தவறு நடக்க வாய்ப்பே இல்லை.
வாடிக்கையாளரின் காதில் இருக்கும் மெல்லிய ஊசியைக் கொண்ட தன் கைகளில் அமனின் பார்வை நிலை பெற்றிருக்கிறது. ஊசி முனையின் கூர்மையை தவிர்ப்பதற்காக பஞ்சு உருட்டி வைக்கப்பட்டிருக்கிறது. தோலையோ செவிப்பறையையோ உரசி விடக் கூடாது என மிகவும் எச்சரிக்கையுடன் மெதுவாக வேலை செய்கிறார். “காதிலுள்ள மெழுகுதான் அகற்றப்பட வேண்டும்,” என நினைவுறுத்துகிறார்.
ஓர் அரசமரத்தடி நிழலில் அமர்ந்து அவர் பாரியுடன் பேசிக் கொண்டிருக்கிறார். ஊசி போன்ற கருவி, இடுக்கி, பஞ்சு ஆகியவை கொண்ட ஒரு கறுப்பு பை அவருக்கு அருகே இருக்கிறது. பையில் மூலிகைகளால செய்யப்பட்ட எண்ணெய் குடுவை ஒன்றும் இருக்கிறது. காதை சுத்தப்படுத்துவதற்காக அவரது குடும்பத்துக்கு மட்டுமே தெரிந்த பிரத்யேகக் கலவையுடன் தயாரிக்கப்படும் எண்ணெய் அது என அவர் குறிப்பிடுகிறார்.
“ஊசி போன்ற கருவி காது மெழுகை சுத்தப்படுத்தும். இடுக்கிகள் அவற்றை வெளியே எடுக்க பயன்படும்.” காதில் சதை வளர்ந்திருந்தால் மட்டும்தான் மூலிகை எண்ணெய் பயன்படுத்தப்படும். “தொற்றுகளை நாங்கள் பார்ப்பதில்லை. காது மெழுகும் அரிப்பும் மட்டும்தான் நாங்கள் சரி செய்வோம்.” முரடாக கையாளப்பட்டால் அரிப்பு தொற்றாக மாறி காதை காயப்படுத்தவும் செய்யும் என்கிறார் அவர்.
காதுகளை எப்படி சுத்தம் செய்வதென தந்தை விஜய் சிங்கிடமிருந்து 16 வயதில் அமன் கற்றுக் கொண்டார். அதுதான் ரெவாரி மாவட்டத்தின் ராம்புராவில் வசிக்கும் அவரது குடும்பத்தின் தொழில் என்கிறார். முதலில் குடும்பத்தினரிடம் வேலை செய்து பார்க்கத் தொடங்கினார் அமன். “முதல் ஆறு மாதங்களுக்கு, குடும்ப உறுப்பினர்களின் காது மெழுகை ஊசி போன்ற கருவி மற்றும் இடுக்கிகளுடன் எடுத்து பயிற்சி பெற்றுக் கொண்டோம். எந்தக் காயமும் ஏற்படாமல் சரியாக அது செய்யப்பட்ட பிறகு, நாங்கள் வெளியே வேலை செய்யத் தொடங்கினோம்,” என்கிறார் அவர்.
குடும்பத்தில் காது சுத்தப்படுத்துபவர்களின் மூன்றாம் தலைமுறையை சேர்ந்தவர் அமன். பள்ளிக்கல்வி பற்றி கேட்டபோது, பள்ளிக்கு சென்றதே இல்லை என சொல்லும் அவர், படிக்காதவன் என தன்னை குறிப்பிடுகிறார். “பணம் பெரிய பிரச்சினை இல்லை. காயம் ஏற்படுத்தாமல் வேலை செய்வதுதான் மிகவும் முக்கியம்,” என்கிறார் அவர்.
தில்லிக்கு இடம்பெயருவதற்கு முன்னால், அவருக்குக் கிடைத்த முதல் வாடிக்கையாளர்கள் ஹரியானாவின் குர்காவோனை சேர்ந்தவர்கள். சுத்தப்படுத்த 50 ரூபாய் கட்டணத்தில் ஒருநாளைக்கு 500லிருந்து 700 ரூபாய் வரை சம்பாதித்ததாக அமன் சொல்கிறார். “இப்போது 200 ரூபாய் சம்பாதிக்கவே சிக்கலாக இருக்கிறது.”
தில்லியின் டாக்டர் முகெர்ஜி நகரிலுள்ள அவரது வீட்டிலிருந்து கிளம்பி போக்குவரத்து நெரிசலினூடாக நான்கு கிலோமீட்டர்கள் நடந்து கிராண்ட் ட்ரங்க் சாலையிலுள்ள அம்பா சினிமாவை அடைகிறார். அங்கு நடந்து செல்லும் மக்களை கவனிக்கிறார். குறிப்பாக காலை நேரக் காட்சி பார்க்க வந்தவர்கள்தான் அவரது இலக்கு. சிகப்பு தலைப்பாகைதான் காதை சுத்தப்படுத்துபவர் என்பதற்கான அடையாளம் என்கிறார். “அதை நாங்கள் அணியாவிட்டால், காதை சுத்தப்படுத்துபவர் சென்று கொண்டிருக்கிறார் என்பதை எப்படி மக்கள் தெரிந்து கொள்வார்கள்?”
அம்பா சினிமாவில் ஒரு மணி நேரம் காத்திருந்த பிறகு 10 நிமிட தொலைவில் இருக்கும் தில்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு வளாகத்துக்கருகே இருக்கும் கம்லா நகரின் சந்துகளில் நடக்கிறார் அமன். மார்க்கெட்டில் மாணவர்களும் வியாபாரிகளும் பணிக்கமர்த்தப்பட காத்திருக்கும் தொழிலாளர்களும் நிறைந்திருக்கின்றனர். அமனை பொறுத்தவரை ஒவ்வொரு நபரும் முக்கியம். எனவே அனைவரிடமும், ”அண்ணா, உங்கள் காதுகளை சுத்தம் செய்ய விரும்புகிறீர்களா? என்னை பார்க்க மட்டும் அனுமதியுங்கள்,” எனக் கேட்கிறார்.
அவர்களில் எவரும் ஒப்புக் கொள்ளவில்லை.
12.45 ஆகி விட்டது. இரண்டாம் காட்சி தொடங்கும் நேரம் என்பதால் அம்பா சினிமாவுக்கு செல்ல முடிவெடுக்கிறார். இறுதியில் ஒரு வாடிக்கையாளர் கிடைக்கிறார்.
*****
தொற்றுக்காலத்தில் வேலைவாய்ப்புகள் குறைந்திருந்தபோது அமன் பூண்டு விற்கத் தொடங்கினார். “அருகே இருக்கும் மண்டிக்கு காலை 7.30 மணிக்கு சென்று விடுவேன். 1,000 ரூபாய்க்கோ அல்லது ஒரு கிலோ 35-40 ரூபாய் என்கிற விலை அளவிலோ வாங்குவேன். கிலோ 50 ரூபாய் என விலை வைத்து விற்பேன். நாளொன்றுக்கு 250லிருந்து 300 ரூபாய் வரை சேமிக்க முடிந்தது,” என்கிறார்.
வேலை கடினமாக இருந்ததால் பூண்டு விற்க தற்போது விருப்பமில்லை என்கிறார் அமன். “காலையிலேயே சென்று பூண்டு வாங்கி வீட்டுக்கு கொண்டு வந்து சுத்தப்படுத்த வேண்டும். வீட்டுக்கு திரும்ப இரவு 8 மணி ஆகிவிடும்.” காதை சுத்தப்படுத்தும் வேலையில் அவரால் மாலை 6 மணிக்கு வீடு திரும்பி விட முடிகிறது.
ஐந்து வருடங்களுக்கு முன் அமன் தில்லிக்கு இடம்பெயர்ந்தபோது 3,500 ரூபாய் வாடகைக்கு டாக்டர் முகெர்ஜி நகரிலுள்ள பந்தா பகதூர் மார்க் டிப்போவருகே ஒரு வீட்டுக்கு குடி புகுந்தார். 31 வயது ஹீனா சிங் மற்றும் 10 வயதுகளுக்குள் இருக்கும் நெகி, தக்ஷ் மற்றும் சுகன் ஆகிய மூன்று மகன்களுடன் அவர் வசித்து வருகிறார். மூத்த மகன்கள் அரசுப் பள்ளியில் படிக்கின்றனர். கல்லூரி படிப்பு முடிந்ததும் காது சுத்தப்படுத்தும் வேலை செய்பவராக இல்லாமல் விற்பனையாளராக மகன்கள் வேலை பார்ப்பார்கள் என தந்தை நம்புகிறார். ஏனெனில், “இந்த வேலையில் மதிப்பு இல்லை. இந்த வேலை செய்பவருக்கும் மதிப்பு இல்லை,” என்கிறார் அவர்.
“கம்லா நகர் மார்க்கெட்டின் (தில்லி) சந்துகளில் எல்லா வர்க்க மக்களும் வாழ்கின்றனர். அவர்களை நான் (காதுகள் சுத்தப்படுத்தப்பட வேண்டுமா என) கேட்கும்போது, கோவிட் வந்து விடும் என பதில் கூறுவார்கள். தேவையென்றால் மருத்துவரிடம் சென்று கொள்வதாகவும் அவர்கள் கூறுவார்கள்,” என்கிறார் அமன்.
“வேறென்ன நான் அவர்களிடம் சொல்ல முடியும்? ‘சரி, உங்கள் காதை சுத்தப்படுத்திக் கொள்ளாதீர்கள், என சொல்வேன்’.”
*****
டிசம்பர் 2022-ல் அமன் விபத்தில் சிக்கினார். தில்லியின் ஆசாத்பூரில் ஒரு பைக் அவரை மோதி விட்டது. அவரது முகத்திலும் கைகளிலும் காயங்கள். வலது கையின் கட்டைவிரல் கடுமையாக காயமடைந்திருந்தது. காது சுத்தப்படுத்தும் வேலை அதனால் கடினமானது.
அதிர்ஷ்டவசமாக, காயங்களுக்கான மருந்துகள் உதவின. அவ்வப்போது காது சுத்தப்படுத்தும் வேலையை அவர் செய்கிறார். நிலையான வருமானத்துக்காக தில்லி விழாக்களில் பெரிய மேளம் வாசிக்கும் வேலை செய்யத் தொடங்கி விட்டார். ஒரு நிகழ்வுக்கு 500 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறார். அமனுக்கும் ஹீனாவுக்கும் ஒரு மாதத்துக்கு முன் ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. இன்னும் நல்ல வேலை தேட வேண்டும் என சொல்கிறார் அவர்.
தமிழில் : ராஜசங்கீதன்