“அரசு தூங்காமலிருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்…”
இப்படி சொன்னவர்தான் ஹவுசாபாய் பாட்டில். தீரம் மிக்க விடுதலைப் போராட்ட வீரர். ஈர்ப்புமிக்க தலைவர். விவசாயிகள், ஏழைகள், விளிம்புநிலை மக்கள் ஆகியோரின் பக்கம் எப்போதும் நிற்பவர். நவம்பர் 2018ல் பாராளுமன்றத்தை நோக்கி நடத்தப்பட்ட பெரும் விவசாயிகள் பேரணிக்காக அவர் பேசி அனுப்பிய காணொளியின் வார்த்தைகள் அவை.
”விவசாயிகளின் விளைச்சலுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும்,” என அவர் காணொளியில் முழங்கினார். “இந்த நீதி கிடைக்க, நானே கிளம்பி அங்கு வருவேன்,” எனப் போராட்டக்காரர்களிடம் அவர் சொல்லியிருக்கிறார். ஏற்கனவே 93 வயது ஆகி விட்டதையும் ஆரோக்கிய குறைபாடுகள் இருப்பதையும் அவர் பொருட்படுத்தவேயில்லை. அவர் அரசை, தூங்காமல் விழித்தெழுந்து ஏழைகளுக்கு பணியாற்றுமாறு எச்சரித்தார்.
எப்போதும் விழிப்பிலிருந்த ஹவுசாபாய், அவரின் இறுதித் தூக்கத்துக்கு செப்டம்பர் 23, 2021 அன்று சென்றார். வயது அவருக்கு 95. அவரது இழப்பால் துயருருகிறேன்.
1943லிருந்து 1946 வரை, ஹவுசாபாய் (பெரும்பாலும் ஹவுசாதாய் என அழைக்கப்படுவார். மராத்தியில் அக்காவை மரியாதையுடன் அழைக்க பயன்படுத்தப்படும் வார்த்தை ‘தாய்’) பிரிட்டிஷாரை தாக்கும் புரட்சிப்படைகளில் சேர்ந்து இயங்கினார். பிரிட்டிஷ் ரயில்களை தாக்கியிருக்கின்றனர். காவல்துறையின் ஆயுதங்களை திருடியிருக்கின்றனர். பிரிட்டிஷார் நிர்வாகத்துக்கு பயன்படுத்திய பங்களாக்களையும் நீதியறைகளையும் தீயிட்டுக் கொளுத்தி இருக்கின்றனர். 1943ம் ஆண்டு பிரிட்டிஷ்ஷிடமிருந்து விடுதலை பெற்றுவிட்டதாக அறிவித்த சதாராவின் நிழலுலக அரசை நடத்திய டூஃபன் சேனா ((’சூறாவளிப் படை) புரட்சிப் படையில் இயங்கியவர் அவர்.
1944ம் ஆண்டு கோவாவில் போர்த்துக்கீசிய ஆட்சியின்போது தலைமறைவு நடவடிக்கைகளிலும் பங்கு பெற்றிருக்கிறார். நள்ளிரவில் மண்டோவி ஆற்றில் ஒரு மரப்பெட்டியின் மீது படுத்து மிதந்து பிழைத்திருக்கிறார். பிற தோழர்கள் நீந்திப் பிழைத்திருக்கின்றனர். ஆனாலும் அவர், “விடுதலை போராட்டத்துக்காக சிறிய அளவில்தான் பங்களித்திருக்கிறேன். பெரியளவில் எதையும் செய்துவிட வில்லை,” என்றே எப்போதும் சொல்லியிருக்கிறார். அவரை பற்றி தெரிந்து கொள்ள, எனக்கு பிடித்த செய்திக் கட்டுரைகளில் ஒன்றான இதில் பாருங்கள்: கவனம் பெறாத ஹௌசாபாயின் சாகசங்கள்
ஹவுசாபாய் பிரிட்டிஷாரை தாக்கும் புரட்சிப்படைகளில் சேர்ந்து பிரிட்டிஷ் ரயில்களை தாக்கியிருக்கிறார். காவல்துறையின் ஆயுதங்களை திருடியிருக்கிறார். பிரிட்டிஷார் நிர்வாகத்துக்கு பயன்படுத்திய பங்களாக்களையும் நீதியறைகளையும் தீயிட்டு கொளுத்தி இருக்கிறார்
அவர் இறந்துபோன அதே நாளில் அவரை பற்றி இதழியல் மாணவர்களிடம் நான் பேசிக் கொண்டிருந்தேன். விடுதலைப் போராட்டத்தின் உண்மையான நாயகர்கள் தெரியாத ஒரு தலைமுறை உருவாகியிருக்கிறது. நாட்டுப்பற்றையும் தேசியவாதத்தையும் இன்று பேசிக் கொண்டிருக்கும் வஞ்சகர்களை காட்டிலும் அவற்றைப் பற்றி பேச இவருக்கு அதிக தகுதி இருக்கிறது. இந்தியர்களுக்கு விடுதலை பெறுவதற்காக பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக மக்களை ஒருங்கிணைக்க விரும்பிய நாட்டுப்பற்று அவருடையது. மதம் அல்லது சாதி ஆகியவற்றின் அடிப்படையில் மக்களை பிரிக்க விரும்பியதல்ல அது. நம்பிக்கைக்கான சித்தாந்தங்களிலில்தான் மதச்சார்பின்மைக்கான ஆத்மா இருக்கும். வெறுப்பில் அல்ல. அவர் விடுதலைக்கான வீரர், வெறிக்கான வீரர் அல்ல.
PARI-க்காக அவரை நான் எடுத்த நேர்காணலை மறக்கவே முடியாது. அதன் முடிவில் அவர் சொன்னார்: “என்னை நீ இப்போது அழைத்துச் செல்வாயா?”
“எங்கே ஹவுசாதாய்?”
”உங்கள் அனைவருடனும் PARI-ல் பணிபுரிய,” என சிரித்தபடி பதிலளித்தார்.
'Foot-soldiers of Freedom: the last heroes of India’s struggle for independence' என்ற பெயரில் ஒரு புத்தகத்தை பதிப்பிக்கும் முயற்சியில் நான் இருக்கிறேன். அதன் முக்கியமான அத்தியாயங்களில் ஒன்றாக இருக்கும் ஹவசாதாயின் அற்புதமான வாழ்க்கைக் கதையை படிக்க அவர் இருக்க மாட்டார் என்பது என்னை மிகவும் சோகமாக்குகிறது.
தமிழில் : ராஜசங்கீதன்