2020ம் ஆண்டு ஊரடங்கின்போது, எங்களின் 1.20 ஏக்கர் நிலத்தை சுற்றி எல்லை குறிக்க சிலர் வந்தனர்,” என்கிறார் ஃபகுவா ஒராவோன். முப்பது வயதுகளில் இருக்கும் பழங்குடி விவசாயியான ஃபகுவா, நிலத்தை சுற்றி இருக்கும் சுவரை சுட்டிக் காட்டுகிறார். நாம் இருப்பது குந்தி மாவட்டத்தின் துமாரி கிராமத்தில். ஒராவோன் சமூகத்தினர் அதிகமாக வாழும் பகுதி இது. “அளக்கத் தொடங்கிய அவர்கள், வேறு ஒருவருக்கு இந்த நிலம் சொந்தம்,” என்றார்கள். நாங்கள் அவர்களை எதிர்த்தோம்.
“சம்பவம் நடந்த 15 நாட்களுக்கு பிறகு கிராமத்திலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் துணைப் பிரிவு மாஜிஸ்திரேட்டிடம் சென்றோம். ஒவ்வொரு முறை சென்று வரவும் 200 ரூபாய்க்கு மேல் ஆனது. அங்குள்ள வழக்கறிஞரின் உதவியை கேட்டோம். இதுவரை 2500 ரூபாய்க்கு மேல் அவர் எங்களிடமிருந்து பெற்றிருக்கிறார். ஆனால் எதுவும் நடக்கவில்லை
“அதற்கு முன்பு, எங்களின் ஒன்றியத்தில் உள்ள மண்டல அலுவலகத்துக்கு சென்றிருந்தோம். இதைக் குறித்து புகாரளிக்க காவல் நிலையத்துக்கு கூட சென்றோம். ஆனால் நிலத்தின் மீதான எங்களின் உரிமையை விட்டுக் கொடுக்கும்படி மிரட்டல்கள் வந்தன. ஒரு வலதுசாரி அமைப்பின் மாவட்ட உறுப்பினர் எங்களை மிரட்டினார். ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு வரவே இல்லை. இப்போது இந்த சுவர் எங்களின் நிலத்தில் நின்று கொண்டிருக்கிறது. நாங்களோ இது போல கடந்த இரண்டு வருடங்களாக அலைந்து கொண்டிருக்கிறோம்.
“என் தாத்தாவான லுசா ஒராவோன் இந்த நிலத்தை 1930ம் ஆண்டில் நிலப்பிரபு பல்சந்த் சாஹுவிடமிருந்து வாங்கினார். அப்போதிருந்து இதில் நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம். 1930 முதல் 2015 வரை கொடுக்கப்பட்ட வாடகை ரசீதுகளும் எங்களிடம் இருக்கிறது. அதற்குப் பிறகு (2016ல்) இணையவழி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதிலுள்ள தரவுகளில் எங்களின் நிலம், நிலப்பிரபுவின் வாரிசுகளில் பெயர்களில் இருந்தது. இது எப்படி நடந்ததென எங்களுக்கு தெரியவில்லை.”
ஃபகுவா ஒராவோன் ஒன்றிய அரசின் டிஜிட்டல் இந்தியா ஆவண நவீனமாக்கும் திட்டத்தில் இழந்து விட்டார். தேசிய அளவில் எல்லா ஆவணங்களையும் டிஜிட்டல்மயப்படுத்தி, மையப்படுத்தப்படவென உருவாக்கப்பட்ட முன்னெடுப்பு அது. இத்திட்டத்துக்கென மாநில அரசு ஜனவரி 2016-ல் ஓர் இணையதளத்தை தொடங்கியது. மாவட்டவாரியான நில விவரங்களை அத்தளம் கொண்டிருந்தது. ”நிலம் சார்ந்த பிரச்சினைகளை குறைத்து, நில ஆவணத் தரவுகளின் பராமரிப்பு முறைகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவதுதான்” அத்தளத்தின் நோக்கம்.
ஆனால் அதற்கு எதிரான வேலையைதான் ஃபகுவா போன்றோருக்கு அது செய்திருக்கிறது.
“நிலத்தின் நிலவரத்தை இணையவழி அறிய பிரக்யா கேந்திராவுக்கு நாங்கள் சென்றோம்.” ஒன்றிய அரசாங்கத்தின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், பொது சேவைகள் எல்லாவற்றையும் ஒரே இடத்தில் குறிப்பிட்ட கட்டணத்துக்கு செய்து கொடுக்கவென ஊர் பஞ்சாயத்தில் இருக்கும் கடை அது.
”நிலப்பிரபுவின் வழித்தோன்றல்கள், அந்த நிலத்தை இரண்டு, மூன்று தடவை எங்களுக்கு தெரியாமல் வாங்கி, விற்று பின் வாங்கியும் இருக்கின்றனர். 1930 முதல் 2015 வரையிலான நிலரசீதுகள் எங்களிடம் இருக்கும்போது இது எப்படி சாத்தியம். இதுவரை 20,000 ரூபாய்க்கு மேல் செலவழித்து இன்னும் அலைந்து கொண்டிருக்கிறோம். பணத்துக்காக வீட்டிலிருந்து தானியங்களை நாங்கள் விற்றோம். ஆனால் இப்போது எங்களின் நிலத்தில் சுவர் இருக்கிறது. எங்களுக்கு சொந்தமானதை இழந்து விட்டது போன்ற உணர்வில் இருக்கிறேன். யார் எங்களுக்கு உதவுவார்கள் எனத் தெரியவில்லை.”







