“பள்ளிக்குச்செல்ல வேண்டும். பள்ளிக்குச்செல்ல வேண்டும்”
பிரதீக் இதை மீண்டும் மீண்டும் கூறுகிறார். அங்கு இல்லாத உடன் படிக்கும் நண்பரை அழைத்து அவர் இவ்வாறு கூறுகிறார். அவரது ஒரு அறைகொண்ட மண் குடிசையின் வாசலில் அமர்ந்துகொண்டு, அருகில் சிரித்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் அமர்ந்திருக்கும் குழந்தைகளை பார்த்துக்கொண்டிருக்கிறார். காலை முதல் மாலை வரை அவர் அங்கேயே அமர்ந்துகொண்டோ அல்லது நின்றுகொண்டோ அல்லது முற்றத்தில் உள்ள மரத்தின் மீது சாய்ந்துகொண்டு நின்றோ தனது உலகத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். கிட்டத்தட்ட 11 மாதங்களாக அரிதாகவே அவர் வாயில்படியை கடந்து முற்றம் மற்றும் மாட்டுக்கொட்டகைக்கு வருகிறார்.
கிராமத்தில் உள்ள மற்றொரு குழந்தை ரஷின், பிரதீக்குடன் விளையாடுவதில்லை. “இங்குள்ள குழந்தைகளுக்கு அவன் சொல்வது புரிவதில்லை. அதனால் அவன் தனியாக இருக்கிறான்“ என்று அவரது 32 வயது தாய் ஷாரதா ராவுட் நம்மிடம் விளக்குகிறார். கிராமத்தில் உள்ள மற்ற குழந்தைகளைவிட, பிரதீக்கீன் ஆரம்பகால நடவடிக்கைகள் வித்யாசமாக இருந்ததை அவர் கண்டுபிடித்தார். அவரது மூத்த குழந்தையிலிருந்தும் மாறுபட்டதை உணர்ந்தார். குழந்தையால் சரியாக உச்சரிக்க முடியவில்லை. 10 வயது வரை தன்னை தானாகவும் பராமரித்துக்கொள்ள முடியவில்லை.
அவருக்கு 8 வயது இருக்கும்போது, அவர் சிறப்பு குழந்தையாக, அரசு நடத்தும் ஸ்ரீ சத்ரபதி சிவாஜி மஹாராஜ் ரங்னலே மருத்துவமனையில் கண்டறியப்பட்டார். அம்மருத்துவமனை, அகமது நகர் மாவட்டம் கர்ஜத் தாலுகாவில் உள்ள அவர்களின் கிராமத்தில் இருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. “அவருக்கு தற்போது 10 வயதாகிவிட்டது. இப்போதும் கூட அவரால் சரியாக பேசமுடியாது“ என்று ஷாரதா நினைவு கூறுகிறார். “அவர் பள்ளி செல்ல துவங்கியவுடன், என்னை அம்மா என்று அழைக்கத்துவங்கிவிட்டார். கழிவறைக்கு தானாக செல்கிறார். தானாகவே குளித்துக்கொள்கிறார். பள்ளி எனது குழந்தைக்கு மிக முக்கியமான ஒன்று. சில எழுத்துக்களை அவர் கற்றுக்கொண்டுள்ளார். அது தொடர்ந்தால், அவர் தன்னை வளர்த்துக்கொள்ள முடியும். ஆனால் இந்த தொற்று காரணமாக அவர் தொடர்ந்து பள்ளி செல்ல முடியவில்லை“ என்று ஷாரதா வருந்துகிறார்.
2020ம் ஆண்டு மார்ச் மாதம் கோவிட்-19 தொற்று காரணமாக அவரது பள்ளி மூடப்பட்டது. அந்தப்பள்ளியில் பயின்ற 25 சிறப்பு குழந்தைகளில் அவரும் ஒருவர். அவர்கள் அனைவரும் ஆண் குழந்தைகள். அவர்கள் 6 முதல் 18 வயதுடையவர்கள். அதனால் அங்கு தங்கி படித்து வந்தவர்கள் அனைவரும் அவரவர் வீடுகளுக்கு திரும்ப அனுப்பி வைக்கப்பட்டனர்.











