12 வயதாகும் தம்பி ஷங்கர் லால், அருகே இருக்கும் வேப்பமரத்துக்கு தன் சைக்கிளில் கடைசி சுற்று ஓட்டி விட்டு வருவதற்காக ஃபூல்வதியா காத்துக் கொண்டிருக்கிறார். “நான் கொஞ்ச நேரம் வெளியே போய்விட்டு உடனே வந்துடுவேன்,” என்கிறார் 16 வயதான ஃபூல்வதியா. “நாளையிலிருந்து ஐந்து நாட்களுக்கு என்னால் சைக்கிள் ஓட்ட முடியாது. துணியை பயன்படுத்தும்போது கொஞ்சம் ஆபத்து நிறைந்ததாக மாறிவிடுகிறது,” என சாலையோரத்தில் நாய் ஒன்றை கொஞ்சியபடி சொல்கிறார்.
தனக்கான மாதவிடாய் சுழற்சி நாளையிலிருந்து தொடங்குமென எதிர்பார்க்கிறார் ஃபூல்வதியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இதற்கு முன்னிருந்ததை போல், இப்போது அவருக்கு இலவச மாதவிடாய் நேப்கின்கள் பள்ளியிலிருந்து கிடைக்காது. “மாதவிடாய் தொடங்கியதும் எங்களுக்கான நேப்கின்களை பள்ளிகளிலேயே பெற்றுக் கொள்வோம். ஆனால் இப்போது துணியைத்தான் நான் பயன்படுத்த முடியும்.”
சித்ரக்கூட் மாவட்டத்தில் இருக்கும் அவரின் பள்ளிக்கூடம் நாட்டின் பிற பள்ளிக்கூடங்களை போல் கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டிருக்கிறது.
கர்வி தாலுகாவில் உள்ள தரூகா கிராமத்தில் சோனெப்பூர் என்கிற குக்கிராமத்தில் தன் பெற்றோருடனும் இரண்டு சகோதரர்களுடனும் ஃபூல்வதியா வாழ்ந்து வருகிறார். அவரின் இரண்டு சகோதரிகள் வேறு ஊர்களில் மணம் முடித்து கொடுக்கப்பட்டுள்ளனர். பத்தாம் வகுப்பு முடித்து பத்து நாள் விடுமுறையில் இருந்து பள்ளிக்கு செல்ல காத்திருந்தார். மார்ச் 24ம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டுவிட்டது. கர்வி ஒன்றியத்தில் இருக்கும் ராஜ்கியா பலிகா பள்ளியில் அவர் படிக்கிறார்.
”எதற்கும் பயன்படுத்தப்படாத துணியை தேடியெடுத்து நான் பயன்படுத்திக் கொள்வேன். இரண்டாம் தடவை பயன்படுத்தும்போது துணியை நன்றாக துவைத்துவிடுவேன்,” என்கிறார் ஃபூல்வதியா. அவரின் கால் விரல்களை அலங்கரித்த நகப்பூச்சில் தூசின் கோடு இருந்தது. அநேகமாக வெறுங்காலில் நடந்ததால் ஏற்பட்டிருக்கலாம்.








