லட்சுமி டுடூ மருத்துவமனையை அடைந்தபோது கல்பனா இறந்திருந்தார். “குழந்தை, காலை கடும் பசியில் இருந்தாள். நான் அவருக்கு உணவு எடுத்துச்செல்ல எண்ணினேன். ஆனால், நான் தாமதமாகச் சென்றுவிட்டேன். மழை வேறு அதிகமாக பெய்தது“ என்று லட்சுமி நினைவு கூறுகிறார்.
2020ம் ஆண்டு ஜீன் மாதம் அவரது 26 வயது மகள் கல்பனா, தலைவலி மற்றும் இடைவிடாத வாந்தியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லட்சுமியின் மற்றொரு மகள் ஷிபானி அவருடன் மருத்துவமனையில் இருந்தார்.
2017ம் ஆண்டு முதல் கல்பனா ஒரு தனியார் நோய் கண்டறியும் மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். கங்காராம்பூர், உள்ளூரில் கல்திகி மருத்துவமனை என்று அழைக்கப்படும் அரசின் துணை பிரிவு மருத்துவமனை மருத்துவர்கள் அவரை தனியார் நரம்பியல் சிறப்பு மருத்துவரை அணுகுமாறு அறிவுறுத்தியதை தொடர்ந்து அவர் அங்கு சென்றார். 2019ம் ஆண்டில், அவரின் இரண்டாவது மகன் பிறந்த பின்னர், அவரது நிலை மிகவும் மோசமடைந்தது.
2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் போடப்பட்ட ஊரடங்கால் அவர் மாதமொரு முறை மருத்துவமனைக்குச் வழக்கமான பரிசோதனைகளுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. “நாங்கள் காத்திருந்திருக்கலாம். ஆனால், அவரது நாட்கள் தொடர்ந்து தள்ளிப்போடப்பட்டன. எனவே, நாங்கள் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளையே மீண்டும், மீண்டும் வாங்கினோம்“ என்று லட்சுமி நினைவு கூறுகிறார்.
கல்பனாவுக்கு 2014ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அப்போது அவர் கங்காராம்பூர் கல்லூரியில் முதலாமாண்டு இளங்கலை படித்துக்கொண்டிருந்தார். 29 வயதான அவரது கணவர் நாயன் மார்டி, மளிகை கடை நடத்தி வருகிறார். மேலும், மேற்கு வங்கத்தின் தக்சின் தினாஜ்பூர் மாவட்டத்தின் கங்காராம்பூர் நகரிலிருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆனந்தப்பூர் கிராமத்தில் பகுதிநேர தையல் கலைஞராகவும் உள்ளார். அவரின் பெற்றோர் விவசாயக்கூலித்தொழிலாளர்களாவர். ஓராண்டு கழித்து, அவரது முதல் மகன் பிறந்த பின்னர், குழந்தையிலிருந்து அவருக்கு இருந்த தீவிர தலைவலி, மோசமடையத்துவங்கியது.










