை கிர்சானுக்கு வாசித்து காண்பித்தார். அவரும் ஆதரவை ஏற்றுக் கொண்டு, நாடாளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டதும் நிபந்தனைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தார்.
பிற நிபந்தனைகளுடன், கட்டற்று காட்டுப் பகுதிகளில் அகழ்வு செய்யும் சுரங்கப் பணிகளை நிறுத்த வேண்டும் என்கிற நிபந்தனையும் அடக்கம். வன உரிமை சட்ட விதிகள் சரி செய்யப்பட வேண்டும் என்றும் முறையீடுகள் இருந்த கிராமங்களுக்கு குழு வன உரிமைகள் (CFR) அளிக்கப்பட வேண்டும் என்பதும் அரசியல் சாசனத்துக்கு கட்டுப்பட வேண்டும் என்பதும் முக்கிய நிபந்தனைகளாக இருந்தன.
“எங்களின் ஆதரவு இந்தத் தேர்தலுக்கு மட்டும்தான்,” என கடிதம் தெளிவாக வரையறுத்தது. “மக்களாகிய நாங்கள், வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனில், எதிர்காலத்தில் வேறு ஒரு நிலைப்பாட்டை எடுப்போம்,” என்றது கடிதம்.
கிராம சபைகள் ஏன் இந்த முடிவை எடுத்தன?
“சுரங்கங்கள் தருவதை விட அதிகமாக நாங்கள் அரசுகளுக்குக் கொடுக்கிறோம்,” என்கிறார் முன்னாள் காங்கிரஸ் தலைவரும் மூத்த பழங்குடி செயற்பாட்டாளருமான சைனு கோடா. “இப்பகுதியில் காடுகளை அழிப்பதும் சுரங்கங்களை தோண்டுவதும் பெரும் தவறு.”
கொலைகள், ஒடுக்குமுறை, வன உரிமை பெறுவதற்கான நீண்ட காத்திருப்பு, கோண்ட் பழங்குடி மீதான ஒடுக்குமுறை என எல்லாவற்றையும் கோடா பார்த்திருக்கிறார். நல்ல உயரத்துடன் உறுதியாக இருக்கும் அவர், தன் 60 வயதுகளில் இருக்கிறார். அடர் மீசையை கொண்ட அவர், கட்சிரோலியின் பட்டியல் பகுதிகளின் விரிவுபடுத்தப்பட்ட பஞ்சாயத்துக்குக் (PESA) கீழ் வரும் கிராம சபைகள், தற்போதைய பாஜக எம்.பி.க்கு எதிராக போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவளிப்பதென்ற முடிவை இரு காரணங்களுக்காக எடுத்ததாக கூறுகிறார். ஒன்று, வன உரிமை சட்டம் நீர்த்துப் போக வைக்கப்பட்டது. இரண்டாவது, பண்பாட்டையும் வாழ்விடத்தையும் அழிக்கும் வகையில் காட்டுப்பகுதியில் நடந்து வரும் சுரங்கப் பணிகள். “காவல்துறையின் தொடர் ஒடுக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்,” என்கிறார் அவர்.
பழங்குடி கிராம சபை உறுப்பினர்களுடன் மூன்று கட்ட ஆலோசனைகள் நடந்து, ஆதரவுக்கான நிபந்தனைகள் குறித்த ஒருமித்த முடிவு எட்டப்பட்டது.
“நாட்டின் முக்கியமான தேர்தல் இது,” என்கிறார் நகோடி. 2017ம் ஆண்டில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு மாவட்டக் கவுன்சிலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் அவர். மாவட்டத்தில் பரவலாக ’வக்கீல் சார்’ என அழைக்கப்படுபவர் அவர். “தெளிவான ஒரு நிலைப்பாட்டை எடுப்பதென மக்கள் முடிவெடுத்தனர்.”
கடந்த நவம்பரில் (2023), இன்னொரு இரும்புத் தாது சுரங்கம் திறக்கப்படுவதற்கு எதிராக 253 நாட்கள் பழங்குடி சமூகத்தினர் நடத்திய அமைதிப் போராட்டத்தில், ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விட்டது கட்சிரோலி காவல்துறை.
பாதுகாப்புப் படையினரை தாக்கியதாக பொய்க் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, ஆயுதம் தாங்கிய படையினர் பெரும் எண்ணிக்கையில் வந்து டோட்கட்டா கிராமத்தில் போராட்டம் நடத்தப்பட்ட இடத்தை அழித்தனர். கிட்டத்தட்ட 70 கிராமங்களை சார்ந்த போராட்டக்காரர்கள், சுர்ஜாகர் பகுதியில் அமைக்கப்படவிருந்த ஆறு சுரங்கங்களுக்கு எதிராக போராடினர். அவர்களின் போராட்டம் ஈவிரக்கமின்றி முடக்கப்பட்டது.
லாயிட்ஸ் மெடல் அண்ட் என்ர்ஜி லிமிடெட் நிறுவனத்தால் இயக்கப்படும் சுர்ஜாகர் சுரங்கப்பணி உருவாக்கிய சூழல் சீர்கேட்டால், குக்கிராமங்களையும் கிராமங்களையும் சார்ந்த மக்கள் தர்ணா போராட்டம் நடத்தினார்கள். 10-15 பேர், ஒவ்வொரு நான்கு நாட்களாக, எட்டு மாதங்கள் வரை போராட்டம் நடத்தினர். எளிய கோரிக்கைதான். சுரங்கப்பணி அவர்களின் பகுதியில் நடக்கக் கூடாது. காடுகளை காக்க மட்டுமல்ல, பண்பாட்டு பாரம்பரியத்தை காப்பதற்குமான கோரிக்கை அது. பல தலங்கள் அப்பகுதியில் இருக்கின்றன.
எட்டுத் தலைவர்களை தனிமைப்படுத்தி சுற்றி வளைத்த காவல்துறை, அவர்களின் மீது பல வழக்குகளை பதிவு செய்தது. விளைவாக பெரும் எதிர்ப்பு கிளம்பி, உள்ளூர்வாசிகள் கலகம் செய்யத் தொடங்கினர். அதுதான் சமீபத்தில் நேர்ந்தது.
தற்போது அங்கு அமைதி சூழ்ந்திருக்கிறது.
PESA-வில் வரும் பகுதிகள் மற்றும் பிற பகுதிகளையும் சேர்ந்த கிராமசபைகளுக்கான CFR அங்கீகாரத்தில் கட்சிரோலி மாவட்டம்தான் நாட்டிலேயே முன்னோடியாக இருக்கிறது.
சமூகக் குழுக்கள், அவர்களின் காடுகளை பராமரிக்கத் தொடங்கினர். காட்டு உற்பத்தியை அறுவடை செய்து, நல்ல விலைக்காக ஏலம் விட்டு, வருமானத்தை உயர்த்திக் கொண்டனர். CFR-கள், நல்ல சமூகப் பொருளாதார நிலையை அளிக்கும் அடையாளங்களை கொண்டிருக்கிறது. பல ஆண்டுகளாக நேர்ந்த மோதல் ஏற்படுத்திய சேதங்களையும் மீட்க முடிந்திருந்தது.
சுர்ஜாகர் சுரங்கங்கள் ஒரு பிரச்சினை. மலைகள் அகழப்பட்டன. ஆறுகளில் மாசு கலந்திருக்கிறது. சுரங்க தாதுக்களை சுமந்து பாதுகாப்புடன் செல்லும் ட்ரக்குகளை நீண்ட வரிசைகளில் பார்க்க முடியும். சுரங்கங்களை சுற்றியிருக்கும் காட்டுப் பகுதிகளின் கிராமங்கள் அளவு சுருங்கி விட்டது.
உதாரணமாக மல்லம்பாட் கிராமம். மலம்பாடி என அழைக்கப்படும் அந்த குக்கிராமத்தில் ஒராவோன் பழங்குடியினர் வசிக்கின்றனர். சமோர்ஷி ஒன்றியத்தின் சுர்ஜாகர் சுரங்கங்களுக்கு பின்னால் இருக்கிறது. சுரங்கம் வெளியேற்றும் கழிவுகளால் விவசாயம் பாதிக்கப்பட்டதை பற்றி இங்குள்ள இளைஞர்கள் பேசுகின்றனர்.
அரசு படையினருக்கும் ஆயுதம் தாங்கிய கொரில்லா போராளிகளான மாவோயிஸ்டுகளுக்கும் இடையிலான மோதலுக்கான வரலாற்றை கொண்ட பகுதி கட்சிரோலி. குறிப்பாக மாவட்டத்தின் தெற்கு, கிழக்கு, வடக்கு பகுதிகளில் தீவிரமான மோதல் நடந்திருக்கிறது.
ரத்தம் ஓடியது. கைதுகள் நடந்தன. கொலைகள், சிறைப்பிடிப்பு, குண்டு வெடிப்பு, அடிதடிகள் தங்கு தடையின்றி முப்பது வருடங்களுக்கு தொடர்ந்தன. பசியும் பட்டினியும் மலேரியாவும் குழந்தை பேறு மற்றும் குழந்தை மரணங்களும் தொடர்ந்தது. மக்கள் இறந்தனர்.
“எங்களுக்கென்ன தேவை என ஒருமுறை கேளுங்கள்,” என்கிறார் புன்னகையோடு நகோடி. அவர் முதல் தலைமுறை பட்டதாரி. “எங்களுக்கென சொந்த பாரம்பரியங்கள் இருக்கின்றன. ஜனநாயக முறைகளும் இருக்கின்றன. எங்களுக்கென நாங்கள் யோசித்துக் கொள்ள முடியும்.”
பட்டியல் பழங்குடிகளுக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் தொகுதியில் ஏப்ரல் 19ம் தேதி நடந்த வாக்குப்பதிவில், 71% வாக்குப்பதிவு நடந்திருக்கிறது. ஜுன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, புதிய அரசாங்கம் பதவியேற்கும்போது, கிராமசபைகளின் முடிவு, மாற்றத்தைக் கொண்டு வந்ததா எனத் தெரிய வரும்.
தமிழில் : ராஜசங்கீதன்