லுங்கியை மடித்துக்கட்டிக் கொண்டு, 40 அடி உயரப் பனை மரத்தில் பாதி தூரத்தை 30 விநாடிகளில் ஏறிவிடுகிறார் அஜய் மகாதோ.
வானுயர நிற்கும் பனைமரத்தின் உச்சிக்கு நாள்தோறும் ஏறிச்சென்று, கீற்றுகளுக்கு நடுவே குருத்தில் இருந்து வடியும் சாற்றை பிடித்துக்கொண்டு இறங்குகிறார்.
அது வெயில் கொளுத்தும் ஒரு மே மாதக் காலைப்பொழுது. பிகார் மாநிலத்தின் சமஸ்டிபூர் மாவட்டத்தில், இந்த 27 வயது, கள் இறக்கும் தொழிலாளி மரம் ஏறத் தயாராகிக் கொண்டிருக்கிறார். தனது இரண்டு கையிலும் காய்ப்பு காய்த்திருப்பதைக் காட்டி, “இது பனைமரம் மாதிரி கெட்டியாகிவிட்டது,” என்கிறார் அஜய்.
“ஏறும்போது மரத்தின் மீது பிடி உறுதியாக இருக்கவேண்டும். மரத்தை இரண்டு கை, கால்களாலும் கவ்வியதைப் போல பிடித்துக்கொள்ளவேண்டும்,” என்று கூறும் அஜய், எப்படி விரல்களைக் கோர்த்துக்கொள்வது, எப்படி மரத்தை கைகளால் சுற்றிப் பிடித்துக்கொள்வது என்று செய்து காட்டுகிறார். ஒல்லியான, சொரசொரப்பான பனை மரத்தில் ஏறும் இந்தக் கடுமையான வேலை அவரது நெஞ்சிலும், கைகளிலும், கணுக்கால் அருகிலும் தழும்பை ஏற்படுத்திவிட்டது.
“நான் 15 வயதில் பனை மரம் ஏறத் தொடங்கினேன்,” என்று கூறும் அந்த கள் இறக்கும் தொழிலாளி, 12 ஆண்டுகளாக இந்த வேலையை செய்கிறார்.
ரசூல்பூர் என்ற ஊரைச் சேர்ந்தவரான அஜய், பாரம்பரியமாக கள் இறக்கும் பாசி சமூகத்தவர். அஜய் குடும்பத்தவர் குறைந்தது மூன்று தலைமுறையாக இந்த தொழிலை செய்துவருகின்றனர்.














