கடந்த சில ஆண்டுகளாகவே தங்கள் பகுதியைச் சேர்ந்த சக விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் இருந்த ஆல மரங்களை (Ficus benghalensis) விற்பதை பதைபதைப்புடன் கவனித்துவந்தார் தற்போது 60 வயது ஆகும் சுப்பையா. இருபது ஆண்டுகளுக்கு முன்பாக சுப்பையாவும் தமது இரண்டு ஏக்கர் நிலத்தில் ஓர் ஆலமரம் நட்டு வளர்த்துவந்தார். அவர் நட்ட செடி, பெரிய மரமாக வளர்ந்து சடைத்துக் கிளை பரப்பி நின்று, வெயில் காலங்களில் நிழலும் அடைக்கலமும் தந்து வந்தது.
இப்போது சுப்பையாவும் தமது ஆலமரத்தை வெறும் 8,000 ரூபாய்க்கு விற்கும் நிலை வந்துவிட்டது. தமது மனைவியின் மருத்துவச் செலவை சமாளிக்கவே மரத்தை விற்கும் கட்டாயத்துக்கு ஆளானார் சுப்பையா. இரண்டாண்டுகளுக்கு முன்பு, கர்நாடகத்தில் நடக்கும் கௌரி கணேச ஹப்பா என்ற பண்டிகைக்கு இரண்டு வாரங்களே இருந்த நிலையில், சுப்பையாவின் 56 வயது மனைவி மகாதேவம்மா, ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது ஒரு கல் தடுக்கி விழுந்தார். அவரது இடுப்பு எலும்பு முறிந்தது.
“மந்தையில் இருந்து பிரிந்து சென்ற ஓர் ஆட்டுக்குட்டியை நான் துரத்திச் சென்றேன். கீழே கல் இருந்ததைப் பார்க்கவில்லை. கீழே விழுந்த பிறகு என்னால் எழ முடியவில்லை. கடும் வலி. நல்ல வேளையாக அந்த வழியாகச் சென்ற ஒருவர் என்னைத் தூக்கிவிட்டு வீட்டுக்கு சென்று சேர உதவினார்,” என்று சம்பவத்தை நினைவுகூர்கிறார் மகாதேவம்மா.
ஏற்கெனவே தடுமாறிக்கொண்டிருந்த அந்த இணையரின் வாழ்க்கையை இந்த சம்பவம் அடியோடு புரட்டிப் போட்டது.










