நவம்பர் மாதத்தையொட்டிய மூன்று நாட்களில் மஜுலித் தீவின் கராமுர் சந்தை, அகல் விளக்குகளில் வண்ண தீபங்களால் ஜொலிக்கிறது. குளிர்கால மாலை வந்ததும் கோல் மேளங்களின் சத்தமும் சங்குகளின் ஒலியும் ஒலிபெருக்கிகளின் வழியாக வெளியேறி பரவிக் கொண்டிருக்கிறது.
ராஸ் மகா உற்சவம் தொடங்கிவிட்டது.
அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வரும் அசாமிய மாதங்களான காடி-ஆகுன் மாதங்களின் பவுர்ணமியில் இவ்விழா கொண்டாடப்படுகிறது. யாத்ரீகர்களும் சுற்றுலாவாசிகளும் வருடந்தோறும் இவ்விழாவுக்கு செல்கின்றனர். இரண்டு நாட்களுக்கும் மேலாக இவ்விழா நடக்கிறது.
“அது நடக்கவில்லை என்றால், ஏதோ ஒன்றை இழந்தது போன்ற உணர்வு எங்களுக்கு இருக்கும். இவ்விழாதான் (ராஸ் மகா உற்சவம்) எங்களின் பண்பாடு,” என்கிறார் போருன் சித்தாதர் சுக் கிராமத்தில் விழா ஒருங்கிணைப்புக் குழுவின் செயலரான ராஜா பேயேங். “இந்த நிகழ்வுக்காக வருடம் முழுவதும் மக்கள் ஆர்வத்துடன் காத்திருப்பார்கள்,” என்கிறார் அவர்.
நூற்றுக்கணக்கானவர்கள் நல்ல ஆடைகள் அணிந்து கராமுர் சாரு சத்திரத்தில் கூடியிருக்கின்றனர். அசாமிலிருக்கும் பல வைணவ மடங்களில் அதுவும் ஒன்று.





































