"இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை, வடிகால்கள் சுத்தமாக இருந்த போது தண்ணீர் கண்ணாடி போலத் தெளிவாக இருந்தது. (ஆற்றின் உள்ளே) விழுந்த ஒரு நாணயத்தை மேலே இருந்தே நாம் கண்டுபிடித்து விடலாம். யமுனை நதி தண்ணியை அப்படியே அள்ளிப் பருகலாம்", என்று மீனவர் ராமன் ஹல்தார், ஒரு கை நிறைய நீரை அள்ளி தன் வாயின் அருகில் வைத்தபடி கூறுகிறார். நாங்கள் அவரை ஒரு மாதிரி பார்த்ததும், அந்த தண்ணீரை கீழே விட்டுவிட்டு எங்களை பார்த்து சிரிக்கிறார்.
இன்றைய யமுனையில் பிளாஸ்டிக்குகள், அலுமினிய தாள்கள், குப்பைகள், செய்தித்தாள்கள், இறந்த தாவரங்கள், கான்கிரீட் குப்பைகள், துணிகள், சேறு, அழுகிய உணவுகள், தேங்காய் நெற்று, ரசாயன நுறை மற்றும் ஆகாயத்தாமரை ஆகியவை தலைநகரத்தின் பொருள் நுகர்வினைப் பற்றிய இருண்ட பிரதிபலிப்பை நமக்கு வழங்குகிறது.
யமுனையின் வெறும் 22 கிலோமீட்டர் (அல்லது 1.6 சதவீதம்) மட்டுமே தேசிய தலைநகர் பகுதி வழியாக பாய்கிறது. ஆனால் 1,376 கிலோ மீட்டர் நீளம் உள்ள ஆற்றில் உள்ள மொத்த மாசுபாட்டில் 80% வரை அந்த சிறிய நீளத்தில் இருந்து வெளியேறும் கழிவு மற்றும் விசத்தால் ஏற்படுகிறது. 2018 ஆம் ஆண்டில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் கண்காணிப்புக் குழு அறிக்கை தில்லியிலுள்ள நதியை 'கழிவுநீர் பாதை' என்று ஒப்புக்கொண்டு அறிவித்தது. இதன் விளைவாக நீரில் பிராணவாயுவின் அளவு கடுமையாக குறைந்து வருவதால் அதிக அளவிலான மீன்கள் இறந்து வருகின்றன.
கடந்த வருடம், தில்லியில் ஆற்றின் தெற்கு பகுதியிலுள்ள கலிந்தி குஞ்ச் படித்துறை பகுதியில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து மிதந்தன மேலும் பல நீர்வாழ் உயிரினங்களும் இறந்தன, தில்லியை ஒட்டியுள்ள நதிப் பகுதியில் இது இப்போது ஒரு வருடாந்திர நிகழ்வாகவே மாறிவிட்டது.
"ஒரு நதி சுற்றுச்சூழல் அமைப்பு உயிர்ப்புடன் இருக்க அதற்கு 6 மற்றும் அதற்கும் மேற்பட்ட அளவில் கரைந்த பிராணவாயு (நீரில் இருக்கும் பிராணவாயுவின் அளவு) தேவை. மீன்களுக்கு குறைந்தபட்சம் 4 முதல் 5 வரை கரைந்த பிராணவாயு தேவைப்படுகிறது. தில்லியைச் சேர்ந்த யமுனை பகுதியில் கரைந்த பிராணவாயு 0 - 0.4 வரையே உள்ளது", என்று சிகாகோ பல்கலைக்கழகத்திலுள்ள டாடா வளர்ச்சி மையத்தின், நீரில் இருந்து மேகம் வரை திட்டத்தின் இயக்குனரான பிரியங் ஹிராணி கூறுகிறார். இந்தத் திட்டம் நதியில் ஏற்படும் நிகழ்நேர மாசுபாட்டை கணக்கிடுகிறது.











