தனக்கு கிடைக்க வேண்டிய பணத்தை வலியுறுத்தி சி. வெங்கட சுப்பா ரெட்டி பங்கேற்கும் ஆறாவது போராட்டம் இது. ஆந்திர பிரதேசத்தின் YSR மாவட்ட விவசாயியான இவருக்கு 18 மாதங்களுக்கு மேலாக கரும்பிற்கான நிலுவைத் தொகை செலுத்தப்படவில்லை.
ஆந்திர பிரதேச கரும்பு விவசாயிகள் சங்கம் சித்தூர் மாவட்டம், திருப்பதியில் 2020 பிப்ரவரி 2ஆம் தேதி ஒருங்கிணைத்த தர்ணா போராட்டத்தில் பங்கேற்க சுமார் 170 கிலோமீட்டருக்கு சுப்பா ரெட்டி பேருந்து பயணம் செய்துள்ளார்.
“2018ஆம் ஆண்டு விநியோகித்த கரும்பிற்கு மயூரா சர்க்கரை ஆலை எனக்கு ரூ.1.46 லட்சம் தர வேண்டும்,” என்கிறார் கமலாபுரம் மண்டலத்தில் உள்ள விபராம்புரம் கிராமத்தில் 4.5 ஏக்கர் நிலம் வைத்துள்ள சுப்பா ரெட்டி. 2018-19ஆம் ஆண்டு பருவத்தில் டன்னுக்கு ரூ.2,500 தருவதாக மயூரா ஆலை அவருக்கு உறுதி அளித்திருந்தது. “பிறகு அந்நிறுவனம் டன்னுக்கு ரூ.2,300 என குறைத்துவிட்டது. நான் ஏமாந்துவிட்டேன்.”
போராட்டத்தில் பங்கேற்ற ஆர். பாபு நாயுடு என்பவரும் சர்க்கரை ஆலையிலிருந்து வர வேண்டிய ரூ.4.5 லட்சம் நிலுவைத் தொகைக்காக காத்திருக்கிறார். சித்தூரின் ராமசந்திராபுரம் மண்டலம் கணேஷபுரம் கிராமத்தில் உறவினரிடமிருந்து எட்டு ஏக்கர் நிலத்தை வாடகைக்கு எடுத்து அவர் கரும்புகளை விளைவிக்கிறார். அவரது நிலத்தில் ஆழ்துளை கிணறு வறண்டு போனதால் அங்கு விவசாயத்தை கைவிட்டார். அவர் சொல்கிறார், “நிலத்தில் பயிரிட நான் [2019-20ஆம் ஆண்டுகளில்] ரூ.80,000 செலவிட்டேன். எனது உறவினர் குறைந்த தொகையில் வாடகைக்கு கொடுத்தார். பொதுவாக ஏக்கருக்கு ரூ.20,000 வரை வாடகை இருக்கும்.”
மொத்தமுள்ள ரூ.8.5 லட்சம் தொகையில் மயூரா சர்க்கரை ஆலை ரூ.4 லட்சம் மட்டுமே அளித்துள்ளது என்கிறார் பாபு நாயுடு. “மீதித் தொகை நிலுவையில் உள்ளது. விவசாயம் செய்யவே விவசாயிகளுக்கு பணம் தேவைப்படுகிறது.”
சித்தூர் மற்றும் YSR மாவட்டங்களில் (கடப்பா என்றும் அறியப்படுகிறது) மயூரா சர்க்கரை ஆலையிடமிருந்து நிலுவை தொகையைப் பெறுவதற்கு விவசாயிகள் இப்போதும் காத்திருக்கின்றனர். “எங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த நினைத்தாலும், அப்படி செய்ய முடிவதில்லை,” என்று கூறும் சுப்பா ரெட்டி 2020 மார்ச் மாதம் அறிவித்த கோவிட்-19 ஊரடங்கு பல போராட்டங்களை நடத்தவிடாமல் தடுத்துவிட்டது என்றார்.










