ஓதோ ஜாம் மற்றும் ஹோதால் பாதாமணி ஆகியோரின் காதல் கதை கச்ச் மற்றும் சவுராஷ்டிரா பகுதிகளில் பிரபலம். கச்சை தாண்டி அக்கதை நாட்டுப்புற வடிவங்களில் சென்றிருக்க வேண்டும். வெவ்வேறு பகுதிகளில் வழங்கப்படும் வெவ்வேறு வழக்குகள், அவற்றின் மூலத்தை பற்றி வெவ்வேறு கதைகளை கொண்டிருக்கின்றன. ஓதோ, வீரம் செறிந்த பழங்குடி வீரனாக இருக்க வேண்டும் அல்லது கியோரை சேர்ந்த ஷத்திரிய வீரனாக இருக்க வேண்டும். ஹோதால் பழங்குடியினத் தலைவியாக இருக்க வேண்டும். பல வழக்குகளில் அவள், சாபத்தின் காரணமாக பூவுலகில் பிறந்த விண்ணுலக தேவதையாக குறிப்பிடப்படுகிறாள்.
மைத்துனியான மினாவதியின் இச்சைக்கு இணங்காததால் ஓதோ ஜாம் தலைமறைவாக இருக்கிறான். பிரானா பதானில் தாய் வழி உறவினரான விசால்தேவ் வீட்டில் அவன் வசிக்கிறான். உறவினரின் ஒட்டகங்களை சிந்து பகுதியின் நகார் சமோயின் தலைவனான பம்பானியா கடத்தி சென்று விட்டான். அவற்றை மீட்டு வருவதென ஓதோ முடிவெடுக்கிறான்.
மேய்ச்சல் பழங்குடியை சேர்ந்த ஹோதால் பாதாமணிக்கும், பம்பானியாவிடம் தீர்க்க வேண்டிய பிரச்சினை ஒன்று இருந்தது. அவளின் தந்தையின் ராஜ்ஜியத்தை சூறையாடி கால்நடைகளை அபகரித்து சென்றிருக்கிறான். சாகும் தறுவாயில் இருந்த தந்தையிடம், பழி வாங்குவதாக உறுதி கொடுத்திருக்கிறாள் அவள். ஓதோ ஜாமை சந்திக்கும்போது அவள், “ஹோதா” என அழைக்கப்படும் ஆண் வீரனாக தோற்றம் பூண்டிருந்தாள். வேறு வழக்குகளில் அந்தப் பெயர் “எக்கால்மால்” என மாறியிருக்கிறது. ஓதோ ஜாம், அவளை வீரமிகு இளைஞன் என எண்ணினான். நோக்கத்தால் இருவரும் ஒன்றாகி, நட்பு கொள்கின்றனர். ஒன்றாக பம்பானியாவின் ஆட்களுடன் சண்டையிட்டு ஒட்டகங்களை மீட்கிறார்கள்.
நாகர்-சாமோய்க்கு வந்ததும் இருவரும் பிரிகின்றனர். பிரானா பதானுக்கு ஓதோ செல்கிறான். ஹோதா, கனாரா குன்றுக்கு செல்கிறாள். சில நாட்கள் ஆகியும் ஓதோ ஜாமால், ஹோதாவை மறக்க முடியவில்லை. நண்பனை தேடி செல்வதென முடிவெடுக்கிறான். அந்த இளைஞனின் உடையையும் குதிரையையும் ஒரு நதியினருகே கண்டு பிடிக்கிறான். பிறகு ஹோதா குளித்து கொண்டிருப்பதை கண்டு உண்மை புரிந்து கொள்கிறான்.
காதல்வயப்படும் ஓதோ, மணம் முடிக்க விரும்புகிறான். காதலிலிருக்கும் ஹோதாலும் ஒப்புக் கொள்கிறாள். ஆனால் ஒரு நிபந்தனை விதிக்கிறாள். அவளின் உண்மையான அடையாளத்தை வெளிப்படுத்தாத வரை மட்டும்தான் ஓதோ ஜாமுடன் இருப்பாளென சொல்கிறாள். இருவரும் மணம் முடிக்கின்றனர். இரு ஆண் குழந்தைகளை பெற்றெடுக்கின்றனர். பல வருடங்களுக்கு பிறகு, நண்பர்களுடன் மது போதையில் திளைத்திருக்கும்போதோ வேறு வழக்குகள் சொல்வது போல், மகன்களின் வீரத்தை பற்றி பொதுவெளியில் விளக்கிக் கொண்டிருக்கும்போதோ, ஹோதாலின் அடையாளத்தை ஓதோ வெளிப்படுத்துகிறான். அவள் அவனை விட்டு செல்கிறாள்.
பத்ரேசாரை சேர்ந்த ஜுமா வகேரின் குரலில் இங்கு பாடப்பட்டிருக்கும் பாடல், ஓதோ பிரிவை சந்திக்கும் காலக்கட்டத்திலிருந்து தொடங்குகிறது. துயரத்துடன் கண்ணீரில் இருக்கிறான் ஓதோ. இத்தகைய துயரமும் கண்ணீரும் ஹஜாசார் நதியை கரைபுரளச் செய்யத்தக்கதாக இருக்கிறது. விருந்தோம்பல் மற்றும் சொகுசு ஆகியவற்றை கொண்டு ஹோதால் பாதாமணி திரும்பி வரும்படி ஈர்க்கப்படுகிறாள்.



