மீரமன்பாய் சாவ்டா தனது 12 வயதில் குடும்ப பாரங்களை சுமக்க தொடங்கினார். அவரது பெற்றோர் காலமானபோது, மூத்த மகனாக, அவர் தனது உடன்பிறப்புகளை ஆதரிப்பதற்கும், வளர்ப்பதற்கும் பொறுப்பேற்றார் - இரண்டு சகோதரர்கள் மற்றும் இரண்டு சகோதரிகள். உள்ளூர் கிராமவாசிகளுக்கும், தொலைதூர கிராமங்களுக்கு தனது பொருட்களை எடுத்துச் சென்ற வியாபாரிகளுக்கும், பானைகள் தயாரித்து விற்பதன் மூலம் அவர் வாழ்வாதாரத்தை ஈட்டினார். 10 கிராமங்களுக்கும் அவர் மட்டுமே குயவராக இருந்தார்.
பல தசாப்தங்களுக்குப் பிறகும் மீராமன் தனது சுழலும் மேடைக்கு அருகில் அமர்ந்து ஒரு களிமண் பாத்திரத்தை வடிவமைக்கிறார். அவர் ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் வேலை செய்கிறார். அவரது வருமானம் உற்பத்திப் பொருளின் விற்பனையைப் பொறுத்தது. ஒரு நல்ல நாளில், நான்கைந்து பானைகள் விற்றால், ரூ. 450 கிடைக்கும். ஆனால் இதுபோன்ற நாட்கள் அரிதானவை.
"மக்கள் பானை வாங்குவதற்கு [பொருட்களை] தானியங்கள், பருப்பு வகைகள், உடைகள் மற்றும் காலணிகள் போன்றவற்றை தருவார்கள். வாழ்க்கை நன்றாக இருந்தது," என்று அவர் நீண்ட காலத்திற்கு முந்தைய கடந்த காலத்தை நினைவுகூருகிறார். அவரிடம் நிலம் ஏதுமில்லை என்பதால், தனது குடும்பத்திற்கு தேவையான பெரும்பாலான ரேஷன் பொருட்களை இப்படித்தான் வாங்கினார்.
குஜராத்தின் போர்பந்தர் மாவட்டம் மேகாதி கிராமத்தில் மீராமன் பிறந்தார். அவர் தனது குடும்பத்தை கவனித்துக்கொள்ளும் பொறுப்பை ஏற்ற பிறகு ஜுனாகத் மாவட்டத்தில் உள்ள சக்வா என்ற கிராமத்திற்கு குடிபெயர்ந்தார். அது அப்போது நவாப்களின் கீழ் ஒரு தொகுதியாக இருந்தது. "நானும் சமையலறையில் பெரிய உதவியாளராக இருந்தேன். நவாப்கள் தங்கள் விழாக்களுக்கு சமைப்பதற்கு என்னை நம்புவார்கள்," என்று அவர் உற்சாகமாக விவரிக்கிறார்.
அவர்களுக்கான பானைகள் செய்து வந்தார். "ஒவ்வொரு முறையும் நவாப் ஜமால் பக்தே பாபி என்னை அழைக்கும்போது, நான் 7 கிலோமீட்டர் நடந்து, இங்கிருந்து அதிகாலையில் தொடங்கி மாலையில் ஜுனாகத் சென்றடைவேன். இரண்டு சகோதரிகளுக்கு திருமணம் செய்ய வேண்டி இருந்ததால் 12 அணா ரயில் கட்டணத்தை என்னால் செலுத்த முடியவில்லை," என்கிறார் அவர்.
1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது தனக்கு 33 வயதாக இருந்ததை மீராமன் நினைவு கூர்ந்ததாகத் தெரிகிறது. அதன்படி இப்போது அவருக்கு 100 வயதுக்கு மேல் ஆகியிருக்கும். இந்த வயதில் இவர் எப்படி பானைகளை செய்கிறார்? "ஒவ்வொருவரும் சில வேலைகளைச் செய்யப் பிறந்தவர்கள். எந்த சூழ்நிலையிலும் அவர்கள் அந்த வேலையைச் செய்யக் கடமைப்பட்டிருக்கிறார்கள். ஏறக்குறைய அவர்கள் மட்டுமே அதைச் செய்கிறார்கள் எனலாம். என் குழந்தைப் பருவம், இளமைப் பருவம், குடும்ப பொறுப்பேற்ற நாட்களில் இந்தக் கலை மற்றும் படைப்பில் ஈடுபாடு கொண்டிருந்தேன். நான் ஏன் இப்போது மட்டும் இதை நிறுத்த வேண்டும்? நான் இக்கலையுடன் வாழ்ந்து, இறக்கவும் செய்வேன்," என்று அவர் கூறுகிறார். நாங்கள் அவரது வீட்டின் சிறிய முற்றத்திற்கு நடந்து செல்கிறோம். அங்கு அவர் மட்பாண்ட கருவிகள் மற்றும் கருவிகளின் கண்கவர் சேகரிப்பை வைத்திருக்கிறார்.
தமிழில்: சவிதா