ஷாந்திலால், ஷாந்து, டினியோ ஆகிய மூன்று பெயர்களும் ஒருவருக்கான பெயர்களே. நாம் வேண்டுமானால் நான்காவது பெயரும் சூட்டலாம். சபர்கந்தா மாவட்டத்தின் வடாலி கிராமத்து வழக்கில், அவரது பெயர் ‘ஷோந்து’ என்று மாறும். நாம் அவரை அப்படியே சொல்லிக் குறிப்பிடுவோம்.
ஷோந்து வித்தியாசமானவர். அற்புதமானவர், தனித்துவமானவர், பிரபலமானவர் என்கிற அர்த்தங்களில் சொல்லவில்லை. மாறாக குணரீதியாக நியாயமாகவும் ஏழையாகவும் தலித்தாகவும் இருப்பதைக் குறிப்பிடுகிறேன். அவற்றாலேயே அவர் துயருற்று அலைக்கழிக்கப்பட்டு தொடர்ந்து போராடும் இயல்பு கொண்டவராகவும் இருக்கிறார். பிற நேரங்களில் அவர் சாமானியனுக்கும் சற்று குறைந்த இயல்புடன் தோன்றுவார்.
ஆறு பேர் கொண்ட குடும்பத்தில் வளர்ந்தார். பெற்றோர், ஒரு மூத்த சகோதரர் மற்றும் இரு சகோதரிகள் (ஒருவர் இவருக்கும் இளையவர்) ஆகியோர் கடும் ஏழ்மையில் வாழ்ந்தனர். வளர்ந்து கொண்டே இருந்த குடும்பத்தின் தேவைகளை தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய நிலை. பெற்றோரும் மூத்த சகோதர சகோதரிகளும் சேர்ந்து இரு வேளை உணவுக்கு வழி செய்தனர். சரக்கு கொண்டு செல்லும் மேட்டடர் வாகனம் ஓட்டினார் தந்தை. பயணிகள் யாரையும் ஏற்றுவதில்லை. எனவே உபரி பணம் எதுவும் கொண்டு வருவதில்லை. தாய் ஒரு தினக்கூலி தொழிலாளர். அவ்வப்போது வேலை கிடைக்கும். சில நேரங்களில் கிடைக்காது. தந்தை குடிகாரர் இல்லை என்பதும் குடும்பத்தில் அதிகப் பிரச்சினை இல்லை என்பதும் அவர்களுக்கு வரப்பிரசாதமாக இருந்தது. ஆனால் ஷோந்து அதைப் புரிந்துகொள்ளத்தான் கொஞ்ச காலம் பிடித்தது.
வடாலியின் ஷார்தா உயர்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு ஷோந்து படித்துக் கொண்டிருந்தபோது ஊருக்கு ஒரு சர்க்கஸ் குழு வந்தது. டிக்கெட்டுகளின் விலை அதிகமாக இருந்தது. ஆனால் பள்ளி மாணவர்களுக்கு டிக்கெட் ஐந்து ரூபாய்க்கு கொடுக்கப்பட்டது. பள்ளிக்கு எடுத்து செல்லுமளவுக்கு ஷோந்துவிடம் பணம் இல்லை. “எழுந்து நில்” என ஆசிரியர் உத்தரவிட்டார். “ஏன் காசு கொண்டு வரவில்லை?”. அவர் குரலில் பரிவு இருந்தது. “என் தந்தைக்கு உடல்நிலை சரியில்லை டீச்சர். என் தாய்க்கும் இன்னும் பஞ்சு கடையிலிருந்து சம்பளம் வரவில்லை,” என சொல்லி ஷோந்து அழத் தொடங்கினார்.
அடுத்த நாள் அவரது வகுப்புத் தோழனான குசும் பதான் ‘ரம்ஜானுக்கான ஆசிர்வாதம் பெறும் வழி’யாக 10 ரூபாய் கொடுத்தார். அடுத்த நாள், “நான் கொடுத்த பணத்தில் என்ன செய்தாய்?” எனக் கேட்டார். ஷோந்துவிடம் தயக்கமில்லை. “சர்க்கஸுக்கு ஐந்து ரூபாய் செலவழித்தேன். ஐந்து ரூபாயை வீட்டுச் செலவுக்குக் கொடுத்தேன்.” குசும், ரம்ஜான், ஷோந்து மற்றும்ச் சர்க்கஸ் எல்லாம் சேர்ந்த தீங்கற்ற உலகமாக அது இருந்தது.
மண்வீட்டை செங்கற்களாலும் சிமெண்ட்டாலும் சீரமைக்க முடிவு செய்தபோது ஷோந்து 11ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். ஆனால் அவர்களால் அதிகம் செலவழிக்க முடியவில்லை. தினக்கூலியில் ஒரு மேஸ்திரி பணிக்கமர்த்தப்பட்டார். மிச்ச வேலைகளை குடும்பமே செய்தது. இவை எல்லாவற்றுக்கும் அதிக காலம் பிடித்தது. ஷோந்துவுக்கு அவகாசம் கொடுக்காமல் இறுதித் தேர்வுகள் வந்துவிட்டன. வருகைப் பதிவேடு அவருக்கு உதவவில்லை. சூழலை தலைமை ஆசிரியரிடம் விளக்கி மன்றாடி கேட்டுக் கொண்ட பிறகுதான் ஷோந்து தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டார்.
12ம் வகுப்புக்குள் நுழைந்தார். நன்றாக படிக்க வேண்டுமென உறுதி பூண்டார். ஆனால் அம்மாவுக்கு உடல்நிலை முடியாமல் போனது. அவருடைய உடல்நிலை வேகமாக மோசமடைந்து, இறுதித் தேர்வுகளுக்கு முன்பே இறந்து போனார். வலியும் இழப்பும் 18 வயது சிறுவனுக்கு அளவுக்கதிகம்தான். தேர்வுகளுக்கான அழுத்தம் அவரை பீடித்தது. கடினமாக முயற்சி செய்தபோதும் பலனில்லை. 65 சதவிகிதம் மட்டுமே பெற்று தேறினார். மேற்படிப்பு படிக்கும் ஆசையை ஷோந்து கைவிட்டார்.
அவருக்கு வாசிக்க பிடிக்கும். எனவே பொது நூலகத்துக்கு செல்லத் தொடங்கினார். வீட்டுக்கு புத்தகங்கள் கொண்டு வந்து படித்தார். அவரின் ஆர்வத்தைப் பார்த்து ஒரு நண்பர் வடாலி கலைக் கல்லூரியில் வரலாற்றுப் பாடம் படிக்க அவரை சம்மதிக்க வைத்தார். “பல அற்புதமான புத்தகங்களை நீ படிக்க முடியும்,” என்றார் அவர். ஷோந்து படிப்பில் சேர்ந்தார். ஆனால் நூலகத்திலிருந்து புத்தகங்கள் எடுக்கவும் எடுத்தவற்றை திரும்பக் கொடுக்கவுமே அவர் கல்லூரிக்கு சென்றார். மிச்ச நாளில் அவர் பஞ்சுக் கடையில் வேலை பார்த்தார். மாலை நேரம் புத்தகம் படித்தார். பெரும்பாலும் வேலையற்றுதான் இருந்தார். இளங்கலை முதல் வருடத்தில் அவர் 63 சதவிகிதம் பெற்று தேர்ச்சி பெற்றார்.
பேராசிரியர் அவரின் மதிப்பெண்ணை பார்த்து, தொடர்ந்து கல்லூரிக்கு வருமாறு கேட்டுக் கொண்டார். ஷோந்து விரும்பிப் படிக்கத் தொடங்கினார். மூன்றாம் வருடம். அற்புதமான வாசிப்புத் திறன் கொண்ட மாணவர் ஒருவருக்கு தகுதிச் சான்றிதழ் விருதளிக்க வடாலியின் கலைக்கல்லூரி முடிவு செய்தது. ஷோந்து அதைப் பெற்றார். “நூலகத்துக்கு சென்று புத்தகங்கள் எடுக்க எப்படி உனக்கு நேரம் கிடைத்தது ஷாந்திலால்?” எனப் பேராசிரியர் அவரை ஆச்சரியத்துடன் கேட்டார். மூன்றாம் வருட இளங்கலைப் படிப்பை 66 சதவிகிதத்துடன் 2003ம் ஆண்டில் ஷோந்து முடித்தார்.
பக்கத்து மாவட்டமான மெஹ்சானாவின் விஸ்நகருக்கு சென்று அரசுக் கல்லூரியில் சேர்ந்து விடுதியில் தங்கி முதுகலை படித்தார். அறை கிடைக்க வேண்டுமெனில் இறுதித்தேர்வில் அவர் 60 சதவிகிதம் பெற வேண்டும். இளங்கலையில் அவர் அந்த இலக்கை அடைந்திருந்தார். ஆனால் அடுத்த வருடத்தில் ஷோந்துவுக்கு விடுதியில் அறை கிடைக்கவில்லை. வேதனை அடையும் வகையில் முதல் வருடத் தேர்வில் வெறும் 59 சதவிகிதத்தை அவர் பெற்றார்.
விஸ்நகருக்கும் வடாலிக்கும் இடையிலான ஒன்றரை மணி நேர தூரம் பயணிக்கத் தொடங்கினார். அந்த வருடத்தில் தீபாவளிக்கு பிறகு தந்தைக்கு வேலையில்லை. டெம்போவுக்காக அவர் பெற்ற கடனுக்கு அடைக்க வேண்டிய தவணையைக் கூட விட்டுவிடலாம். ஆனால் உண்பதற்குக் கூட பணமில்லை. மூத்த சகோதரர் தையல் வேலைகள் செய்து குடும்ப வருமானம் ஈட்ட முயற்சித்தார். சகோதரரிடமிருந்து உதவிகள் பெறுவதில் ஷோந்துவின் தயக்கம் கூடிக் கொண்டிருந்தது. கல்லூரிக்கு தொடர்ந்து அவர் செல்வது மீண்டும் தடைப்பட்டது.
சந்தையில் ஒரு வேலையில் அவர் சேர்ந்தார். பஞ்சை பைகளில் அடைத்து ட்ரக்குகளில் ஏற்றும் வேலை. நாளொன்றுக்கு 100லிருந்து 200 ரூபாய் வரை கிடைக்கும். அந்த வருடத்தின் மார்ச் மாதத்தில் அவரது வருகைக் கணக்கு மீண்டும் குறைந்தது. தேர்வெழுத அவர் அனுமதிக்கப்படவில்லை. சில நண்பர்கள் தலையிட்டதில், முதுகலைப் பட்டத்தை 58.38 சதவிகித தேர்ச்சியுடன் பெற்றார். ஆய்வுப் படிப்பு படிக்க விரும்பினார் ஷோந்து. ஆனால் பணமில்லாமல் இருப்பது பற்றிய அச்சம் அவருக்கு அதிகமாக இருந்தது.
ஒரு வருடத் தடைக்கு பிறகு ஷோந்து தேவையானப் படிவங்களை நிரப்பி விண்ணப்பித்து, விஸ்நகரின் பிஎட் அரசுக் கல்லூரியில் அனுமதி பெற்றார். உடனடியாக 3 சதவிகித வட்டியில் 7,000 ரூபாய் கடனை ராஜுபாய் அவருக்காக வாங்கினார். கிட்டத்தட்ட 3,500 ரூபாய் அனுமதிக் கட்டணத்துக்கு சென்றது. இன்னொரு 2,500 ரூபாய் கட்டாயப் பாடமான, கணிணி படிப்புக்கு கட்டணமாகச் சென்றது. பிற செலவுகளுக்கென ஷோந்துவிடம் 1,000 ரூபாய்தான் மிஞ்சியிருந்தது. படிப்புக்காக விஸ்நகருக்கு பயணிப்பதில் அவருக்கு இது மூன்றாவது வருடம்.
குடும்பத்தின் பொருளாதாரச் சிக்கல்களை பற்றிய சிந்தனையும் அவரிடம் எல்லா நேரங்களிலும் இருந்தது. படிப்பை நிறுத்த விரும்புவதாகக் கூட ராஜுபாயிடம் அவர் கூறினார். “பொருளாதார சிக்கல்களுக்கு நடுவே நீ வாழப் பழகிக் கொள்,” என மூத்த சகோதரர் அவருக்கு பதிலளித்தார். “வீட்டுக் கவலை இன்றி படிப்பில் கவனம் செலுத்து. இந்த வருடம் விரைவாக சென்றுவிடும். கடவுள் விருப்பத்தில், பிஎட் முடித்ததும் உனக்கு ஒரு வேலை கிடைக்கலாம்.” சகோதரரின் வார்த்தைகள் ஷோந்துவுக்கு நம்பிக்கைக் கீற்றானது. அவருடைய படிப்பு மெல்ல கோடையில் நகர்ந்தது.
குளிர்காலத்தில் அப்பா நோய்வாய்ப்பட்டார். அவருடைய நோய் எல்லா வருமானத்தையும் தீர்த்தது. படிப்புக்கான செலவை ராஜுபாய் மட்டுமே சுமக்க வேண்டிய நிலை ஷோந்துவுக்கு சங்கடத்தைக் கொடுத்தது. கல்வியும் செலவுகளும் எத்தனை நெருக்கமான நண்பர்கள் என்பதை பிஎட் கல்வி அவருக்குக் கற்றுக் கொடுத்தது. பயிற்சிப் பணிக்கும் சர்வ ஷிக்ஷா அபியான் (ஆரம்பக் கல்விக்கான தேசிய திட்டம்) திட்ட வேலைக்கும், பொகார்வடா மற்றும் பாண்டு கிராமங்களுக்கு அவர் 10 நாட்களுக்கு செல்ல வேண்டியிருந்தது. தங்குமிடமாக பொகார்வடா ஆரம்பப் பள்ளியில் இடம் கிடைத்தது. செலவு ஒரு சிக்கலானது. ராஜுபாய்க்கு தொந்தரவு கொடுக்க அவர் விரும்பவில்லை. கல்லூரியின் நிர்வாக அலுவலகத்தைச் சேர்ந்த மகேந்திர சின் தாகோரிடமிருந்து 300 ரூபாய் கடன் வாங்கினார்.
“கிராமப் பூசாரியிடம் கேட்டோம். எங்களுக்கு சமைக்க அவர் ஓப்புக் கொண்டார். ஆனால் ஒரு உணவுக்கு 25 ரூபாய் ஆகும் என்றார். பூசாரியின் வீட்டில் நான்கு நாட்களுக்கு நாங்கள் உண்டோம். வாரத்துக்கு இரண்டு நாட்கள் நான் விரதம் இருந்து 50 ரூபாய் சேமித்தேன்,’ என ஷோந்து நினைவுகூருகிறார். பிறகொரு ஐந்து நாட்களை அவர் பாண்டு கிராமத்தில் கழிக்க வேண்டியிருந்தது. அங்கு தங்குமிடம் ஏற்பாடு செய்யப்படவில்லை. பொகார்வடாவிலிருந்து வந்து செல்ல வேண்டும். ஒரு வழி பயணத்துக்கு 10 ரூபாய் ஆகும். மகேந்திர சின்னிடமிருந்து இன்னொரு 200 ரூபாய் கடன் வாங்கினார் ஷோந்து.
பாண்டுவின் பொறியியல் கல்லூரியில் உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் ஒரு வேளை உணவுக்கு 25 ரூபாய். மேலும் இரண்டு நாட்களுக்கு ஷோந்து விரதம் இருந்தார். நண்பர்களுக்கு பிடிக்கவில்லை. அவர்களில் ஒருவர், “ஷோந்திலால், ஐந்து நாட்களுக்கு நாம் முன்பணம் கொடுத்துவிட்டோம். உண்டபிறகு காசு கொடுப்பது நீ மட்டும்தான். நாங்கள் சாப்பிட்டுவிட்டு கிளம்பும்போது எவரும் பணம் கேட்பதில்லை. நீயும் எங்களுடன் கூட்டத்தில் அமர்ந்து எங்களுடனே கிளம்பிவிடு!,” என்றார். “அவர்களின் பேச்சைக் கேட்டு, பணம் கொடுக்காமல் அடுத்த சில நாட்களுக்கு நான் உண்டேன்,’ என்கிறார் ஷோந்து.
இதில் அவருக்கு முழு உடன்பாடு இல்லை. அதைத் தாண்டி அவர் இன்னுமே 500 ரூபாய் கடன் வாங்க வேண்டியிருந்தது. பேராசிரியர் ஹெச்.கே.படேலிடம் கடன் வாங்கினார். “என்னுடைய உபகாரப் பணம் கிடைத்ததும் இதை நான் திருப்பி தந்துவிடுவேன்,” என்றார் அவர். நாள்தோறும் செலவுகள் அதிகரித்தன. பள்ளி ஆசிரியர்களுக்கு என உண்பண்டங்கள் அவர்கள் வாங்கிக் கொடுக்க வேண்டியிருந்தது.
ஹெச்.கே.படேல் ஒருநாள் ஷோந்துவை ஆசிரியர்கள் அறைக்கு அழைத்தார். “உன்னுடைய தந்தைக்கு உடல்நிலை மோசமாக இருக்கின்றது,” எனக் கூறி ஒரு நூறு ரூபாய் தாளைக் கொடுத்து, “வேகமாக செல்,” என்றார். வீட்டில், “எல்லாரும் எனக்காக காத்திருந்தனர்,” எனக் கூறுகிறார் ஷோந்து. “முகத்தை எனக்கு காட்டிவிட்டு இறுதிச்சடங்குக்கு உடலை தயார் செய்யத் தொடங்கினர்.” பெரும் நெருக்கடி குடும்பத்துக்காகக் காத்திருந்தது. பெற்றோர் இறந்த 12ம் நாள் ஒரு முக்கியமான சடங்கு செய்ய வேண்டும். அதற்கான செலவு மட்டும் குறைந்தபட்சம் 40,000 ரூபாய் ஆகும்.
தாய் இறந்தபோது அச்சடங்கை அவர்களால் செய்ய முடியவில்லை. எனவே இம்முறை செய்யாமல் இருக்க முடியாது. சமூகத்தினரை அழைத்து கூட்டம் போட்டனர். வடாலியில் வசிக்கும் மூத்தோர் சிலர் விலக்கு கேட்டனர். “சிறுவர்களாக இருக்கின்றனர். சகோதரன் இன்னும் படித்துக் கொண்டிருக்கிறான். மற்றவர்கள் வீட்டைப் பார்த்துக் கொள்கின்றனர். எல்லா பொறுப்புகளையும் ஒருவரே சுமப்பதால், செலவை அவர்களால் சுமக்க முடியாது,” என்றனர். பெரும் பொருளாதாரப் பிரச்சினையிலிருந்து குடும்பம் காப்பாற்றப்பட்டது.
பிஎட் படிப்பை 76 சதவிகித தேர்ச்சியுடன் ஷோந்து முடித்தார். வேலை தேடிக் கொண்டிருந்தார். பருவமழை ராஜுபாயின் வருமானத்தை குறைத்தது. “வேலைக்கான கனவை நான் கலைத்துவிட்டு, விவசாய நிலங்களில் வேலை பார்க்கத் தொடங்கினேன்,” என்கிறார் ஷோந்து. பல சுயநிதி பிஎட் கல்லூரிகள் திறக்கப்பட்டன. ஆசிரியப் பணிகளுக்கான தகுதிகள் அதிகமாக இருந்தது. அவர்களை அவர் எதிர்கொள்ளவே முடியாது. போதாதற்கு பணி வழங்கலில் ஊழல் வேறு தலைவிரித்தாடியது. ஷோந்துவுக்கு எல்லாமும் பிரச்சனையாக இருந்தது.
கொஞ்ச காலம் கழித்து அவர் பாதையை மாற்றி கணிணி வேலைகளை முயற்சிக்க முடிவு செய்தார். ஒரு வருட பட்டயப் படிப்பான பிஜிடிசிஏவுக்கு அவர் விஜயநகர் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்ணப்பித்தார். தகுதி பெற்றோர் பட்டியலில்கூட அவரின் பெயர் வந்தது. ஆனால் கட்டணம் கட்ட ஷோந்துவிடம் பணம் இல்லை.
வடாலியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலிருந்து கொத்திகம்பாவில் அவர் சிந்தன் மேத்தாவை சந்தித்தார். கல்லூரியின் அறங்காவலர்களிடம் மேத்தா பேசி, உபகார சம்பளத்தில் ஷோந்துவின் கட்டணத்தை சரி செய்து கொள்ளக் கூறினார். அடுத்த நாள் ஷோந்து விஜயநகருக்கு சென்றார். கல்லூரியின் அலுவலகத்திலிருந்த குமாஸ்தா அவரை ஏற்க மறுத்தார். “நாங்கள்தான் இங்கு நிர்வாகத்தைப் பார்க்கிறோம்,” என்றார் அவர். மூன்று நாட்களுக்கு கட்டணம் செலுத்தாததால் ஷோந்துவின் பெயர் தகுதிப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது.
ஷோந்து நம்பிக்கை இழந்துவிடவில்லை. மேலதிக இடங்களுக்கு கல்லூரி விண்ணப்பித்திருக்கும் தகவலை குமாஸ்தாவிடமிருந்து தெரிந்து கொண்டார் ஷோந்து. அந்த இடங்கள் கிடைக்கும்வரை, வகுப்புகளுக்கு செல்ல அனுமதி கோரினார். அனுமதி கிடைத்தது. முழு அனுமதி உறுதிபடுத்தப்படாத நிலையில், வடாலியிலிருந்து விஜயநகருக்கு சென்று வரத் தொடங்கினார். ஒருநாளுக்கு 50 ரூபாய் செலவானது. நண்பர்கள் உதவிக்கு வந்தனர். ஷஷிகாந்த் என்கிற நண்பர் 250 ரூபாய் பஸ் பாஸுக்கு எனக் கொடுத்தார். பலமுறை மன்றாடி குமாஸ்தாவை பஸ் பாஸில் அலுவலக முத்திரை இட வைத்தனர். படிப்புக்கான அனுமதி கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் ஒன்றரை மாதங்களாக ஷோந்து தொடர்ந்து சென்று வந்தார். ஆனால் கல்லூரிக்கு அதிகப்படியான இடங்கள் வழங்கப்படவில்லை. அதை தெரிந்து கொண்டதிலிருந்து அவர் கல்லூரிக்கு செல்வதை நிறுத்தினார்.
மீண்டும் விவசாயத் தொழிலாளர் ஆனார் ஷோந்து. மொராட் கிராமத்தில் ஒரு மாதம் வயலில் வேலை பார்த்த பிறகு, ராஜுபாயுடன் இணைந்து தையல் வேலை செய்யத் தொடங்கினார். வடாலி கிராமத்தின் ரெப்டிமாதா கோவிலருகே சாலையோரம் இருக்கும் சிறு கடை அது. பிறகு பவுர்ணமிக்கு மூன்று நாட்களுக்கு முன் நண்பர் ஷஷிகாந்திடம் சென்றார் ஷோந்து. “பிஜிடிசிஏ வகுப்பில் கற்றுக் கொடுப்பது புரியாமல் பல மாணவர்கள் பாதியிலேயே படிப்பை நிறுத்திவிட்டனர். வகுப்பில் குறைவான மாணவர்கள்தான் இருக்கின்றனர். மீண்டும் உனக்கு அங்கு வாய்ப்பு கிடைக்கலாம்,” என்றார் ஷஷிகாந்த்.
அடுத்த நாள், ஷோந்து குமாஸ்தாவை மீண்டும் விஜயநகரில் சந்தித்தார். கட்டணத்தை அவர் கட்டச் சொன்னார். ராஜுபாயுடன் பணிபுரிந்து ஈட்டிய 1,000 ரூபாயை ஷோந்து கட்டினார். “மிச்ச 5,200 ரூபாயை எதாவது செய்து தீபாவளி சமயத்தில் கட்டி விடுகிறேன்,” என்றார். அனுமதி கிடைத்தது.
அனுமதி கிடைத்த பதினைந்து நாட்கள் கழித்து முதல் உள் மதிப்பீட்டு தேர்வுகள் வந்தன. ஷோந்து தேர்ச்சி அடையவில்லை. அவர் எந்தப் பயிற்சியும் பெற்றிருக்கவில்லை. படிப்பில் மிக தாமதமாக சேர்ந்ததாக சொல்லி பணத்தை வீணாக்க வேண்டாம் என ஆசிரியர்கள் ஷோந்துவுக்கு அறிவுரை வழங்கினர். அவரால் தேர்ச்சி அடைய முடியாது என்றும் அவர்கள் கூறினர். ஷோந்து நம்பிக்கை இழந்துவிடவில்லை. வடாலியைச் சேர்ந்த ஹிமான்ஷு பவ்சார், கஜேந்திர சோலாங்கி மற்றும் இடாரைச் சேர்ந்த ஷஷிகாந்த் பர்மார் ஆகியோர், கற்றுக் கொடுக்கப்படாத பகுதிகளை ஷோந்துவுக்கு கற்பித்து உதவினர். முதல் செமஸ்டர் தேர்வில் அவர் 50 சதவிகிதம் பெற்றார். ஆசிரியர்களால் நம்ப முடியவில்லை.
ஷோந்து தேர்ச்சி அடையவில்லை. அவர் எந்த பயிற்சியும் பெற்றிருக்கவில்லை. படிப்பில் மிக தாமதமாக சேர்ந்ததாக சொல்லி பணத்தை வீணாக்க வேண்டாம் என ஆசிரியர்கள் ஷோந்துவுக்கு அறிவுரை வழங்கினர். அவரால் தேர்ச்சி அடைய முடியாது என்றும் அவர்கள் கூறினர். ஷோந்து நம்பிக்கை இழந்துவிடவில்லை
இரண்டாம் செமஸ்டருக்கானக் கட்டணம் ரூ.9,300. முந்தைய செமஸ்டருக்கு கட்ட வேண்டிய 5,200 ரூபாய் இன்னும் கட்டப்படாமல் இருந்தது. மொத்தமாக 14,500 ரூபாய் கட்ட வேண்டியிருந்தது. கட்ட முடியாத தொகை. கோரிக்கைகள் மற்றும் பரிந்துரைகள் என ஷோந்துவின் நிலைஇரண்டாம் செமஸ்டரின் இறுதித் தேர்வுகள் வரை இழுபறியில் இருந்தது. இப்போது கட்டணம் கட்ட வேண்டும். ஷோந்துவுக்கு வழி தெரியவில்லை. இறுதியில் நம்பிக்கை ஒளிர்ந்தது. உபகாரச் சம்பளம்!
குமாஸ்தாவை சந்தித்தார். உபகாரச் சம்பளம் வந்ததும் அதிலிருந்து கட்டணத்தை கழித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். குமாஸ்தா ஒரு நிபந்தனையின் பேரில் ஒப்புக் கொண்டார். விஜயநகரின் தேனா வங்கிக் கிளையில் ஷோந்து கணக்கு தொடங்கி, கையொப்பமிட்டு பணம் நிரப்பப்படாத ஒரு காசோலையை உத்திரவாதமாக கொடுக்க வேண்டும். புது வங்கிக் கணக்கு தொடங்குவதற்கான 500 ரூபாய் ஷோந்துவிடம் இல்லை.
பரோடா வங்கியில் அவருக்கு கணக்கு இருந்தது. வங்கி இருப்பு 700 ரூபாய்தான். ஆனால் வங்கி, காசோலை புத்தகம் கொடுக்க மறுத்தது. நண்பரான ரமேஷ்பாய் சொலாங்கியிடம் நிலவரத்தை ஷோந்து விளக்கினார். ஷோந்துவின் வார்த்தைகளை ரமேஷ்பாய் நம்பி, அவரது கையொப்பம் கொண்ட தேனா வங்கி காசோலை ஒன்றைக் கொடுத்தார். ஷோந்து அந்தக் காசோலையை கல்லூரியில் கொடுத்த பிறகு, தேர்வெழுத அனுமதிக்கப்பட்டார்.
வடக்கு குஜராத்தின் ஹேம்சந்தராசார்யா பல்கலைக்கழகம் நடத்திய இறுதித் தேர்வில் அவர் 58 சதவிகிதம் பெற்றார். ஆனால் மதிப்பெண் அறிக்கை அவருக்குக் கொடுக்கப்படவே இல்லை.
மதிப்பெண் அறிக்கை கிடைத்து விடும் என்கிற நம்பிக்கையில் ஒரு வேலைக்கு விண்ணப்பித்தார் ஷோந்து. பணி அழைப்பும் வந்தது. மதிப்பெண் அறிக்கை கிடைக்கவில்லை. அவரின் உபகாரச் சம்பளம் வந்து கட்டணம் கட்டப்படும் வரை மதிப்பெண் அறிக்கை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மதிப்பெண் அறிக்கை இல்லாததால் ஷோந்து நேர்காணலுக்கு செல்லவில்லை.
சபார்கந்தின் இதாரிலுள்ள ஓர் தொழில் பயிற்சிக் கல்லூரியில் அவர் பணிபுரியத் தொடங்கினார். சம்பளம் 2,500 ரூபாய். ஆனால் ஒரு மாதத்தில் அவர் மதிப்பெண் அறிக்கை கொடுக்க வேண்டும். ஒரு மாதம் கழிந்தும் மதிப்பெண் அறிக்கை வரவில்லை. சமூக நலத்துறை அலுவலகத்தில் விசாரித்தபோது, உபகாரச் சம்பளம் ஏற்கனவே கல்லூரிக்கு அனுப்பப்பட்ட தகவல் கிடைத்தது. விஜயநகருக்கு சென்று ஷோந்து குமாஸ்தாவை சந்தித்தார். உபகாரச் சம்பளம் வந்து விட்டதெனக் கூறிய அவர், கல்லூரி அதை ஏற்றால் மட்டுமே கட்டணம் அதிலிருந்து கழிக்கப்படும் என்றார் அவர். அதற்குப் பிறகுதான் மதிப்பெண் அறிக்கையும் அவருக்குக் கிடைக்கும்.
ரமேஷ்பாய் கையொப்பமிட்ட காசோலையை திரும்பக் கொடுக்கும்படி குமாஸ்தாவை ஷோந்து கேட்டுக் கொண்டார். “கிடைக்கும்,” என்பதுதான் குமாஸ்தாவின் அலட்சியம் நிறைந்த பதிலாக இருந்தது. மீண்டும் வர வேண்டாம் என்றும் ஷோந்துவிடம் அவர் கூறியிருக்கிறார். “என்னை தொடர்பு கொண்டு உன்னுடைய வங்கிக் கணக்கு எண்ணை கூறு,” எனக் கூறினார் அவர். தீபாவளிக்கும் புத்தாண்டுக்கும் இடையில் ஒருநாள் ஷோந்து அவரை தொடர்பு கொண்டார். “எந்த வங்கியில் கணக்கு இருக்கிறதென சொன்னாய்?” என குமாஸ்தா கேட்க, “பரோடா வங்கி,” என பதிலளித்தார் ஷோந்து. “முதலில் நீ தேனா வங்கியில் கணக்கு தொடங்க வேண்டும்,” என அவர் கூறியிருக்கிறார்.
இறுதியில் ஷோந்துவுக்கு சர்வ ஷிக்ஷா அபியனில் வேலை கிடைத்தது. 2021ம் ஆண்டிலிருந்து சபர்கந்தா மாவட்டத்தின் பிஆர்சி பவன் கேத்ப்ரமாவில் 11 மாத ஒப்பந்த பணியில் அவர் பணிபுரிந்து வருகிறார். தற்போது அவர் கணிணி எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் வேலைகளை செய்கிறார். சம்பளமாக 10,500 ரூபாய் பெறுகிறார்.
எழுதியவரின் மாதி என்கிற குஜராத்தி மொழிக் கட்டுரைத் தொகுப்பிலிருந்து இக்கட்டுரை தழுவப்பட்டிருக்கிறது
தமிழில் : ராஜசங்கீதன்