தெற்கில் கிரேட் ராண் ஆஃப் கட்ச் முதல் வடக்கில் கலோ துங்கர் (கருப்பு மலைகள்) வரை 3847 சதுர கிமீ பரப்பளவிற்கு பரந்து விரிந்துள்ளது பாண்ணி புல்வெளி காப்புக் காடுகள். ஒருகாலத்தில் இப்பகுதி வழியாக சிந்து நதி பாய்ந்துள்ளது. ஈரான், ஆஃப்கானிஸ்தான், சிந்து மற்றும் பலோகிஸ்தான் பகுதியிலிருந்து குடிபெயர்ந்த சமூகத்தினர்கள், இங்கு பல நூற்றாண்டுகளாக வாழ்ந்துள்ளனர். 1819-ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சிந்து நதியின் பாதை மாறியது. இதனால் பாண்ணி வறண்ட புல்வெளியாக மாற்றமடைந்தது. நாளடைவில், வறண்ட நிலப்பகுதியில் தங்களை தகவமைத்துக்கொள்ள குடியேறிய சமூகத்தினர்கள் மேய்ப்பர்கள் ஆனார்கள். குஜராத்தின் புல்வெளிகளை சுற்றியுள்ள 48 கிராமங்களில் இவர்கள் இன்றும் வசித்து வருகிறார்கள்.
ஜாட்கள், ரபாரிகள் மற்றும் சாமா உள்பட பாண்ணி சமூகத்தினர்களை உள்ளடக்கிய பழங்குடியினர், கூட்டாக ‘மல்தாரி’ என அழைக்கப்படுகிறார்கள். கச்சி மொழியில் “மல்” என்றால் விலங்குகளை குறிக்கிறது, “தாரி” என்றால் உடைமையாளர் என்று அர்த்தம். கட்ச் பகுதி முழுவதும் பசுக்கள், எருமைகள், ஓட்டகங்கள், குதிரைகள் மற்றும் ஆடுகளை மல்தாரிகள் மேய்க்கிறார்கள். அவர்களின் வாழ்க்கையும் கலாச்சார நடவடிக்கைகளும் விலங்குகளை சுற்றியே அமைந்துள்ளது. அவர்களின் பாடல்கள் கூட மேய்ச்சலைப் பற்றி பேசுகிறது. சில மல்தாரிகள், தங்கள் விலங்குகளுக்காக மேய்ச்சல் நிலங்களை தேடி பருவகாலங்களில் கட்ச் பகுதிக்குள்ளேயே இடம்பெயர்கிறார்கள். மே மாதம் அல்லது சில சமயங்களில் ஜூன், ஜூலை மாதங்களில் வெளியேறும் குடும்பங்கள், மழை பெய்யும் காலத்தில் – வழக்கமாக செப்டம்பர் மாத முடிவில் – திரும்புகிறார்கள்.
தங்கள் மந்தைகளின் அளவு மற்றும் தரத்தோடு மல்தாரிகளின் சமூக அந்தஸ்து ஆழமாக பிணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும், தங்கள் அந்தஸ்து, தங்கள் சமூகம் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை ஒன்றுசேர்ந்து கொண்டாட, புல்வெளிகளில் இரண்டு நாள் விழாவை ஏற்பாடு செய்கிறார்கள். இந்த விழாவின் தேதி – வழக்கமாக டிசம்பர், ஜனவரி மாதங்களில் வரும் – சமூகத்தினரால் ஒன்றுசேர்ந்து முடிவு செய்யப்படும். நீங்கள் புகைப்படத்தில் பார்க்கும் மல்தாரி, விழாவிற்காக அமைக்கப்பட்ட தற்காலிக தொட்டியில் குடிதண்ணீர் பிடிக்கிறார்.
தமிழில்: வி கோபி மாவடிராஜா