நவுகர் ஹோ யா மாலிக், லீடர் ஹோ யா பப்ளிக்
அப்னி ஆகே சபி ஜூகே ஹைன், கியா ராஜா கியா சைனிக்'
(‘தொழிலாளியோ, முதலாளியோ, தலைவரோ, மக்களோ,
மன்னரோ, வீரரோ எவராக இருந்தாலும் என் முன்னால் தலைகுனிய வேண்டும்.’)
1957ஆம் ஆண்டு வெளியான பியாசா திரைப்படத்தில் வரும் ‘தேல் மாலிஷ்‘ என்ற சாஹிர் லுதைன்வியின் அற்புதமான வரிகளில் இடம்பெற்ற பாடலின் ஒரு பகுதி இது. ஒதுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட முடிதிருத்துநர் சமூகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் எழுதப்பட்ட வரிகள்.
ஊரடங்கு காலத்தில் லத்தூர் மாவட்டம், மகாராஷ்டிரா மட்டுமின்றி நாடெங்கிலும் அவர்களுடைய தற்போதைய நிலைமை சொல்வதற்கில்லை. அன்றாட வருமானத்தை நம்பி வாழும் பலருக்கும் இது பேரிடி தான். அதுவும் அவர்களுக்கு வாடிக்கையாளரிடம் தனிநபர் விலகல் என்பது சாத்தியமற்றது.
“இந்த ஊரடங்கு எங்கள் வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த 10-15 நாட்களுக்கு எப்படி என் குடும்பத்திற்கு உணவளிக்க போகிறேன் எனத் தெரியவில்லை“ என்கிறார் 40 வயதாகும் உத்தம் சூரியவன்ஷி, (கவர் போட்டோவின் மேல் வரிசையில் இடது புறத்தில் தனது மருமகன் ஆருஷூடன் உள்ளவர்). லத்தூர் நகரத்தில் இருந்து 11 கிலோமீட்டர் தூரத்தில் சுமார் 6000 பேர் வசிக்கும் கங்காபூர் கிராமத்தில் முடிதிருத்துநராக உள்ளார்.
“எங்க கிராமத்தில் மொத்தம் 12 குடும்பங்கள் இந்த தொழிலைத் தான் நம்பி இருக்கிறோம். வருமானம் இல்லாவிட்டால் உணவு கிடையாது“ என்கிறார் ஊரடங்கின் கோரமுகத்தை விளக்கும் உத்தம். அவரது சலூன் கடையில் மூன்று நாற்காலிகள் உள்ளன. அவரது சகோதரர்களான 36 வயது ஷியாமும், 31 வயது கிருஷ்ணாவும் சேர்ந்து வாடிக்கையாளர்களுக்கு முடிதிருத்தம் செய்கின்றனர் (கவர் போட்டோவின் மேல்புறத்தில் நடுவிலும், வலது பக்கமும் இருப்பவர்கள்). இந்த சூரியவன்ஷி ஹேர் சலூனில் முடிதிருத்தம் செய்ய ரூ.50, ஷேவிங் செய்ய ரூ.30, தலைக்கு மசாஜ் செய்வதற்கு ரூ.10, ஃபேசியல் செய்வதற்கு ரூ.50 என வசூலிக்கின்றனர். மார்ச் 25ஆம் தேதி ஊரடங்கு தொடங்கும் வரை இந்த மூன்று சகோதரர்களும் தினமும் தலா ரூ.300-400 வரை வருவாய் ஈட்டி வந்தனர்.
வேலையிழப்பு ஏற்பட்டுள்ள இச்சமயத்தில் நான்கு பேர் கொண்ட தனது குடும்பத்திற்கு உணவளிப்பது என்பது உத்தம் போன்றோருக்கு மிகப்பெரும் சவால். சலூனுக்கு அதிக தேவையுள்ள இதுபோன்ற நேரத்தில் ஊரடங்கை அமல்படுத்தையதை விட வேறு வேதனையளிக்க முடியுமா?“ என்கிறார் உத்தம். கோடைக் காலம் என்பது திருமண காலம், அப்போது தான் முடித்திருத்துநர்களுக்கு நிறைய வாய்ப்பு கிடைக்கும், பலரும் கடன் பிடியில் இருந்து மீளுவார்கள்” என்கிறார்.
“2018ஆம் ஆண்டு எங்கள் பகுதியில் பஞ்சம் ஏற்பட்ட பிறகு இச்சேவைக்கு கூடுதல் கட்டணம் கூட வசூலிக்க முடிவதில்லை“ என்கிறார் லத்தூர் மாவட்ட கேஷ்கர்தானலை சங்கடனா (சலூன் யூனியன்களின் சங்கம்) தலைவர் பாசாஹேப் ஷிந்திரி. “எங்களில் 80 சதவீதம் பேரிடம் நிலமோ, வீடோ கிடையாது“ என்று சொல்லும் அவர், “இந்த நேரம் பார்த்து, வீட்டு வாடகை, கடை வாடகை ஆகியவற்றை 15 சதவீதம் உயர்த்தியுள்ளனர். விலைவாசியும் ஏறிவிட்டது, வருமானம் மட்டும் பாதாளத்தில் கிடக்கிறது, இழப்புகள் நிச்சயம், வாழ்வாதாரம் மட்டும் நிச்சயமற்றதாக உள்ளது“ என்கிறார்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் பிற பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் முடிதிருத்துநர்களை இணைக்கும் மாநில நாபிக் மகாமண்டல் கூட்டமைப்பின் அங்கீகாரம் பெற்றது ஷிந்திரேயின் சங்கம். மகாராஷ்டிராவில் மட்டும் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட முடிதிருத்துநர்கள் உள்ளதாக சொல்கிறார் மகாமண்டல் தலைவர் கல்யாண் டாலே. எனினும் இவற்றை உறுதி செய்ய நம்மிடம் அதிகாரப்பூர்வ தரவுகள் எதுவுமில்லை. ஆனால் தோராயமாக கணக்கெடுத்தால் கூட பல லட்சங்களை தாண்டுகிறது.
மாவட்டத்தில் மொத்தமுள்ள 6000 சலூன்களில் லத்தூர் நகரத்தில் மட்டுமே 800 உள்ளன. கிட்டதட்ட 20,000 பேர் இங்கு பணியாற்றுகின்றனர். ஒவ்வொரு சலூனிலும் சராசரியாக 3-4 நாற்காலிகள் இருக்கும் என்றும், இவை தினமும் ரூ. 400-500 வரை வருவாய் ஈட்டி தரும் என்கிறது முடிதிருத்துநர் சங்கம். அதாவது இச்சங்கத்தினர் மட்டுமே அன்றாடம் ரூ. 12-13 லட்சம் வரை வருவாய் ஈட்டுகின்றனர்.
மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள 5,200 சலூன்களில் சராசரியாக 2-3 இருக்கைகள் உள்ளன. அவை தினமும் தலா ரூ. 200-300 வரை வருவாய் ஈட்டி தருகின்றன. அன்றாடம் ரூ. 47 லட்சம் வரை பணம் புரளும் தொழிலாக இது உள்ளது.
அனைத்து சலூன்களும் 21 நாட்கள் அடைக்கப்பட்டுள்ளதால் லத்தூர் மாவட்டத்தில் மட்டும் ரூ. 12.5 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு இந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முடிதிருத்துநர்கள் அன்றாட வருமானத்தையே சார்ந்துள்ளவர்கள், ஊரடங்கு, வாழ்வாதாரத்திற்கே அச்சுறுத்தலாக உள்ளது
”எங்கள் சங்கத்தில் உள்ள முடிதிருத்தநர்களுக்கு ஒருவேளை உணவு கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது” என்கிறார் ஷிந்திரே. ”நாங்கள் ரூ. 50,000 வரை நிதி திரட்டி மாவட்டத்தில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள 50 குடும்பங்களுக்கு ரூ. 1000 மதிப்பிலான உணவுப் பொருட்களை அளித்துள்ளோம். 10 கிலோ கோதுமை, ஐந்து கிலோ அரிசி, தலா ஒரு கிலோ துவரம் பருப்பு, சர்க்கரை, கடலை, ஒரு டெட்டால் சோப் கொடுத்துள்ளோம். அரசு அறிவித்துள்ள மூன்று மாதங்களுக்கான இலவச ரேஷன் பொருட்களை மட்டுமே நம்பி எங்களால் இருக்க முடியாது” என்கிறார் ஷிந்திரே.
அன்றாட வருமானத்தை நம்பி தான் முடிதிருத்துநர்கள் உள்ளனர். வாடிக்கையாளர்களின் வருகையை பொருத்து தான் அன்றாட வருமானம். இளம் தலைமுறையினர்களின் தேவைக்கேற்ப குறைந்த செலவில் முடிதிருத்தம் செய்து ஒரு கலைஞனாகவும் மாறுகின்றனர். யாருக்கும் சேமிப்பு என்பது கிடையாது, ஆனால் கடன் மட்டும் பலருக்கும் உள்ளது.
இப்போது இந்த ஊரடங்கினால் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. இவர்கள் கடன் பெறுவதற்கு இரு வாய்ப்புகள் தான் உள்ளன: ‘புதிதாக‘ முளைத்துள்ள நிதி நிறுவனங்கள் ஆண்டிற்கு 15 சதவீதம் வட்டியுடன் (ஆனால் அவர்கள் சொல்லும் இலக்கைவிட கடன் சுமை அதிகமாகிறது) கடன் அளிக்கின்றன. அல்லது தனியாக வட்டிக்கு விடுபவர்கள் மாதத்திற்கு 3 முதல் 5 சதவீதம் வட்டி பெற்று கொண்டு கடன் தருகின்றனர்.
லத்தூர் நகரத்தின் புறநகரில் வசிக்கும் முடிதிருத்துநர் சுதாகர் சூர்யவன்ஷி கடன் சுமையில் உள்ளார். “என் வருமானத்தில் பெருமளவு பங்கு என் குழந்தைகளின் படிப்பு செலவிற்கு போய்விடுகிறது“ என்கிறார் அவர். (ஊரடங்கிற்கு முன் அவர் தினமும் ரூ. 300 வருவாய் ஈட்டினார்). இந்த ஜனவரி மாதம் பிள்ளைகளின் படிப்பு செலவிற்காக மாதம் 3 சதவீதம் வட்டியில் ரூ. 1 லட்சம் கடன் பெற்றுள்ளார். மார்ச் மாதம் முதல் தவணையாக ரூ. 3,000 செலுத்தி இருந்தார். எனினும் அவரது பிரச்சனை ஏற்கனவே தொடங்கிவிட்டது.
“2019ஆம் ஆண்டு எனது ஜன் தன் வங்கி கணக்கு நீக்கப்பட்டு விட்டதாக தொலைபேசி வழியாக வங்கியிலிருந்து தெரிவித்தனர். “ இது இரு வகைகளில் முரணானது. ஒன்று: பான் அட்டை, ஆதார், ஆரஞ்சு நிற ரேஷன் அட்டை என அவர்கள் கேட்ட அனைத்து ஆவணங்களையும் அவர் சமர்ப்பித்துவிட்டார். இரண்டு: இந்த வங்கி கணக்கின் மூலம் அவருக்கு ஒருமுறை கூட பணம் வரவில்லை. மகாராஷ்டிராவின் நகர்புறத்தில் வசிப்போரின் ஆண்டு வருமானம் ரூ. 59,000 முதல் ரூ. 1 லட்சம் என இருந்தால் ஆரஞ்சு நிற ரேஷன் அட்டை அளிக்கப்படும். அவருக்கு அளிக்கப்பட்டது பிரதான்யா குடும்ப் (முன்னுரிமை பெறும் குடும்பம்) என முத்திரையிடப்பட்ட ரேஷன் அட்டை. இதன் மூலம் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவர் பலன்களையும் பெறலாம்.
“என்னிடம் அந்த ரேஷன் அட்டை தான் உள்ளது. ஆனால் இம்மாதம் எதுவும் கிடைக்கவில்லை. எப்போது சரக்கு வரும் என்று தெரியாது என மளிகைக் கடைக்காரரும் கைவிரித்து விட்டதாக“ சுதாகர் வருந்துகிறார். இப்போதைய சூழலில் எப்படி வாடகையை செலுத்துவது என தெரியாமல் தவிக்கிறார். இந்தாண்டு ஜனவரி மாதம் மாத வாடகையை ரூ. 2,500லிருந்து ரூ. 3,000 என வீட்டு உரிமையாளர் உயர்த்தியுள்ளார். இது சுமையை மேலும் கூட்டியுள்ளது.
ஊடகங்களில் வரும் கரோனா விழிப்புணர்வு தகவல்களை அவர் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை. எங்களுக்கு ஒருவேளை உணவு என்பதே போராட்டம் தான், இதில் எங்கிருந்து கை கழுவ சானிடைசர், முக கவசம் எல்லாம் வாங்குவது?
“ எங்களுக்கு நெருக்கடி என்பது தொடர்கதை. நேற்று, இன்று, நாளை.”
கவர் போட்டோ: குமார் சூர்யவன்ஷி
தமிழில்: சவிதா