(வெறும் வயிற்றோடு வீட்டைவிட்டு போராட்டத்துக்குக் கிளம்பினால், உங்களின் இலட்சியத்தை யாரும் திருப்பிவிட்டுவிடக் கூடாது)
இதுதான், போராட்டக்காரர்களுக்காக பிலாவல்சிங் லாங்கர் எனப்படும் இந்த உணவகத்தை நடத்துவதன் பின்னால் உள்ள தாத்பரியம். “பசியோடு எப்படிப் போராடுவார்கள் என அரசாங்கம் ஆட்டம் காட்டுகிறது. பசியாற சாப்பிடும் போராட்டக்காரர்களை அவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் எனப் பார்ப்போம்.” என்கிறார் அவர்.
பிலாவலுக்கு வயது 32; அவரின் மைத்துனர் இரஷ்விந்தர் சிங்குக்கு வயது 30. இருவரும் ராஜஸ்தானின் கங்காநகர் மாவட்டத்தில் உள்ள 41 ஆர்பி கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இராஜஸ்தான் - அரியானா எல்லையில் சாஜகான்பூரில் முகாமிட்டிருக்கும் ஆயிரக்கணக்கான விவசாயிகளில் இவர்களும் அங்கம்.
டெல்லிக்கு உள்ளேயும் வெளியேயும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த இலட்சக்கணக்கான விவசாயிகள் தர்ணா செய்துவரும் இடங்களில் இதுவும் ஒன்று. இந்த விவசாயிகள் குறிப்பாக அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் ரத்துசெய்யக்கோரி கடந்த நவம்பர் 26ஆம் தேதி முதல் போராடிவருகின்றனர்.
இந்த சட்டங்கள் முதலில் 2020 ஜூன் 5 அன்று அவசரச் சட்டங்களாக நிறைவேற்றப்பட்டன. பின்னர், அவை செப்டம்பர் 14 அன்று நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டவரைவுகளாக அறிமுகம் செய்யப்பட்டு, அவசரஅவசரமாக அதே மாதம் 20ஆம் தேதியே சட்டங்களாக ஆக்கப்பட்டன. இந்த சட்டங்கள் தங்களின் வாழ்வாதாரத்தை காலிசெய்துவிடும் என்று விவசாயிகள் அச்சமடைந்தனர். விவசாயிகள் மீதும் விவசாயத்தின் மீதும் பகாசுர நிறுவனங்களின் பெருமளவில் ஆதிக்கம் ஏற்படுவதற்கு இந்த சட்டங்கள் வழிவகை செய்துவிடும் என்பதே அவர்களின் அச்சத்துக்குக் காரணம். மேலும், குறைந்தபட்ச ஆதார விலை, வேளாண்விளைபொருள் விற்பனைக் குழுக்கள், அரசுக் கொள்முதல் போன்றவற்றில் பயிரிடும் விவசாயிக்கு இருந்துவருகின்ற ஆதரவுச் சூழலை இந்த சட்டங்கள் வலுவிழக்கச் செய்துவிடும் என்பதும் முக்கியமானது.








