பல ஆண்டுகளாக பகபான்பூரைச் சேர்ந்த ஆண்கள் உத்தர்காண்ட் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் உள்ள மின் திட்டங்களில் பணியாற்றுவதற்காக புலம் பெயர்ந்து வருகின்றனர். 53 வயதாகும் அக்கிமுதீன், 25 ஆண்டுகளுக்கு முன்பு லைன் மேன் ஆக பணியாற்றுவதற்காக முதல் முதலில் அங்கு சென்றார். "நான் இமாச்சலப் பிரதேசத்தில் இருந்தேன். நாள் ஒன்றுக்கு இரண்டரை ரூபாய் ஆரம்பத்தில் எனக்கு சம்பளமாக கிடைத்தது", என்று கூறினார். எங்களால் என்ன சம்பாதிக்க முடியுமோ அதை சம்பாதித்து எங்களுக்கு கொஞ்சம் வைத்துவிட்டு மீதமுள்ளதை வீடுகளுக்கு அனுப்பினோம் அதன் மூலம் எங்களது குடும்பமும் பிழைக்க முடிந்தது என்று கூறினார். இவரது தலைமுறையை சேர்ந்த பணியாளர்களால்
இப்போது அனஸ் மற்றும் அக்ரம் ஆகியோருக்கு இவர்களது அடிச்சுவட்டை பின்பற்றுவது எளிதாகிவிட்டது.
ஆனால் அவர்களின் பணி ஆபத்தாக இருந்தது. அக்ரம் தனது சக ஊழியர்கள் பலர் மின்சாரம் தாக்கி காயம் ஏற்படுவது அல்லது இறந்து போவதையோ கூட கண்டிருக்கிறார். "இது பயமாக இருக்கிறது. எங்களுக்கு போதுமான பாதுகாப்பு இல்லை. எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்", என்று கூறினார். உதாரணமாக சுற்றுச்சூழல் பேரழிவு காரணமாக தனது சகோதரர் அடித்துச் செல்லப்பட்டதை போல் (அடித்துச்செல்லப்பட்ட அனஸின் உடல் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை). ஆனால் எங்களுக்கு வேறு வழி இல்லை. உயிர்பிழைக்க நாங்கள் சம்பாதிக்க வேண்டி உள்ளது. மால்டவில் எந்த வேலையும் கிடைப்பதில்லை. அதனால் அங்கிருந்து நாங்கள் புலம்பெயர்ந்தாக வேண்டியிருக்கிறது", என்று கூறினார்.
நாட்டின் மிகவும் வறிய மாவட்டங்களில் ஒன்றாக மால்டாவும் இருக்கிறது. அதன் கிராமப்புற மக்களில் பெரும்பகுதியினர் நிலமற்றவர்களாகவும், சம்பளத்தை சார்ந்திருப்பவர்களாகவும் இருக்கின்றனர். "விவசாயம் தான் வேலை வாய்ப்பிற்கான பிரதான மூலமாக இம்மாவட்டத்தில் இருக்கிறது", என்று மால்டாவில் இருக்கும் மூத்த பத்திரிகையாளரான சுப்ரோ மைத்ரா கூறுகிறார். "ஆனால் பெரும்பாலானவர்கள் குறுநிலங்களைத் தான் வைத்திருக்கின்றனர். அதிலும் பெரும்பாலானவை தொடர்ந்து ஏற்படும் வெள்ளத்தால் மூழ்கிவிடுகிறது. எனவே அது விவசாயிகளுக்கும் விவசாயக் கூலிகளுக்கும் பயன்படவில்லை". இம்மாவட்டத்தில் எந்த தொழில் நிறுவனமும் இல்லை. எனவே மக்கள் மாநிலத்திற்கு வெளியே வேலைக்கு செல்கின்றனர் என்று அவர் கூறினார்.
2007 ஆம் ஆண்டு மேற்கு வங்க அரசு வெளியிட்ட மாவட்ட மனிதவள மேம்பாட்டு அறிக்கையில் மால்டாவிலிருந்து
தொழிலாளர்கள் புலம்பெயர்வதற்கான காரணங்களை சுட்டிக்காட்டுகிறது. நீர் வளத்தின் சீரற்ற வினியோகம் மற்றும் சாதகமற்ற வேளாண் காலநிலை ஆகிய நிலைமைகள் மாவட்டத்தில் விவசாயத் தொழிலாளர்களை மோசமாக பாதிக்கிறது என்று அவ்வறிக்கை கூறுகிறது. மெதுவான நகரமயமாக்கல் தொழில்துறை நடவடிக்கைகள் போதுமான அளவில் இல்லாமல் இருப்பது மற்றும் விவசாய பருவங்களில் மட்டுமே கிராமப்புறத்தில் வேலைகள் இருப்பதால் குறைந்த அளவிலான ஊதியம் ஆகியவை விளிம்புநிலை தொழிலாளர்களை வேலை தேடி வெகு தூரம் செல்ல வேண்டிய கட்டாயத்தில் ஆழ்த்துகிறது என்று அவ்அறிக்கை குறிப்பிடுகிறது.
ஏப்ரல் முதல்வாரத்தில் நாட்டில் covid-19 தொற்று அதிகரித்த போதிலும், 37 வயதாகும் நீரஜ் மொண்டல் தில்லியில் வேலைதேடி மால்டாவில் இருந்து புறப்பட்டார். அவர் தனது மனைவி மற்றும் இரண்டு பதின்பருவ குழந்தைகளை மால்டாவின் மாணிக்சக் வட்டத்திலுள்ள பூடானி தைராவில் (நதி தீவு) இருக்கும் வீட்டில் விட்டுவிட்டு செல்கிறார். "நீங்கள் முகக்கவசம் அணிந்து கொண்டு, வாழ்க்கையைத் தொடருங்கள்", என்று அவர் கூறுகிறார். (2020ன்) ஊரடங்குக்குப் பின்னர் ஏதாவது ஒரு வேலை கிடைப்பது கூட சிரமமாக இருக்கிறது. நாங்கள் அரசாங்கம் கொடுத்ததை வைத்து சமாளித்து வந்தோம் ஆனால் கையில் பணம் இல்லை. எப்படியும் சில வேலைகள் தான் இருக்கிறது", என்று கூறினார்.
மால்டாவில் தினக்கூலியாக 200 ரூபாய் சம்பாதித்து வரும் நீரஜ் தான் தில்லிக்கு சென்றால் நாளொன்றுக்கு 500 முதல் 550 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும் என்று கூறுகிறார். உங்களால் அதிகம் சேமிக்கவும் முடியும் வீட்டிற்கும் அனுப்பவும் முடியும் என்று கூறுகிறார். "நிச்சயம் எனது குடும்பத்தினரை நான் பிரிந்து வாடுவேன். யாரும் வீட்டைவிட்டு விரும்பி வெளியேறுவதில்லை", என்று கூறினார்.