யாரோ ஒருவர் தூரத்திலிருந்து அழைத்து இடைவேளை முடிந்து விட்டது என்றார். மேற்பார்வையாளர் அனைவருக்கும் பொறுப்புகளை கொடுத்தார். மீண்டும் வேலை தொடங்கியது. மைதானத்தின் ஓர் அமைதியான மூலை ஒரு சிறு கூடாரம் அமைக்க ராம் மோகனுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.
ஜனவரி 23ம் தேதி ஆகியிருந்தது. ராமுடன் சேர்த்து 50 பேர், பத்து மணி நேர வேலை இரண்டு நாட்களாக செய்து, ஜனவரி 24ம் தேதி காலையிலிருந்து வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராட இங்கு வரவிருக்கும் ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கான பந்தல் அமைத்துக் கொண்டிருந்தனர். ஊர்வலம் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று முடியவிருக்கிறது.
தெற்கு மும்பையின் ஆசாத் மைதானத்திலேயே தங்கியிருந்து போராடும் விவசாயிகளுடன் இணைய திட்டமிட்டிருக்கிறார் ராம் மோகன். “என்ன நடக்கிறது என்பதை கவனிக்க முயன்று கொண்டிருக்கிறேன். விவசாயிகள் என்ன சொல்கிறார்கள் என்பதை கேட்கவும் எங்களுக்கு அவர்களின் கோரிக்கைகளால் என்ன நன்மை விளையும் என்பதையும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்,” என்கிறார்.
உத்தரப்பிரதேச கிராமத்தில் வசிக்கும் அவரின் குடும்பம் கோதுமையையும் நெல்லையும் விளைவிக்கிறது. “6-7 பிகா (ஒரு ஏக்கருக்கும் சற்று அதிகம்) நிலத்தில் நாங்கள் என்ன செய்ய முடியும்? உயிர் வாழ போதுமானதாக இருக்கிறது. அவ்வளவுதான்,” என்கிறார் அவர். கூடாரங்கள் அமைத்துக் கொண்டிருக்கும் ஊர்வலம் அவருடைய குடும்பம் போன்ற எல்லா விவசாயக் குடும்பங்களும் விளைவிக்கும் பயிருக்கு நல்ல விலை கொண்டு வர உதவுமென நம்புகிறார்.
43 வயதாகும் ராம் மோகன் 23 வருடங்களாக மும்பையில் அன்றாடக் கூலி வேலை பார்க்கிறார். வடக்கு மும்பையில் இருக்கும் மலத் ரயில்வே நிலையமருகே கூலி வேலைக்கு காத்திருந்து வேலை பெறுகிறார். வேலை கிடைக்கும் நாட்களில் ஒரு நாளுக்கு 700 ரூபாய் சம்பாதிக்கிறார்.
2020 ஜூன் 5 அன்று ஆணைகளாக்கப்பட்டு செப்டம்பர் 14 அன்று பாராளுமன்றத்தில் மசோதாக்களாக தாக்கல் செய்யப்பட்டு எதிர்ப்பையும் மீறி வேகவேகமாகாக அம்மாத 20ம் தேதி சட்டமான மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கின்றனர். விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020 , விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 ஆகியவை மூன்று வேளாண் சட்டங்கள் ஆகும்.
மூன்று சட்டங்களும் தங்களின் வாழ்வாதாரங்களை அழிக்கவும் பெருவணிக நிறுவனங்கள் விவசாயம் மற்றும் விவசாயிகள் மீது பெரும் அதிகாரம் கொள்ளவும் வாய்ப்பு வழங்குவதாக விவசாயிகள் நினைக்கின்றனர். விவசாயிக்கு முக்கிய ஆதாரங்களாக இருக்கும் குறைந்தபட்ச ஆதார விலை, வேளாண்பொருள் சந்தைப்படுத்தும் குழு, அரசு கொள்முதல் ஆகிய விஷயங்களை இந்த சட்டங்கள் மட்டுப்படுத்துகின்றன. மேலும் அரசியல் சாசனத்தின் 32ம் பிரிவு வழங்கும் குடிமக்களுக்கான சட்டரீதியான பாதுகாப்பு உரிமை யையும் இச்சட்டங்கள் பாதிப்பதாக விமர்சனம் எழுப்பப்படுகிறது.
ஆசாத் மைதானத்தில் போராட்டக்காரர்கள் வந்து சேரும் வரை தேவேந்தர் சிங்குக்கும் வேலை இருந்தது. மேடைக்கு அலங்கார வேலைகளை செய்பவர்களில் அவரும் ஒருவர். கிட்டத்தட்ட 3000 மூங்கில்களும் 4000 மீட்டர் துணியும் எண்ணற்ற சணல் கயிறு கட்டுகளும் ஊர்வலத்துக்கான கூடாரங்கள் அமைக்க தேவைப்படும் என்கிறார் அவர்.
தேவேந்திராவின் குடும்பத்தில் அவரின் பெற்றோரும் மனைவியும் மூன்று குழந்தைகளும் இருக்கின்றனர். ராஜதோலா கிராமத்தில் அவர்களுக்கு இருக்கும் மூன்று பிகா நிலத்தில் கோதுமை, நெல் மற்றும் சோளம் விளைவிக்கிறார்கள். 2003ம் ஆண்டு வேலை தேடி மும்பைக்கு வந்தார். “எல்லா வேலைகளும் செய்திருக்கிறேன். ஆனால் இந்த வேலைதான் பிடித்திருக்கிறது,” என்கிறார் அவர்.
“வேறெங்கும் வேலை பார்த்தால், ஒரு மாதம் முடிந்தே ஊதியம் கிடைக்கும். ஒருவேளை வீட்டில் ஒரு பிரச்சினை என்றாலும் உடனே உங்களுக்கு பணம் தேவைப்படுகிறது என்றாலும், இந்த வேலையில் அடுத்த நாளே என்னால் பணம் அனுப்பிவிட முடியும்,” என அன்றாடம் ரொக்கமாக கிடைத்துவிடும் 500 ரூபாய் குறித்து சொல்கிறார்.
தொழிலாளர்களுக்கான உணவு இடைவேளை விடப்பட்டிருக்கிறது. 1லிருந்து 2 மணி வரையிலான ஒரு மணி நேர இடைவெளியில் சிவப்பு மற்றும் கறுப்பி நிற துணியில் பாதி கட்டிமுடிக்கப்பட்ட ஒரு கூடாரத்துக்கு அடியில் அவர் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். இடைவேளை முடிந்ததும் வேலைகள் செய்யப்பட்டு அது பந்தலாக மாறி விடும். அவருக்கு அருகே அமர்ந்திருக்கும் 20 வயது ப்ரிஜேஷ் குமார் லஷ்மண்பூர் கிராமத்தை சேர்ந்தவர். 16 வயதில் மும்பையில் வேலை பார்க்கத் தொடங்கியவர் தற்போது நாட்கூலியாக 500 ரூபாய் வாங்குகிறார். மாதத்தில் 20 நாட்களுக்கு வேலை இருந்துவிடுகிறது. “எந்த வேலை கிடைத்தாலும் நாங்கள் செய்து விடுகிறோம்,” என்கிறார் ப்ரிஜேஷ். பந்தல் கட்ட எங்கே கற்றுக் கொண்டார்? “எங்களுக்கு முன் வந்தவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என தெரியும்,” என்கிறார் அவர். “அவர்களுடன் நாங்கள் வேலை பார்த்தோம். எப்படி கட்டுவது, ஏறுவது என அவர்கள் எங்களுக்கு கற்றுக் கொடுத்தார்கள். கிராமத்திலிருந்து வேறு எவரும் வந்தால் அவர்களையும் நாங்கள் கூட்டிக் கொள்வோம்.”
கூடாரங்களுக்கான மூங்கில் சாரம் 18லிருந்து 20 அடி வரை உயரம் கொண்டிருக்கிறது. இரண்டு நாட்களாக காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணி வரை எந்தவித பாதுகாப்புமின்றி தொழிலாளர்கள் அதில் ஏறி வேலை பார்க்கிறார்கள். ஜனவரி 22ம் தேதி சூரிய அஸ்தமனத்துக்கு பிறகு அவர்கள் சிறு விளக்கின் வெளிச்சத்தில் வேலை பார்த்தார்கள். அதில் தேவேந்திரா மூங்கில் சரியாக ஒரே உயரத்தில் கட்டப்பட்டிருக்கிறதா என கூர்ந்து பரிசோதித்துக் கொண்டிருந்தார்.
மும்பையில் மம்ட்டுமே அவர்கள் வேலை பார்ப்பதாக சொல்கிறார். மழைகளுக்கு முன் உணவகங்கள் மற்றும் பிற கட்டடங்களின் கூரைகளை மூட அழைக்கப்பட்டபோது 30லிருந்து 80 அடி உயரம் வரை ஏறி அவர்கள் வேலை செய்திருக்கிறார்கள். “புதிதாய் வருபவருக்கு மூங்கில் எடுத்துக் கொடுக்கும் வேலை கொடுப்போம். பிறகு மெல்ல கீழ்ப்பகுதியில் இருக்கும் மூங்கில்களை கட்ட பழக்கப்படுத்துவோம். பிறகு மேலே ஏற வைப்போம்,” என்கிறார் தேவேந்திரா புன்னகையுடன்.
“இங்கு நாங்கள் கூலி வேலை செய்யவில்லையெனில் எங்களின் ஊரில் நாங்கள் விவசாயம் பார்க்க முடியாது,” என்கிறார் ராம் மோகன். “உரம், விதை மற்றும் பிற பொருட்களை வாங்க எங்களுக்கு பணம் வேண்டும். அந்த பணத்தை கூட விவசாயம் தருவதில்லை. ஆகவேதான் இங்கு (மும்பை) நாங்கள் வேலை பார்க்கிறோம்.”
ஜனவரி 24ல் ஆசாத் மைதானத்தில் தொடங்கவிருக்கும் ஊர்வலத்தில் பங்குபெறுவதற்காக ராம் மோகன் அங்கேயே தங்கிவிட திட்டமிடுகிறார். பிறர் வடக்கு மும்பையில் இருக்கும் தங்களின் வாடகை அறைகளுக்கு திரும்புவார்கள். “நான் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. எனக்கு விவசாயச் சட்டங்களை பற்றி அதிகம் தெரியாது. வேலை பார்க்கிறேன். சம்பாதிக்கிறேன். அவ்வளவுதான்,” என்கிறார் பரஸ்பூர் கிராமத்தை சேர்ந்த 26 வயது சாந்த்ராமன். அவரின் குடும்பத்துக்கு என சொந்தமாக நிலம் இல்லை.
“வேலைக்கே எங்களின் நேரம் சரியாக இருக்கிறது,” என்கிறார் ப்ரிஜேஷ். இங்கு வேலை முடிந்தபிறகு வேறெங்காவது வேலைக்கு செல்வோம். பலர் இந்த போராட்டங்களில் கலந்து கொள்கின்றனர். ஆனால் நாங்கள் வேலை பார்க்கவில்லை எனில், எப்படி சாப்பிடுவது?”
தமிழில்: ராஜசங்கீதன்