“பகல் நேரத்தில் என் குழந்தைகளை தூங்க வைத்துவிடுவேன். அப்போதுதான் அவர்கள் வீட்டுக்குள் இருக்க முடியும். மேலும் பிற குழந்தைகள் உணவு சாப்பிடுவதை பார்ப்பதிலிருந்து அவர்களை தடுக்கவும் முடியும்,” என ஏப்ரல்14ம் தேதி பேசியபோது சொன்னார் தேவி கனகராஜ் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). சில நாட்களுக்கான உணவு மட்டுமே அப்போது அவரிடம் இருந்தது. “அவர்களுக்கு போதுமானதை என்னால் தர முடியவில்லை. உதவி கேட்கவென எனக்கு யாரும் இல்லை” என்கிறார் அவர்.
அருந்ததியர் சமூகத்தின் பல பெண்களை போல வறிய நிலையில் இருப்பவர் தேவி. பட்டியல்சாதியை சேர்ந்தவர். தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்திலுள்ள எடயப்பொட்டல்பட்டி கிராமத்தில் வசிப்பவர். 25 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சிவகாசியிலுள்ள பட்டாசு ஆலையில் வாரக்கூலிக்கு வேலை பார்க்கிறார் 28 வயதான தேவி. வெடிமருந்தை குழாய்களிலும் பேப்பர் குப்பியிலும் நிரப்புகிற ஆபத்தான வேலை. மார்ச் 24 அறிவிக்கப்பட்ட ஊரடங்குக்கு முன் வரை ஒரு நாளுக்கு 250 ரூபாய் சம்பாதித்துக் கொண்டிருந்தார்.
ஏப்ரலின் தொடக்கத்தில். மாநில அரசின் நிவாரணப் பொருட்களாக 15 கிலோ அரிசியையும் ஒரு கிலோ பருப்பையும் பெற்றார் தேவி. ஆனால் அதுவும் வேகமாக தீர்ந்து போய்விட்டது. “அரசிடமிருந்து 1000 ரூபாய்யும் கிடைத்தது. அதில் காய்கறியும் மளிகை பொருட்களையும் வாங்கினோம். நியாயவிலைக் கடை எங்களுக்கு எண்ணெய் கொடுக்கவில்லை. சிக்கனமாக சாப்பிடுகிறோம். ஒரு நாளைக்கு இரண்டு வேளைதான் சாப்பாடு,” என்றார்.
மே மாத தொடக்கத்தில் தேவியின் குடும்பத்துக்கு 30 கிலோ அரிசியும் ஒரு கிலோ பருப்பும் ஒரு லிட்டர் எண்ணெய்யும் இரண்டு கிலோ சர்க்கரையும் கிடைத்தது. இரண்டு வாரங்கள் கழித்து அரிசியில் கொஞ்சம் மட்டுமே மிஞ்சியிருக்கிறது. “காய்கறியும் மளிகைப்பொருளும் வாங்க பணமில்லை,” என்கிறார். “இப்போது சாதமும் ஊறுகாயும் மட்டுமே சாப்பிடுகிறோம்.”
குறைந்த கொரோனா பாதிப்புகள் இருந்தமையால் மே 18ம் தேதி விருதுநகர் மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. 12, 10 மற்றும் 8 வயதாகும் மகள்களுக்கு உணவு வாங்க பணம் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் வேலைக்கு திரும்பினார் தேவி. அவருடைய கணவர் ஆர்.கனகராஜ் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) 30 வயதானவர். லாரி ஓட்டுநராக பணிபுரிகிறார். சம்பாதிப்பதில் பெரும் பகுதியை குடிக்கே செலவழிக்கிறார்.
விருதுநகர் மாவட்டத்தின் சிவகாசி நகராட்சியை சுற்றி இருக்கும் 900 சிறிய மற்றும் பெரிய பட்டாசு ஆலைகள் ஒன்றில் தேவி நான்கு வருடங்களுக்கு மேலாக வேலை பார்த்து வருகிறார். ஸ்ரீவில்லிப்புத்தூர் தாலுகாவின் படிக்காசு வைத்தன்பட்டி பஞ்சாயத்துக்கு கீழ் வரும் எடையப்பொட்டல்பட்டி கிராமத்தின் மக்கள்தொகை 554. அதில் பாதிக்கும் மேற்பட்டோர் பட்டாசு ஆலைகளில்தான் வேலை பார்க்கிறார்கள். வருடத்தில் ஆறு மாதத்துக்கான வேலைக்கு உத்தரவாதம் கிடைத்து விடுகிறது.
“ஒவ்வொரு சனிக்கிழமையும் 700லிருந்து 800 ரூபாய் வரை வீட்டுக்கு கொண்டு செல்வேன்,” என்கிறார் தேவி. வைப்புத் தொகை, மாநிலத்தின் தொழிலாளர் காப்பீடு மற்றும் காண்ட்ராக்டரிடம் வாங்கிய முன் பணம் எல்லாமும் பிடித்துக் கொள்ளப்பட்டு கிடைக்கும் தொகை அது. “என்னுடைய குடும்பத்தை காப்பாற்றுவதற்கான எந்த வருமானமும் எனக்கு கிடைக்காமல் ஊரடங்கு ஆக்கிவிட்டது,” என்கிறார். மார்ச் 25 தொடங்கி மே 18 வரையிலான ஊரடங்கு காலத்தில் தேவி வேலை பார்த்த ஆலையிலிருந்து எந்த வருமானமும் பொருளாதார உதவியும் கிடைக்கவில்லை.
ஊரடங்கு தளர்த்தப்பட்டபிறகு சிவகாசியின் சிறு ஆலைகள் முழுமையாக வேலையைத் தொடங்கின. தேவி வேலை பார்த்த, 50 பேருக்கு அதிகமான தொழிலாளர்களை கொண்ட ஆலைகள் 50% தொழிலாளர்களுடன் இயங்கின. தேவி வேலை பார்த்த ஆலையில் ஒவ்வொரு தொழிலாளியும் வாரத்துக்கு இரண்டு நாள் மட்டுமே வேலை பார்க்க அனுமதிக்கப்பட்டனர். மே 18ம் தேதி தொடங்கி, தேவி நான்கு நாட்கள் மட்டுமே வேலை பார்த்திருந்தார். வேலை பார்க்கத் தொடங்கியதும் 500 ரூபாய் முன்பணம் பெற்றார். மிச்ச 500 ரூபாயை மே 30ம் தேதி பெற்றார்.
பட்டாசு ஆலையில் வேலை பார்ப்பதற்கு முன்பு, பஞ்சு நூற்பாலையில் தேவி வேலை பார்த்தார். அங்கு அவருக்கு 180 ரூபாய் நாட்கூலி. வறண்ட விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழில்தான் அதிக வேலைவாய்ப்பு கொடுக்கிறது. விவசாயம் சில பகுதிகளில் மட்டும்தான் நடக்கிறது. பட்டாசுத் தொழிலுக்கு அடுத்தபடியான வேலைவாய்ப்பை சில பஞ்சு நூற்பாலைகள் கொடுக்கின்றன.
சிவகாசி ஆலைகளில் சுமாராக 3 லட்சம் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் வேலை பார்க்கின்றனர். 4-லிருந்து 5 லட்சம் பேர் வரை பட்டாசுத் தொழிலுக்கு தொடர்பான பிற ஆலைகளில் வேலை பார்ப்பதாக சொல்கிறார் அ.முத்துக்கிருஷ்ணன். தமிழ்நாடு பட்டாசு ஆலைத் தொழிலாளர்கள் சங்கத்தின் செயலாளராக இருப்பவர். சிறு அளவிலான பட்டாசு ஆலையையும் நடத்தி வருகிறார். அதில் 50 தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர்.
அருந்ததியர் சமூகத்தின் பாதிக்கும் மேற்பட்டோர் இந்த ஆலைகளில் வேலை பார்க்கின்றனர். அவர்களில் பெரும்பான்மை பெண்கள். “இச்சமூகத்தை சேர்ந்த தொழிலாளர்கள்தான் பட்டாசு ஆலைகளில் கொடுக்கப்படும் ஆபத்து நிறைந்த வேலைகளை செய்கிறார்கள்,” என்கிறார் எம்.பொன்னுசாமி. தமிழக தொழிலாளர் உரிமை கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருப்பவர், எடையப்பொட்டல்பட்டியில் வசிக்கிறார். “வெடிமருந்தை அவர்கள் குழாய்களில் நிரப்புகிறார்கள். அந்த வேலைதான் விபத்துக்குள்ளாவதற்கான அதிக சாத்தியத்தை கொண்ட வேலை.”
ஊரடங்குக்கு முன் வரை, வாரத்தில் 3-லிருந்து 5 நாட்களுக்கு காலை 8 மணி தொடங்கி மாலை 5 மணி வரை ஆலையில் தேவி வேலை பார்த்திருக்கிறார். “காலை 7 மணிக்கு கிராமங்களுக்கு வண்டிகள் அனுப்புவார்கள். மாலை 6 மணிக்கு எங்களை கொண்டு வந்து விட்டுவிடுவார்கள்,” என்கிறார் அவர். மழைக்காலத்தில் (ஜூன் மாதத்திலிருந்து ஆகஸ்டு மாதம் வரை) ஆலைகள் மூடப்படும். அருகாமையில் இருக்கும் ஆலையில் விபத்து நேர்ந்தாலும் முடப்படும். “இந்த வேலை இல்லாதபோது நான் பருத்தி போட்ட நிலங்களில் வேலைக்கு செல்வேன். ஒருநாளைக்கு 150 ரூபாய் கூலி கிடைக்கும்,” என்கிறார். ஜனவரியிலிருந்து மார்ச் வரை வாரத்துக்கு 2, 3 நாட்களுக்கு நிலத்தில் வேலை பார்ப்பதை தவிர்த்து, கிராமப்புற வேலைத்திட்டத்தின் (MGNREGA) கீழ் வரும் வேலைகளையும் செய்கிறார் தேவி.
பட்டாசு ஆலைகளில் தேவியும் பிற தொழிலாளருக்கும் அவர்கள் வேலை பார்த்த நாட்களுக்கு மட்டுமே கூலி கிடைக்கும். ஊரடங்குக்கு முன் வரை ஒவ்வொரு மாதமும் தொடக்கத்திலேயே முன் பணம் பெற்று விடுவார்கள். தேவி 10000 ரூபாய் முன் பணம் பெற்றிருக்கிறார். மிச்சப் பணம் வேலைநாட்களை கணக்கு செய்து, பகுதி பகுதியாக ஒவ்வொரு வாரமும் தரப்படும். ஊரடங்கு நேரத்தில் தேவி ஆலையிலிருந்து கடன் வாங்காவிட்டாலும் பிறர் வாங்கியிருந்தார்கள். அவர்கள் அப்பணத்தை இப்போது அடைக்க வேண்டும்.
“வேலை பார்த்த நாட்களுக்கு மட்டுமே நாங்கள் பணத்தை கொடுப்போம்,” என்கிறார் முத்துகிருஷ்ணன். ”என் ஆலை முழுமையாக இயங்கிக் (மே 18-லிருந்து) கொண்டிருக்கிறது. வாரக்கூலி கொடுக்கத் தொடங்கிவிட்டேன். பெண்கள் 350 ரூபாயும் ஆண்கள் 450லிருந்து 500 ரூபாய் வரையும் பெறுகிறார்கள்,” என்கிறார் அவர்.
ஆலையை தொடர்ந்து நடத்த முடியுமா என முத்துகிருஷ்ணனுக்கு தெரியவில்லை. “எங்களின் எல்லா தயாரிப்புகளையும் உடனடியாக வெளியேற்றி விட வேண்டும்,” என்கிறார். “பட்டாசுகளை வாரத்துக்கு ஒருமுறையாவது வெளியேற்றிவிட வேண்டும். போக்குவரத்து இன்னும் முழுமையாக அமல்படுத்தப்படாததாலும் மாநிலத்திலும் நாட்டிலும் ஊரடங்கு இருப்பதாலும் பட்டாசுகள் தேங்கிக் கொண்டிருக்கின்றன. அடுத்த இரண்டு வாரங்களுக்கு மட்டுமே தொடர முடியும். பட்டாசுகளை வெளியேற்ற முடியவில்லையெனில், ஆலைகள் மூட வேண்டி வரும்,” என மே 25ம் தேதி கூறினார்.
2019ம் ஆண்டில் ஒரு நான்கு மாதங்களுக்கு வேறொரு காரணத்தால் ஆலைகள் அடைக்கப்பட்டிருந்தன. சூழலை குறைவாக பாதிக்கும் பட்டாசுகளை மட்டுமே தயாரிக்கும்படி உச்சநீதிமன்றம் அக்டோபர் 2018ல் உத்தரவிட்டிருந்தது.
எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் தேவி காத்திருந்தார். ஆனால் ஏப்ரல் மாதத்திலேயே உள்ளூர் கடைகள் கொடுத்த கடன் தொகையை அவர் தாண்டி விட்டார்.
ஊரடங்கு நேரத்தில் தேவிக்கும் அவர் குடும்பத்துக்கும் உணவு கொடுக்கவென அரசு நடத்தும் சமூக உணவுக்கூடங்கள் எதுவும் இல்லை. TNLRF போன்ற இயக்கங்கள் சில தொழிலாளர்களுக்கு உணவுப்பொருட்களை விநியோகித்தன. “தேவை இருக்கும் 44 குடும்பங்களை கண்டறிந்து நாங்கள் உணவுப் பொருட்களை விநியோகித்தோம்,” என்கிறார் பொன்னுசாமி.
பிரச்சினையை கையாளவென பஞ்சாயத்துகளுக்கும் சிறப்பு நிதி எதுவும் அளிக்கப்படவில்லை. ஒவ்வொரு காலாண்டுக்கும் நீர், துப்புரவு மற்றும் கிராமத்தின் கட்டமைப்பு பராமரிப்பு ஆகியவற்றுக்கென அளிக்கப்படும் நிதியையே, படிக்காசு வைத்தன்பட்டி பஞ்சாயத்து தலைவர் ஏ.முருகேசன், துப்புரவு பணியாளர்களின் உணவுக்கும் சம்பளத்துக்கும் பயன்படுத்தியிருக்கிறார். உணவுப்பொருட்களை கொடுக்க சொந்தக் காசு 30000 ரூபாய் செலவழித்திருப்பதாக முருகேசன் சொல்கிறார்.
விருதுநகரில் இருப்பவர்கள் இன்னொரு பிரச்சினையையும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். பெண்கள் மீதான வன்முறை!
ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் மாநில அரசு நடத்தும் டாஸ்மாக் மதுக்கடைகளும் திறக்கப்பட்டன. “டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதிலிருந்து குறைந்தபட்சம் 10 குடும்ப வன்முறை புகார்களாவது தினமும் தமிழக தொழிலாளர் உரிமை கூட்டமைப்புக்கு வந்துவிடுகிறது. டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி மே 25ம் தேதி ஒரு கையெழுத்து இயக்கம் நடத்தினோம்,” என்கிறார் பொன்னுசாமி. கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்ட முதல் நான்கு நாட்களிலேயே 200 பெண்கள் கையெழுத்திட்டனர்.
தேவியின் கணவரும் குடிகாரர். மதுக்கடைகள் திறந்ததிலிருந்து ஒவ்வொரு நாள் இரவும் சண்டை போடுவதாக சொல்கிறார். “குடிப்பதற்கு ஒரு துணை கிடைத்துவிட்டால் சம்பாதித்த பணத்தை மொத்தமாக செலவழித்து விடுகிறார். வீட்டுக்கு வந்தால் என்னை அடிக்கிறார். உடல் ரீதியான வன்முறையைக் கூட தாங்கிக் கொள்வேன். ஆனால் அவர் பேசும் வார்த்தைகள் செத்துப் போய்விடலாமா என யோசிக்க வைக்கிறது,” என்கிறார் துயரத்துடன்.
16 வயதிலேயே தேவிக்கு மணம் முடித்துவிட்டனர். சில ஆண்டுகளில், கணவர் குடிக்கத் தொடங்கியதும் வன்முறை தொடங்கிவிட்டது. “என் குழந்தைகளுக்காகத்தான் வன்முறையை நான் பொறுத்துக் கொள்கிறேன்,” என்கிறார். “என்னுடைய மகள்களுக்கு நல்ல கல்வியை கொடுக்க விரும்புகிறேன். குழந்தைகள் வளர்ந்ததும் பிரச்சினைகள் அடங்கி விடும் என்கிறார்கள்.” அவருடைய சகோதரிகளும் குடிகாரர்களுக்கே மணம் முடித்து வைக்கப்பட்டிருக்கின்றனர். “அவர்களும் வாழ ரொம்ப கஷ்டப்படுகிறார்கள்.”
பொருளாதாரச் சுமையும் குடிகாரக் கணவன்களால் ஏற்படும் குடும்பத் தகராறும் விருதுநகரில் பலருக்கு மன உளைச்சலை கொடுத்திருக்கிறது. “ஊரடங்கு நேரத்தில் என் கணவருக்கு வேலை கிடைக்கவில்லை. அவர் கையில் பணமும் இல்லை. நாங்கள் எப்போது பேசினாலும் கோபம் கொள்கிறார்,” என்கிறார் ராணி எம். (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). எடையப்பொட்டல்பட்டி கிராமத்தின் அரசுப் பள்ளியில் துப்புரவு வேலை செய்கிறார் அவர்.
ராணியின் கணவர் பழுதுபார்க்கும் பட்டறையில் வேலை பார்க்கிறார். வேலை பார்க்கும் நாட்களில் நாளொன்றுக்கு 500 ரூபாய் சம்பாதிப்பார். அதில் பெரும் தொகையை சாராயத்துக்கு செலவு செய்வார். “அவர் பணம் கேட்டுக் கொண்டே இருப்பார். நான் என்ன செய்தாலும் குற்றம் சொல்வார். என்னை அடித்துக் கொண்டே இருப்பார். என்னுடைய மூன்று குழந்தைகளுக்காகத்தான் எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்கிறேன்,” என்றார் அவர்.
குடும்ப அட்டை இல்லாததால் அரசு கொடுத்த நிவாரணப் பணமும் உணவுப்பொருட்களும் ராணிக்கு கிடைக்கவில்லை. வேலையும் இல்லை. பள்ளி திறக்கும்வரை வருமானமும் கிடையாது.
அவரின் பக்கத்து வீட்டுக்காரர் ஜி.காமாட்சியும் ஒவ்வொரு இரவிலும் கணவருக்கு பயப்படுகிறார். அவர் கணவர் தொடர்ந்து அவரை அடிக்கிறார். கெட்டவார்த்தைகளில் திட்டுகிறார். குடிப்பதற்கு பணம் கேட்கிறார். கொடுக்க மறுத்ததால், சைக்கிளை விற்று கிடைத்த காசில் குடித்தார்.
பெண்களின் பிரச்சினைகள் கடன்காரர்களின் வருகையால் பன்மடங்காகியிருக்கின்றன. அதிக வட்டிக்கு வாங்கிய கடனை திரும்ப அடைக்க சொல்கிறார்கள். வீட்டு ரிப்பேருக்காக தேவி வாங்கிய கடன் 2 லட்ச ரூபாயை எட்டிவிட்டது. மே 30ம் தேதி வாங்கிய 500 ரூபாய் சம்பளம் உணவுப்பொருட்கள் வாங்க பயன்படுத்தப் போவதில்லை என்கிறார் அவர். “இந்த பணம் வட்டி கட்ட பயன்படும்.”
தமிழில்: ராஜசங்கீதன்