ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம், மகராஷ்ட்ரா முழுவதும் உள்ள வார்க்காரிகள், தேகு மற்றும் ஆலந்தியிலிருந்து 240 கிமீ தூரம் நடந்து சென்று சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள பந்தர்பூரில் இருக்கும் தங்கள் அன்புக்குரிய கடவுளான விதோபா மற்றும் ரகுமாயை ‘சந்திக்கச்’ செல்கிறார்கள். இந்த நடை பயணத்திற்காக, நூற்றாண்டுகளுக்கு முன்பு மேய்ச்சல் நாடோடிகள் பயன்படுத்திய பாதையை இவர்கள் கடந்த 800 வருடகளுக்கும் மேலாக பயன்படுத்தி வருவதாக நம்பப்படுகிறது.
துறவி துக்காராம் பிறந்த இடம் தேகு. ஆலந்தியில்தான் துறவி தியானேஸ்வர் சமாதி அடைந்தார். இருவருமே சமத்துவமும் மற்றும் சாதியற்றதன்மையும் கொண்ட ஆன்மீக பாரம்பரியத்தில் மதிக்கப்படும் துறவிகள். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் யாத்ரீகர்கள் ஆலந்தி அல்லது தேகுவை அடைந்து, அதன்பிறகு இரண்டு வார பயணத்தில் சேர்ந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு டிண்டியிலும் கிராமத்திலிருந்து ஒன்றாக பயணம் செய்து வரும் ஆண்களும் பெண்களும் சிறு குழுக்களாக இருப்பார்கள். சில டிண்டிகள் புனேயில் ஒருங்கிணைவர் அல்லது ஆரம்பிப்ப. மற்றவர்கள் தங்களது கிராமத்திலிருந்து கிளம்பி நல்ல சுப நாளாக கருதப்படும் ஏகாதசி அன்று பந்தர்பூர் அடைவார்கள்.
அனைத்து தலைமுறையினரும், அனைத்து சாதியினரும், எல்லா வயதினரும் வாரியில் நடக்கிறார்கள். துறவி தியானேஸ்வருக்கு அன்போடு வழங்கப்படும் ‘மாவுலி’ என்றே இங்கு அனைவரும் அழைக்கப்படுகிறார்கள். ஆண்கள் பல விதமான வெள்ளை உடை அணிந்துள்ளனர். பெண்கள் வெள்ளையை தவிர்த்து எல்லா வண்ணங்களிலும் உடை அணிந்துள்ளனர்.
‘தியானபோ மாவுலி துக்காராம்’ என்ற உச்சரிப்போடு பாரம்பர்ய அபாங், ஓவி மற்றும் காவ்லான் பாடல்களை வார்க்கரிகள் பாட, புனேயிலிருந்து காலை மூன்று மணிக்கு வாரி கிளம்புகிறது. இதனோடு தாளமும் மிருதங்க ஒலிகளும் காற்றில் எதிரொலிக்கிறது.
நான்கு வருடங்களுக்கு முன்பு, புனேயிலிருந்து டைவ் படித்துறை வரையுள்ள 20கிமீ தூரத்தை அவர்களோடு நடந்தேன். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை என பல வார்க்காரிகளிடம் அப்போது பேசினேன். நகைச்சுவைகளையும் வரவிருக்கும் வறட்சி காலம் (2014-ல் மாநிலத்தின் பல பகுதிகளில் நிலவியது) குறித்த கவலைகளையும் நாங்கள் பகிர்ந்து கொண்டோம். அப்போது என்னிடம், “கடவுள் எங்கள் மீது கருணை காட்டினால் மட்டுமே மழை பெய்யும்” என்றார் ஓஸ்மனாபாத் மாவட்டத்தின் காலம்ப் தாலுகாவில் உள்ள பாங்கயான் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர்.
அந்த நான்கு மணி நேரமும் சிரிப்புகளும், பாடல்களும், நட்புறவும் நிரம்பியிருந்தன. ஆனால் பல வயதான ஆண்களும் பெண்களும் சிதைந்த செருப்புகளோடு வாரியில் நடந்து சென்றனர். அதற்கு காரணம், இந்த இரண்டு வாரங்களும் அவர்களுக்கு உணவு கிடைக்கிறது. திந்திஸ் கடந்து செல்லும் ஒவ்வொரு கிராமத்திலும் நகரத்திலும் வார்க்காரிகளுக்கு உணவு, பழங்கள், டீ மற்றும் பிஸ்கட்டுகளை பக்தர்கள் வழங்குகிறார்கள்.
தமிழில்: வி கோபி மாவடிராஜா