கராபுரி வீட்டிலிருந்து காட்டுக்குள் விறகு சேகரிக்க சென்றபோது ஏதோவொன்று ஜெயஸ்ரீ மாத்ரேவை கடித்துவிட்டது. இரு குழந்தைகளுக்கு தாயும் 43 வயது நிறைந்தவருமான அவர் கடியைப் பொருட்படுத்தவில்லை. ஏதோ ஒரு சுள்ளி குத்தியதாகவும் நினைத்திருக்கலாம். ஜனவரி 2020ம் ஆண்டின் குளிர்கால பிற்பகலில் அவர் சேகரித்த விறகுகளைத் தூக்கிக் கொண்டு சீக்கிரமாகவே வீட்டுக்குக் கிளம்பி விட்டார்.
சற்று நேரம் கழித்து ஒரு உறவினருடன் வாசலருகே பேசிக் கொண்டிருந்தபோது அவர் மயங்கித் தரையில் விழுந்தார். தொடக்கத்தில் அங்கிருப்பவர்கள் அவர் கொண்டிருந்த விரதம் கொடுத்த பலவீனத்தால் மயக்கமடைந்ததாக நினைத்தனர்.
”அவர் மயங்கி விட்டார் என எனக்குச் சொல்லப்பட்டது,” என ஜெயஸ்ரீயின் மூத்த மகளான 20 வயது பாவிகா நினைவுகூருகிறார். அவரோ அவரது தங்கையான 14 வயது கவுரியோ ஓர் உறவினர் வீட்டில் இருந்ததால் சம்பவத்தை நேரடியாக பார்க்கவில்லை. சம்பவத்தை நேரில் கண்ட உறவினரும் அண்டைவீட்டாரும்தான் அவர்களுக்குத் தகவல் கொடுத்தனர். சற்று நேரம் கழித்து ஜெயஸ்ரீ நினைவுமீண்டபோது அவரின் கைகள் நடுங்கிக் கொண்டிருந்ததாகவும் அவர்கள் சொன்னார்கள். “என்ன நடந்தது என யாருக்கும் தெரியவில்லை,” என்கிறார் பாவிகா.
ஜெயஸ்ரீயின் கணவரான 53 வயது மதுகர் மாத்ரேவுக்கு தகவல் கொடுக்க ஒருவர், அவர் உணவுக்கடை நடத்திக் கொண்டிருக்கும் கராபுரித் தீவுக்கு விரைந்தார். அரபிக் கடலில் இருக்கும் அத்தீவு எலிஃபெண்டா குகைகளுக்கு பெயர் பெற்றது. மும்பை நகரத்தின் அருகே அமைந்திருக்கும் சுற்றுலாத் தளம் யுனெஸ்காவின் சர்வதேச பாரம்பரிய தள அங்கீகாரத்தை பெற்றது. இங்கிருக்கும் கல் கட்டுமானம் 6லிருந்து 8ம் நூற்றாண்டு வரையிலான காலத்தைச் சேர்ந்தவை. ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர். தீவில் வசிப்பவர்களின் வருமானம் சுற்றுலாவைச் சார்ந்துதான் இருக்கிறது. தொப்பிகள், கண்ணாடிகள், நினைவுப் பொருட்கள், உணவுகள் போன்றவற்றை விற்பார்கள். அங்கு வசிக்கும் சிலர் குகைகளை சுற்றிக் காட்டும் வேலையைச் செய்து வருமானம் ஈட்டுகின்றனர்.
சுற்றுலா வரைபடத்தில் தளம் இடம்பெற்றாலும் கராபுரியின் தீவிலுள்ள கிராமத்தில் அடிப்படை சுகாதார வசதிகள் இல்லை. ஒரு சுகாதார மையம் கூட கிடையாது. இரண்டு வருடங்களுக்கு முன் ஒன்று அமைக்கப்பட்டது. ஆனால் யாரும் வருவதில்லை. மொத்த மக்கள்தொகையான 1,100 பேர் ராஜ்பந்தர், ஷெத்பந்தர் மற்றும் மொராபந்தர் ஆகிய மூன்று குக்கிராமங்களில் வசிக்கின்றனர். சுகாதார வசதியின்மை, படகில் சென்று தங்களுக்கான வழிகளை தேடும் நிலையில் வைத்திருக்கிறது. இதில் செலவு அதிகமாக இருப்பது மட்டுமின்றி, மருத்துவம் பெறுவதில் தாமதமும் ஏற்படுகிறது. சில நேரங்களில் அது மரணத்திலும் முடிகிறது.
உரான் டவுனுக்கு ஜெயஸ்ரீயைக் கொண்டு செல்ல மதுகர் படகுத்துறைக்கு விரைந்தார். ஆனால் அவர்கள் கிளம்புவதற்கு முன்னமே, அவர் இறந்து போனார். இறப்பதற்கு முன் அவரின் வாயில் நுரை தள்ளிக் கொண்டிருந்தது. பாம்புக் கடிக்கான அறிகுறி. வலது கையின் நடுவிரலில் பற்கள் பதிந்தத் தடமும் பாம்புக் கடியை உறுதிச் செய்தது.
பாம்புக் கடிப்பது, தேள் கொட்டுவது, பூச்சிக் கடிப்பது ஆகியவை அப்பகுதியில் இயல்பு என்கிறார் பாவிகா. மகாராஷ்டிராவிலுள்ள ராய்கர் மாவட்டத்தின் உரான் தாலுகாவைச் சேர்ந்த அக்கிராமத்து மக்கள், அது போன்ற கடிகள் நேர்ந்து முதலுதவி இன்றி நேர்ந்த பிற மரணங்களை நினைவுகூர்ந்தனர்.
கடந்த பத்தாண்டுகளில் சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைத்திருந்தால் தவிர்க்கப்பட்டிருக்கக் கூடிய பல மரணங்கள் மருத்துவ வசதியின்றி அந்தத் தீவில் நேர்ந்திருக்கின்றன. கிராமத்தில் ஒரு மருந்தகம் கூட இல்லை. அங்கு வசிப்பவர்கள் நிலத்துக்கு வரும் போது வாங்கிக் கொண்டால்தான் உண்டு. கராபுரியில் இருந்து வெளியே செல்வதற்கு, தெற்குப் பக்கம் இருக்கும் உரான் தாலுகாவின் மொரா படகுத்துறைக்கு செல்லும் படகிலோ அல்லது கிழக்குப் பக்கம் இருக்கும் நவி மும்பையின் நவா கிராமத்துக்கு செல்லும் படகிலோதான் செல்ல முடியும். இரு பயணங்களுக்கும் அரை மணி நேரமேனும் ஆகும். தீவின் மேற்குப் பக்கம் இருக்கும் தெற்கு மும்பையின் கொலாபாவுக்கு படகில் செல்ல ஒரு மணி நேரம் ஆகும்.
“மருத்துவரையோ செவிலியரையோ எங்கள் கிராமத்தில் பார்க்கவே முடியாது. நாங்கள் வீட்டு மருத்துவம் அல்லது வீட்டில் இருக்கும் மருந்துகள் ஆகியவற்றைக் கொண்டுதான் சமாளிக்கிறோம்,” என்கிறார் எலிஃபெண்டா குகைகளைச் சுற்றிக் காட்டும் 33 வயது தைவத் பாட்டில். அவரின் தாய் வத்சலா பாட்டில், குகைப்பகுதிக்கு அருகே ஒரு தற்காலிகக் கடையில் தொப்பிகள் விற்று 6000 ரூபாய் வருமானம் ஈட்டிக் கொண்டிருந்தார். கொரோனா தொற்றின் இரண்டாம் அலை மே 2021-ல் நேர்ந்து கோவிட் தொற்றுக்கான அறிகுறிகள் அவரிடம் தென்படத் தொடங்கியபோது, வலி நிவாரணிகளை எடுத்துக் கொண்டு சரியாகி விடும் என நம்பினார் வத்சலா. சில நாட்கள் கழித்தும் உடல் வலி குறையாததால், மகனுடன் படகேறினார். “மோசமான சூழலில் மட்டும்தான் தீவிலிருந்து வெளியே செல்வோம்,” என்கிறார் தைவத்.
வீட்டை விட்டுக் கிளம்பிய ஒரு மணி நேரம் கழித்து, ராய்கரின் பன்வேல் தாலுகாவின் கவ்ஹன் கிராமத்தில் இருக்கும் சுகாதார மையத்தை அடைந்தனர் பாட்டில்கள். ரத்தப்பரிசோதனை, ரத்த அணுக்கள் குறைவாக இருப்பதைக் காட்டியது. வத்சலா வீடு திரும்பினார். ஆனால் அவரின் நிலை அடுத்த நாள் மோசமானது. வாந்தி எடுக்கத் தொடங்கினார். இம்முறை, அதே மருத்துமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரின் ஆக்சிஜன் அளவு குறைவது கண்டறியப்பட்டது. கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. பன்வேல் நகரத்திலிருக்கும் அரசு மருத்துவமனைக்கு அவர் அனுப்பப்பட்டார். அங்கு 10 நாட்கள் கழித்து அவர் உயிர் பிரிந்தது. “நுரையீரல் செயலிழந்து விட்டதாக மருத்துவர் சொன்னார்,” என்கிறார் தைவத்.
உள்ளூரிலேயே ஒரு மருத்துவ மையம் இருந்து மருந்துகளும் சுலபமாகக் கிடைக்க முடிந்திருந்தால், வத்சலா மற்றும் ஜெயஸ்ரீ ஆகியோரின் நிலை மாறியிருக்கும்.
ஜெயஸ்ரீ மரணமடைந்து ஒரு மாதத்துக்குப் பிறகு, தந்தையும் இறந்துபோய் பாவிகாவும் கவுரியும் அநாதரவாகினர். தந்தை மாரடைப்பால் இறந்து போனதாக சகோதரிகள் கூறுகின்றனர். மதுகர் சர்க்கரை வியாதிக்கு மருந்து எடுத்துக் கொண்டிருந்தார். ஒருநாள் காலை வீட்டுக்கு வெளியே அவர் ரத்தவாந்தி எடுத்துக் கொண்டிருப்பதை பாவிகா கண்டார். நெருலில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் படகில் கொண்டு போய் அவரை அனுமதிப்பதற்காக அடுத்த நாள் காலை வரை அவர்கள் காத்திருந்தனர். மோரா வரை படகில் சென்று பிறகு சாலையில் பயணித்து நெருலை அடையவே ஒரு மணி நேரம் ஆகும். 20 நாட்கள் கழித்து பிப்ரவரி 11, 2020 அன்று தந்தை இறந்தார்.
மாத்ரே குடும்பம், மகாராஷ்டிராவின் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இடம்பெற்றிருக்கும் அக்ரி கோலி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பாவிகாவும் கவுரியும் பெற்றோர் நடத்தியக் கடையை நடத்தி ஜீவித்துக் கொண்டிருக்கின்றனர்.
*****
கராபுரியின் படகுத்துறையில் வந்திறங்கி எலிஃபெண்டா குகைகளை பார்க்கச் செல்லும் சுற்றுலாப் பயணிகள், நினைவுப் பொருட்களையும் உணவுகளையும் விற்கும் கடைகளை கடந்துதான் செல்ல வேண்டும். மாங்காய் துண்டுகள், வெள்ளரிக்காய் மற்றும் சாக்கலெட்டுகள் வைத்திருக்கும் அத்தகைய ஒரு கடையைப் பார்த்துக் கொள்ளும் 40 வயது ஷைலேஷ் மாத்ரே, நான்கு பேர் கொண்ட தன் குடும்பத்தில் எவருக்கு மருத்துவ உதவி தேவைப்படும் நிலை ஏற்பட்டாலும் கடையை அப்படியே விட்டுவிட்டுப் போக வேண்டியச் சூழல்தான். ஒருநாளின் வேலையும் வருமானமும் போய்விடும். செப்டம்பர் 2021-ல் அவரின் தாய் 55 வயது ஹிராபாய் மாத்ரே, ஈரமானப் பாறையில் வழுக்கி விழுந்து காலை முறித்துக் கொண்டபோதும் அதுதான் நேர்ந்தது. வலி நிவாரணி எதுவும் கிடைக்காமல் இரவு முழுவதும் அவர் வலியில் துடித்தார். அடுத்த நாள், உரானுக்கு செல்லும் படகுக்கு அவரை ஷைலேஷ் சுமந்து செல்ல வேண்டியிருந்தது.
“(உரானிலிருக்கும்) மருத்துவமனையில், என் காலில் அறுவை சிகிச்சை செய்ய ரூ.70,000 கேட்டனர்,” என்கிறார் ஹிராபாய். “எங்களிடம் அவ்வளவு பணம் இல்லாததால் பன்வெல்லுக்கு (ஒரு மணி நேரத் தொலைவு) சென்றோம். அங்கும் அதே தொகையைத்தான் கேட்டார்கள். இறுதியில் நாங்கள் (மும்பையிலுள்ள) ஜெஜெ மருத்துவமனைக்குச் சென்றோம். அங்கு இலவசமாக சிகிச்சை செய்தார்கள். இந்தக் கட்டு அங்கு போட்டதுதான்.” இலவச சிகிச்சை பெற்று மருந்துகளுக்கு மட்டுமே செலவு செய்ய வேண்டி இருந்தபோதும் மொத்தமாக சிகிச்சை, மருந்துகள், பயணம் ஆகியவற்றுக்கு அக்குடும்பம் ரூ.10,000 செலவழித்தது.
தீவில் வங்கியோ ஏடிஎம்மோ கிடையாது. உறவினர்களிடமும் நண்பர்களிடமும்தான் ஷைலேஷ் கடன் வாங்க நேர்ந்தது. குடும்பத்தில் அவர் ஒருவர்தான் வருமானம் ஈட்டும் உறுப்பினர். கடையில் உதவியாளராக அவர் ஈட்டும் வருமானமும் குறைவுதான். ஏற்கனவே (கோவிட் தொற்று) சிகிச்சைக்காக வாங்கிய 30,000 ரூபாய் கடனில் அக்குடும்பம் சிக்கிக் கொண்டிருந்தது.
காலில் கட்டு போடப்பட்டு நடக்க முடியாததால் ஹிராபாய் கவலையடைந்தார். “இந்தக் கட்டைப் பார்க்கும்போதெல்லாம் மருத்துவப் பரிசோதனைக்கும் கட்டைக் கழற்றுவதற்கும் எப்படி மும்பைக்கு பயணிப்பது என்றுதான் நான் யோசித்துக் கொண்டிருந்தேன்,” என்கிறார் அவர். “இந்தக் காட்டில் நாங்கள் கைவிடப்பட்டுக் கிடக்கிறோம்.”
அவரின் உணர்வு மொத்த கிராமத்துக்குமான உணர்வுதான் என்கிறார் ஊர்த்தலைவரான பலிராம் தாகூர். ஒரு மருத்துவ மையம் அமைக்கப்படக் கேட்டு 2017ம் ஆண்டிலிருந்து உரான் நிர்வாகத்துக்கு அவர் மனு கொடுத்துக் கொண்டிருந்தார். “இறுதியில் 2020ம் ஆண்டு இங்கு ஷெத்பந்தரில் ஒரு மையம் கட்டப்பட்டது. ஆனால் இங்கு தங்கி மருத்துவம் பார்க்கும் மருத்துவர் ஒருவர் கூட இன்னும் கிடைக்கவில்லை,” என்கிறார் அவர். கிராமப் பகுதிகளில் குறைவான சதவிகிதத்தில் மருத்துவர்கள் கொண்டிருக்கும் மாநிலங்களில் மகாராஷ்டிராவும் ஒன்று. மாநிலத்தில் பணிபுரியும் மருத்துவர்களில் வெறும் 8.6 சதவிகிதம்தான் கிராமங்களில் இருக்கின்றனர். இந்தியாவின் சுகாதாரப் பணியாளர்கள் பற்றி உலக சுகாதார நிறுவனமும் இந்தியப் பொது சுகாதார அறக்கட்டளையும் இணைந்து 2018ம் ஆண்டில் பிரசுரித்த ஆய்வில் இக்கணக்கு குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஒரு சுகாதார ஊழியர் பணியமர்த்தப்படக் கேட்டுக் கொண்டிருக்கும் பலிராம் சொல்கையில், “இங்கு யாரும் தங்க தயாராக இல்லை. கிராமத்து மக்களுக்கு மட்டுமல்ல, சுற்றுலாப் பயணிகளுக்குக் கூட மருத்துவ வசதி தேவை. ஒருமுறை மலையேறும்போது தவறி விழுந்து சுற்றுலாப் பயணி ஒருவரை மும்பைக்கு கொண்டு செல்ல வேண்டியிருந்தது,” என்கிறார்.
கராபுரியில் வசிப்பவர்களின் ஆரோக்கியம், 2015ம் ஆண்டிலிருந்து கோப்ரோலி கிராம ஆரம்ப சுகாதார மையத்தில் பணியமர்த்தப்பட்டிருக்கும் டாக்டர் ராஜாராம் போஸ்லேவின் கைகளில்தான் இருக்கிறது. அவரின் மேற்பார்வையில் 55 கிராமங்கள் இருக்கின்றன. அவரின் சுகாதார மையத்திலிருந்து கராபுரிக்கு (படகிலும் சாலையிலும்) பயணிக்க ஒன்றரை மணி நேரம் ஆகும். “அங்கு மாதமிருமுறை செவிலியர்கள் செல்வதுண்டு. ஏதேனும் நெருக்கடி ஏற்பட்டால் எனக்கு தகவல் கொடுக்கப்படும்,” என்னும் அவர், தான் பணியாற்றிய காலத்தில் எந்த மருத்துவ நெருக்கடியும் தெரிவிக்கப்படவில்லை என்கிறார்.
கோப்ரோலி சுகாதார மையத்திலிருந்து வரும் செவிலியர்கள் கராபுரியின் அங்கன்வாடி அல்லது பஞ்சாயத்து அலுவலகம் ஆகிய இடங்களில் நோயாளிகளைச் சந்திக்கின்றனர். மையத்தின் ஒரு செவிலியரான சரிகா தாலே, 2016ம் ஆண்டிலிருந்து இக்கிராமத்துக்கு (மற்றும் 15 கிராமங்களுக்கும்) பொறுப்பாக இருக்கிறார். மாதத்துக்கு இருமுறை போலியோ சொட்டு மருந்து கொடுக்க வந்து இளம் தாய்களைச் சந்திப்பார்.
“மழைக்காலத்தில் இங்கு வருவது சிரமம். உயரமான அலைகளால் படகுகள் இயக்கப்படாது,” என அவர் சுட்டிக் காட்டுகிறார். கராபுரியில் வசிப்பது தனக்கு சாத்தியமற்ற விஷயம் என்கிறார் அவர். “எனக்கு குழந்தைகள் இருக்கின்றனர். அவர்கள் எங்கு படிப்பார்கள்? பிற கிராமங்களில் வேலை பார்க்க இங்கிருந்து நான் எப்படி பயணிக்க முடியும்?”
குடிநீர், மின்சாரம் போன்ற பிற வசதிகள் கூட கராபுரியில் சமீபத்தில்தான் கிடைக்கத் தொடங்கியது. 2018ம் ஆண்டு வரை, மகாராஷ்டிர சுற்றுலா மேம்பாட்டு வாரியம் கொடுத்த ஜெனரேட்டர்கள் உற்பத்தி செய்த மின்சாரம்தான் கிடைத்தது. அவையும் இரவு 7 மணி முதல் இரவு 10 மணி வரைதான் இயங்கும். குடிநீர் இணைப்புகள் 2019ம் ஆண்டில் வந்தன. தீவில் இருந்த ஒரே பள்ளிக்கூடமும் மூடப்பட்டுவிட்டது.
வசதிகளின் போதாமையைக் கருத்தில் கொண்டால், பிரசவத் தேதிக்கு பல மாதங்களுக்கு முன்பே கர்ப்பிணிப் பெண்கள் முன்னெச்சரிக்கையாகக் கிராமத்தை விட்டுக் கிளம்புவது வியப்பளிக்காது. பலர், கர்ப்பத்தின் கடைசி மாதங்களில் தீவை விட்டுக் கிளம்புவர். நிலத்தில் இருக்கும் உறவினர் வீட்டிலோ அல்லது ஓரறையை வாடகைக்கு எடுத்தோ தங்கிக் கொள்வார்கள். இரண்டுமே செலவு கொடுக்கும் விஷயங்கள். தீவிலேயே தங்குவோர், கர்ப்பிணிக்கு தேவையான மருந்துகளுக்கும் தானியங்களுக்கும் காய்கறிகளுக்கும் தேடியலைய வேண்டும் என்கின்றனர்.
2020ம் ஆண்டின் ஊரடங்குகளின்போது, படகுகள் இயங்காததால் கர்ப்பிணிகள் மருத்துவமனைகளுக்கு செல்ல முடியவில்லை. அந்த வருடத்தின் மார்ச் மாதத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, எல்லா போக்குவரத்தும் நிறுத்தப்பட்டபோது 26 வயது கிராந்தி கரத் மூன்று மாத கர்ப்பிணியாக இருந்தார். தொடர் பரிசோதனைகளுக்கு அவர் செல்ல முடியவில்லை. சில நேரங்களில் கர்ப்பம் தொடர்பான அசவுகரியம் தாங்க முடியாதளவுக்கு இருந்ததாகச் சொல்கிறார். “என் நிலையை மருத்துவரிடம் தொலைபேசியில் நான் விளக்க வேண்டியிருந்தது,” என்கிறார் அவர் அச்சூழல் கொடுத்த விரக்தியுணர்வுடன்.
மும்பை மருத்துவமனைக்கு செல்லும் வழியில், படகில் குழந்தைப் பெற்றதை நினைவுகூருகிறார் சந்தியா போய்ர். அது முப்பது வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம். ஊர் மருத்துவச்சி குழந்தையை எடுக்கக் கடுமையாகப் போராடினார். “கடவுளிடம் எல்லாவற்றையும் ஒப்படைத்துவிட்டேன்,” என்கிறார் அவர், ஆடிக் கொண்டிருந்த படகில் குழந்தைப் பெற்றெடுத்ததை நினைவுகூர்ந்து சிரித்தபடி. பத்தாண்டுகளுக்கு முன் ஊரில் இரண்டு மருத்துவச்சிகள் இருந்தனர். காலப்போக்கில் மருத்துவமனையில் பிரசவம் பார்க்கும் விருப்பத்தாலும் அரசு கொடுத்த பொருளாதார உதவிகளாலும் அவர்களின் சேவைக்கான தேவை கடுமையான வீழ்ச்சியை சந்தித்தது.
கிராமத்தில் மருந்தகம் இல்லாததால் கிராமவாசிகள் முன்கூட்டியே திட்டமிடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். “சில நாட்களுக்கு மட்டுமே பரிந்துரைக்கப்பட்டாலும் அம்மருந்துகளை ஒரு மாதத்துக்கு வாங்கி வைத்துக் கொள்வேன். ஏனெனில், எப்போது மருத்துவமனைக்கு திரும்பச் சென்று அவற்றை வாங்க முடியும் எனத் தெரியாது,” என்கிறார் அவர். கிராந்தியும் அவரின் கணவர் சூரஜ்ஜும் அக்ரி கோலி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கராபுரியில் சிறியக் கடை நடத்துகின்றனர். கோவிட் ஊரடங்குக்கு முன் வரை, அவர்கள் 12,000 ரூபாய் வரை வருமானம் ஈட்டிக் கொண்டிருந்தனர்.
ஆறாம் மாத கர்ப்பத்தின்போது உரான் தாலுகாவின் நவின் ஷேவா கிராமத்தில் இருக்கும் சகோதரர் வீட்டுக்கு கிராந்தி சென்றுவிட்டார். “கோவிட் பயத்தினால் அதற்கு முன்னமே நான் செல்லவில்லை. கராபுரியில் இருப்பதே பாதுகாப்பானது என நினைத்தேன். மேலும் என் சகோதரனுக்கு சுமையாக இருக்கவும் விரும்பவில்லை,” என்கிறார் அவர்.
அவர் சென்றபோது படகுச் சவாரிக்கு 300 ரூபாய் கொடுத்தார். வழக்கமாக கொடுக்கப்படும் 30 ரூபாயை விட பத்து மடங்கு அதிகம். அரசு மருத்துவமனையில் கோவிட் நோயாளிகள் அதிகம் இருப்பர் என்கிற அச்சத்தினால், அவரது குடும்பம் ஒரு தனியார் மருத்துவமனையில் அவரைச் சேர்த்து, சிசேரியன் அறுவை சிகிச்சை மற்றும் மருந்துகளுக்கென 80,000 ரூபாய் வரை செலவழித்தனர். “மருத்துவர் கட்டணம், பரிசோதனைகள், மருந்துகள் எல்லாவற்றுக்கும் அப்பணம் செலவானது,” என்கிறார் கிராந்தி. அவரும் சூரஜ்ஜும் அதுவரை சேமித்திருந்த பணம் எல்லாவற்றையும் செலவழித்து விட்டார்கள்.
கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக ஒன்றிய அரசு கொடுக்கும் பிரசவகால உதவித் திட்டமான பிரதான் மந்த்ரி மத்ரு வந்தனா யோஜனா திட்டத்துக்கு கிராந்தி தகுதி பெற்றவர். 5,000 ரூபாய் கிடைக்கும். ஆனால் 2020ம் ஆண்டில் விண்ணப்பித்து இன்னும் அந்தத் தொகைக்காக அவர் காத்திருப்பது, கராபுரிவாசிகளின் ஆரோக்கியத்தின் மீது அதிகாரிகள் கொண்டிருக்கும் அலட்சியத்தை உறுதிபடுத்துவதாக இருக்கிறது.
தமிழில் : ராஜசங்கீதன்