ஃபாத்திமா பானு ஒரு கவிதை சொல்லிக் கொண்டிருந்தார்: ”மேலே காற்றாடி சுழலக், கீழே குழந்தை தூங்குகிறது,” என்கிறார் இந்தியில் அவர். ”தூங்கு குழந்தை தூங்கு, பெரிய சிவப்புக் கட்டிலில் தூங்கு…” எல்லாருடைய கண்களும் நோக்கிக் கொண்டிருக்க, ஒன்பது வயது குழந்தை வகுப்புக்கு வந்திருக்கும் குழந்தைகளில் கவனிக்கப்படாமல் இருப்பதற்கு முயற்சி எடுத்துக் கொண்டிருந்தார். ராஜாஜி புலிகள் காப்பகத்தில் இருக்கும் வன குஜ்ஜார் குப்பத்தில் இருந்தது வகுப்பறை.
அந்த நாளில் அவர்களின் பள்ளி, தபாஸ்ஸம் பீவி வீட்டின் வெளிப்புறம் நடந்து கொண்டிருந்தது. ஒரு பெரிய கம்பளத்தின் மீது அமர்ந்திருந்த மாணவர்கள் 5லிருந்து 13 வயதுக்குள் இருந்தனர். சில மாணவர்கள் புத்தகங்களை உறுதியாக பிடித்துக் கொண்டிருந்தனர். தபாஸ்ஸம் பீவியின் மகனும் மகளும் அவர்களில் இருந்தனர். இந்தக் குப்பத்தில் இருக்கும் அனைவரையும் போல, அவரின் குடும்பமும் எருமை மாடுகளை வளர்த்து அவற்றின் பாலை விற்று வாழ்க்கை ஓட்டிக் கொண்டிருந்தது,
2015ம் ஆண்டிலிருந்து குனாவ் சாட் பகுதியில் வீட்டின் வெளிப்புறத்திலோ அல்லது அறையிலோ பள்ளி அவ்வப்போது கூடிக் கொண்டிருக்கிறது. திங்கட்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை வரை காலை 9.30 மணி முதல் பகல் 12.30 வரை அவ்வப்போது நடத்தப்பட்டது. ஃபாத்திமா பானோ கவிதை சொல்லிக் கொண்டிருந்த டிசம்பர் 2020 அன்று, 11 மாணவிகளும் 16 மாணவர்களும் இருந்தனர்.
வன குஜ்ஜாரின் ஓர் இளைஞர் குழுதான் அவர்களின் ஆசிரியர்கள். உத்தரகாஅண்டின் குனாவ் சாட் பகுதியிலிருக்கும் 200 குடும்பங்களிடம் நிலவிய கல்விக்கான தொடர் இடைவெளியை அவர்கள் நிரப்ப முயலுகின்றனர். (70,000க்கும் 100,000க்கும் இடைப்பட்ட எண்ணிக்கையிலான வன குஜ்ஜார்கள் குமாவோன் மற்றும் கர்வால் பகுதிகளில் வசிப்பதாகக் கணக்கு சொல்கின்றனர் சமூக செயற்பாட்டாளர்கள். உத்தரகாண்டில் இதர பிறபடுத்தப்பட்ட சாதியாக வகைப்படுத்தப்பட்டிருக்கும் அவர்கள் பட்டியல் பழங்குடியாக தங்களை அறிவிக்கும்படி கோரிக்கை விடுத்து வருகின்றனர்.) புலிகள் காப்பகத்தில் இருக்கும் வசிப்பிடங்கள் பெரும்பாலும் மண் அல்லது குடிசை வீடுகளாகத்தான் இருக்கின்றன. நிரந்தரக் கட்டுமானத்துக்கு வனத்துறை தடை விதித்திருக்கிறது. கழிவறை வசதிகள் கிடையாது. நீருக்கு காட்டின் ஓடைகள்தான்.
குனாவ் சாட் புலிகள் காப்பகத்துக்குள்ளே அமைந்திருக்கிறது. கற்சாலையிலிருந்து வெகுதூரம். ஒழுங்கான பள்ளிக் கல்வி கிடைப்பதில் பலத் தடைகள் இருக்கின்றன. அரசு ஆரம்பப் பள்ளியும் (ஐந்தாம் வகுப்பு வரை) அரசு மேல்நிலைப் பள்ளியும் (12ம் வகுப்பு வரை) மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கின்றன. சிறுத்தைகள், யானைகள், மான் போன்ற விலங்குகள் உலவும் பகுதி இது. பள்ளிக்கு செல்ல பீன் ஆற்றைக் (கங்கையில் கிளை நதி) கடக்க வேண்டும். மழைக்காலமான ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் நீர் மட்டம் உயர்ந்து விடும். குழந்தைகள் பள்ளிகள் செல்வதை நிறுத்துவார்கள் அல்லது பெற்றோர் இந்த வழியில் கொண்டு விட்டு வருவார்கள்.
ஆவணங்கள் இல்லாததால் பலர் பள்ளியில் சேரவில்லை. அரசு ஆவணங்களுக்கு விண்ணப்பித்து அவற்றை பெறுவது என்பது காடுகளுக்குள்ளே வசிக்கும் குஜ்ஜார் குடும்பங்களுக்கு நீண்ட கடினமான வேலை. தங்கள் குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ்களோ ஆதார் அட்டைகளோ இல்லை என்கின்றனர் குனாவ் சாடில் வசிக்கும் பெற்றோர். (வன குஜ்ஜார்கள் சந்திக்கும் தொடர் பிரச்சினைகளை தீர்ப்பதற்கென ஒரு கமிட்டி அமைக்க மே 2021-ல் உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது).
பல குடும்பங்களும் மூத்தக் குழந்தைகள் நாளின் பெரும்பாலான நேரத்தை கால்நடைகளைக் கவனிப்பதில் கழிக்கின்றனர். சைதூன் பீவியின் 10 வயது மகன் இம்ரான் அலியும் அவர்களில் ஒருவர். குடும்பத்தின் ஆறு எருமை மாடுகளை அவர் பார்த்துக் கொள்கிறார். அரசு ஆரம்பப் பள்ளியில் சேர்ந்து ஆகஸ்டு 2021-ல் ஆறாம் வகுப்புக்கு அவர் அனுமதிக்கப்பட்டபோதும் அவரின் கல்வி சவால் மிகுந்ததாகவே இருக்கிறது. “கால்நடைகளுக்கு உணவு வைக்க காலை 6 மணிக்கு எழுந்து விடுவேன். பிறகு பால் கறப்பேன். அதன்பின் நீர் குடிக்க அவற்றை அழைத்துச் செல்வேன். பிறகு வைக்கோல் போடுவேன்,” என்கிறார் அவர். இம்ரானின் தந்தை பால் விற்கிறார். தாய் வீட்டைப் பார்த்துக் கொள்கிறார். மாடுகள் பராமரிப்பும் வீட்டு வேலையில் அடக்கம்.
இம்ரானைப் போலவே இங்குள்ள குழந்தைகள் பலர் வீட்டு வேலைகளில்தான் நாளின் பெரும்பாலான நேரத்தை செலவு செய்கின்றனர். அவர்களின் பள்ளிப் படிப்பை இது பாதிக்கிறது. “எருமைகளை பராமரிக்க எங்கள் குழந்தைகள் உதவுகின்றனர்,” என்கிறார் பானோ பீவி. “அவற்றை நீர் குடிக்கவும் மேய்க்கவும் அவர்கள் கொண்டு செல்கின்றனர். அடுப்புக்கான விறகை காட்டில் சென்று சேகரிக்கவும் அவர்கள் உதவுகின்றனர்.” அவரின் மூத்த மகனான 10 வயது யாகூப் 7ம் வகுப்புப் படிக்கிறார். 5லிருந்து 9 வயதுக்குள் இருக்கும் இரண்டு மகள்களும் மகனும் முறைசாரா பள்ளியில் படிக்கின்றனர். “எங்கள் குழந்தைகளால் படிக்க முடிந்தால் நன்றாக இருக்கும்,” என்கிறார் அவர். “ஆனால் நாங்கள் காட்டில் வசிக்க வேண்டியிருக்கிறது.”
இடப்பெயர்ச்சிகளும் பல காலமாக கல்வி பெற இடையூறாக இருந்தன. ஆனால் பெரும்பாலான வன குஜ்ஜார்கள் கோடை காலத்தில் மலைகளுக்கு செல்லாமல், மொத்த வருடமும் ஒரே இடத்தில் தங்கி விடுகின்றனர் என்கிறார் வன உரிமைக் கமிட்டியின் உறுப்பினரான ஷராஃபத் அலி. குனாவ் சாடில் இருக்கும் 200 குடும்பங்களில் 4-5 குடும்பங்கள் மட்டும்தான் மலைகளுக்கு செல்வதாக அவர் குறிப்பிடுகிறார்.
தொற்றும் 2020ம் ஆண்டின் தொடர் ஊரடங்கும் மீண்டும் வந்த 2021ம் ஆண்டின் ஊரடங்கும் கல்வியைத் தொடர்வதில் மேலதிக பாதிப்புகளை ஏற்படுத்தின. “எங்களின் (அரசு ஆரம்பப்) பள்ளி ஊரடங்கினால் மூடப்பட்டிருக்கிறது. இப்போது நாங்கள் சொந்தமாகவே எங்களின் (வசிப்பிடப்) பள்ளியில் படிக்கிறோம்,” என்றார் இம்ரான் 2020-ல்.
மார்ச் 2020-ல் ஊரடங்கு தொடங்கியதும் வீட்டுப் பாடங்கள் தொடர்ந்தன. “குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கொடுப்போம். 3-4 நாட்கள் கழித்து அவற்றை சரி பார்ப்போம். பிறகு புதிய பாடம் (3-4 குழந்தைகளை ஒரு வீட்டில் கூட்டி) எடுப்போம்,” என்கிறார் 33 வயது ஆசிரியரான முகமது ஷம்சத். அவரும் 26 வயது முகமது மிர் ஹம்சாவும் 20 வயது அஃப்தப் அலியும்தான் உள்ளூர் பள்ளிக்கு ஆசிரியர்களாக இருக்கின்றனர்.
2017ம் ஆண்டில் அவர்களும் பிற இளைஞர்களும் வன குஜ்ஜார் பழங்குடி இளையோர் சங்கம் உருவாக்கினர். அதில் உத்தரகாண்ட், இமாச்சல் பிரதேஷ் மற்றும் உத்தரப்பிரதேசத்தைச் சார்ந்த 177 (ஆறு பெண்) உறுப்பினர்கள் இருக்கின்றனர். அக்குழு பழங்குடிச் சமூகத்துக்கான கல்வி மற்றும் வன உரிமையை நோக்கங்களாகக் கொண்டிருக்கிறது. தபால் கல்வியில் சமூகப் பணி முதுகலைப் படிப்பை ஹம்சா படித்துக் கொண்டிருக்கிறார். ஷம்சாத் டேராடூன் கல்லூரியில் வணிகவியல் முடித்திருக்கிறார். அஃப்தாப் 12ம் வகுப்பு முடித்திருக்கிறார். குப்பத்தில் பிற குடுபங்களைப் போல அவர்களின் குடும்பங்களும் வருமானத்துக்கு எருமை மாடுகளையே சார்ந்திருக்கின்றன.
கல்விக்கான பாதையில் சிரமங்கள் இங்கு இருப்பதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. பல பெற்றோர் கல்வியின் பயன்களை புரிந்து கொள்ளவில்லை என்கின்றனர் ஆசிரியர்கள். குறிப்பாக தடைகளைத் தாண்டி ஏன் கல்வி பயில வேண்டும் என்ற சிந்தனையில்தான் அவர்கள் இருக்கின்றனர்.
கல்வி கற்றவர்களுக்கான வேலைவாய்ப்பும் அரிதாக இருப்பதால், பிற வாழ்வாதார வாய்ப்புகளும் குறைவாகவே இருக்கின்றன. காட்டு நிலத்தில் வன குஜ்ஜார்கள் விவசாயம் பார்க்க வனத்துறை தடை விதித்திருக்கிறது. பெரும்பாலான குடும்பங்களில் எருமை மாடுகள் இருக்கின்றன. சில குடும்பங்களில் பசுக்கள் இருக்கின்றன. 5லிருந்து 25 வரையிலான மாடுகளைக் கொண்டு பால் வியாபாரம் நடக்கிறது. ரிஷிகேஷிலுள்ள (10 கிலோமீட்டர் தொலவில் இருக்கும் டவுன்) வணிகர்கள் குஜ்ஜார் குடும்பங்களிலிருந்து பால் வாங்குகின்ற்னார். வீட்டில் வளர்க்கும் மாடுகளின் எண்ணிக்கையைப் பொறுத்து ஒவ்வொரு குடும்பமும் பால் விற்பனையில் 20,000 லிருந்து 25,000 வரை வருமானம் ஈட்டுகிறது. ஆனால் இந்த வருமானத்தின் பெரும்பகுதி மாட்டுத் தீவனத்தை இதே வணிகர்களிடமிருந்து வாங்கவும் முன்பு வாங்கியிருந்த (ஏப்ரலிலிருந்து செப்டம்பர் வரையிலான இடப்பெயர்ச்சி மாதங்களில் அதிகரிக்கும்) கடன்களைக் கட்டுவதிலும் கழிந்து விடுகிறது.
குனாவ் சாட்டின் 10 சதவிகித குழந்தைகள் இதுவரை முறையானக் கல்வி கிடைக்கப் பெற்றிருக்கிறார்கள் என்கிறார் இளையோர் சங்கத்தின் இயக்குநரான மிர் ஹம்சா. “கல்வியுரிமைக்கான சட்டங்கள் இருந்தும் கல்விக்கான அரசின் பல்வேறுத் திட்டங்களும் இச்சமூகத்தை எட்ட முடிவதில்லை. காரணம், எங்களின் குப்பம் எந்தக் கிராமப் பஞ்சாயத்துடனும் இணைக்கப்படவில்லை,” என்கிறார் அவர். அதற்கான கோரிக்கையை குனாவ் சாட் மக்கள் முன் வைத்து வருகின்றனர்.
2015-16-ல் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டத்தின்படி , தூரத்துப் பகுதிகளில் வாழும் வன குஜ்ஜார் குழந்தைகளை முறையானக் கல்வியுடன் இணைப்பதற்காக சிறப்புப் பயிற்சி மையங்கள் குனாவ் சாட் உள்ளிட்ட பல பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டன.
அந்த வருடத்தில் குனாவ் சாடிலிருந்து 38 குழந்தைகள் உள்ளூர் வகுப்புகளில் படித்தனர் என்கிறாற் ஒன்றியக் கல்வி அலுவலரான ஷைலேந்திர அமோலி. 2019ம் கிடைத்த இன்னொரு அனுமதிக்குப் பிறகு, அந்த வருடத்தின் ஜூன் மாத வகுப்புகள் மீண்டும் 92 மாணவர்களுடன் மார்ச் 2020 ஊரடங்கு வரை நடத்தப்பட்டன. 2021-22ம் வருடத்துக்கும் கூட குனாவ் சாடுக்கான 63 சிறப்புப் பயிற்சி மையங்கள் நடத்தப்பட ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாக கூறுகிறார் ஷைலேந்திரா.
எனினும் வன குஜ்ஜார்களுக்கு முறையானக் கல்வி மீது இன்னும் நம்பிக்கை வரவில்லை என்கிறார் அவர். 2015-16-ல் சிறப்புப் பயிற்சி மையங்களுக்கென பதிவு செய்த குழந்தைகள்தான் 2021-22ம் ஆண்டிலும் பதிவு செய்திருக்கின்றனர். இந்த வகுப்புகள் கல்வி தொடர்ச்சி இருப்பதற்காக நடத்தப்படுபவை மட்டுமே என்கிறார் அவர்.
ஆனால் ஹம்சாவும் உள்ளூர் ஆசிரியர்களும் சிறப்புப் பயிற்சி மையங்கள் (2015-16 மற்றும் 2019) தொடர்ந்து நடைபெறவில்லை என்றும் அவை கண்காணிக்கப்படவில்லை என்றும் கூறுகின்றனர். ஆசிரியர்கள் பெரும்பாலும் வருவதில்லை. வெளியூர்களிலிருந்தும் பிற சமூகங்களிலிருந்தும் வரும் அந்த ஆசிரியர்களுக்கு உள்ளூரின் நுட்பங்கள் தெரிவதில்லை.
சிறப்புப் பயிற்சி மையங்களுக்கான வழிகாட்டுதலின்படி, திட்டம் அனுமதிக்கப்படும் ஊர்களிலும் வசிப்பிடங்களிலும் அந்தந்த ஊரின் இளையோரிடம் ஆசிரியர் பணி வழங்கப்பட்டும் மாத ஊதியம் 7,000 ரூபாய் மாதந்தோறும் கொடுக்கப்பட வேண்டும் என்கிறார் அமோலி. ஆனால் 2015-16ல் குனாவ் சாடில் வகுப்புகள் தொடங்கியபோது அங்கு பட்டதாரி யாரும் இல்லை. வேறொரு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். மிர் ஹம்சா தற்போது முதுகலை படிக்கிறார். ஷம்ஷாத் வணிகவியல் முடித்திருக்கிறார். ஆனாலும் தங்களுக்கு அந்த வேலை கிடைக்கவில்லையென அவர்கள் புகார் செய்கின்றனர்.
தொடர்ச்சியற்ற சிறப்பு பயிற்சி வகுப்புகளால் ஏற்பட்ட இடைவெளிகளை நிரப்ப நடத்தப்படும் முறைசாரா வகுப்புகள், மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் பழைய மாணவர்களுக்கு ட்யூஷன்களாகவும் புதிய மாணவர்களுக்கு (ஆரம்பப் பள்ளி மாணவர்கள் மற்றும் படிக்காத குழந்தைகள்) ஐந்தாம் வகுப்புத் தேர்வுகளில் தேர்ச்சியடைந்து ஆறாம் வகுப்புக் செல்லவும் பயன்படுகிறது. உள்ளூர் ஆசிரியர் தனக்கான செலவுக்காக ஒரு குழந்தைக்கு 30லிருந்து 35 ரூபாய் கட்டணம் வாங்குகிறார். இந்தக் கட்டணம் கட்டாயம் கிடையாது.
தமது சமூகத்தில் நீண்ட காலம் கல்வியின் பலன்களை வலியுறுத்தி வேலை பார்த்ததன் விளைவாக மாற்றம் உருவாகத் தொடங்கி இருக்கிறது என்கிறார்கள் ஆசிரியர்கள்.
“எங்கள் குழந்தைகள் படிக்கவும் எழுதவும் விரும்புகிறோம். காட்டு வாழ்க்கை கடினமானது,” என்கிறார் சைதூன் பீவி. “நாங்கள் உழைக்கும் அளவுக்கு அவர்களால் உழைக்க முடியாது. நாங்கள் யாரும் படித்தவர்கள் அல்ல. எங்கள் குழந்தைகளும் எங்களைப் போல் ஆக நாங்கள் விரும்பவில்லை.”
5லிருந்து 11 வயதுகளில் இருக்கும் மூன்று குழந்தைகளையும் படிக்க வைக்க முகமது ரஃபியும் விரும்புகிறார். அவரின் 11 வயது மகன் யாகூப் அரசுப் பள்ளியில் 7ம் வகுப்பில் சேர்ந்திருக்கிறார். இரண்டு தம்பிகள் வசிப்பிடக் கல்வி பயிலுகின்றனர். “வெளியுலகைப் பார்க்கும் நாங்கள் எங்களின் குழந்தைகளும் படிக்க வேண்டுமென விரும்புகிறோம்,” என்கிறார் அவர்.
ஷராஃபத் அலியின் இரண்டு குழந்தைகளான ஏழு வயது நவுஷத்தும் ஐந்து வயது ஆஷாவும் கூட வசிப்பிடப் பள்ளியில் படிக்கின்றனர். “கடந்த ஐந்து வருடங்களாக கோடையில் கால்நடைகளுடன் நான் மலையேறுவதில்லை,” என்கிறார் அவர். “எங்கள் குழந்தைகள் வாசிக்கவும் எழுதவும் கற்க வேண்டுமென்பதற்காக நாங்கள் ஒரே இடத்தில் தற்போது தங்கியிருக்கிறோம். அவர்களுக்கு நல்ல கல்வி கிடைக்க வேண்டுமென விரும்புகிறோம். அவர்களும் பிறரைப் போல் இச்சமூகத்தில் வாழ வேண்டும். அவர்களுக்கும் வேலைகள் கிடைக்க வேண்டும்.”
கடுமையான உழைப்பு வன குஜ்ஜார் வசிப்பிடங்களில் வேறு விளைவுகளை உருவாக்கியிருப்பதாக சொல்கிறார் ஷம்ஷத். “2019ல் ஐந்து வன குஜ்ஜார் ஊர்களைச் சேர்ந்த 40 குழந்தைகள் எங்களின் சங்கத்தின் மூலம் 6ம் வகுப்புக்கில் அனுமதிக்கப்பட்டனர். சில மாணவர்களும் சில மாணவிகளும் 10ம் வகுப்பை எட்டத் தொடங்கிவிட்டனர். சிலர் 12ம் வகுப்புக்கும் சென்று விட்டனர்.”
ஆரம்பத்தில் சில பெண் குழந்தைகள் மட்டுமே வகுப்புகளுக்கு வந்ததாக அவர் சொல்கிறார். “பெற்றோரிடம் நாங்கள் பேச வேண்டியிருந்தது. கடந்த 3-4 வருடங்களில் நிலைமை மாறி விட்டது.” 12 வயது ரம்சானோவும் குனாவ் சாடிலிருந்து 6ம் வகுப்புக்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் மாணவர்களில் ஒருவர். அவரது குடும்பத்திலிருந்து முறையானப் பள்ளியில் அனுமதிக்கப்படும் முதல் பெண் குழந்தை அவர்தான். பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைய விரும்புவதாக அவர் கூறுகிறார்.
அவர்களில் ஒருவராக, கவிதை சொல்லிக் கொண்டிருக்கும் ஒன்பது வயது ஃபாத்திமா பானோவும் மாறலாம். அவரும் அரசுப் பள்ளியை இப்பழங்குடிச் சமூகம் எட்டும் நிச்சயமற்றப் பயணத்தை மேற்கொள்ளலாம்.
தமிழில் : ராஜசங்கீதன்