“சில நாட்களுக்கு முன் என் கால்களை சுற்றிய கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று என்னை கொத்த தயாரானது. நல்ல வேலையாக நான் பார்த்துவிட்டேன்,” என்கிறார் மகாராஷ்டிராவின் கொல்ஹாப்பூர் மாவட்டம் ஷெந்துர் கிராம விவசாயியான தத்தாத்ரே கசோட்டி. இரவு நேரத்தில் வயலில் அவர் நீர்ப்பாசனம் செய்து கொண்டிருந்தபோது, அந்த பாம்பு வந்துள்ளது.
கர்விர், காகல் தாலுகாக்களைச் சேர்ந்த கசோட்டி போன்ற விவசாயிகள், தடைப்படும், நிச்சயமில்லாத, நம்பமுடியாத மின்விநியோகத்தால் இரவு நேரங்களில் குழாய்கள் மூலம் நீர்ப்பாசனம் செய்கின்றனர்.
மின்விநியோகம் எப்போது தடைபடும் என்று தெரியாது: மின்சாரம் இரவில் வரும் அல்லது பகலில் எவ்வளவு நேரம் நீடிக்கும் எனத் தெரியாது. சில சயமங்களில் கட்டாயம் எட்டு மணி நேர மின்வெட்டும், மின் தட்டுப்பாடும் நிலவும்.
இதன் விளைவாக, அதிகளவு நீர் தேவைப்படும் கரும்பு பயிர்கள் நீர்ப்பாசனமின்றி சேதமடைந்துள்ளன. நிராதரவாக நிற்பதாக கூறும் விவசாயிகள், தங்கள் பிள்ளைகள் விவசாயத் தொழிலை வாழ்வாதாரமாக தேர்வு செய்ய வேண்டாம் என்கின்றனர். இளைஞர்களும் அருகாமையில் இருக்கும் மகாராஷ்டிரா தொழில் வளர்ச்சி நிறுவனத்தில் (MIDC) ரூ.7000-8000 மாத சம்பளத்திற்கு வேலைக்கு செல்கின்றனர்.
“அதிக உடலுழைப்பு, பல சிரமங்களை தாண்டி விவசாயம் செய்தாலும் நல்ல விளைச்சல் கிடைப்பதில்லை. ஏதேனும் தொழிற்சாலையில் நல்ல சம்பளத்திற்கு வேலைக்கு செல்வது நல்லது என தோன்றுகிறது,” என்கிறார் கர்விரின் இளம் விவசாயி ஸ்ரீகாந்த் சவான்.
கொல்ஹாப்பூர் விவசாயிகள் மீதான மின்தட்டுப்பாட்டின் தாக்கம் குறித்த குறும்படம்.
தமிழில்: சவிதா