“நான் தான் விவசாயி, அவர் விவசாயம் பார்க்கவில்லை. கால்நடைகளை மட்டுமே கவனித்து வந்தார். அவருக்கு மாடுகளை தான் மிகவும் பிடிக்கும் (அவை ஒரு லிட்டர் பால் மட்டுமே கறக்கும் என்றால் கூட). ஆண்கள் கிராமத்தில் சுற்றித் திரிவார்கள், பெண்கள் தான் வயல்களை கவனித்துக் கொள்வார்கள்.” யாவத்மாலின் மிகவும் பிரபலமான விவசாயிகளில் ஒருவரான ஆஷ்னா தோத்தாவாரைப் பற்றி லீலாபாய் பேசுகிறார். யாவத்மாலில் பெரிய அளவில் பயிர் விளையவில்லை என்றாலும் அந்த ஆண்டுகளில் கூட பருத்தி மற்றும் சோயா பீன்ஸ் ஆகியவற்றில் சாதனையான விளைச்சலை பெற்றவர் என்று அவர் புராணத்தை பாடுகிறார். ஆஷ்னா ஒரு நல்ல மனிதர், அனுபவம் வாய்ந்த மனிதர், விதர்பா பகுதியில் கடந்த 50 ஆண்டுகளாக விவசாயத்தை உன்னிப்பாக கவனித்து வந்தவர். அவர் தான் லீலாபாயின் கணவர். மகாராஷ்டிராவின் யாவத்மால் மாவட்டத்தில் இருக்கும் பெரிய பருத்தி சந்தையான பந்தேர்கௌடா நகரத்தை ஒட்டியுள்ள பிம்பிரி கிராமத்தில் தான் இந்த தம்பதியினர் வசித்து வருகின்றனர்.
லீலாபாய் தனது கணவரை மிகுந்த மரியாதையுடனும் பாசத்துடனும் பார்க்கிறார். அவருக்கு முறையான கல்வி குறைவாகவே இருக்கிறது என்றாலும் அவரது சொந்த அனுபவத்தால் மிகவும் திறமையானவர் மற்றும் நன்கு பயிற்சி பெற்றவர். விவசாயத்தைப் பற்றி அவர் இப்படி சொல்வதை தான் நம்புகிறார். குறிப்பாக, யார் விவசாயம் செய்கிறார்கள் என்று வரும் போது "பாய் (பெண்கள்)", என்று அவர் கூறுகிறார். "அவர்கள் தான் அதை சிறப்பாகச் செய்கின்றனர்", என்று கூறுகிறார்.
இத்தனை தசாப்தங்களாக ஒரு வெற்றிகரமான விவசாயியாக இருப்பதிலிருந்து அவருக்கு இருக்கும் ஞானம், ஆச்சரியப்பட வைக்கிறது. தவிர வேளாண்மை மற்றும் நிதி ஆகிய இரண்டிலும் முடிவெடுக்கும் இடத்தில் இவர் தான் இருக்கிறார்.
லீலாபாயை லலிதா ஆனந்த் ராவ் காந்தேவரின் வீட்டில் தான் நாங்கள் சந்தித்தோம். லலிதாவின் கணவர் நம்தியோ இந்த ஆண்டு மே மாதம் 20 ஆம் தேதி அன்று தற்கொலை செய்து கொண்டார், (இது மகாராஷ்டிராவின் பயமுறுத்தும் விவசாய தற்கொலை எண்ணிக்கையில் மற்றும் ஒரு இலக்கம். (கடந்த ஆண்டு தற்கொலைகள் 3786 என்ற எண்ணிக்கையில் இருந்து குறையவில்லை என்று தேசிய குற்றப்பதிவு ஆவணம் தெரிவித்துள்ளது) காந்தேவர் வீட்டில் தான் ஆஷ்னாவும் இருந்தார்.
நம்தியோவை தற்கொலைக்கு தூண்டியது எது என்பது குறித்து லலிதாவுடன் பேசிய பிறகு, புகழ்பெற்ற விவசாயியான ஆஷ்னாவுடன் உரையாடினோம். கிட்டத்தட்ட இருட்டாக இருந்த அந்த வீட்டின் அடுத்த அறையில் லீலாபாய் தரையில் அமர்ந்து இருந்தார், அதனால் நாங்கள் அவரை பார்க்கக்கூட முடியவில்லை. ஆனால் அவர் எங்களது அறியாமையை போக்குவதற்கு சுதந்திரமாக உள்ளே நுழைந்தார்.
வயலில்
“நாம் மிகவும் விவேகமான விவசாயத்திற்கு விரைவாக மாற வேண்டும். சாகுபடி செலவுகள் மற்றும் உற்பத்திக்கு சரியான விலை இல்லாதது - அது தான் எங்களை கொல்கிறது”.
பின்னர் லீலாபாயின் வீட்டில் அவர் தனது கதையை எங்களிடம் கூறினார்.
"நாங்கள் துவங்கிய போது, சில இடங்களில் 40 ஏக்கர் நிலத்தை 10,000 ரூபாய்க்கு எங்களால் வாங்க முடிந்தது. இன்று, நீங்கள் ஒரு ஏக்கரை எங்கும் 40,000 ரூபாய்க்கு வாங்க முடியாது", என்று அவர் கூறினார்.
“நாங்கள் இப்போது பயன்படுத்தும் வகையான உள்ளீடுகள் கடுமையான சிக்கலைத் தான் ஏற்படுத்துகின்றன. எடுத்துக்காட்டாக, களைக்கொல்லி களையை கட்டுப்படுத்துவது இல்லை அது பயிரையும் மண்ணையும் தான் சேதப்படுத்துகிறது. அதுவும் மற்ற ரசாயனங்களும் மண்ணின் வளத்தை சேதப்படுத்துகிறது. நாம் மண்ணை கொன்று கொண்டிருக்கிறோம்", என்று கூறினார்.
"பத்தாண்டுகளுக்கு முன்பு நாங்கள் மிகக் குறைந்த அளவிலேயே பூச்சிக்கொல்லியை பயன்படுத்தினோம். இப்போது, மகசூல் அதிகமாக இருக்கும் போது கூட லாபம் குறைவாகத் தான் இருக்கிறது", என்று கூறினார்.
"ஒன்று, நாம் செய்கின்ற பல விஷயங்களை மாற்ற வேண்டி இருக்கும் இல்லையேல் விவசாயத்தையே அழித்துவிடுவோம்", என்று கூறினார்.


