குப்பத்தில் இருக்கும் அறையை நோக்கிய குறுகலான சந்துகளுக்குள் பானு ஏறிச் சென்று கொண்டிருக்கிறார். கைக்குட்டையால் வாய் கட்டப்பட்டிருந்தது. உதவியாக கிடைத்த அரையரை கிலோ அரிசியும் பருப்பும் கைகளில் பாலீதீன் பைகளில் இருந்தது. யாரோ வருவதை பார்த்ததும் சட்டென அருகே இருந்து வீட்டருகே பதுங்கிக் கொண்டார். மலையிலிருந்து இறங்கி வருபவர்களின் கைகளில் சாக்குகளும் பொட்டலங்களும் இருந்தன. தெரிந்த முகம் எதுவும் இருக்கிறதா என பார்த்துவிட்டு பானு மீண்டும் மலையேறத் தொடங்கினார்.

ஒரு சாக்கடைக் கால்வாயை தாண்டி குதித்தார். சந்தில் இருந்த எல்லா பத்துக்கு பத்தடி வீடுகளும் பூட்டப்பட்டிருந்தன. அந்த கதவுகளுக்கு பின் ஒரு ரகசியமான அமைதி குடிகொண்டிருந்தது. எவரும் பேசிக் கொள்ளும் சத்தமில்லை. சண்டை சத்தம் இல்லை, சிரிப்பொலி இல்லை. மொபல் போன்களில் சத்தமாக பேசும் சத்தங்கள் இல்லை. தொலைக்காட்சி ஓடும் சத்தங்கள் இல்லை. சமையல் மணமும் இல்லை. அடுப்புகளில் குளிர் கொண்டு பல நாட்களாகிவிட்டன.

பானுவின் அறை மலையுச்சியில் இருக்கிறது. மனைவி சரிதா ஒரு கேஸ் அடுப்பு அருகே அமர்ந்து வெறுமனே வீட்டுக்கதவை பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆறு மாத கர்ப்பத்தில் உப்பியிருக்கும் வயிற்றின் மேல் கைகள் இருந்தன. ஒன்பது வயது ராகுல் பொம்மை காரை சிமெண்ட் தரையில் சுற்றி சுற்றி ஓட்டிக் கொண்டிருந்தான். அம்மாவிடம் சாப்பாடு கேட்டு அனத்திக் கொண்டிருக்கிறான்.

“அம்மா, எனக்கு பசிக்குது. காலையிலருந்து எதுவும் சாப்பிடல. பாலும் க்ரீம் பிஸ்கட்டும் கூட கொடுக்கலைம்மா…”

தன்னிச்சையாக பெருமூச்சு விட்டார் சரிதா. “ஆமாம்பா,” என சொல்லி தன்னிலைக்கு திரும்பி, “இரு.. எதாவது இருக்கா பார்க்கிறேன். உங்கப்பா இப்போ வந்திடுவார். நிறைய வாங்கிட்டு வருவாரு. நீ வெளியே விளையாடிக்கிட்டு இரு!”

உடனே “என்னோட விளையாட யாருமில்லயே,” என்றான் ராகுல். “விக்கியும் பண்ட்டியும் எங்க போனாங்கம்மா?”

“அவங்க ஊருக்கு போயிருப்பாங்க. திரும்ப வந்திடுவாங்க.”

“பள்ளிக்கூடம் நடக்கும்போது ஊருக்கு போக மாட்டாங்கம்மா. அவங்க திரும்ப வர மாட்டாங்கன்னு தோணுது. நாங்க எஞ்ஜினியர் ஆகணும்னு நெனச்சோம். பள்ளிப்படிப்ப முடிச்சதும் கார் ரிப்பேர் பண்ற கடை தொடங்கலாம்னு நினைச்சோம். ஆனா அவங்க இப்போ பள்ளிக்கூடத்துக்கு கூட வரப் போறதில்லை!”

“பெரிய கடையே நீ திறக்கலாம். இப்போ நீ வளர்ந்தவனாயிட்டே!” என்ற சரிதா அடுப்புக்கு அருகே இருக்கும் அலமாரிக்குள் தேடிக் கொண்டிருந்தார். சில காலி பானைகள், ஒரு கடாய், ஒரு குழம்புக் கரண்டி, சில சிறு கரண்டிகள், நான்கு தட்டுகள், சில கிண்ணங்கள் ஆகியவையே அந்த அலமாரிக்குள் இருந்தன. அந்த ஒற்றை அலமாரியிலிருப்பது மட்டும்தான் சமையலுக்கென இருக்கும் மொத்த விஷயங்கள். அடுத்த வரிசைகளில் உப்பு, பயிறு, அரிசி, கோதுமை மாவு, பருப்பு, எண்ணெய் போன்றவற்றுக்கான ப்ளாஸ்டிக் குடுவைகள் இருந்தன. எல்லா குடுவைகளும் காலி. ராகுலுக்கு ஏதோ கொடுப்பதை போல எல்லா குடுவைகளையும் திறந்து பார்த்து பாவனை செய்து கொண்டிருந்தார். ஒரு குடுவைக்குள் காலியான க்ரீம் பிஸ்கெட் கவர் மட்டும் இருந்தது. அதை கையிலெடுத்து கசக்கி ராகுலை அவர் திரும்பிப் பார்த்தபோது பானு வீட்டுக்குள் நுழைந்தார். கைக்குட்டையை வாயிலிருந்து கழற்றிவிட்டு பெருமூச்சுடன் கீழே அமர்ந்தார். எதிர்பார்ப்புடன் அப்பாவின் பைகளை வாங்க ராகுல் ஓடினான்.

“ஒருவழியா வந்து சேர்ந்தீங்க… ராகுல், அப்பாவுக்கு தண்ணீ எடுத்துட்டு வா.”

ஒப்பந்ததாரருடன் பேசியதை பானு மனதுக்குள் ஆயிரமாவது தடவையாக ஓட்டி பார்த்துக் கொண்டார்.

“அப்பா.. இந்தாங்க தண்ணி. எதுவும் பிஸ்கட் வாங்கிட்டு வரலையா?” என ராகுல் அவரின் தோளை குலுக்கினான்.

ராகுலிடமிருந்து தண்ணீரை வாங்கி அமைதியாக குடித்தார் பானு.

“காண்ட்ராக்டர் பணம் எதுவும் கொடுக்கலை. வேலை தொடங்க இன்னும் ஒரு மாசம் ஆகுமாம்.” பேசிக் கொண்டே சரிதாவை பார்த்தார்.

உப்பியிருந்த வயிற்றில் கை வைத்து சரிதா தடவிக் கொடுத்தார். வயிற்றுக்குள் இருந்த குழந்தைக்கு ஆறுதல் கொடுக்கவா அல்லது குழந்தையிடமிருந்து ஆறுதல் பெற்றுக் கொள்ளவா எனத் தெரியவில்லை.

“அரசாங்கம் எல்லாத்தையும் மூடிடுச்சு,” என்ற பானு, “ஏதோ நோயாம். எப்போ திரும்ப வேலை செய்றதுன்னு அரசாங்கம்தான் சொல்லுமாம்,” என்றார்.

“பணமில்லாம ஒன்றரை மாசம் ஓடிடுச்சு. பருப்பு, அரிசின்னு எதுவும் இல்ல. பிச்சை எடுத்து எத்தன நாள் வாழறது?”

“உன்னை இங்க நான் கூப்பிட்டு வந்திருக்கவே கூடாது,” என சொல்லும்போது குரலிலிருந்து குற்றவுணர்வை பானுவால் மறைக்க முடியவில்லை. “உனக்கிருக்கற நிலைமைல, சாப்பாட்டுக்கும் என்ன பண்றதுன்னு தெரியல. இன்னும் எத்தன மாசத்துக்கு இது போகும்னும் தெரியல!”

கோபத்துடன் கைகளை உதறினார். ஒன்றரை மாதமாக ஒருவேளை உணவுதான் பானுவின் குடும்பம் சாப்பிடுகிறது. பருப்பரிசி உணவு. அதுவும் ஏதேனும் தொண்டு நிறுவனம் கொடுத்தால்தான் உண்டு. இவையெல்லாம் ஆரம்பிப்பதற்கு முன்பு, அவர்கள் காய்கறிகளும் பாலும் சாப்பிட முடிந்தது. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ஆப்பிள், ஆரஞ்ச், திராட்சை போன்ற பழங்களும் சாப்பிட்டிருக்கிறார்கள்

ஓவியங்கள்: அந்தா ராமன்

கொரோனாவுக்காக நாடு முழுக்க அரசு போட்ட ஊரடங்கு உத்தரவினால் எல்லா தொழிற்சாலைகளும் மூடப்பட்டன. எட்டு வருடங்களில் இத்தனை நாட்கள் தொடர்ந்து வேலையின்றி பானு இருப்பது இப்போதுதான். கட்டுமான வேலைகளில் செண்ட்ரிங் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். வழக்கமாக ஒரு மாதத்தில் 25 நாட்கள் வேலை இருக்கும். ஒரு நாளுக்கு 400 ரூபாய் கிடைக்கும். வீட்டுச்செலவுக்கு போக உத்தரப்பிரதேச கிராமத்தில் வசிக்கும் பெற்றோருக்கு பணம் அனுப்பும் அளவுக்கு வருமானம் இருந்தது.

இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது பானுவின் நண்பர்களான சூர்யாவும் அபய்யும் வந்தனர். இருவரும் தினமும் காலை வேலைக்கு ஆளெடுக்கும் இடத்துக்கு போய் நிற்பார்கள். வழக்கமாக கட்டுமான வேலைகளுக்குதான் ஆளெடுப்பார்கள். ஊரடங்குக்கு முன் வரை அதுவே நிலை. இப்போது அவர்களுக்கும் வேலை இல்லை. சூர்யா வாங்கி வந்திருந்த நான்கு வாழைப்பழங்களை பானுவுக்கு கொடுத்தார்.

“என்ன பண்றிங்க அக்கா? கொஞ்சம் வாழைப்பழம் சாப்பிடுங்க… நேத்துலருந்து நீங்க எதுவுமே சாப்பிடலை,” என சரிதாவை வலியுறுத்துகிறார் அபய்.

சூர்யா பானுவிடம், “உங்க காண்ட்ராக்டர் சம்பளம் கொடுத்தாரா? என்ன சொன்னார்?” எனக் கேட்டார்.

“அவர் என்ன சொல்வார்? என்னோட போன் அழைப்புகள கூட பல நாளா அவர் எடுக்கவேயில்லை. அவர் வீட்டுக்கு வெளியே நின்னு காத்தக்கிட்டிருந்தேன். ஒரு மணி நேரத்துக்கு பிறகு அவர் வந்தார். மதுபுட்டியை காகிதத்துல சுத்தி வச்சிருந்தார். என்கிட்ட இருந்து அதை மறைச்சார். போன மாசத்துல ரெண்டு வாரம் நான் பார்த்த வேலைக்கு சம்பளம் கேட்டேன். சுத்தமா கையில் காசில்லன்னு சாதிச்சாரு. ஐநூறு ரூபாய் நோட்டை கையில கொடுத்து இத வச்சுக்கிட்டு சமாளிச்சுக்கோன்னாரு.”

”ஓ… சாராயமா? ரொம்ப முக்கியமான விஷயமாச்சே?” என்றார் சூர்யா.

இரண்டு தம்ளர்களில் தண்ணீர் எடுத்து வந்து கொடுத்த சரிதா, “வண்டிய பத்தி எதுவும் தெரிஞ்சுதாண்ணே?” எனக் கேட்டார்.

“எதுவும் தெரியலக்கா,” என்கிறார் அபய். “எங்கே போனாலும் மக்கள் வரிசைல நிற்குறாங்க. ரோட்டுல உட்கார்ந்திருக்காங்க. நாலு ரயில் நிலையத்துக்கும் மூணு பேருந்து நிறுத்தத்துக்கும் போய் பார்த்தோம். எங்கயும் ரயிலோ பஸ்ஸோ கண்ணுலயே படல.”

“எல்லா படிவமும் நம்ம நிரப்பி கொடுத்தோம். பரிசோதனையும் செஞ்சோம். அதெல்லாம் என்னாச்சு?”

“மொபைல் ஃபோன்ல பார்த்தேன். கேன்சல் ஆயிடுச்சுன்னு காட்டுது. ரயில் நிலையத்துக்கு பார்க்கப் போனப்போ, போலீஸ் எங்கள விரட்டி விட்டுச்சு,” என்றார் சூர்யா.

”கீழே இருக்கற அறைல இருந்த கீதாக்கா அவங்க குடும்பத்தோட நேத்து கார்ல ஊருக்கு போயிட்டாங்க. கார்காரரு ஒராளுக்கு நாலாயிரம் ரூபாய் கேட்டிருக்காரு,” என்றார் சரிதா.

“10000 ரூபாய்தான் இப்போ வங்கிக் கணக்குல இருக்கு. இப்போ இந்த 500 ரூபாய் கிடைச்சிருக்கு…” என்ற பானு, “நிறைய பேர் அவங்க ஊருக்கு நடந்தே போறதாகவும் கேள்விப்பட்டேன்…” எனவும் சொன்னார்.

பானுவின் அறைக்கு எதிரே இருந்த பூட்டிய அறையின் விளிம்பில் அமர்ந்திருந்த சூர்யா குழப்பத்துடன் காணப்பட்டார். “என்னால எதையும் புரிஞ்சுக்க முடியல. வீட்டுக்காரரு தொடர்ந்து ஃபோன் பண்ணி வாடகை கேட்டிக்கிட்டிருக்காரு. ஆனா எங்கருந்து வாடகை கட்டுறது?”. அபய் சுவரில் சாய்ந்து கொண்டார். கதவருகே இருந்த பானுவுக்கு பின் சரிதா நின்றுகொண்டிருந்தார். “எல்லா இடத்திலயும் இதே கதைதான். நம்மள மாதிரியான தொழிலாளருங்க எல்லாருமே ஒரே கதையத்தான் சொல்றாங்க. என் வீட்டுக்கு ரெண்டு மாசமா ஒரு காசும் நான் அனுப்பல. அப்பாவோட மருந்துக்கு கூட காசு அனுப்பல…,” என்றார் அபய். அவரின் தந்தைக்கு நுரையீரலில் பிரச்சினை. அவரின் தாய் மலேரியா வந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். தங்கை 10ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். அவர்களை பற்றிய யோசனையிலிருந்த அவர் சிறிது நேரம் கழித்து மீண்டும் தன்னிலைக்கு வந்தார். ராகுலைப் பார்த்து, “ராகுல்.. என்ன பண்றே?” என்றார்.

“என்னோட அவுடி கார் ஓட்டிக்கிட்டு இருக்கேன் மாமா.”

சூர்யா வேடிக்கையாக கேட்டார், “ஓடியா… உன்னோட ஓடிக் கார் நம்மள ஊருக்கு கொண்டு போகுமா?”

“நிச்சயமா.. இது என்னோட கார். எல்லா இடத்துக்கும் போகும். எல்லாரையும் ஏத்திக்கும். ஸ்ஸூம்ர்ரூம்ர்ரூம்ர்ர்ரூம்ஸ்ஸ்…” வாசலில் உட்கார்ந்திருந்த அவன் அப்பாவை தள்ளிவிட்டு வீட்டை விட்டு காரை வெளியே கொண்டு சென்றான். சத்தம் கொடுத்துக் கொண்டே காரை வேகமாக குறுக்குச் சந்துக்குள் ஓட்டினான். சரிதாவும் பானுவும் சூர்யாவும் அபய்யும் அவன் சந்தோஷமாக விளையாடுவதை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

முடிவாக சூர்யா சொன்னார், “நம்ம கிளம்புவோம் அக்கா. ஊருக்கு கிளம்புவோம்.”

இரவு முழுக்க அவர்கள் பாத்திரங்களையும் துணிகளையும் மூட்டை கட்டினார்கள். அடுத்த நாள் அதிகாலை, நகரத்திலிருந்து வெளியேறும் சாலையை நோக்கி அவர்கள் நடக்கத் தொடங்கினார்கள்.

*****

ஒரு திறந்தவெளி புல்தரையில் பித்யாவும் அவரது குடும்பமும் விழித்தெழுந்தார்கள். நகரத்திலிருந்து ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் நெடுஞ்சாலைக்கு அருகே அந்த இடம் இருந்தது. காலை மணி நான்கு. புல்தரையில் விரித்திருந்த போர்வைகளை மடித்தெடுத்துக் கொண்டு திரும்ப நடக்கத் தொடங்கினார்கள். புத்ருஜ் கிராமத்தின் செங்கல் சூளையிலிருந்து முந்தைய நாள் கிளம்பியிருந்தார்கள். கர்தெபடாவிலிருந்து அவர்களின் வீடு 150 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. வேலைக்காக செங்கல் சூளைக்கு சென்றிருந்தார்கள்.

பித்யா தன் தலைமீது அதிக எடையுடன் கூடிய சோள மாவையும் அரிசியையும் கையில் ஒரு பொட்டலத்தில் பாத்திரங்களையும் சுமந்து சென்று கொண்டிருந்தார். அவருடைய மனைவி சுலா அவருக்கு பின்னால் போர்வைகள் இருக்கும் ஒரு பெரும் பொதியை தலையில் வைத்து சென்று கொண்டிருந்தார். அவருடைய எட்டு வயது குழந்தை நந்து மார்பில் தூங்கிக் கொண்டிருந்தான். தூசு படிந்த அவன் முகத்தில் காய்ந்த கண்ணீரின் தடம். 13 வயது கல்பனா தலையில் துணிப் பொட்டலத்தை சுமந்து கொண்டும் ஆறு வயது கீதா அக்காவின் பாவாடையை பிடித்துக் கொண்டும் அம்மாவின் பின்னால் நடந்து கொண்டிருந்தனர்.

திரும்பிப் பார்க்காமல், சுலா, “பார்த்து நடங்க,” என்றார்.

முன்னாலிருந்து பித்யா சத்தமாக சொன்னார், “அவங்களை நமக்கு நடுவுல நடக்க வை. பின்னாடி வர வேண்டாம். அப்போதான் அவங்க நம்ம பார்வைலயே இருப்பாங்க.”

கல்பனாவும் கீதாவும் பித்யா மற்றும் சுலா ஆகியோருக்கு இடையில் நடக்கத் தொடங்கினர். சில மணி நேரங்கள் கழித்து, சூரியன் உச்சிக்கு வந்தது. வெயில் கருணையின்றி காய்ந்தது. கிழிந்த செருப்புகளுக்கு வெளியே வந்திருக்கும் விரல்களும் குதிகால்களும் சூடான தரையில் பொசுங்கிக் கொண்டிருந்தன. சுலாவின் இதயம் வேகமாக அடித்தது. மூச்சு வாங்கியது.

“ஹ்ம்.. ஹ்ம்ம்.. கேளுங்க. எல்லாரும் கொஞ்ச நிற்கலாம். மேலே நடக்க முடியலை. தாகமா வேற இருக்கு.”

“பக்கத்துல ஒரு கிராமம் இருக்கு. அங்க நிற்போம்,” என்றார் பித்யா.

சற்று தூரத்தில் ஓர் அரசமரத்தை பார்த்தார்கள். அதிலிருந்த பெயர்ப்பலகை இடப்பக்கத்தில் இருந்த கல்சாலை அதர்ஸ்வாதி கிராமத்துக்கு செல்வதை அறிவித்தது. மரத்தை சுற்றியிருந்த மேடையில் பித்யா தன் சுமையை வைத்தார். சுலாவும் கல்பனாவும் மேடையில் தம் சுமைகளை வைத்து பெருமூச்சு விட்டார்கள். மரம் கொடுத்த அடர் நிழல் அவர்களுக்கு ஆசுவாசம் கொடுத்தது. நந்துவை சுற்றியிருந்த துணியை கழற்றி, மடியில் வைத்து சேலையின் முகப்பால் மறைத்துக் கொண்டு பால் புகட்டினார் சுலா.

பித்யாவின் உடல் சூடு கொஞ்சம் தணிந்ததும் ஒரு பொட்டலத்திலிருந்து மூன்று தண்ணீர் பாட்டில்களை எடுத்தார். “இங்கேயே இருங்க. நான் தண்ணி பிடிச்சுட்டு வர்றேன்.”

கொஞ்ச தூரத்தில் ஒரு மண் பாதையில் முள்வேலி தடுப்பு இருந்தது. அதில் ஓர் அறிவிப்பு எழுதப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை:  வெளியாட்கள் ஊருக்குள் நுழைய அனுமதி இல்லை.

“போக முடியாதா? கரோனா..” மெதுவாக படித்து பார்த்துவிட்டு, யாருக்கேனும் கேட்குமென்கிற எண்ணத்துடன் குரலெழுப்பி சத்தம் போட்டார்.

“யாராவது இருக்கீங்களா? அக்கா… அண்ணா.. யாராவது? எனக்கு கொஞ்சம் தண்ணி வேணும். யாராவது இருக்கீங்களா?”

ரொம்ப நேரமாக சத்தம் போட்டுக் கொண்டிருந்தார். ஆனால் பதிலே இல்லை. அவநம்பிக்கையுடன் திரும்பினார். அவர் வருவதை பார்த்ததும் சுலா முகத்தில் புன்னகை அரும்பியது.

“தண்ணி எங்கே?”

“ரோட்ட மூடிட்டாங்க. கிராமத்துல இருந்தவங்கள கூப்பிட முயற்சி பண்ணேன். ஆனா யாருமே வரலை. இங்கயும் நோய் இருக்கு. போற வழியில வேற எங்காவது வழி இருக்கான்னு பார்ப்போம்.”

சுலாவுக்கு நம்பிக்கை இருந்தது. “திறந்த மைதானம் எதாவது இருந்தா, நம்ம அங்க தங்குவோம்.”

கீதா கெஞ்சினாள், ”அப்பா, ரொம்ப பசிக்குது.”

அப்பா உற்சாகப்படுத்தினார், “கீதா, வா. என் தோள்ல உட்காரு. மேலே இருந்து என்ன பார்க்குறனு எங்களுக்கு சொல்லு.”

அவரின் தலையைப் பிடித்து தோளுக்கு ஏறினாள் கீதா. அரிசி மற்றும் மாவு மூட்டையை ஒரு கையிலும் பாத்திரப் பொட்டலத்தை இன்னொரு கையிலும் பித்யா எடுத்துக் கொண்டார். 2,3 கிலோமீட்டர்கள் நடந்தபிறகு ஒரு தகரக் கொட்டகை போட்ட வீட்டை பார்த்தனர். சுலா கண்ணுக்கு ஒருவர் தட்டுப்பட்டார்.

“பாருங்க… யாரோ ஒருத்தர் தரையில் கிடக்குறாங்க.

உன்னிப்பாக பார்த்த பித்யா, “தூங்கிக்கிட்டிருப்பாங்க போல” என்றார்.

“இப்படி தரையில் யார் தூங்குவாங்க? போய் பாருங்க. அவர் மயக்கம் போட்டிருக்கற மாதிரி தெரியுது.”

பித்யா அந்த வீட்டுக்கு அருகே சென்று சுமைகளையும் கீதாவையும் இறக்கி வைத்தார். வயதான பெண்மணி உண்மையிலேயே அங்கு கீழேதான் கிடந்தார்.

“சுலே.. இங்க வா.”

சுலா குடிசைக்குள் ஓடினார். கல்பனாவும் பின்னாலயே ஓடினாள். பெண்மணியை எழுப்ப முயற்சி செய்தார்கள். கல்பனாவை குடிசைக்குள்ளிருந்து தண்ணீர் எடுத்து வர அனுப்பினார் சுலா.

“அம்மா,” என அழைத்தபடி முகத்தில் தண்ணீர் தெளித்தார் பித்யா.

அவரை தூக்கி கயிற்றுக் கட்டிலில் கிடத்தினார். பிறகு நந்துவை கையில் வைத்துக் கொண்டு புல்தரையில் அமர்ந்தார்.

நேரம் கடத்தாமல் சுலா சில கற்களையும் சுள்ளிகளையும் எடுத்து வீட்டுக்கு வெளியே சமைக்க தீ மூட்டினார். வயதான பெண்மணியும் மெல்ல விழித்தார்.

”எழுந்திட்டீங்களா அம்மா.. உங்க வயிறுலருந்து சத்தம் வருது. எதுவும் சாப்பிடலயா?” எனக் கேட்டார் பித்யா.

“நான் அம்மா இல்ல.. என் பெயர் லஷ்மிபாய். ஒருத்தர் வீட்டுக்குள்ள எப்படி அனுமதியில்லாம நுழைஞ்சீங்க…? உங்களுக்கு வெட்கமா இல்லையா?”

கல்பனா ஒரு ரொட்டியை சட்னியுடன் அவரிடம் வைத்து புன்னகைத்து, “இதை சாப்பிடுங்க பாட்டி,” என்றாள்.

சூடான ரொட்டியை பார்த்ததும் கோபம் பறந்து போனது. அதை சாப்பிட்டதும் அடுத்த ரொட்டியை சுலா வைத்தார். லஷ்மிபாய் அவரை பார்த்து புன்னகைத்தார்.

“எந்த வழியா போறீங்க?”

“செங்கல்சூளைக்கு போனோம்.. ஆனா பாதிவழியிலேயே திரும்பிட்டோம்.”

“ஹ்ம்ம்… ஏதோ நோய் வந்திருக்குன்னு கேள்விப்பட்டேன். கிராமத்துல இருக்கறவங்க என்னை உள்ளே விடலை. பிச்சை எடுத்து வாழ்ந்துக்கிட்டு இருந்தேன். நாலு நாள் கழிச்சு ஒரு வழியா ரொட்டிய பார்க்கற வாய்ப்பு கிடைச்சிருக்கு.” அனைவரும் சாப்பிட்டபடி பேசினர். ஐந்து ரொட்டிகளை எடுத்து துணிக்குள் வைத்து மடித்துவிட்டு, லஷ்மிபாய்யிடம் விடைபெற்றார் சுலா. பித்யா தண்ணீர் நிரப்பிக்கொண்டார்.

கட்டிலில் இருந்து லஷ்மிபாய் கையசைத்தார், “பார்த்து போங்க குழந்தைகளா,” எனச் சொல்லிவிட்டு நீண்ட நேரம் அவர்கள் செல்வதை பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு பெருமூச்செறிந்து எழுந்து குடிசைக்குள் சென்று மண்பானையிலிருந்து தண்ணீர் எடுத்து குடித்தார். பானைக்கு அருகே ரொட்டி மாவும் சட்னியும் ஒரு பாலிதீன் பையில் சுற்றப்பட்டுக் கிடந்தது. அதை எடுத்துக் கொண்டு வேகமாக வெளியே வந்து பார்த்தார். ஆனால் அவர்கள் சென்றிருந்தனர்.

பத்து கிலோமீட்டர் தொலைவு நடந்த பிறகு பாதங்களில் தக்காளிகளும் கத்தரிக்காய்களும் மிதிபட்டன. ஒரு விவசாயி காய்கறிகளை நெடுஞ்சாலையில் கொட்டி விட்டிருந்தார். “எப்படியிருந்தாலும் நாசமாதான் போகப் போகுது. இதையெல்லாம் நான் நகரத்துக்கு எப்படி எடுத்துட்டு போக முடியும்? எவ்வளவைத்தான் நாமே தின்னு தீர்க்க முடியும்? எல்லாத்தையும் கொட்டுங்க,” என விவசாயிகள் பேசுவது பித்யாவின் காதில் விழுந்தது. போன வருட அறுவடைக் காலத்தில் பெய்த மழையால் நாசமான நெல் வயல்கள் அவரின் நினைவுக்கு வந்தன.

”விவசாயிக்கு ஏற்படுற நஷ்டத்த அவரோட வாழ்க்கையாலதான் கழிக்கணும் போலருக்கு சுலே,” என்றார் பித்யா.

இலக்கின்றி நடந்து கொண்டிருந்தார்கள். எங்காவது கூட்டம் தென்பட்டால் அவர்களை பின்பற்றி வீடடைந்து விடலாம் என நம்பினார்கள். பக்கவாட்டில் மஞ்சள் தடுப்புகளருகே காவல்துறை நின்று கொண்டு மக்களை தள்ளிக் கொண்டிருந்தனர். சிலர் காவலர்களை கெஞ்சிக் கொண்டிருந்தனர். பலர் தெருக்களிலேயே அமர்ந்தனர். பெண்கள், குழந்தைகள், ஆண்கள் என அனைவருமே தரையில் அமர்ந்திருந்தனர். பித்யாவும் சுலேவும் குழந்தைகளுடன் அவர்களை நெருங்கினர்.

*****

“சார்… எங்களை போக விடுங்க. காலைலருந்து நடந்துக்கிட்டு இருக்கோம். எதுவும் சாப்பிடக் கூட இல்லை,” என ஒரு காவலரிடம் சொன்னார் சூர்யா.

“அதனால? நான் உன்னை நடக்க சொன்னேனா? மேலே இருந்து வந்த உத்தரவு. எல்லைய தாண்டக் கூடாது. பின்னாடி போ. பின்னாடி போ.”

“நாங்க எங்கே போறது சார்? இங்க பாருங்க, உங்க ஆட்கள் என் காலை அடிச்சிட்டாங்க. எதாவது தைலம் இருந்தா கொடுங்க. ரொம்ப வலிக்குது.”

“எங்க ஆட்களா? இங்கருந்து போ. ஓடு.” காவலர் தடியை தூக்கினார். தடியிலிருந்து காத்துக் கொள்ள தலையில் கைவைத்தபடி சூர்யா பின்னால் நகர்ந்தார். பானுவும் சரிதாவும் ராகுலும் மரத்தடியில் அமர்ந்திருந்தனர். அபய் மரத்தில் சாய்ந்து நின்று கொண்டிருந்தார்.

“அங்க போக வேண்டாம்னு உங்கிட்ட சொன்னேன்ல?,” என சூர்யாவை கத்தினார் அபய். “நான் சொல்றத மட்டும் கேட்டுடாத! மறுபடியும் போய் அடி வாங்க ஆசையா?”

”ஒன்றரை மணி நேரமா இங்கயே உட்கார்ந்திருக்கோம்ணே. அடிச்சா அடிக்கட்டும். என்ன ஆனாலும் நான் வீட்டுக்கு போகணும்.”

“வீடு! இத்தன வருஷத்துல எத்தன வீடுகளையும் கட்டடங்களையும் நாம கட்டி கொடுத்திருப்போம்? காலைல இருந்து நடந்து வர்ற வழியெல்லாம் அவங்கள கடந்துதானே வந்தோம்?”

”ஜன்னல் வழியா கூட யாரும் எட்டி பார்த்து உங்களுக்கு நன்றி சொல்லலண்ணே,” என சொல்லி வெறுப்பாக சிரித்தார் சூர்யா.

”நீளமான வரிசைல மக்கள் போறத அவங்க நிச்சயமா பார்த்திருப்பாங்க. நிச்சயமா.” பித்யா எதிர்பட்டதும் பேச்சை பாதியில் நிறுத்தினார் பானு. “அண்ணே… போலீஸ் ஏன் வழிய மறிக்கிறாங்க?” எனக் கேட்டார்.

சூர்யா அவரை இந்தியில், “நீங்க மராத்தி பேசுவீங்களா?”

பித்யா தன் மொழியில் தொடர்ந்தார், “அண்ணே, எங்க ஊருக்கு நாங்க போகணும். செங்கல் சூளை வேலை நின்றுவிட்டது. பஸ் எதுவுமில்ல. அதனால நாங்க நடக்கிறோம்.”

சூர்யாவும் பிறரும் பித்யாவை வெறுமனே பார்த்தார்கள். விளக்குவதற்காக அபய் முன்னோக்கி நகர்ந்தார், “நீங்க சொன்னதுல ‘ரோடு’ங்கற வார்த்தைய தவிர வேற எதுவும் எனக்கு புரியல. ரோட மூடிட்டாங்க.”

“எங்கப்பா என்ன சொல்றாருன்னு நான் சொல்றேன்,” என பள்ளி கற்றுக் கொடுத்த இந்தியுடன் கல்பனா பேசத் தொடங்கினாள். “எங்க ஊருக்கு நாங்க போகணும். இங்க போலீஸ்காரங்க ஏன் நிற்குறாங்கன்னு எங்கப்பாவுக்கு தெரியல.”

புன்னகைத்தபடியே சூர்யா, “ஓ அப்படியா! எங்களுக்கு உங்கப்பா பேசுற மராத்தி புரியல. நகரத்துல பேசுற மராத்திய விட அது வித்தியாசமா இருக்கு.” என்றார்.

”மராத்திய ஒவ்வொரு மாவட்டம், நகரம், கிராமத்திலயும் வித விதமா பேசுவாங்க,” என்றாள் கல்பனா.

சில வார்த்தைகளை புரிந்து கொண்ட பானு பித்யாவை கையசைத்து உட்காரச் சொல்லிவிட்டு சூர்யாவிடம், “இப்போ நீ மொழி வகுப்பு நடத்தப் போறியா என்ன?” எனச் சொல்லி கல்பனாவை பார்த்து புன்னகைத்தார். “நீ திறமையான குழந்தைம்மா!”

அவர்கள் அனைவரும் மொழிகளை கடந்து ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொண்டிருந்தனர். திடீரென கூட்டத்தில் இருந்து சத்தம் எழுந்தது.

”எவ்ளோ நேரத்துக்கு நாங்க இங்கயே உட்கார்ந்திருக்கறது?” என ஒருவர் கேட்டார். “கல்சாலை வழியா நம்ம தண்டவாளத்துக்கு நடந்து போவோம். நம்மள அவங்க நடக்க விட்டதால, எப்படியும் ரயில் விட மாட்டாங்க. வாங்க போகலாம். வாங்க!”

அனைவரும் தூசு படிந்த அந்த சாலையை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள். இரண்டு குடும்பங்களும் அவர்களை பின் தொடர்ந்தது. இரவு கவியும் வரை அவர்கள் நடந்தார்கள். பித்யாவும் பிறரும் கிட்டத்தட்ட 40 கிலோமீட்டர்கள் நடந்திருந்தனர். இப்போது தண்டவாளத்தில் நடந்து கொண்டிருந்தனர். காயம் பட்ட காலுடன் சூர்யா மிகவும் பின்னால் வந்து கொண்டிருந்தார். கல்பனாவும் கீதாவும் அவருடன் நடந்து வந்தார்கள்.

சூர்யாவும் குழந்தைகளும் வரும் வரை காத்திருக்க சொன்னார் பானு. “அவங்க வர்ற வரைக்கும் இங்க நாம உட்கார்ந்திருப்போம்.”

சற்று நேரம் ஓய்வெடுக்கலாம் என பானுவிடம் சொன்னார் சரிதா. “இரவு ஆயிடுச்சு. ராகுலும் பசி மயக்கத்துல இருக்கான்.”

அனைவரும் தண்டவாளத்தில் காலார அமர்ந்து கால்களை நீட்டிக் கொண்டிருந்தபோது சுலா ரொட்டிப் பொட்டலத்தை எடுத்தார், “நாம கொஞ்சம் சாப்பிடலாம்.”

”சூர்யாவும் குழந்தைகளும் வரட்டும். எல்லாரும் ஒண்ணா சாப்பிடலாம்,” என்றார் அபய்.

காத்திருக்கையிலேயே கண்கள் செருகின. தலையை குலுக்கி பித்யா தூங்காமலிருக்க முயன்றார். முடியவில்லை. அப்படியே தண்டவாளத்தில் படுத்து உறங்கினார். மற்றோரும் தண்டவாளத்தில் ஓய்வெடுக்கத் தொடங்கினர்.

காத்திருக்கையிலேயே கண்கள் செருகின. தலையை குலுக்கி பித்யா தூங்காமலிருக்க முயன்றார். முடியவில்லை. அப்படியே தண்டவாளத்தில் படுத்து உறங்கினார். மற்றோரும் தண்டவாளத்தில் ஓய்வெடுக்கத் தொடங்கினர்.

ரயில் எழுப்பிய பெரும் எச்சரிக்கை சத்தம் அவர்களின் காதுகளுக்கு விழவில்லை. வேகமாக வந்த ரயிலின் வெளிச்சம், வீடு திரும்பும் கனவில் உறங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்ப முடியவில்லை.

ஓவியர்: அந்தரா ராமன், பெங்களூருவில் இருக்கும் சிருஷ்டி ஓவிய வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப நிறுவன பட்டதாரி. கருத்தோவியமும் எல்லா வடிவங்களிலும் கதை சொல்லும் முறையும் அவரின் ஓவியங்கள் மற்றும் வடிவமைப்புகளில் தாக்கம் கொண்டிருக்கும்.

தமிழில்: ராஜசங்கீதன்

ਜਯੋਤੀ ਸ਼ਿਨੋਲੀ ਪੀਪਲਸ ਆਰਕਾਈਵ ਆਫ਼ ਰੂਰਲ ਇੰਡੀਆ ਵਿਖੇ ਸੀਨੀਅਰ ਪੱਤਰਕਾਰ ਹਨ; ਉਨ੍ਹਾਂ ਨੇ ਪਹਿਲਾਂ 'Mi Marathi' ਅਤੇ 'Maharashtra1' ਜਿਹੇ ਨਿਊਜ ਚੈਨਲਾਂ ਵਿੱਚ ਵੀ ਕੰਮ ਕੀਤਾ ਹੋਇਆ ਹੈ।

Other stories by Jyoti Shinoli
Translator : Rajasangeethan

ਰਾਜਸੰਗੀਥਨ ਚੇਨਈ ਅਧਾਰਤ ਲੇਖਕ ਹਨ। ਉਹ ਤਾਮਿਲ਼ ਦੇ ਪ੍ਰਮੁੱਖ ਨਿਊਜ਼ ਚੈਨਲ ਨਾਲ਼ ਇੱਕ ਪੱਤਰਕਾਰ ਵਜੋਂ ਕੰਮ ਕਰਦੇ ਹਨ।

Other stories by Rajasangeethan