அவர்களின் சிரிப்பொலிதான் எங்கள் கவனத்தை ஈர்த்தது. சில சிறுமிகள் ஸ்கிப்பிங் செய்து கொண்டிருந்தனர். சில சிறுவர்கள் கிரிக்கெட் விளையாட்டு, சிலர் ஓடி விளையாடுதல் என்றிருந்த பள்ளியின் மிகப்பெரும் விளையாட்டு மைதானத்தை ஒரு சில மாணவர்கள் நின்றபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
புனே மாவட்டம் தவுண்ட் தாலுக்காவில் PARI-ன் க்ரைண்ட்மில் சாங்ஸ் திட்டத்திற்காக, அன்றைய நாள் பணியை முடித்து நாங்கள் திரும்பிக் கொண்டிருந்தபோது, மல்தான் கிராமத்தின் இயோல் வாஸ்தியில் உள்ள ஜில்லா பரிஷத் தொடக்கப் பள்ளி சிறுவர்களின் சிரிப்பொலி எங்கள் கவனத்தை திசை திருப்பியது.
மிகவும் பரபரப்புடன் நடந்துக் கொண்டிருந்த கிரிக்கெட் போட்டியின்போது மட்டைப் பிடித்துக் கொண்டிருந்த சிறுவன் கேமராவுடன் நாங்கள் வருவதைக் கண்ட போதும் பந்து வீச்சாளரின் மீது கண்கள் பதித்து பந்தை அடித்து ஆட்டத்தில் கவனமாக இருந்தான். ஃபீல்டர்கள் அதை எடுக்க ஓடினர்.
சில சிறுமிகள் எங்களை சூழ்ந்து கொண்டனர். பாடுவதற்கு முதலில் அவர்கள் கூச்சப்பட்டனர். மெல்ல துணிச்சலை வரவழைத்துக் கொண்டு அவர்கள் பாடத் தொடங்கினர். பாடலை சரியாக பாடுகிறோமா என்பதை ஒருவரை ஒருவர் பார்த்து உறுதி செய்துகொண்டனர். ஆடல், பாடல் கொண்ட குழந்தைகள் விளையாட்டை பாரி குழுவின் ஜிதேந்திரா மைத் அவர்களுக்கு கற்றுக் கொடுத்தார். குழந்தைகளை வட்டமாக நிற்கவைத்து, அவர் பாடுவதையும், செய்வதையும் அப்படியே திருப்பிச் செய்ய வைத்தார்.
“படிக்கும் நேரம் முடிந்தவுடன் அவர்களை நாங்கள் விளையாட விடுவோம்,” என்கிறார் அவர்களின் ஆசிரியர் சுனந்தா ஜக்தலே. பள்ளியின் முதல்வர் சந்தீப் ரசால் வகுப்பறை மற்றும் அலுவலகத்தை எங்களிடம் காண்பித்தார். “எங்களிடம் கணினி உள்ளது, பள்ளிக் கட்டடங்களை புனரமைத்து, வண்ணம் பூசி வருகிறோம், உங்களால் முடிந்தால் தயவுசெய்து எங்களுக்கு உதவுங்கள்,” என்று கூறியபடி எங்களை அவர் அருகில் உள்ள கொட்டகைக்கு அழைத்துச் சென்றார். அவர் அதை ‘நவீன’ சமையலறை என அழைக்கிறார். தானியங்களை சாக்குகளில் வைக்காமல், டின்களில் அடைத்து வைத்துள்ளனர். சுத்தமாக உள்ளது. அங்குதான் மதிய உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.
6 முதல் 10 வயது வரையிலான 21 சிறுமிகள், 22 சிறுவர்கள் என மொத்தம் 43 மாணவர்கள் பள்ளியில் பயில்கின்றனர். 1 முதல் 4ஆம் வகுப்பு வரை 10 மாணவர்கள் உள்ளனர். பெரும்பாலானோர் மல்தானில் இருந்தும், வெகுச் சிலர் அண்டை கிராமமான முகானில் இருந்தும் வருகின்றனர். “மல்தானில் பத்தாம் வகுப்பு வரை உள்ள உயர்நிலைப் பள்ளியும் இருக்கிறது. இந்த தொடக்கப் பள்ளியில் பயிலும் பெரும்பாலான மாணவர்கள் அங்குதான் செல்கின்றனர்,” என்று நம்மிடம் தெரிவித்தார் ரசால்.
புதிய வகுப்பறை தயாராகி வருவதால் தரையில் பெயின்ட் கேன்கள் சிதறிக் கிடக்கின்றன. மூலையில் பழைய புடவையில் கட்டப்பட்ட தூளியில் குழந்தை தூங்குகிறது. “அது என் இளைய மகள். எங்கள் மூத்த மகள் இப்பள்ளியில்தான் படிக்கிறாள்,” என்றார் சுனந்தா. ஆசிரியையும், முதல்வரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். பள்ளியை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் பெருமையாக, ஒன்றாக அவர்கள் நடத்தி வருகின்றனர். இருவர் மட்டுமே பள்ளியை நடத்துகின்றனர். 65 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தவுண்ட் நகரில் வசிக்கும் அவர்கள் தினமும் தங்கள் காரில் பள்ளிக்கு வருகின்றனர்.
அடுத்த மட்டை வீரரை தேர்வு செய்வதில் இளம் கிரிக்கெட் வீரர்களிடையே சண்டை ஏற்படுகிறது. ஒருவர் மட்டும் சுதாரித்துக் கொண்டு வெளியாட்கள் முன்பு இப்படி நடந்து கொள்ள வேண்டாம் என பிறரிடம் சொல்கிறார். இதனால் கைச்சண்டை ஏற்படுவது தடுக்கப்பட்டு சண்டையும் முடிகிறது.
மதியம் 3 மணியளவில் விளையாட்டு நேரம் முடிந்தவுடன் மரச்சாமான்களை பழையபடி சரியாக வைத்துவிட்டு, விளையாடிக் கொண்டிருந்த ஸ்கிப்பிங் கயிறு, மட்டைகள், பந்துகள் போன்றவற்றை அதற்குரிய இடங்களில் வைக்குமாறும், வகுப்பறையிலிருந்து தங்களின் பைகள், தண்ணீர் பாட்டில்களை எடுத்துக் கொள்ளுமாறும் பிள்ளைகளிடம் ஆசிரியர் சொல்கிறார். அனைவரும் உடனடியாக விளையாட்டை கைவிட்டு சொன்ன வேலைகளை செய்துவிட்டு அமைதியாக ஒன்றிணைந்து மைதானத்தில் வரிசையாக நிற்கின்றனர். பிறகு ஒன்றாக வந்தே மாதரம் என்று பாடுவதை அன்றாட பணிகளில் ஒன்றாக அவர்கள் கொண்டுள்ளனர்.
‘பாரத் மாதா கி ஜெய்’ என்ற இறுதி வரி ஒத்திசைவின்றி வருவது ஆசிரியரை எரிச்சலடைய வைத்தது. முறையாக அவற்றை கூறும்படி, மூத்த மாணவர்கள் வழிநடத்தும்படி ஜகதலே சொல்கிறார். இரண்டாவது முயற்சியில் முறையாக வந்ததால் சபை கலைகிறது. அனைவரும் முதல்வரை சூழ்வது ஒரே கேள்வியுடன் தான்: “ஐயா, இன்றைய எங்கள் வீட்டுப் பாடம் என்ன?”
“நாம் எண்ணுவதற்கு கற்றுக் கொண்டோம். 100 அல்லது 500 வரையிலான எண்களை நீங்கள் கற்றவரை எழுதுங்கள்,” என்கிறார் ரசால். ஒற்றை அறை கொண்ட அனைத்து வகுப்பினருக்கும் அவரவர் நிலைக்கு ஏற்ப இந்த எண்கள் பொருந்தும்.
“ஐயா, நாங்கள் 1 லட்சம் வரை எண்களை கற்றுவிட்டோம், 1லட்சம் வரை எண்களை எழுத வேண்டுமா?” என கேட்பது 4ஆம் வகுப்பு மாணவன் ஒருவன்.
பெற்றோர் வந்தவுடன் மாணவர்கள் மிதிவண்டி, இருசக்கர வாகனங்களில் பின் அமர்ந்து செல்கின்றனர். மற்றவர்கள், அழைக்க ஆள் வரும் வரை மைதானத்தில் காத்திருக்கின்றனர். அன்று எங்கள் உலகில் இன்பத்தை பொழிந்த அவர்களுக்கு நம்முடைய வணக்கத்தைச் சொன்னோம்.
தமிழில்: சவிதா