மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் ஐந்து நாட்கள், 200 கிலோமீட்டர் பயணித்து ரூ.27,000 செலவு செய்து ரெம்டெசிவர் ஊசியை ரவி போப்டி தேடியுள்ளார்.
இந்தாண்டு ஏப்ரல் கடைசி வாரம் அவரது பெற்றோருக்கு கோவிட்-19க்கான அறிகுறிகள் தென்பட்டபோது இத்தேடல் தொடங்கியது. “அவர்கள் பலமாக இருமத் தொடங்கினர், மூச்சுத்திணறல், நெஞ்சு வலி இருந்தது,” என்று பீடின் ஹர்கி நிம்கான் கிராமத்தில் தனது ஏழு ஏக்கர் விளைநிலத்தில் நடந்தபடி நினைவுகூரும் 25 வயதாகும் ரவி. “எனவே நான் அவர்களை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன்.”
கோவிட்-19 தொற்றை குணப்படுத்தும் அன்டி வைரல் மருந்தான ரெம்டெசிவரை மருத்துவர் உடனடியாக பரிந்துரைத்தார். அதற்கு பீடில் கடுமையான தட்டுப்பாடு நிலவியது. “நான் ஐந்து நாட்கள் ஓடினேன்,” என்கிறார் ரவி. “எனக்கு நேரம் கடந்துவிட்டது, அடுத்த என்ன செய்வதென்று தெரியவில்லை. எனவே நான் ஆம்புலன்சை வாடகைக்கு பிடித்து என் பெற்றோரை சோலாப்பூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றேன்.” பயணம் முழுவதும் அவர் மிகுந்த பதற்றத்துடன் இருந்துள்ளார். “ஆம்புலன்சில் பயணித்த அந்த நான்கு மணி நேரத்தை ஒருபோதும் நான் மறக்க மாட்டேன்.”
அவரது பெற்றோரான 55 வயது அர்ஜூன், 48 வயது கீதா ஆகியோரை மஜல்கான் தாலுக்காவில் உள்ள தங்களது கிராமத்திலிருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சோலாப்பூர் நகருக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ரூ.27,000 கேட்டுள்ளார். “எனக்கு தெரிந்த தூரத்து உறவினர் ஒருவர் சோலாப்பூரில் மருத்துவராக உள்ளார்,” என்கிறார் ரவி. “ஊசியை ஏற்பாடு செய்வதாக அவர் தெரிவித்தார். பீடில் அனைத்து மக்களும் அந்த மருந்து கிடைக்காமல் திண்டாடினர்.”
எபோலா சிகிச்சைக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்ட ரெம்டெசிவர் மருந்து பெருந்தொற்று கால தொடக்கத்தில் கோவிட்-19 பாதித்த நோயாளிகளுக்கு பலனளிப்பதாக கண்டறியப்பட்டது. 2020 நவம்பர் மாதம் உலக சுகாதார அமைப்பு “நிபந்தனைக்கு உட்பட்ட பரிந்துரையை” வெளியிட்டது ரெம்டெசிவர் பயன்பாட்டிற்கு எதிராக வெளியிட்டது. இம்மருந்து கோவிட்-19 நோயாளிகளை உயிர்பிழைக்க வைப்பது, பிற வகையில் பலனளிப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
சிகிச்சை வழிகாட்டுதல்களில் இந்த அன்டி வைரல் இடம்பெறாத போதிலும் அவை தடைசெய்யப்படவில்லை என்கிறார் மகாராஷ்டிரா சாப்டரின் இந்திய மருத்துவ கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் டாக்டர் அவினாஷ் போன்டுவி. “முந்தைய கரோனா வைரஸ் [சார்ஸ்-கோவி-1] தொற்றை கையாள ரெம்டெசிவர் பயன்படுத்தப்பட்டது. அதனால் தான் இந்தியாவில் முதலில் தோன்றி புதிய கரோனா வைரசிற்கும் [சார்ஸ்-கோவ்-2 அல்லது கோவிட்-19] நாங்கள் அதை பயன்படுத்தத் தொடங்கினோம்.”









