உங்களின் பல்கலைக்கழகம் கிராம நிலத்தில் அமைந்திருக்கிறது என 2011ம் ஆண்டில், நான் கூறினேன். அந்த கிராமத்தின் மக்கள் பல முறை அப்புறப்படுத்தப்பட்டிருக்கின்றனர். எந்த வகையிலும் இது உங்களின் தவறோ பொறுப்போ கிடையாது. ஆனால் அதற்கு மதிப்பு கொண்டவர்களாக இருங்கள்.
அவர்கள் அதை மதித்தார்கள். . ஆனாலும் அந்த உண்மை ஒடிசாவின் மத்தியப் பல்கலைக்கழகத்தின் மாணவர் குழுவுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. அவர்கள் இதழியல் மற்றும் வெகுஜன ஊடகத் துறையைச் சேர்ந்த மாணவர்கள். சிகாபார் பற்றியக் கதை அவர்களை உலுக்கி விட்டது. மூன்று முறை இடம் மாறிய ஒரு கிராமம். ஒவ்வொரு முறையும் வளச்சி என்ற பெயராலேயே இடம் மாற்றப்பட்டிருக்கிறது.
என்னுடைய மனம் 1994ம் ஆண்டுக்கு சென்றது. 1960களின் ஓர் ஆவேசமான மழை நாள் இரவில் எப்படி இடம்பெயர்த்தப்பட்டார்கள் என சொன்ன கடாபா பழங்குடியான முக்தா கடம் (முகப்புப் படத்தில் பேரக் குழந்தையுடன் இருப்பவர்) நினைவுக்கு வந்தார். ஐந்து குழந்தைகளை முன்னே நடக்கவிட்டு, மழை கொட்டும் இருளில் ஒரு காட்டை நோக்கி தலையில் உடைமைகளை சுமந்தபடி அவர் சென்றார். “எங்கு செல்வதென எனக்குத் தெரியவில்லை. சார் சொன்னதால்தான் நாங்கள் கிளம்பிச் சென்றோம். அது பயங்கரமானதாக இருந்தது.”
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடடின் ’மிக்’ ரக விமானத் திட்டத்துக்காக அவர்கள் வெளியேற்றப்பட்டனர். ஒடிசாவில் அந்தத் திட்டம் முழுமையாகக் கூட அப்போது வந்திருக்கவில்லை. நிலமும் அவர்களுக்குத் திரும்ப வழங்கப்படவில்லை. நஷ்ட ஈடு? “என்னுடைய குடும்பத்துக்கு 60 ஏக்கர் நிலம் இருந்தது,” என்கிறார் ஜோதிர்மாய் கோரா. பல பத்தாண்டுகளுக்கு முன் இடம்பெயர்த்தப்பட்ட சிகாபாருக்காக நீதி கேட்கும் போராட்டத்தை நடத்திய செயற்பாட்டாளர் அவர். தலித் ஆவார். “பற்பல வருடங்களுக்கு பிறகு, 60 ஏக்கர் நிலத்துக்கு நஷ்ட ஈடாக ரூ.15,000 எங்களுக்கு வழங்கப்பட்டது.” வெளியேறியவர்கள் அவர்களுக்குரிய நிலத்தில் மீண்டுமொரு கிராமத்தைக் கட்டினர். அரசு கட்டிக் கொடுக்கவில்லை. அந்த கிராமத்தையும் அவர்கள் ‘சிகாபார்’ என்ற பெயர் கொண்டே அழைத்தனர்.




