“இரண்டு கூட்டல் இரண்டு - எவ்வளவு? பிரதீக், எப்படி நாம் கூட்டல் கணக்குகள் செய்தோம் என நினைவிருக்கிறதா?”
பிரதீக் ரவுத்தின் ஆசிரியரான மோகன் தலெகர் பலகையில் எழுதியிருக்கும் எண்களை சுட்டிக் காட்டி, அந்த 14 வயது சிறுவன் அவற்றை அடையாளம் காண முடிகிறதா எனக் கேட்கிறார். சிறுவன் பலகையை உற்றுப் பார்த்து கொண்டிருக்கிறார். அடையாளம் கண்டதற்கான அறிகுறி முகத்தில் இல்லை.
அது ஜூன் 15, 2022. மகாராஷ்டிராவின் சோலாப்பூர் மாவட்ட கர்மாலா தாலுகாவிலுள்ள ஞானப்ரபோதன் மதிமந்த் நிவாஸி வித்யாலயா பள்ளியில் இருக்கிறோம். அதுதான் இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு பிரதீக் திரும்ப வந்திருந்த பள்ளி. இரண்டு மிக நீண்ட வருடங்கள்.
”எண்களை நினைவுறுத்த பிரதீக்கால் முடியவில்லை. தொற்றுகாலத்துக்கு முன் அவரால் கூட்டல் கணக்குகள் போட முடிந்தது. மொத்த மராத்தி மற்றும் ஆங்கில மொழிகளின் எழுத்துகளை எழுத முடிந்தது,” என்கிறார் அவரது ஆசிரியர். “இனி அவருக்கு எல்லாவற்றையும் நாங்கள் முதலிலிருந்து கற்றுக் கொடுக்க வேண்டும்.”
அக்டோபர் 2020-ல் இக்கட்டுரையாளர், ரஷின் கிராமத்திலுள்ள வீட்டில் பிரதீக்கை சந்தித்தபோது அவருக்கு 13 வயது. அப்போது அவர் சில எழுத்துகளை எழுதும் நிலையில்தான் இருந்தார். ஆனால் டிசம்பர் 2020-ல் அவர் எழுதுவதை நிறுத்திவிட்டார்.
பிரதீக் 2018ம் ஆண்டு பள்ளிக்கு செல்லத் தொடங்கினார். அடுத்த இரண்டு வருடங்களில் தொடர் பயிற்சியால், அவர் எண்களையும் வார்த்தைகளையும் எழுதவும் வாசிக்கவும் கற்றுக் கொண்டார். மார்ச் 2020-ல் அடுத்தக் கட்ட வாசிப்பு மற்றும் எழுத்து ஆகியவற்றுக்கு அவர் நகரவிருந்தபோது கோவிட் தொற்று பரவியது. விடுதிப் பள்ளி இரண்டு வருடங்கள் மூடப்பட்டதால் குடும்பங்களுக்கு திரும்ப அனுப்பப்பட்ட அறிதிறன் குறைபாடு கொண்ட - 6லிருந்து 18 வயது வரை இருக்கும் எல்லா சிறுவர்களும் - 25 மாணவர்களில் அவரும் ஒருவர்.












