நினைவில் மட்டுமே இருக்கும் தூரத்து வானத்தின் திசையை நோக்கி கைகளை விரிக்கிறார் சுரேந்திர நாத் அவஸ்தி. “இது எல்லாமும், அது எல்லாமும் கூட,” என்கிறார் அவர் ஒரு பெரும் அளவை புன்னகையுடன் விவரித்துக் காட்டியபடி.
“நாங்கள் அவளை நேசித்தோம். அவள் இருந்ததால்தான் எங்களின் கிணறுகளில் இனிமையான நீர் வெறும் 10 அடியில் கிடைத்தது. ஒவ்வொரு மழைக்காலத்திலும் வீடு வரை ஓடி வருவாள். ஒவ்வொரு மூன்றாம் வருடமும் அவள் சிறு விலங்குகளை பலி எடுப்பாள். எனினும் ஒருமுறை என் 16 வயது உறவினரை கொண்டு சென்றுவிட்டாள். கோபத்துடன் அவள் இருக்கும் திசை நோக்கி பல நாட்களுக்கு கத்தியிருக்கிறேன்.” என்கிறார் அவர். “ஆனால் இப்போது அவள் எங்கள் மீது பல காலமாக கோபத்தில் இருக்கிறாள். அநேகமாக பாலம் காரணமாக இருக்கலாம்,” என அவரின் குரல் தோய்கிறது.
67 மீட்டர் நீள பாலத்தில் அவஸ்தி நிற்கிறார். சாய் என்கிற ஆற்றுக்கான அடையாளம் சொற்பமாக இருக்கிறது. அதுதான் அவர் குறிக்கும் ‘அவள்’. பாலத்துக்குக் கீழே விவசாய நிலம் இருக்கிறது. புதிதாக வெட்டப்பட்ட கோதுமை ஆற்றங்கரையில் கிடக்கிறது. தைல மரங்களின் பக்கவாட்டில் நீர் சுழித்து ஓடுகிறது.
அவஸ்தியின் நண்பரும் உதவியாளரும் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியருமான ஜக்தீஷ் பிரசாத் தியாகி, சாய் “ஒரு அழகான ஆறு” என நினைவுகூருகிறார்.
ஆழமான நீர்ப்பகுதியில் இருக்கும் சுழலில் இருந்து பெரிய மீன்கள் எழுந்து ஏறி இறங்கும் அற்புதக் காட்சியை விவரிக்கிறார் அவர். ரோகு, விலாங்கு, கோளம் போன்ற மீன்கள் இன்னும் அவரது நினைவில் இருக்கின்றன. “நீர் காயத் தொடங்கியதும் மீன்கள் காணாமல் போய்விடும்,” என்கிறார் அவர்.
இன்னும் பல விருப்பத்துக்குரிய நினைவுகள் இருக்கின்றன. 2007-12 வரை ஊர்த்தலைவராக இருந்த 74 வயது மல்தி அவஸ்தி, சாய் ஏறி 100 மீட்டர் கடந்து அவரது வீட்டு முற்றம் வரை வந்த நிகழ்வை நினைவுகூருகிறார். அந்த பரந்த முற்றத்தில், ஆற்றுக்கு விளைச்சலை இழந்த குடும்பங்களுக்கு வருடந்தோறும் கிராமவாசிகள் தானியக்குவியல் வழங்கும் விழா கொண்டாடுவார்கள்.
“அந்த குழு உணர்வு இப்போது இல்லை. தானியங்களின் ருசியும் இப்போது இல்லை. கிணறுகளில் நீரும் காணாமல் போய்விட்டது. எங்களை போலவே கால்நடைகளும் பெரும் பாதிப்பில் இருக்கின்றன. வாழ்க்கையில் ருசி இல்லாமல் போய்விட்டது,” என்கிறார் அவர்.























