மர்ஹாய் மாதா கோவில் நுழைவாயிலில் இருக்கும் நான்கு அடி உயர கதவு, பெரும்பாலான பக்தர்களை தலை குனிந்து நுழைய வைக்கிறது. ஆனால் இந்த தெய்வத்தின் குணப்படுத்தும் சக்தியின் மகிமை கண்டு, மர்ஹா கிராமம், மற்றும் அதைச் சுற்றிலும் இருந்து வரும் ஏராளமான மக்களும், தானாகவே தலை பணிந்து வணங்குகிறார்கள்.
"உங்கள் குடும்பத்தில் யாரும் நோய்வாய்ப்பட்டிருந்தால், நீங்கள் பகவதியிடம் வந்து அவர்கள் குணமாக வேண்டலாம்," என்று பாபு சிங் கூறுகிறார். பரந்து விரிந்து கிடக்கும் ஆலமரத்தடியில், காத்திருக்கும் மற்றவர்கள் போல, பூஜை தொடங்க காத்துக்கொண்டிருக்கிறார். இக்கோயிலின் தெய்வம், பகவதி அம்மன். "அவள் பிரச்சனையை தீர்த்து வைப்பாள் - அது நோயாக இருந்தாலும் சரி, அல்லது பூத் [பேய்] அல்லது தயன் [சூனியக்காரி] வேலையாக இருந்தலும் சரி," என்று அவர் நம்பிக்கையுடன் கூறுகிறார்.
இன்று புதன்கிழமை என்பதால், கூடுதல் சிறப்பு - இன்று கோவில்-பூசாரி (உள்ளூரில் பாண்டா என்று அழைக்கப்படுகிறார்) தெய்வத்தால் ஆட்கொள்ளப்படுவார். அவர் மூலம், பக்தர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதோடு, உடல்நலம் தொடர்பான அவர்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு வழங்குவார்.
பக்தர்கள் பெரும்பாலும் கஹ்தரா, கோனி, குடான், கம்ரி, மஜ்ஹோலி, மர்ஹா, ரக்சேஹா மற்றும் கத்தாரி பில்ஹதா ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஆண்கள். ஒரு சில பெண்களும் உள்ளனர். ஆனால் அவர்கள் தலைக்கு மேல் முக்காடு போட்டுள்ளனர்.
"ஆத் காவ்ன் கே லோக் ஆதே ஹை, [எட்டு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு வருகிறார்கள்]," என்று உள்ளூர் பூசாரியும், நோய்களுக்கு தீர்வு வழங்குபவருமான பய்யா லால் ஆதிவாசி, பிற்பகலுக்காக தயாராகும் போது கூறுகிறார். ஒரு கோந்த் ஆதிவாசியான அவரது குடும்பம், பல தலைமுறைகளாக அம்மனுக்கு சேவை செய்து வருகிறது.










