‘காலே கனூன் கோ வாபஸ் லோ, வாபஸ் லோ, வாபஸ் லோ’ [‘இருண்ட சட்டங்களைத் திரும்பப் பெறுங்கள், திரும்பப் பெறுங்கள், திரும்பப் பெறுங்கள்!’]. குடியரசு தினத்திற்கு முந்தைய நாள் மாலை தெற்கு மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் இந்த கோஷங்கள் ஒலிக்கின்றன.
சம்யுக்தா ஷெட்கரி கம்கர் மோர்ச்சா ஏற்பாடு செய்த உள்ளிருப்புப் போராட்டத்தின் மைதானத்தில் பல்லாயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் உள்ளனர். டெல்லியின் எல்லையில் உள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக, நாசிக்கிலிருந்து இரண்டு நாட்களில் சுமார் 180 கிலோமீட்டர் தூரம் அணிவகுத்துச் சென்ற பின்னர் மகாராஷ்டிராவின் 21 மாவட்டங்களில் இருந்து அவர்கள் வந்துள்ளனர்.
இரண்டு மாதங்களுக்கும் மேலாக, பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியின் வாயில்களில் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 2020ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி மத்திய அரசு முதன்முதலில் அவசர சட்டமாக பிறப்பித்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக அவர்கள் போராடி வருகின்றனர், பின்னர் செப்டம்பர் 14 ஆம் தேதி பாராளுமன்றத்தில் வேளாண் மசோதாக்களாக அறிமுகப்படுத்தப்பட்டு, அந்த மாதம் 20ஆம் தேதிக்குள் சட்டங்களாக மாற விரைந்தனர்.
விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 , விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020 மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 ஆகியவையே விவசாயிகள் எதிர்க்கும் மூன்று சட்டங்கள். 2020 ஜூன் 5 அன்று அவை ஆணைகளாக்கப்பட்டு செப்டம்பர் 14 அன்று பாராளுமன்றத்தில் மசோதாக்களாக தாக்கல் செய்யப்பட்டு எதிர்ப்பையும் மீறி வேகவேகமாகாக அதே மாத 20ம் தேதி சட்டமாக்கப்பட்டிருக்கின்றன. மேலும் அரசியல் சாசனத்தின் 32ம் பிரிவு வழங்கும் குடிமக்களுக்கான சட்டரீதியான பாதுகாப்பு உரிமை யையும் இச்சட்டங்கள் பாதிப்பதாக விமர்சனம் எழுப்பப்படுகிறது.
ஜனவரி 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் ஆசாத் மைதானத்தில் நடந்த இந்த இரண்டு நாட்களின் போராட்டக் கூட்டத்தின் படங்கள் இவை:
தமிழில்: ஷோபனா ரூபகுமார்