கோவிட்-19 உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட எட்டு நாட்களில் ராம்லிங் சனாப் உயிரிழந்தார். ஆனால் அவரைக் கொன்றது வைரஸ் அல்ல.

இறப்பதற்கு சில மணி நேரம் முன்பு 40 வயது ராம்லிங் மருத்துவமனையிலிருந்து தனது மனைவி ராஜூபாய்க்கு தொலைப்பேசியில் அழைத்துள்ளார். “அவரது சிகிச்சைக்கான செலவை கண்டதும் அவர் கண்ணீர் விட்டார்,” என்கிறார் அவரது உறவினரான 23 வயது ரவி மோரல். “மருத்துவமனையின் சிகிச்சை கட்டணத்தை செலுத்த தனது இரண்டு ஏக்கர் நிலத்தை விற்க வேண்டும் என அவர் எண்ணினார்.”

மகாராஷ்டிராவின் பீட் நகரில் உள்ள தீப் மருத்துவமனையில் மே 13ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட ராம்லிங்கிற்கு ரூ.1.6 லட்சம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதாக ராஜூபாயின் சகோதரர் பிரமோத் மோரல் கூறுகிறார். “நாங்கள் எப்படியோ சமாளித்து இரண்டு தவணைகளாக செலுத்திவிட்டோம். ஆனால் மருத்துவமனையின் சார்பில் மீண்டும் 2 லட்சம் ரூபாய் கேட்டுள்ளனர்,” என்கிறார் அவர். “குடும்பத்தினரிடம் கேட்காமல் நோயாளியிடம் கூறியுள்ளனர். அவருக்கு பாரத்தை கொடுக்க வேண்டிய தேவை என்ன வந்தது?”

குடும்ப ஆண்டு வருமானத்தைவிட கிட்டதட்ட இருமடங்கு மருத்துவமனை கட்டணம் செலுத்த வேண்டியிருந்ததால் ராம்லிங் மனஉளைச்சல் அடைந்துள்ளார். மே 21ஆம் தேதி கோவிட் வார்டிலிருந்து வெளியேறிய அவர் மருத்துவமனை வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மே 20ஆம் தேதி இரவு தொலைப்பேசியில் கணவர் அழைத்தபோது அவரை 35 வயது ராஜூபாய் சமாதானப்படுத்த முயன்றார். அவர்களின் இருசக்கர வாகனத்தை விற்கலாம் அல்லது இருவரும் வேலை செய்யும் மேற்கு மகாராஷ்டிராவில் அவர்கள் வேலை செய்யும் கரும்பு தோட்டத்திலிருந்து கடன் வாங்கலாம் என அவர் கூறியிருந்தார். கணவர் உடல் நலன் தேறி வர வேண்டும் என்பதே தனது நோக்கம் என்றார் அவர். ஆனால் பணத்தை எப்படி திரட்டுவது என ராம்லிங் உறுதியின்றி இருந்திருக்க வேண்டும்.

ஆண்டுதோறும் ராம்லிங்கும், ராஜூபாயும் பீட் மாவட்டம் கைஜ் தாலுக்காவில் உள்ள தங்கள் குக்கிராமத்திலிருந்து மேற்கு மகாராஷ்டிராவில் உள்ள கரும்பு தோட்டங்களுக்கு வேலைக்குச் செல்வார்கள். நவம்பர் முதல் ஏப்ரல் வரை 180 நாட்கள் வேலை செய்து அவர்கள் ஒன்றாக ரூ.60,000 வரை ஈட்டுவார்கள். அவர்களின் 8 முதல் 16 வயதிலான மூன்று பிள்ளைகளும் ராம்லிங்கின் தந்தையின் பராமரிப்பில் விட்டுச் செல்லப்படுவார்கள்.

Ravi Morale says they took his uncle Ramling Sanap to a private hospital in Beed because there were no beds in the Civil Hospital
PHOTO • Parth M.N.

பொது மருத்துவமனையில் படுக்கைகள் இல்லாததால் தனது மாமா ராம்லிங் சனாப்பை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகச் சொல்கிறார் ரவி மோரல்

பீட் நகரிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தண்டலச்சிவாடி எனும் சொந்த கிராமத்திற்கு திரும்பியதும், ராம்லிங்கும், ராஜூபாயும் தங்கள் நிலத்தில் சோயாபீன், கம்பு, வெள்ளைச்சோளம் பயிரிடுவார்கள். வாரத்திற்கு மூன்று நாட்கள் பெரிய பண்ணைகளில் டிராக்டர் ஓட்டி ஒரு நாளுக்கு ரூ.300 வரை ராம்லிங் ஈட்டுவார்.

அன்றாட செலவுகளுக்கே அல்லாடும் இக்குடும்பத்தினர் ராம்லிங் உடல்நலம் குன்றியதும் பீடில் உள்ள பொது மருத்துவமனைக்குத் தான் முதலில் சென்றனர். “ஆனால் அங்கு படுக்கை இல்லை,” என்கிறார் ரவி. “எனவே நாங்கள் அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்.”

கரோனா வைரஸ் இரண்டாவது அலையின் வேகமான பரவல் கிராமப்புற இந்தியாவின் மோசமான பொதுசுகாதார உள்கட்டமைப்பை வெளிகாட்டியது. பீடில், உதாரணத்திற்கு, 26 லட்சம் மக்கள் தொகை கொண்ட மாவட்டத்தில் இரண்டு முக்கிய அரசு மருத்துவமனைகள் மட்டுமே உள்ளன.

பொது மருத்துவமனைகளில் கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை நிரம்பி வழிந்ததால் செலவு செய்ய இயலாவிட்டாலும் தனியார் மருத்துவமனை பக்கம் செல்லும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர்.

பலருக்கும் ஒருமுறை அவசர சிகிச்சை என்பது நீண்ட கால கடனாக மாறியது.

அமெரிக்காவை அடிப்படையாக கொண்ட ப்யூ ஆராய்ச்சி மையத்தின் மார்ச் 2021ல் வெளியான அறிக்கை குறிப்பிடுகிறது, “கோவிட்-19 தேக்கநிலை காரணமாக இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை 7 கோடியே 50 லட்சமாக உயரும் என மதிப்பீடு செய்துள்ளது.”  இதனுடன் 2020ஆண்டில் 3 கோடியே 20 லட்சம் என நடுத்தர வர்க்கத்தினரும் இந்தியாவில் சுருங்கியுள்ளனர், உலகளவில் வறுமை அதிகரிப்பில் 60 சதவீதம் என்கிறது இந்த அறிக்கை.

மகாராஷ்டிராவின் மராத்வாடா பகுதியின் அண்டை மாவட்டங்களான பீட், ஒஸ்மானாபாத்தில் பெருந்தொற்றின் தாக்கம் நன்றாகவே வெளிப்பட்டது. ஏற்கனவே பருவநிலை மாற்றம், தண்ணீர் தட்டுப்பாடு, விவசாய பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் இப்பகுதி இப்போது கோவிடிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஜூன் 20, 2021 வரை பீடில் 91,600 பேருக்கு கோவிட் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 2,450 பேர் இறந்துள்ளனர். ஒஸ்மானாபாத்தில் 61,000 பேர் பாதிக்கப்பட்டனர், 1,500க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

Left: A framed photo of Vinod Gangawane. Right: Suresh Gangawane fought the hospital's high charges when his brother was refused treatment under MJPJAY
PHOTO • Parth M.N.
Suvarna Gangawane (centre) with her children, Kalyani (right) and Samvidhan

இடது: வினோத் கங்காவனேயின் புகைப்படம். வலது: சுவர்ணா கங்காவனே (நடுவில்) தனது பிள்ளைகள் கல்யாணி (வலது) மற்றும் சம்விதானுடன்

ஏழைகளுக்கு என நடைமுறையில் உதவாத பல திட்டங்கள் உள்ளன.

கோவிட் நோயாளிகள் தங்கள் அனைத்து சேமிப்புகளை இழக்காத வகையில், தனியார் மருத்துவமனைகளின் கட்டணத்தை மகாராஷ்டிரா அரசு நிர்ணயித்துள்ளது. பொது வார்டு படுக்கைக்கு ஒரு நாளுக்கான கட்டணம் ரூ.4000க்கு மிகாமலும், சிறப்பு சிகிச்சையில் (ஐசியு) உள்ள படுக்கைகளுக்கு ரூ.7,500க்கு மிகாமலும், வெண்டிலேட்டருடன் கூடிய ஐசியு படுக்கைக்கு ரூ.9,000க்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

மருத்துவச் செலவுகளை (ரூ.2.5 லட்சம் வரை) மகாத்மா ஜோதிராவ் புலே ஜன் ஆரோக்யா யோஜனா (MJPJAY) எனும் திட்டத்தின் கீழ் மாநில அரசு மருத்துவக் காப்பீடு வழங்குகிறது. ஆண்டு வருமான ரூ.1 லட்சத்திற்கும் குறைவாக உள்ள குடும்பங்கள், பீட், ஒஸ்மானாபாத் உள்ளிட்ட 14 விவசாய மாவட்டங்களில் விவசாய குடும்பங்கள் இதற்கு தகுதியானவர்கள். MJPJAY  குழுமத்தின் கீழ் தனியார் மற்றும் அரசு 447 மருத்துவமனைகள் வரிசைப்படுத்தப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் பணமில்லா மருத்துவ சேவை, அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன.

ஆனால் ஏப்ரல் மாதம் 48 வயது வினோத் கங்காவனேவை MJPJAY  திட்டத்தின் கீழ் அனுமதிக்க ஒஸ்மானாபாத் சிரயு மருத்துவமனை மறுத்துவிட்டது. “ஒஸ்மானாபாத்தில் தொற்று அதிகமாக இருந்த ஏப்ரல் முதல் வாரம். எங்கும் படுக்கைகளைக் கண்டறிவது கடினமாக இருந்தது,” என்கிறார் வினோத்தை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற அவரது சகோதரரான 50 வயது சுரேஷ் கங்கவானி. “சிரயு மருத்துவமனையில் ஒரு மருத்துவர் சொன்னார், ‘எங்களிடம் இத்திட்டம் கிடையாது, படுக்கை வேண்டுமா, வேண்டாமா என்பதை நீங்களே சொல்லுங்கள்’. அப்போது நாங்கள் பதற்றத்தில் இருந்ததால் சிகிச்சையை தொடங்கச் சொல்லிவிட்டோம்.”

ஒஸ்மானாபாத் மாவட்ட பஞ்சாயத்தில் சுகாதாரத் துறையில் பணியாற்றி வரும் சுரேஷ் தனிப்பட்ட முறையில் விசாரித்து MJPJAY பட்டியலில் இடம்பெற்ற மருத்துவமனையை கண்டறிந்தார். “அந்த மருத்துவமனைக்கு நான் அழைத்துச் சென்றபோது, காப்பீட்டுத் திட்டம் வேண்டுமா அல்லது சகோதரர் வேண்டுமா என அவர்கள் கேட்டனர்,” என்கிறார் அவர். “நாங்கள் கட்டணத்தை முறையாக செலுத்தாவிட்டால், சிகிச்சையை நிறுத்திவிடுவோம் என்றும் அவர்கள் கூறினர்.”

Left: A framed photo of Vinod Gangawane. Right: Suresh Gangawane fought the hospital's high charges when his brother was refused treatment under MJPJAY
PHOTO • Parth M.N.

MJPJAY திட்டத்தின் கீழ் தனது சகோதரருக்கு சிகிச்சை மறுக்கப்பட்டபோது சுரேஷ் கங்காவனே மருத்துவமனையின் அளவற்ற கட்டணத்திற்கு எதிராக போராடினார்

ஒஸ்மானாபாத்தின் புறநகரில் நான்கு ஏக்கர் நிலம் வைத்துள்ள கங்காவனே குடும்பம், வினோத் 20 நாட்கள் இருந்தபோது மருந்து, ஆய்வு பரிசோதனைகள், மருத்துவமனை படுக்கை என ரூ.3.5 லட்சம் செலவிட்டுள்ளது. ஏப்ரல் 26ஆம் தேதி அவர் இறந்தபோது மேலும் ரூ.2 லட்சம் செலுத்த வேண்டும் என அவர்களிடம் மருத்துவமனை கோரியதாகச் சொல்கிறார் சுரேஷ். அவர் கட்டணத்தைச் செலுத்த மறுத்துவிட்டார். மருத்துவமனை அதிகாரிகளுக்கும், அவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. “நான் உடலை எடுத்து கொள்ள மாட்டேன் என கூறிவிட்டேன்,” என்கிறார் அவர். கூடுதல் தொகை கேட்பதை மருத்துவமனை நிறுத்தும் வரை நாள் முழுவதும் வினோத்தின் உடல் அங்கே வைக்கப்பட்டு இருந்தது.

சிரயு மருத்துவமனையின் உரிமையாளர் டாக்டர் விரேந்திரா காவ்லி பேசுகையில், ஆதார் கார்ட் சமர்ப்பிக்காததால் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வினோத் அனுமதிக்கப்படவில்லை என்றார். இது உண்மையில்லை என மறுக்கிறார் சுரேஷ்: “MJPJAY குறித்த எந்த கேள்வியும் மருத்துவமனையின் சார்பில் கேட்கப்படவில்லை.”

சிரயுவின் வசதிகள் மிக அடிப்படையானவை என்கிறார் டாக்டர் காவ்லி. “தொற்று எண்ணிக்கை அதிகரித்தவுடன் [மாவட்ட]  நிர்வாகம் கோவிட் நோயாளிகளை அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டது. அவர்களை கவனித்துக் கொள்ளுமாறு கூறியிருந்தேன். அவர்களை வேறு மருத்துவமனைக்குச் செல்லுமாறு கூறுவது கடினமானது,” என்கிறார் அவர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 12-15 நாட்களில் வினோத்திற்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது, அவரை வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு குடும்பத்தினரிடம் கூறினேன் என்கிறார் டாக்டர் காவ்லி. “அவர்கள் மறுத்துவிட்டனர். அவரைக் காப்பாற்ற எங்களால் இயன்றதைச் செய்தோம். ஆனால் அவருக்கு ஏப்ரல் 25ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு அடுத்த நாளே இறந்துவிட்டார்.”

வினோத்தை வேறு மருத்துவமனைக்கு மாற்றுவது என்றால் ஒஸ்மானாபாத்தில் ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட மற்றொன்றை கண்டறிய வேண்டும், என்கிறார் சுரேஷ். குடும்பம் ஏற்கனவே ஒரு வாரம் அதிர்ச்சியில் இருந்தது. வினோத் மற்றும் சுரேஷின் 75 வயது தந்தை வித்தல் கங்கவானி சில நாட்களுக்கு முன்புதான் கோவிட்-19 தொற்றினால் உயிரிழந்தார். இதுபற்றி குடும்பத்தினர் வினோத்திடம் கூறவில்லை. “அவர் ஏற்கனவே அச்சத்தில் இருந்தார்,” என்கிறார் வினோத்தின் மனைவியான 40 வயதாகும் சுவர்ணா. “அவரது வார்டில் நோயாளிகள் யார் இறந்தாலும் அவர் பதற்றமடைந்தார்.”

The Gangawane family at home in Osmanabad. From the left: Suvarna, Kalyani, Lilawati and Suresh with their relatives
PHOTO • Parth M.N.

ஒஸ்மானாபாத்தில் உள்ள கங்காவனே குடும்பம். இடதிலிருந்து: சுவர்ணா, கல்யாணி, லீலாவதி, சுரேஷ், சம்விதான் மற்றும் குடும்ப நண்பர்

வினோத் தனது தந்தை குறித்து கேட்டுக் கொண்டே இருந்தார் என்கிறார் அவரது 15 வயது மகள் கல்யாணி. “ஆனால் ஒவ்வொரு முறையும் நாங்கள் சமாளித்துக் கொண்டே இருந்தோம். அவர் இறப்பதற்கு இரு நாட்களுக்கு முன்பு எங்கள் பாட்டியை [வினோத்தின் தாய் லீலாவதி] மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காண்பித்தோம்.”

மருத்துவமனைக்குச் சென்றபோது லீலாவதி கைம்பெண் ஆனதை மறைத்து தனது நெற்றியில் பொட்டு வைத்திருந்தார். “அவனுக்கு எந்த சந்தேகமும் வந்துவிடக்கூடாது என நினைத்தேன்,” என்கிறார் கணவனை இழந்ததுடன், சில நாட்களின் மகனையும் பறிகொடுத்த அந்த தாய்.

நிதி நெருக்கடியில் இருந்து விடுபட குடும்பமே போராட வேண்டும் என்கிறார் குடும்பத் தலைவியான சுவர்ணா. “என் நகைகளை அடகு வைத்து, குடும்ப சேமிப்புகளை முற்றிலும் செலவிட்டு மருத்துவமனைக்கு கட்டணம் செலுத்தினோம்.” கல்யாணி மருத்துவராக விரும்புகிறார், என்கிறார் அவர். “அவளது கனவை நான் எப்படி நிறைவேற்றுவது? அந்த மருத்துவமனை காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் எங்களுக்கு பலன்களை கொடுத்திருந்தால் என் மகளின் எதிர்காலம் அச்சுறுத்தலாகி இருக்காது.”

ஒஸ்மானாபாத்தின் தனியார் மருத்துவமனைகளில், MJPJAY திட்டத்தின் கீழ் 82 கோவிட் நோயாளிகள் மட்டுமே ஏப்ரல் 1 முதல் மே 12ஆம் தேதி வரை சிகிச்சைப் பெற்றுள்ளனர் என்கிறார் திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஜய் புதேகர். பீட் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஷோக் கெய்க்வாக் பேசுகையில், ஏப்ரல் 17 முதல் மே 27 வரை பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் இத்திட்டத்தின் கீழ் 179 நோயாளிகள் பலனடைந்துள்ளனர் என்றார். இந்த எண்ணிக்கை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் மிகவும் சொற்பமானது.

பொது சுகாதாரம் மேம்படுவதோடு, வலுவடைந்தால் தான் மக்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்ல மாட்டார்கள் என்கிறார் பீடின் அம்பிஜோகை நகர கிராமப்புற வளர்ச்சி நிறுவனமான மானவ்லோக்கின் செயலாளர் அனிகேத் லோஹியா. “நமது ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், கிராம துணை மையங்களிலும் பெருமளவு பணியாளர் தட்டுப்பாடு நிலவுகிறது, இதனால் மக்களுக்கு போதிய மருத்துவ சேவைகள் கிடைப்பதில்லை,” என்கிறார் அவர்.

Ever since the outbreak of coronavirus in March 2020, the MJPJAY office in Mumbai has received 813 complaints from across Maharashtra – most of them against private hospitals. So far, 186 complaints have been resolved and the hospitals have returned a total of Rs. 15 lakhs to the patients
PHOTO • Parth M.N.

ராகினி பட்கே, முகுந்த்ராஜ்

2020 மார்ச் மாதம் கோவிட்-19 பரவத் தொடங்கியது முதலே மகாராஷ்டிரா முழுவதிலும் இருந்து மும்பையில் உள்ள MJPJAY அலுவலகத்திற்கு 813 புகார்கள் வந்துள்ளன – அவற்றில் பெரும்பாலானவை தனியார் மருத்துவமனைகளுக்கு எதிரானவை. இதுவரை 186 புகார்கள் தீர்க்கப்பட்டுள்ளன. மருத்துவமனைகளும் மொத்தம் ரூ.15 லட்சத்தை நோயாளிகளுக்கு திருப்பி செலுத்தியுள்ளன

“முக்கிய பொது மருத்துவமனைகளில்கூட பணியாளர்களுக்கு பற்றாக்குறை நிலவியது. மருத்துவர்கள், செவிலியர்களால் நோயாளிகளுக்குத் தேவையான கவனத்தை செலுத்த முடியவில்லை,” என்கிறார் லோஹியா. “அரசு மருத்துவமனைகள் மீது போதிய நம்பிக்கை இல்லாததால் செலவுகளை சமாளிக்க முடியாதவர்கள் கூட தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்றுள்ளனர்.”

இதனால் தான் வித்தல் பட்கேவிற்கு கோவிட் அறிகுறிகள் தென்பட்ட போதிலும் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அவர் செல்லவில்லை. கோவிட் காய்ச்சல் காரணமாக இரு நாட்களுக்கு முன்புதான் அவரது சகோதரர் லக்ஷ்மணன் இறந்திருந்தார்.

2021 ஏப்ரல் இறுதி வாரத்தில் லக்ஷ்மணனுக்கு அறிகுறிகள் தென்பட்டன. அவரது உடல்நிலை முற்றிலும் சீர்கெடத் தொடங்கியதும் அம்பிஜோகாயில் உள்ள சுவாமி ராமானந்த் தீர்த் கிராமப்புற அரசு மருத்துவக் கல்லூரிக்கு (SRTRMCA) வித்தல் அழைத்துச் சென்றார். அவரது நகரிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இரண்டு நாட்கள் லக்‌ஷ்மணன் மருத்துவமனையில் இருந்தார்.

அரசு மருத்துவமனையில் தனது சகோதரர் மரணமடைந்ததால் அச்சமடைந்த வித்தல், சுவாச பிரச்னை ஏற்பட்டவுடன் தனியார் மருத்துவமனைக்கு சென்றுவிட்டார். “அந்த மருத்துவமனையில் (SRTRMCA) தினமும் ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்தது. பலமுறை கத்தும் வரை மருத்துவர்களும், பணியாளர்களும் கவனிக்க மாட்டார்கள். ஒரே நேரத்தில் பல நோயாளிகளை அவர்கள் கவனிக்க வேண்டும்,” என்கிறார் 28 வயதாகும் லக்‌ஷ்மணனின் மனைவி ராகினி. “இந்த வைரசைக் கண்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர். அவர்கள் மீது அக்கறை செலுத்த வேண்டும். அவற்றை மருத்துவர்கள் தான் உறுதி செய்ய வேண்டும். என வித்தல் பணத்தை பற்றி சிந்திக்கவே இல்லை [தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு செல்ல].”

ஒரு வாரத்திற்குள் வித்தல் நலமடைந்து வெளியே வந்தார், ஆனால் நிவாரணம் நீடிக்கவில்லை.

அவரிடம் மருத்துவமனை ரூ.41,000 கட்டணம் செலுத்தக் கூறியது. மருந்துகளுக்கு மட்டும் அவர் ரூ.56,000 செலவிட்டு இருந்தார். அவரும், லக்ஷ்மணனும் 280 நாட்களுக்கு உழைத்து சம்பாதிக்கும் தொகைக்கு நிகரானது. மருத்துவமனையில் தள்ளுபடி கோரியபோதும் பலனில்லை. “நாங்கள் கடன் வாங்கி கட்டணம் செலுத்தினோம்,” என்கிறார் ராகினி.

Ragini Phadke with her children outside their one-room home in Parli. The autorickshaw is the family's only source of income
PHOTO • Parth M.N.

பார்லியில் உள்ள ஒற்றை அறை வீட்டிற்கு வெளியே ராகினி பட்கேவும், அவரது பிள்ளைகளும். ஆட்டோவில் கிடைப்பது தான் அவர்களின் ஒரே வருவாய்

பார்லியில் ஆட்டோ ஓட்டி வித்தலும், லக்‌ஷ்மணனும் தங்களின் வாழ்வாதாரத்தை ஈட்டி வந்தனர். “பகலில் லக்ஷ்மணனும், இரவில் வித்தலும் ஓட்டி வந்தனர்,” என்கிறார் ராகினி. “அவர்கள் இருவரும் ஒரு நாளுக்கு ரூ.300 - 350 வரை சம்பாதித்தனர். ஆனால் 2020 மார்ச் ஊடரங்கிலிருந்து அவர்கள் எதுவும் ஈட்டவில்லை. அரிதாகவே யாரும் ஆட்டோ எடுத்தனர். எப்படி உயிர் பிழைத்தோம் என்பதை நாங்களே அறிவோம்.”

இல்லத்தரசியான ராகினி எம்.ஏ பட்டதாரி. ஆனால் தனது ஏழு வயது கார்த்திகி, கைக்குழந்தையான முகுந்த்ராஜை எப்படி வளர்ப்பது என அவருக்குத் தெரியவில்லை. “லக்‌ஷ்மணன் இல்லாமல் அவர்கள் வளர்ப்பதற்கு எனக்கு அச்சமாக உள்ளது. எங்களிடம் பணமில்லை. அவரது இறுதிச் சடங்கைகூட கடன் வாங்கி தான் செய்தோம்.”

குடும்பத்தின் ஒற்றை அறை வீட்டிற்கு அருகே மரத்தடியில் சகோதரர்களின் ஆட்டோ நிறுத்தப்பட்டுள்ளது. அங்கு அவர்கள் பெற்றோருடன் வசிக்கின்றனர். கடன்களை அடைப்பதற்கு குடும்பத்தின் ஒரே ஆதாரம் அதுவே. ஆனால் இப்போது கடனிலிருந்து விடுபடுவதற்கு நீண்ட காலம் ஆகும் - குடும்பத்தில் ஒரு ஓட்டுநர் குறைவதால் அவர்களின் பொருளாதாரம் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.

ஒஸ்மானாபாதின் மாவட்ட நீதிபதி கவுஸ்துப் திவ்கோங்கார் தனியார் மருத்துவமனைகளின் அதிக கட்டண வசூலை கவனித்துள்ளார். அவர் ஒஸ்மானாபாத் நகரில் உள்ள சஹ்யாத்ரி பல்நோக்கு மருத்துவமனைக்கு மே 9ஆம் தேதி அறிவிப்பாணை அனுப்பியுள்ளார். அந்த மருத்துவமனையில் ஏப்ரல் 1 முதல் மே 6 வரை 486 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டும் 19 கோவிட் நோயாளிகளுக்கு மட்டுமே MJPJAY திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்பதை அவர் சுட்டிகாட்டியுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்த சஹ்யாத்ரி மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் திக்கஜ் தப்கே - தேஷ்முக் அவரது சட்டக் குழு நீதிபதியின் அறிவிப்பானை குறித்து கவனம் செலுத்தும் என்று என்னிடம் தெரிவித்தார்.

Pramod Morale
PHOTO • Parth M.N.

பிரமோத் மோரல்

MJPJAY திட்டத்தை நடைமுறைப்படுத்தி வரும் மாநில சுகாதார உத்தரவாத சங்கத்திற்கு 2020 டிசம்பர் மாதம் திவிகோங்கார் எழுதிய கடிதத்தில் ஷென்ட்கி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தை பட்டியலில் இருந்து நீக்கக் கோரியுள்ளார். ஒஸ்மானாபாத் நகரிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உமர்காவில் உள்ள அந்த மருத்துவமனைக்கு எதிராக புகாரளித்த அனைத்து நோயாளிகளின் பட்டியலையும் அவர் கடிதத்தில் இணைத்துள்ளார்.

பல நோயாளிகளுக்கு போலியாக இரத்த தமணி வாயு பரிசோதனை செய்ததும் ஷெங்டி மருத்துவமனைக்கு எதிரான புகார்களில் ஒன்று. வெண்டிலேட்டர் படுக்கைக்காக நோயாளிகளுக்கு போலியாக ரசீது வழங்கியதாகவும் மருத்துவமனையின் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

நீதிபதியின் நடவடிக்கையின் விளைவாக அந்த மருத்துவமனை MJPJAY பட்டியலில் இனி இடம்பெற போவதில்லை. எனினும் அதன் உரிமையாளர் டாக்டர் ஆர்.டி. ஷின்ட்கி பேசுகையில் வயோதிகம் காரணமாக இரண்டாவது அலையிலிருந்து விலகி இருப்பதாக தெரிவித்தார். “எனக்கும் நீரிழிவு உள்ளது,” என்று மருத்துவமனைக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள புகார்களை மறுத்து அவர் பேசுகிறார்.

MJPJAY  திட்டம் என்பது நிதிநிலையாக சாத்தியமற்றது என்கின்றனர் தனியார் மருத்துவமனை உரிமையாளர்கள். “காலத்திற்கு ஏற்ப ஒவ்வொரு திட்டமும் மாற்றப்பட வேண்டும். இது அறிமுகமாகி ஒன்பது ஆண்டுகள் ஆகின்றன, ஆனால் அதற்கான தொகுப்பு புதுப்பிக்கப்படவே இல்லை. மாநில அரசால் [2012 ஆண்டு] முதலில் கொண்டுவரப்பட்ட நிலையிலேயே உள்ளது,” என்கிறார் நான்டேடைச் சேர்ந்த பிளாஸ்டிக் சர்ஜனான டாக்டர் சஞ்ஜய் காதம். மாநில தனியார் மருத்துவமனைகளின் பிரதிநிதித்துவத்திற்காக அண்மையில் உருவாக்கப்பட்ட மருத்துவமனை நல கூட்டமைப்பின் உறுப்பினர். “2012 ஆண்டு முதலான பணவீக்கத்தை கருத்தில் கொண்டால், MJPJAY கட்டண தொகுப்பு மிகவும் குறைவு - இயல்பான கட்டணத்தில் பாதியைவிட குறைவு,” என்று அவர் விளக்குகிறார்.

MJPJAY திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்காக பட்டியலில் இடம்பெறும் மருத்துவமனை 25 சதவீத படுக்கைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும். “25 சதவீத ஒதுக்கீடு நிறைந்துவிட்டால் மருத்துவமனைகளால் கூடுதல் நோயாளிகளை இத்திட்டத்தின் கீழ் சேர்த்துக் கொள்ள முடியாது,” என்கிறார் காதம்.

MJPJAYவின் தலைமைச் செயல் அலுவலர் டாக்டர் சுதாகர் ஷிண்டே பேசுகையில், “தனியார் மருத்துவமனைகள் பல முறைகேடுகளும், ஒழுங்கீனங்களும் கண்டறியப்பட்டுள்ளது. இதுபற்றி நாங்கள் கவனித்து வருகிறோம்.”

2020 மார்ச் மாதம் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியது முதல் மகாராஷ்டிரா முழுவதிலும் இருந்து 813 புகார்கள் MJPJAY மும்பை அலுவலகத்திற்கு வந்துள்ளன. அவற்றில் பெரும்பாலானவை தனியார் மருத்துவமனைகள். இதுவரை 186 புகார்கள் தீர்க்கப்பட்டுள்ளன. நோயாளிகளுக்கு மருத்துவமனைகள் சார்பில் மொத்தம் ரூ.15 லட்சம் திருப்பி செலுத்தப்பட்டுள்ளன.

முறைகேடுகள், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்வாக்குமிக்க பின்னணி உள்ளது என்கிறார் மானவ்லோகின் லோஹியா. “எளிய மக்களால் அவர்களை எதிர்கொள்வது கடினம்.”

காலையில் ராம்லிங் சனாப் தற்கொலை செய்துகொண்டதால் ஆத்திரமடைந்த அவரது குடும்ப உறுப்பினர்கள் தீப் மருத்துவமனை விசாரிக்கப்பட வேண்டும் என கோரினர். அன்று மருத்துவர்கள்கூட யாருமில்லை. “காவல்துறைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டதாக பணியாளர் எங்களிடம் தெரிவித்தார்,” என்கிறார் ரவி.

Ramling Sanap's extended family outside the superintendent of police's office in Beed on May 21
PHOTO • Parth M.N.

பீட் நகர காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வெளியே காத்திருக்கும் ராம்லிங் சனாப்பின் விரிவான குடும்பம்

பணம் கேட்டு ராம்லிங்கை தற்கொலைக்கு தூண்டியதாக மருத்துவமனைக்கு எதிராக குடும்பத்தினர் காவல்துறை கண்காணிப்பாளரிடம் நேரடியாக சென்று புகாரளித்தனர். மருத்துவமனையின் கவனக்குறைவு தான் அவரது மரணத்திற்கு காரணம் என்கின்றனர். அச்சமயம் வார்டில் மருத்துவப் பணியாளர்கள் யாருமில்லை என்கின்றனர்.

தீப் மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பில், வார்டு உதவியாளர்கள் யாருமில்லாத இடத்திற்கு ராம்லிங் சென்றதாக தெரிவித்துள்ளது. “பணம் கேட்டு வற்புறுத்தியதாக எழுந்த புகாரிலும் உண்மையில்லை. அக்குடும்பத்திடமிருந்து மருத்துவமனையின் சார்பில் ரூ.10,000 மட்டுமே வாங்கப்பட்டது. அவரது தற்கொலை துயரமானது. அவரது மனநிலையை எங்களால் கண்டறிய முடியவில்லை,” என்று சொல்லப்பட்டுள்ளது.

ரூ.10,000 கட்டணத்திற்கான ரசீது மருத்துவமனை சார்பில் வழங்கியதை பிரமோத் மோரல் ஒப்புக் கொள்கிறார். “ஆனால் எங்களிடம் அவர்கள் ரூ.1.6 லட்சம் வாங்கிக் கொண்டனர்.”

ராம்லிங் மிகவும் நல்ல ஆன்மா, என்கிறார் ராஜூபாய். “அவர் இறப்பதற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பு என்னிடம் பேசும்போது முட்டைகள், ஆட்டிறைச்சி சாப்பிட்டதாக கூறினார். பிள்ளைகளின் நலன் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.” கட்டணம் குறித்து அறிந்தவுடன் அவர் இறுதியாக பதற்றத்துடன் என்னை தொலைப்பேசியில் அழைத்துப் பேசினார்.

“காவல்துறையினர் இதுபற்றி கவனித்து வருவதாக சொல்கின்றனர், ஆனால் மருத்துவமனைக்கு எதிராக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,” என்கிறார் பிரமோத். “இதன்படி ஏழைகளுக்கு மருத்துவ உரிமை கிடையாது என்பது புரிகிறது.”

தமிழில்: சவிதா

Parth M.N.

ਪਾਰਥ ਐੱਮ.ਐੱਨ. 2017 ਤੋਂ ਪਾਰੀ ਦੇ ਫੈਲੋ ਹਨ ਅਤੇ ਵੱਖੋ-ਵੱਖ ਨਿਊਜ਼ ਵੈੱਬਸਾਈਟਾਂ ਨੂੰ ਰਿਪੋਰਟਿੰਗ ਕਰਨ ਵਾਲੇ ਸੁਤੰਤਰ ਪੱਤਰਕਾਰ ਹਨ। ਉਨ੍ਹਾਂ ਨੂੰ ਕ੍ਰਿਕੇਟ ਅਤੇ ਘੁੰਮਣਾ-ਫਿਰਨਾ ਚੰਗਾ ਲੱਗਦਾ ਹੈ।

Other stories by Parth M.N.
Translator : Savitha

Savitha is a Thanjavur based translator. She had worked as a journalist with several leading Tamil News Channels for about seven years before turning into a fulltime translator in 2015.

Other stories by Savitha