2019 ன் சுற்றுச்சூழல் பிரிவில் ராம்நாத் கோயங்கா விருது பெற்ற காலநிலை மாற்றம் பற்றிய கட்டுரை தொகுதியின் ஒரு பகுதி, இந்த கட்டுரை.

அவரது கூரை அவர் மீது விழவில்லை, ஆனால் அது குன்வந்த்தை அவரது பண்ணையை சுற்றி துரத்தியது. அந்த நினைவுகள் அவரது மனதில் தெளிவாக பதிந்துள்ளது. "எங்கள் நிலத்தின் ஓரத்திலிருந்த தகர கொட்டகையின் கூரை பறந்து என்னை நோக்கி வந்தது" என்று அவர் நினைவு கூர்ந்தார். "நான் வைக்கோல் குவியலின் கீழே மறைந்ததால் காயமில்லாமல் தப்பிக்க முடிந்தது".

நீங்கள் ஒவ்வொரு நாளும் கூறையால் துரத்தப்படுவதில்லை. அம்புல்கா கிராமத்திலிருந்து குன்வந்த் ஹல்சுல்கர் ஓடிக் கொண்டிருந்தார், அவரைத் துரத்தியது இந்த ஏப்ரல் மாதத்தில் பலத்த காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழை.

வைக்கோல் குவியலின் கீழே இருந்து வெளிவந்த குன்வந்த் 36 நிலங்கா தாலுகாவில் உள்ள தனது சொந்த தோட்டத்தையே அடையாளம் காண முடியவில்லை என்கிறார். அது 18 - 20 நிமிடங்களுக்கு மேல் நீடித்திருக்காது. ஆனால், மரங்கள் முறிந்து விழுந்தன, இறந்த பறவைகள் சிதறிக்கிடந்தன, எங்கள் கால்நடைகள் படுகாயம் அடைந்தன என்று ஆலங்கட்டி மழையால் மரங்களில் ஏற்பட்டிருக்கும் சேத அடையாளங்களை சுட்டிக்காட்டி கூறுகிறார்.

ஒவ்வொரு 16-18 மாதங்களுக்கும் ஒரு ஆலங்கட்டி மழை அல்லது பருவம் தவறி பெய்யும் மழை பெய்கிறது என்று, அவரது தாயார் தோண்டாபாய் 60, அம்புல்காவிலுள்ள இரண்டு அறைகள் கொண்ட கல் வீட்டின் வாசற்படியில் அமர்ந்தபடி கூறுகிறார். 2001 ஆம் ஆண்டிலிருந்து அவர்களது குடும்பம் தங்களது 11 ஏக்கர் பரப்பளவு தோட்டத்தில், உளுந்து மற்றும் பாசிப்பயிறு பயிரிடுவதில் இருந்து மாம்பழம் மற்றும் கொய்யாப்பழ தோட்டங்களை வளர்ப்பதற்கு மாறினர். "நாங்கள் வருடம் முழுவதும் மரங்களை கவனிக்க வேண்டும், ஆனால் ஒரு சில நிமிடங்களில் ஒரு தீவிர வானிலை நிகழ்வு எங்கள் முழு முதலீட்டையும் அழித்துவிடுகிறது."

இது இந்த ஆண்டு மட்டும் நிகழ்ந்த ஒரு நிகழ்வு அல்ல. மகாராஷ்டிராவின் லத்தூர் மாவட்டத்தின் இந்தப் பகுதியில் ஒரு தசாப்தத்திற்கு மேலாக பெய்த மழை மற்றும் ஆலங்கட்டி மழை உள்ளிட்ட தீவிர வானிலை நிகழ்வுகளாகும். உத்தவ் பிரதாரின் சிறிய ஒரு ஏக்கர் மாம்பழத் தோட்டமும் 2014இல் பெய்த ஆலங்கட்டி மழையில் அழிந்தது. "எனக்கு 10 - 15 மரங்கள் இருந்தன. அந்தப் புயலால் அவை அனைத்தும் அழிந்தது. அவற்றை புதுப்பிக்க நான் எந்த முயற்சியும் எடுக்கவில்லை", என்று அவர் கூறுகிறார்.

"ஆலங்கட்டி மழை தொடர்கிறது", 37 வயதான பிரதார் கூறுகிறார். "2014 புயலுக்குப் பிறகு மரங்களை பார்ப்பது மிகவும் வேதனையாக இருந்தது. நீங்கள் அவற்றை நடவு  செய்வீர்கள்,  கவனித்துக் கொள்வீர்கள், பின்னர் அவை ஒரு சில நிமிடங்களில் நாசமாக்கப்படும். இதையெல்லாம் மீண்டும் என்னால் கடந்து செல்ல முடியும் என்று நான் எண்ணவில்லை".

PHOTO • Parth M.N.

தவிர்க்கமுடியாத ஆலங்கட்டி மழை காரணமாக குன்வந்த் ஹல்சுல்கர் (மேல் இடது), அவரது தாயார் தோண்டாபாய் (மேல் வலது), அவரது தந்தை மதுகர் (கீழ் வலது) இவர்கள் பழத்தோட்டத்தை கைவிடுவது குறித்து ஆலோசித்து வருகின்றனர், அதே நேரத்தில் சுபாஷ் ஷிண்டே (கீழ் இடது) இந்தமுறை காரீப் பருவத்தில் இருந்து பயிர் செய்யாமல் விலகி இருக்க வேண்டும் என்று கூறுகிறார்.

ஆலங்கட்டி மழையா? மராத்வாடா பகுதியில் இருக்கும் லத்தூர் மாவட்டத்திலா? அரை வருடத்திற்கும் மேலாக பாதரசம் 32℃ அல்லது அதற்கு மேல் இருக்கும் இடம் இது. இந்தாண்டு ஏப்ரல் முதல் வாரத்தில் 41- 43℃ வரை வெப்பநிலை ஏற்பட்டபோது சமீபத்திய ஆலங்கட்டி மழை பெய்தது.

ஆனால் இங்குள்ள ஒவ்வொரு விவசாயியும் கடும் எரிச்சலுடன் உங்களுக்குச் சொல்வார்கள், தாப்மன், ஹாவமன், வதவரன் (வெப்பநிலை, வானிலை மற்றும் பருவநிலை) ஆகியவற்றின் போக்கை அவர்களால் கணிக்க முடியவில்லை என்று.

அவர்களால் புரிந்துகொள்ள முடிந்தது என்னவென்றால், ஆண்டுதோறும் மழை பெய்யும் நாட்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது, அதே நேரத்தில் வெப்பமான நாட்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. தோண்டாபாய் பிறந்த 1960 ஆம் ஆண்டில் லத்தூர் வருடத்தில் 147 நாட்களுக்கு குறைந்தது 32℃ அல்லது அதற்கு மேற்பட்ட வெப்பநிலையை கண்டது என்கிறது பருவநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதல் குறித்து நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள தரவு. இந்த வருடம் அது 188 நாட்களாக உயரும். தோண்டாபாய்க்கு 80 வயது ஆகும் பொழுது வெப்பமான நாட்கள் 211 ஆக இருக்கக்கூடும்.

"நாம் ஜூலை மாத இறுதியை நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை என்னால் நம்ப முடியவில்லை", என்று சுபாஷ் ஷிண்டே, கடந்த மாதம் அம்புல்காவில் உள்ள அவரது 15 ஏக்கர் தோட்டத்திற்கு சென்றபோது என்னிடம் கூறினார். தோட்டம் முழுவதும் தரிசாகக் கிடக்கிறது, மண் பழுப்பாக இருக்கிறது, பெயரளவுக்கு கூட பச்சை நிற மொட்டுக்களை காணவில்லை. 63 வயதான ஷிண்டே தனது வெள்ளை குர்தாவில் இருந்து ஒரு கைக்குட்டையை எடுத்து நெற்றியில் இருக்கும் வியர்வையை துடைத்துக் கொள்கிறார். நான் வழக்கமாக ஜூன் மத்தியில் சோயா விதைகளை விதைப்பேன். ஆனால் இந்த வருடம் நான் காரீப் பருவத்திலிருந்து முற்றிலும் விலகி இருக்க வேண்டும்.

தெற்கு லத்தூரிலிருந்து தெலங்கானாவின் ஹைதராபாத்தை இணைக்கும் இந்த 150 கிலோமீட்டரில் இருக்கும் ஷிண்டேவைப் போன்ற விவசாயிகள் சோயா பீன்ஸை முக்கியமான பயிராக பயிரிடுகின்றனர்.  மேலும் ஷிண்டே கூறுகையில் சுமார் 1998 வரை சோளம், உளுந்து, பச்சைப்பயிறு முதலானவை முதன்மையான காரீப் பயிர்களாக இருந்தன என்கிறார். "அவற்றுக்கு சீரான மழை தேவை. நல்ல அறுவடைக்கு தகுந்த பருவமழையும் தேவைப்பட்டது".

ஷிண்டே மற்றும் இங்குள்ள பெரும்பாலானவர்கள் 2000 ஆண்டில் இருந்து சோயா சோயாபீன்ஸிற்கு மாறினர், ஏனெனில், "இது ஒரு நெகிழ்வான பயிர் என்கிறார்.  வானிலை முறைகள் சிறிது மாறினாலும் இப்பயிர் அழிந்து போவதில்லை. சர்வதேச சந்தையிலும் இது ஒரு கவர்ச்சிகரமான பயிராக இருந்தது. பருவத்தின் முடிவில் எங்களால் பணத்தை சேமிக்க முடிந்தது. கூடுதலாக அறுவடைக்குப் பின்னர் எஞ்சியவை கால்நடை தீவனமாக பயன்பட்டது. ஆனால், கடந்த 10 - 15 ஆண்டுகளில் சோயாபீன்ஸால் கூட ஒழுங்கற்ற பருவ மழைகளை சமாளிக்க முடியவில்லை.

சமீபத்திய ஆலங்கட்டி மழையால் லத்தூரில் சேதமடைந்த குசம்பப்பூ (மேல் இடது; புகைப்படம்: நாராயன் பாவ்லே); ஆலங்கட்டி மழைக்கு பிந்தைய ஒரு நிலம் (மேல் வலது; புகைப்படம்: நிஷாந்த் பத்ரேஷ்வர்); பாலான தர்பூசணி (கீழ் இடது; புகைப்படம்: நிஷாந்த் பத்ரேஷ்வர்) வாடிய சோளம் (கீழ் வலது; புகைப்படம்: மனோஜ் அக்காடே)

"இந்த ஆண்டு தங்கள் பயிர்களை விதைத்தவர்கள் இப்போது வருந்துகிறார்கள்", என்கிறார் லத்தூர் மாவட்ட ஆட்சியர் ஜீ. ஸ்ரீகாந்த். "ஏனெனில், ஆரம்ப மழையைத் தொடர்ந்து வறண்ட வானிலையே காணப்படுகிறது". மாவட்டம் முழுவதும் 64 % விதைப்பு மட்டுமே நடந்துள்ளது. நிலங்கா தாலுகாவில் 66%. வெளிப்படையாக மாவட்டத்தின் மொத்த பயிர் பரப்பளவில் 50 சதவீதத்திற்கும் அதிகமான பங்கை கொண்ட சோயாபீனுக்கு இது ஒரு பலத்த அடி.

லத்தூர் மராத்வாடாவின் விவசாய பகுதியில் உள்ளது மற்றும் அதன் சாதாரண வருடாந்திர சராசரி மழை 700 மி .மீ. இந்த ஆண்டு ஜூன் 25ஆம் தேதி பருவமழை துவங்கியது, அதன் பின்னர் ஒழுங்கற்றதாக இருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் சாதாரண மழையை விட 47% பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று ஜூலை மாத இறுதியில், ஸ்ரீகாந்த் என்னிடம் தெரிவித்தார்.

சுபாஷ் ஷிண்டே  கூறுகையில் 2000 ஆண்டின் முற்பகுதியில் ஒரு ஏக்கர் சோயாபீனுக்கு 4000 ரூபாய் முதலீட்டில் 10 -12 குவின்டால் வரை மகசூல் தரும். ஏறக்குறைய 2 தசாப்தங்களுக்கு பிறகு சோயாபீன் விலை இரு மடங்கு உயர்ந்து 1,500 ரூபாயிலிருந்து 3,000 ரூபாயாக இருக்கிறது, ஆனால், சாகுபடி செலவுகள் மும்மடங்காகவும், ஒரு ஏக்கரின் உற்பத்தி அளவு பாதியாகவும் குறைந்துள்ளது என்கிறார்.

மாநில வேளாண் சந்தைபடுத்துதல் வாரியத்தின் தரவு, ஷிண்டேவின் அவதானிப்புகளை ஆதரிக்கிறது. 2010-2011 ஆம் ஆண்டில் சோயாபீன் 1.94 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டது அதன் உற்பத்தி 4.31 லட்சம் டன் என்று வாரியத்தின் வலைதளம் கூறுகிறது. 2016 ஆம் ஆண்டில் சோயாபீன் 3.67 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டது, ஆனால், உற்பத்தி வெறும் 3.78 லட்சம் டன் ஆகும். பரப்பளவில் 89% அதிகரிப்பும், ஆனால் உற்பத்தியில் 28.5% வீழ்ச்சியும் அடைந்துள்ளது.

தோண்டாபாயின் கணவர் மதுகர் ஹல்சுல்கர் 63, தற்போதைய தசாப்தத்தின் மற்றொரு அம்சத்தை சுட்டிக்காட்டுகிறார். "2012 முதல் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு நிறைய அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு நாங்கள் 5-7 முறை பூச்சிக்கொல்லியை தெளிக்க வேண்டியிருந்தது" என்று அவர் கூறுகிறார்.

மாறிவரும் நிலப்பரப்பை பற்றிய கூடுதல் நுண்ணறிவுகளுடன் தோண்டாபாய் பேசுகிறார். "நாங்கள் முன்பு பருந்துகள், கழுகுகள், மற்றும் சிட்டுக்குருவிகளை தவறாமல் பார்த்தோம்" என்று அவர் கூறுகிறார். "ஆனால் கடந்த 10 ஆண்டுகளாகவே அவை அரிதிலும் அரிதாகி விட்டது என்கிறார்".

PHOTO • Parth M.N.

மாமரத்தின் அடியில் மதுகர் ஹல்சுல்கர்: '2012 முதல் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு நிறைய அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு நாங்கள் 5-7 முறை பூச்சிக்கொல்லியை தெளிக்க வேண்டியிருந்தது'.

"இந்தியாவில் பூச்சிக்கொல்லி பயன்பாடு ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ கிராமுக்கு குறைவாகவே உள்ளது" என்று லத்தூரைச் சேர்ந்த சுற்றுச்சூழல் பத்திரிக்கையாளர் அதுல் தியுல்கோங்கர் கூறுகிறார். "அமெரிக்கா, ஜப்பான் மற்றும் பிற முன்னேறிய தொழில்துறை நாடுகள் நம்மைவிட 8 முதல் 10 மடங்கு அதிகமாகப் பயன்படுத்துகின்றன. ஆனால், அந்நாடுகள் பூச்சிக்கொல்லிகளை ஒழுங்கு படுத்துகின்றன. நாம் அவ்வாறு செய்யவில்லை. நம்முடைய பூச்சிகொல்லிகள் புற்றுநோய் காரணிகளை கொண்டுள்ளது, அது தோட்டத்தை சுற்றியுள்ள பறவைகளை பாதிக்கின்றது. அவற்றை கொல்லவும் செய்கிறது".

உற்பத்தித் திறன் வீழ்ச்சிக்கு பருவநிலை மாற்றங்களை ஷிண்டே குற்றம் சாட்டுகிறார். "நான்கு மாத பருவ மழை காலத்தில் (ஜூன்- செப்டம்பர்) 70- 75 மழை நாட்களை கொண்டிருந்தோம்", என்கிறார் அவர். "தொடர்ந்து மெதுவாக தூரல் விழுந்து கொண்டே இருக்கும். கடந்த 15 வருடங்களில் மழை நாட்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்து விட்டது. மழை பெய்யும் போது வெறித்தனமாக பெய்கிறது. அதைத் தொடர்ந்து 20 நாட்களுக்கு வறட்சியான வானிலையே நிலவுகிறது. இந்த வானிலையில் விவசாயம் செய்வது சாத்தியமில்லை".

லத்தூருக்கான இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தரவுகள் இவரின் இந்த அவதானிப்புகளை ஆதரிக்கின்றன. 2014 ஆம் ஆண்டில் பருவமழை பெய்யக்கூடிய நான்கு மாதங்களில் 430 மி.மீ அளவு மழை பெய்தது. அடுத்த வருடம் 317 மி.மீ யும். 2016 ஆம் ஆண்டில் அதே நான்கு மாதங்களில், மாவட்டத்தில் 1010 மி.மீ அளவு மழையும் பெய்தது. 2017இல் அது 760 மி.மீ ஆகவும். கடந்த வருடம் அதே பருவமழைை காலத்தில் லத்தூருக்கு 530 மி.மீ மழைையும்  கிடைத்தது, அதில் ஜூன் ஒரு மாதத்தில் மட்டுமே 252 மி.மீ அளவு பெய்தது. மாவட்டத்தில் இயல்பான மழையைப் பெறும் ஆண்டுகளில் கூட மழையின் பரவல் மிகவும் சீரற்றதாகவே உள்ளது.

நிலத்தடிநீர் ஆய்வுகள் மற்றும் மேம்பாட்டு அமைப்பின், மூத்த புவியியலாளர் சந்திரகாந்த் போயர் சுட்டிக்காட்டுவது போல்: "ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பெய்யும் கனமழையால் மண் அரிப்பு ஏற்படுகிறது.  அதற்கு மாறாக தொடர்ந்து தூரலாகப் பெய்தால், அது நிலத்தடி நீரை பெருக்குவதற்கு உதவுகிறது".

ஷிண்டே இனி நிலத்தடி நீரை நம்பி இருக்க முடியாது, ஏனெனில் அவரது நான்கு ஆழ்துளைக்கிணறுகளும் பெரும்பாலும் வறண்டுவிட்டன. நாங்கள் முன்பெல்லாம் 50 அடி தூரத்தில் தண்ணீரைப் பெற்றோம், ஆனால், இப்போது 500 அடி ஆழத்தில் உள்ள ஆழ்துளை கிணறுகள் கூட வறண்டுவிட்டன" என்கிறார்.

அது இன்னும் சில பிரச்சனைகளை தூண்டுகிறது. "நாங்கள் போதுமான அளவு  விதைக்காவிட்டால், கால்நடைகளுக்கு உணவு இருக்காது" என்கிறார் ஷிண்டே. போதுமான தண்ணீரும் தீவனமும் இன்றி விவசாயிகளால் தங்கள் கால்நடைகளை பராமரிக்க முடிவதில்லை.  2009 வரை என்னிடம் 20 கால்நடைகள் இருந்தன. ஆனால், இன்று 9 கால்நடைகள் மட்டுமே இருக்கிறது.

2014 hailstorm damage from the same belt of Latur mentioned in the story
PHOTO • Nishant Bhadreshwar
2014 hailstorm damage from the same belt of Latur mentioned in the story
PHOTO • Nishant Bhadreshwar
2014 hailstorm damage from the same belt of Latur mentioned in the story
PHOTO • Nishant Bhadreshwar

இது மராத்வாடாவிலுள்ள லத்தூர் மாவட்டமாகும், இங்கு ஆறு மாதங்களுக்கும் மேலாக வெப்பநிலை 32℃ ஆக இருக்கும். இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெப்பநிலை 41℃ முதல் 43℃ வரை உயர்ந்த போது  சமீபத்திய ஆலங்கட்டி மழை பெய்தது.

ஷிண்டேவின் தாயார், காவேரிபாய் தனது 95 வயதிலும் புத்திக்கூர்மையுடனும், சுதாரிப்புடனும் இருக்கிறார், "1905ஆம் ஆண்டு லோக்மான்ய திலக் அறிமுகப்படுத்தியதில் இருந்து லத்தூர் பகுதி பருத்தி விளைவிக்கும் மையமாக விளங்கியது" என்கிறார். அவர் தரையில் சம்மணமிட்டு அமர்ந்து இருந்தார், எழுந்தரிப்பதற்கு அவர் யாருடைய உதவியையும் நாடவில்லை. "பருத்தியை விளைவிப்பதற்கான போதுமான மழை எங்களுக்கு அப்போது பெய்தது". இன்றோ, சோயாபீன் அந்த இடத்தை பிடித்துக் கொண்டது.

20 ஆண்டுகளுக்கு முன்பே- அதாவது ஆலங்கட்டி மழை பெய்யத் தொடங்குவதற்கு முன்பு, அவரது தாயார் விவசாயத்தை கைவிட்டதை எண்ணி ஷிண்டே மகிழ்ச்சியடைகிறார். "அவை விவசாய நிலம் முழுவதையும் ஒரு சில நிமிடங்களில் நாசப்படுத்தி விடும். இதனால் பெரும் பாதிப்படைபவர்கள் பழத்தோட்டங்கள் வைத்திருப்பவர்கள் தான்" என்கிறார்.

ஒப்பீட்டளவில் சிறந்த இந்த தெற்குப் பிராந்தியத்தில், பழத்தோட்டங்கள் வைத்திருப்பவர்கள் குறிப்பாக பாதிக்கப்பட்டுள்ளனர். என்னை மரத்தடிகளில் பல மஞ்சள் புள்ளிகள் தெரியும் பழத் தோட்டத்திற்கு அழைத்துச் சென்று "இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கடைசியாக ஆலங்கட்டி மழை பெய்தது" என்று கூறுகிறார்  மதுகர் ஹல்சுல்கர். "இதனால் நான் 1.5 லட்சம் மதிப்புள்ள பழங்களை இழந்துவிட்டேன். 2000 ஆண்டில் நாங்கள் தொடங்கிய 90 மரங்களிலிருந்து 50 மரங்களாக அது குறுகிவிட்டது". "ஆலங்கட்டி மழை  தவிர்க்க முடியாததாகி வருவதால்" அவர் தனது பழத்தோட்டத்தை கைவிடுவதை பற்றி ஆலோசித்து வருகிறார்.

லத்தூர் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக பயிர் முறைகளில் பல மாற்றங்களை கண்டிருக்கிறது. ஒரு காலத்தில் சோளமும் மற்ற சிறுதானியங்களும் ஆதிக்கம் செலுத்தியது,பின்னர் குறைந்த காலத்திற்கு மக்காச்சோளமும், 1905 முதல் பருத்தியும் ஆதிக்கம் செலுத்தியது.

பின்னர் 1970 இல் இருந்து கரும்பும் குறைந்த நாட்களுக்கு சூரியகாந்தியும், மற்றும் 2000 ஆண்டு முதல் பெரிய அளவிலான சோயாாபீன் சாகுபடியும் நடைபெற்று வருகிறது. கரும்பு மற்றும் சோயாபீன் பரவுதல் மிகவும் பிரமிக்கத்தக்கது. 2018 -19 ஆம் ஆண்டில் கரும்பு பயிரிடப்பட்ட பரப்பளவு 67,000 ஹெக்டேர் ஆகும் (புனேவில் வசந்த தாதா சர்க்கரை நிறுவனத்தின் தரவுகளின் படி). 1982 ஆம் ஆண்டில் ஒரு சர்க்கரை அலையில் துவங்கி இன்று லத்தூரில் 11 சர்க்கரை ஆலைகள் உள்ளன. பணப் பயிர்களின் வரவால் ஆழ்துளை கிணறுகள் தூர்ந்து போதல் மற்றும் தீவிரமான நிலத்தடி நீர் சுரண்டல் தவிர்க்க முடியாததாகிவிட்டது, எத்தனை ஆழ்துளை கிணறுகள் துளையிடப்பட்டது என்பதற்கு எவ்வித கணக்கும் இல்லை. வரலாற்றுரீதியாக சிறுதானியங்களுக்கு பழக்கப்பட்ட நிலத்தில் ஒரு நூற்றாண்டாக பணப்பயிர் பயிர் செய்ததன் விளைவு நீர், நிலம், ஈரப்பதம் மற்றும் தாவரங்களிலும் தவிர்க்க முடியாத தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் லத்தூரின் வனப்பகுதி வெறும் 0.54% மட்டுமே என்கிறது மாநில அரசின் வலைத்தளம். இது பரிதாபகரமான மராத்வாடாவின் சராசரி வனப்பகுதி 0.9% கும் கீழ் உள்ளது.

Kaveribai
PHOTO • Parth M.N.
Madhukar and his son Gunwant walking through their orchards
PHOTO • Parth M.N.

இடது: 95 வயதான காவேரிபாய் ஷிண்டே, லத்தூர் பருத்தி விளைவிக்கும் மையமாக இருந்தது, அதை பயிர் செய்வதற்கு எங்களுக்கு போதுமான மழை பெய்தது என்று நினைவு கூர்கிறார். வலது: மதுகர் ஹல்சுல்கர் மற்றும் அவரது மகன் குன்வந்த்- பருவநிலைை மாற்றத்தின் காரணமாக விவசாயத்தை முற்றிலும் கைவிடுவது பற்றி யோசிக்கின்றனரோ?

"இந்த அனைத்து செயல்களுக்கும் பருவநிலை மாற்றத்துக்கும் இடையில் ஒரு குறுகிய காரண சமன்பாட்டை உருவாக்குவது தவறு" என்று அதுல் தியுல்கோங்கர் கூறுகிறார். "மற்றும் தகுந்த ஆதாரங்களுடன் இதை ஆதரிப்பது கடினம். மேலும், இத்தகைய மாற்றம் பெரும் பகுதிகளில் நிகழ்கிறது, ஒரு மாவட்டத்தில் மனிதர்களால் வரையருக்கப்பட்ட எல்லைகளுக்குள் அல்ல. மராத்வாடாவின் ஒரு சிறு பகுதியாக லத்தூர் இருக்கின்றது, வளர்ந்து வரும் வேளாண் சுற்றுச்சூழல் ஏற்றத்தாழ்வுகளுடன் தொடர்புடைய சில வழிகளில் தீவிரமான மாற்றங்களை சந்தித்து வருகிறது.

"ஆனால், பல செயல்முறைகளில் பெரிய பகுதிகளுக்கு இடையில் சில தொடர்புகள் இருப்பதாக தெரிகிறது. பெரிய பயிர் மாற்றம் மற்றும் நிலப்பயன்பாடு மற்றும் தொழில்நுட்பங்களில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்ட ஒரு தசாப்தத்திற்கு பிறகு தீவிர வானிலை அத்தியாயங்கள் மற்றும் ஆலங்கட்டி மழை பெய்ய துவங்கி இருப்பது பெரும் புதிராக இருக்கிறது.  மனித நடவடிக்கைகளை காரணம் என்று கூறி கண்டிக்க முடியாவிட்டாலும் அது நிச்சயமாக நாம் காணும் பருவநிலை ஏற்றத்தாழ்வுகளுக்கு குறிப்பிடத்தகுந்த அளவிற்கு பங்களிக்கிறது."

இதற்கிடையில், அதிகரித்துவரும் தீவிர வானிலை அத்தியாயங்களால் மக்கள் குழம்பி இருக்கின்றனர்.

"ஒவ்வொரு விவசாய சுழற்சியும், விவசாயிகளை அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது" என்கிறார் குன்வந்த் ஹல்சுல்கர். இது விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதற்கு ஒரு முக்கியமான காரணமாக இருக்கிறது. எனது குழந்தைகள் அரசாங்க அலுவலகத்தில் எழுத்தராகப் பணியாற்றினால் கூட நல்லது. விவசாயத்தைப் பற்றிய அவரது கண்ணோட்டம் பருவநிலையுடன் சேர்ந்து மாறிவிட்டது.

"வேளாண்மை பெரிதாக நேரம், ஆற்றல் மற்றும் பணத்தை வீணடிப்பதாக இருக்கிறது" என்கிறார் சுபாஷ் ஷிண்டே. இந்நிலை அவரது தாயின் காலத்தில் மாறுபட்டிருந்தது. "வேளாண்மை எங்கள் இயல்பான தேர்வாக இருந்தது" என்று காவேரிபாய் கூறுகிறார்.

நான் நமஸ்தேயுடன் காவேரிபாயிடம் விடைபெறும்போது, அவர் பதிலுக்கு என்னிடம் கை குலுக்கினார். "கடந்த வருடம் என் பேரன் சேமித்த பணத்திலிருந்து, என்னை விமானத்தில் பயணிக்க வைத்தார்" என்று அவர் பெருமிதத்துடன் கூறுகிறார். "விமானத்தில் என்னை ஒருவர் இப்படித்தான் வரவேற்றார். வானிலை மாறிக்கொண்டே இருக்கிறது அதைப்போல நமது வாழ்த்தும் பழக்கங்களும் மாற வேண்டும் என்று நான் நினைக்கிறேன்" என்கிறார்.

கவர் படம்( ஆலங்கட்டி மழையால் பாதிக்கப்பட்ட லத்தூர்): நிஷாந்த் பத்ரேஷ்வர்.

ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டத்தால் ஆதரிக்கப்பட்ட, பருவநிலை மாற்றம் பற்றிய நாடு தழுவிய பாரியின் இந்த தகவல் அறிக்கை, சாதாரன மக்களின் குரல்கள் மற்றும் அனுபவங்களின் மூலம் அதை பதிவு செய்யும் ஒரு முயற்சியாகும்.

இந்தக் கட்டுரையை மறுபதிப்பு செய்ய விருப்பமா? [email protected] என்ற முகவரிக்கு CCயுடன்

[email protected] என்ற முகவரிக்கு எழுதுங்கள்.

தமிழில்: சோனியா போஸ்

Reporter : Parth M.N.

ਪਾਰਥ ਐੱਮ.ਐੱਨ. 2017 ਤੋਂ ਪਾਰੀ ਦੇ ਫੈਲੋ ਹਨ ਅਤੇ ਵੱਖੋ-ਵੱਖ ਨਿਊਜ਼ ਵੈੱਬਸਾਈਟਾਂ ਨੂੰ ਰਿਪੋਰਟਿੰਗ ਕਰਨ ਵਾਲੇ ਸੁਤੰਤਰ ਪੱਤਰਕਾਰ ਹਨ। ਉਨ੍ਹਾਂ ਨੂੰ ਕ੍ਰਿਕੇਟ ਅਤੇ ਘੁੰਮਣਾ-ਫਿਰਨਾ ਚੰਗਾ ਲੱਗਦਾ ਹੈ।

Other stories by Parth M.N.

ਪੀ ਸਾਈਨਾਥ People’s Archive of Rural India ਦੇ ਮੋਢੀ-ਸੰਪਾਦਕ ਹਨ। ਉਹ ਕਈ ਦਹਾਕਿਆਂ ਤੋਂ ਦਿਹਾਤੀ ਭਾਰਤ ਨੂੰ ਪਾਠਕਾਂ ਦੇ ਰੂ-ਬ-ਰੂ ਕਰਵਾ ਰਹੇ ਹਨ। Everybody Loves a Good Drought ਉਨ੍ਹਾਂ ਦੀ ਪ੍ਰਸਿੱਧ ਕਿਤਾਬ ਹੈ। ਅਮਰਤਿਆ ਸੇਨ ਨੇ ਉਨ੍ਹਾਂ ਨੂੰ ਕਾਲ (famine) ਅਤੇ ਭੁੱਖਮਰੀ (hunger) ਬਾਰੇ ਸੰਸਾਰ ਦੇ ਮਹਾਂ ਮਾਹਿਰਾਂ ਵਿਚ ਸ਼ੁਮਾਰ ਕੀਤਾ ਹੈ।

Other stories by P. Sainath

ਪੀ ਸਾਈਨਾਥ People’s Archive of Rural India ਦੇ ਮੋਢੀ-ਸੰਪਾਦਕ ਹਨ। ਉਹ ਕਈ ਦਹਾਕਿਆਂ ਤੋਂ ਦਿਹਾਤੀ ਭਾਰਤ ਨੂੰ ਪਾਠਕਾਂ ਦੇ ਰੂ-ਬ-ਰੂ ਕਰਵਾ ਰਹੇ ਹਨ। Everybody Loves a Good Drought ਉਨ੍ਹਾਂ ਦੀ ਪ੍ਰਸਿੱਧ ਕਿਤਾਬ ਹੈ। ਅਮਰਤਿਆ ਸੇਨ ਨੇ ਉਨ੍ਹਾਂ ਨੂੰ ਕਾਲ (famine) ਅਤੇ ਭੁੱਖਮਰੀ (hunger) ਬਾਰੇ ਸੰਸਾਰ ਦੇ ਮਹਾਂ ਮਾਹਿਰਾਂ ਵਿਚ ਸ਼ੁਮਾਰ ਕੀਤਾ ਹੈ।

Other stories by P. Sainath
Series Editors : Sharmila Joshi

ਸ਼ਰਮਿਲਾ ਜੋਸ਼ੀ ਪੀਪਲਸ ਆਰਕਾਈਵ ਆਫ਼ ਰੂਰਲ ਇੰਡੀਆ ਦੀ ਸਾਬਕਾ ਸੰਪਾਦਕ ਹਨ ਅਤੇ ਕਦੇ ਕਦਾਈਂ ਲੇਖਣੀ ਅਤੇ ਪੜ੍ਹਾਉਣ ਦਾ ਕੰਮ ਵੀ ਕਰਦੀ ਹਨ।

Other stories by Sharmila Joshi
Translator : Soniya Bose

Soniya Bose is a psychology and sociology graduate who loves to learn about people in their respective settings.

Other stories by Soniya Bose