“போராட்டக் களத்திற்கு அனுப்புவதற்கு ஒவ்வொருவரும் தங்களால் முடிந்ததை அளிக்கக் கோரி கிராமம் முழுவதும் டிராக்டர் பேரணி நடைபெற்றது. நான் ரூ.500 பணமும், மூன்று லிட்டர் பால், ஒரு கிண்ணம் சர்க்கரை கொடுத்தேன்,” என்கிறார் ஹரியானாவின் ஹிசார் மாவட்டம் பெட்வார் கிராமத்தைச் சேர்ந்த 34 வயது சோனியா பெட்வார்.
அவரது கிராமம் அமைந்துள்ள நர்நாந்த் தாலுக்காவில் டிசம்பர் 2020 நடுவாக்கில் ரேஷன் பொருட்கள் முதன்முறையாக சேகரிக்கப்பட்டன. அவை பெட்வாரிலிருந்து 105 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டெல்லி-ஹரியானா எல்லைப் பகுதியான டிக்ரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு நவம்பர் 26ஆம் தேதி முதல் மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடி வருகின்றனர்.
“என்னிடம் போதிய பணம் இல்லை. எனவே நான் விறகுத் துண்டுகளை கொடுத்தேன்,” என்கிறார் சோனியாவின் குடும்பத்தைச் சேர்ந்த 60 வயதாகும் ஷாந்தி தேவி. “அப்போது குளிராக இருந்தது, எனவே போராட்டக்காரர்கள் வெப்பமூட்டிக் கொள்ள விறகுகள் உதவும் எனக் கருதினேன்.”
ஜனவரி தொடக்கத்தில் இரண்டாவது முறையாக டிராக்டர் பேரணி நடைபெற்றது. “போராட்டக் களத்திற்கு யார் புறப்பட்டாலும் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் தன்னால் இயன்றவற்றை கொடுத்து அனுப்பினார்கள்,” என்கிறார் சோனியா. கால்நடைகளை வளர்க்கும் பெண்கள் பால் தானம் செய்தனர். இதுவே விவசாயிகளின் போராட்டத்தை பின்னால் இருந்து ஆதரிக்கும் அவர்களின் வழி.
டிக்ரி, சிங்கு (டெல்லி-ஹரியானா எல்லை) மற்றும் காசிப்பூர் (டெல்லி- உத்தரபிரதேச எல்லை) ஆகிய பகுதிகளில் திரண்டுள்ள ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான விவசாயிகள் இப்போது மூன்றாவது மாதமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நான் பிப்ரவரி 3ஆம் தேதி மதிய நேரத்தில் டிக்ரியில் சோனியாவை முதலில் சந்தித்தேன். 10,000 மக்கள்தொகை (மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011) கொண்ட பெட்வார் கிராமத்தின் 150 பெண்கள் கொண்ட குழுவில் அவர் இருந்தார். போராட்டத்திற்கு வந்த அவர்கள் திரும்பிச் செல்ல தயாராகிக் கொண்டிருந்தனர். “எங்கள் போராட்டங்களைப் பார்க்கும் ஒருவர் புத்துணர்வு கொள்வார்,” என்று பிப்ரவரி 7ஆம் தேதி பெட்வாரில் அவரை நான் சந்தித்தபோது தெரிவித்தார்.










