ஹரியானா தில்லி எல்லையில் சிங்குவில் போராடிக் கொண்டிருக்கும் விஷ்வஜோத் க்ரூவால், "இந்தச் சட்டங்களை நாங்கள் மாற்றியமைக்க விரும்புகிறோம்", என்று கூறுகிறார். "நாங்கள் எங்கள் நிலத்துடன் மிகவும் ஒன்றியிருக்கிறோம் யாரும் எங்களிடமிருந்து அதைப் பிரிப்பதை எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது", என்று 23 வயதாகும் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த அப்பெண் கூறுகிறார், மேலும் லூதியானா மாவட்டத்திலுள்ள அவரது கிராமமான பமலில் கடந்த செப்டம்பர் மாதம் 3 வேளாண் சட்டங்கள் இயற்றப்பட்டதிலிருந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை அவர் வழி நடத்தி வந்துள்ளார்.
அவரது குடும்பத்தில் உள்ள பெண்கள், கிராமப்புற இந்தியாவில் இருக்கும் குறைந்தது 65 சதவீத பெண்களைப் போலவே (மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 இன் படி) நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலோனோருக்கு சொந்த நிலம் கிடையாது, ஆனால் அவர்கள் விவசாயத்தின் மையமாக இருக்கின்றனர், அவர்களே பெரும்பாலான வேலைகளை செய்கின்றனர் - விதைப்பது, நடவு செய்வது, அறுவடை செய்வது, கதிர் பிரிப்பது, பிரிக்கப்பட்ட கதிரை வயலில் இருந்து வீட்டுக்கு கொண்டு செல்வது, உணவை பதப்படுத்துவது மற்றும் பால் பொருட்கள் உற்பத்தி செய்வது மற்றும் பல ஆகியவற்றில் ஈடுபடுகின்றனர்.
இருப்பினும், ஜனவரி 11-ஆம் தேதி உச்சநீதிமன்றம் இந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கும் தடை விதிப்பதாக உத்தரவு பிறப்பித்துள்ளது, மேலும் தலைமை நீதிபதி பெண்கள் மற்றும் முதியவர்கள் போராட்டக் களத்தில் இருந்து திரும்பிச் செல்வதற்கு 'வலியுறுத்தப்பட' வேண்டும் என்று கூறியதாக கூறப்படுகிறது. ஆனால் இச்சட்டங்களின் விளைவு பெண்களையும் மற்றும் வயதானவர்களையும் பாதிக்கும்.
விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020
,
விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020
மற்றும்
அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020
ஆகியவையே விவசாயிகள் எதிர்க்கும் மூன்று சட்டங்கள்.
2020 ஜூன் 5 அன்று அவை ஆணைகளாக்கப்பட்டு செப்டம்பர் 14 அன்று பாராளுமன்றத்தில் மசோதாக்களாக தாக்கல் செய்யப்பட்டு எதிர்ப்பையும் மீறி வேகவேகமாகாக அதே மாத 20ம் தேதி சட்டமாக்கப்பட்டிருக்கின்றன. மேலும் அரசியல் சாசனத்தின் 32ம் பிரிவு வழங்கும்
குடிமக்களுக்கான சட்டரீதியான பாதுகாப்பு உரிமை
யையும் இச்சட்டங்கள் பாதிப்பதாக விமர்சனம் எழுப்பப்படுகிறது. விவசாயிகள் மற்றும் விவசாயத்தின் மீது பெரு நிறுவனங்களுக்கான அதிகார பரப்பை மேலும் இச்சட்டங்கள் அதிகப்படுத்தும், அது விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு பேரழிவை ஏற்படுத்தும் என்று விவசாயிகள் அனைவரும் பார்க்கின்றனர். மேலும் இச்சட்டங்கள் விவசாயிக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாய உற்பத்தி சந்தைப்படுத்தல் குழு, மாநில கொள்முதல் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய முக்கியமான ஆதரவுகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன.
"புதிய வேளாண் சட்டங்களால் பெண்கள் தான் மிகவும் மோசமாக பாதிக்கப்படுவார்கள். விவசாயத்தில் அதிகமாக ஈடுபட்டு கொண்டு இருந்தாலும், அவர்களுக்கு முடிவெடுக்கும் அதிகாரங்கள் இல்லை. (எடுத்துக்காட்டாக) அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் கொண்டு வந்துள்ள மாற்றங்கள் உணவு பற்றாக்குறையை உருவாக்கும் மேலும் அதன் பாதிப்பை பெண்கள் தான் எதிர்கொள்ள நேரிடும்", என்று அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கத்தின் பொதுச் செயலாளரான மரியம் தவாலே கூறுகிறார்.
இந்தப் பெண்களில் பலர் இளையவர்கள் மற்றும் முதியவர்கள் தில்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள விவசாய போராட்ட களங்களில் கலந்துகொண்டு உறுதியுடன் போராடி வருகின்றனர். அதே வேளையில் விவசாயிகள் அல்லாத பலர் தங்கள் ஆதரவை பதிவு செய்ய அங்கு வருகிறார்கள் மேலும் சிலர் பொருட்களை விற்று அன்றாடம் சம்பாதிக்கவும், அல்லது லங்கர்களில் வழங்கப்படும் தாராளமான உணவை சாப்பிடவும் வந்துள்ளனர்.
தமிழில்: சோனியா போஸ்