”எங்கள் வீட்டில் எலிகள் கூரைகளிலிருந்து விழுந்து செத்தது நினைவில் இருக்கிறது. வாழ்க்கையில் நான் பார்த்ததிலேயே மிக அச்சமூட்டும் காட்சி அதுதான். இப்போது அது சிரிப்புக்குரிய விஷயமாகத் தோன்றலாம், ஆனால் கூரையிலிருந்து ஒரு எலி விழுந்தால் நாங்கள் வீட்டை விட்டுப் போய்விட வேண்டும் என்று பொருள்.  எப்போது திரும்பி வருவோம் என்றுகூடத் தெரியாது.”

இவ்வளவு விரிவாக விவரிப்பவர் கோவையின் கலப்பட்டியில் வசிக்கும் ஏ. குழந்தையம்மாள். இவருக்குத் தற்போது 80 சொச்சம் வயதாகிறது.  கடைசியாகக் கொள்ளை நோய் கோவையைத் தாக்கியபோது, அதாவது 1940களில், அவர் பதின்வயதுகளில் இருந்தார்.

பெரியம்மை தொடங்கி பிளேக், காலரா வரை கோவைக்கு ஒரு துயரமான கொள்ளை நோய் வரலாறு இருக்கிறது. இந்த வரலாற்றின் குறிப்பிடத்தக்க ஒரு அம்சம் வலுவடைந்திருக்கிறது. இது மற்ற இடங்களிலும் இருப்பதுதான் என்றாலும் கோவைப் பகுதியில் அதிகமாக இருப்பது போல் தெரிகிறது. ‘பிளேக் மாரியம்மன்’ (பிளாக் மாரியம்மன் எனவும் அழைக்கப்படுகிறது) கோவில்களின் பெருக்கம்தான் அது. கோவையில் மொத்தம் 16 கோவில்கள் இருக்கின்றன.

அதேபோல கோவிட் பெருந்தொற்றினால் ஒரு ’கொரோனா தேவி’ கோவிலும் வந்துவிட்டது. ஆனால் பிளேக் மாரியம்மன் கோவில்களுக்குதான் பக்தர்கள் மிக அதிகம். அருகே உள்ளே திருப்பூர் மாவட்டத்திலும் சில பிளேக் மாரியம்மன் கோவில்கள் இருக்கின்றன. அவையும் விழாக்களை நடத்தி மக்களை ஈர்க்கின்றன.

1903இலிருந்து 1942 வரை கோவையில் குறைந்தது 10 முறை பிளேக் நோய் வந்திருக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் இறந்திருக்கின்றனர். இந்த நோய் மறைந்து பல பத்தாண்டுகள் ஆனபின்னும் நகரத்தின் கூட்டு நினைவில் இன்னும் பதிந்திருக்கிறது. குழந்தையம்மாள் போன்ற அந்தக் காலத்து ஆட்கள் பலருக்கு பிளேக் என்ற வார்த்தை, கோவை நகரத்தின் நோய்க்கால அச்சத்தை நினைவுக்குக் கொண்டுவந்துவிடுகிறது.

பரபரப்பான டவுன் ஹால் பகுதியின் மிகப் பிரபலமான பிளேக் மாரியம்மன் கோவில் என்று சொல்லத்தக்க கோவிலுக்கு வெளியே ஒரு பூக்கடைக்காரர் வியாபாரத்துக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறார். “இன்று வெள்ளிக்கிழமை. நல்ல கூட்டம் இருக்கும்” என்கிறார் 40 சொச்சம் வயதாகும் கண்ணம்மா, பூக்கள் கோக்கும் கைகளிலிருந்து பார்வையை அகற்றாமல்.

“அவள் சக்தி வாய்ந்தவள் தெரியுமா? கொரொனா தேவி கோவில் இப்போது வந்திருக்கலாம். ஆனால் பிளாக் மாரியம்மன் எங்களில் ஒருத்தி. நாங்கள் அவளைத் தொடர்ந்து கும்பிடுகிறோம், குறிப்பாக எங்களுக்கு உடல்நிலை சரியில்லாதபோது. பிற வேண்டுதல்களுக்கும் கும்பிடுகிறோம்.” ’பிற வேண்டுதல்கள்’ என்று பக்தர்களின் வழக்கமான வேண்டுதல்களான வசதி, வெற்றி, நீண்ட ஆயுள் ஆகியவற்றை அவர் குறிப்பிடுகிறார். பிளேக் காலம் முடிந்து கிட்டத்தட்ட நாற்பது வருடங்களுக்குப் பின்பு கண்ணம்மாள் பிறந்தார். ஆனாலும் அவர் தலைமுறையைச் சேர்ந்தோர்கூட உதவிக்கு மாரியம்மனையே நாடுகின்றனர்.

The Plague Mariamman temple in Coimbatore’s Town Hall area is 150 years old.
PHOTO • Kavitha Muralidharan
Devotees believe that the deity can cure them when they fall sick
PHOTO • Kavitha Muralidharan

இடது: கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள பிளேக் மாரியம்மன் கோவில் 150 ஆண்டுகள் பழமையானது. வலது: நோயுற்றால் இந்தத் தெய்வம் குணப்படுத்தும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்

கோவை மக்களின் பண்பாட்டின் ஒரு கூறாக ஆகுமளவுக்கு பிளேக் நோயின் தாக்கம் இருந்தது. “ஊரின் பூர்வகுடிகள் பிளேக் ஏற்படுத்திய அழிவுக்கு வெறும் சாட்சிகளாக இல்லை. பாதிக்கப்பட்டவர்களே அவர்கள்தான்.  பிளேக் நோயால் பாதிக்கப்படாத ஒரு குடும்பத்தை இங்கு நீங்கள் பார்க்க முடியாது” என்கிறார் கோவையைச் சேர்ந்த எழுத்தாளரான சி.ஆர். இளங்கோவன்.

1961ஆம் ஆண்டின் மாவட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்புக் கையேட்டின்படி , வெவ்வேறு பிளேக் நோய்த் தாக்குதல்களில் 1909இல் கோவை நகரத்தில் 5,582 மரணங்களும் 1920இல் 3,869 மரணங்களும் நேர்ந்திருக்கின்றன. கோவை மக்கள்தொகை 1911இல் பிளேக் நோய்த் தாக்குதலால் 47,000ஆகக் குறைந்ததாக பிற பதிவுகள் குறிப்பிடுகின்றன. 1901ஆம் ஆண்டில் 53,000 பேர் வசித்த இந்த நகரத்திற்கு இவை பேரிழப்புகள்.

தம்முடைய குடும்பமே கோவைக்குத் திரும்பி வந்து "தீங்கின்றி" வாழும் நிலை ஏற்படும் வரை கோவையிலிருந்து தப்பிச் சென்று சிறிது காலம் "காட்டில் வாழ்ந்த"தாக இளங்கோவன் கூறுகிறார். அந்த நம்பிக்கை இப்போது நம்ப முடியாததாகத் தெரியும் ஓர் இடத்திலிருந்து வந்திருக்கிறது.

“அந்த இருண்ட காலத்தில், மருத்துவ உதவி ஏதுமின்றி, மக்கள் கடவுள் பக்கம் திரும்பினார்கள்” என்று விளக்குகிறார் கோவை மாவட்டத்தின் இனவரைவியலில் தீவிர ஆர்வம் கொண்ட கோவை பூச்சியியல் நிபுணர் பி. சிவகுமார்.

எப்போதும் நடப்பது போல, அந்த நம்பிக்கைக்கு அச்சம் மற்றும் வேதனையோடும் தொடர்பு இருந்தது. நகரத்தை பிளேக் நோய் பீடித்திருந்த காலத்தின் நடுவே, 1927இல் தத்துவ ஞானி பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் இப்படிக் கூறினார்: “மதம் என்பது முதன்மையாக அச்சத்தை அடிப்படையாகக் கொண்டது. அதில் ஒரு பகுதி, அறியப்படாதவை பற்றிய பீதி. இன்னொரு பகுதி, எல்லாப் பிரச்சினைகள் மற்றும் தகராறுகளிலும் நமக்கு அண்ணன் போல ஒருவர் துணைக்கு நிற்கிறார் என்று உணரும் விருப்பம்.”

இதுபோன்ற பல்வேறு காரணங்கள்தான் இந்த 16 கோவில்கள் இருப்பதற்கு அடிப்படையாக இருக்கின்றன.  இந்த தெய்வத்தின் பெயர்கூட மாற்றத்துக்கு உள்ளானது. “பிளேக் மாரியம்மன் என்கிற பெயரை ‘பிளாக்’ (கறுப்பு) மாரியம்மன்” என அழைக்கத் தொடங்கிவிட்டனர் என்கிறார் இளங்கோவன்.  மேலும் மாரி என்பதற்குத் தமிழில் கறுப்பு என்ற பொருளும் இருப்பதால் அந்த மாற்றம் சிக்கலின்றி நடந்தது” என்கிறார் அவர்.

வரலாற்றின் நிழல்களுக்குள் பிளேக் திரும்பிச் சென்று மறைந்துவிட்டாலும் தலைமுறை தலைமுறையாகக் கையளிக்கப்பட்ட நினைவுகள் பல்வேறு பரிமாணங்களை எடுக்கின்றன.

People turn to Plague Mariamman for prosperity and long life, but they also seek relief from diseases like chicken pox, skin ailments, viral infections, and now Covid-19
PHOTO • Kavitha Muralidharan

உதவி , வசதி மற்றும் நீண்ட ஆயுளுக்காக மக்கள் பிளேக் மாரியம்மனை நாடுகின்றனர் . அவர்கள் சின்னம்மை , தோல் வியாதிகள் , வைரஸ் தொற்றுகள், இப்போது கோவிட் -19 போன்ற நோய்களிலிருந்தும் நிவாரணம் நாடுகிறார்கள்

“நான் நோயுறும்போதெல்லாம் என் பெற்றோர் கோவிலுக்கு என்னை அழைத்துச் சென்றது நினைவில் இருக்கிறது,” என்கிறார் கோவையைச் சேர்ந்த 32 வயது நிகிலா சி. “என்னுடைய பாட்டி அடிக்கடி கோவிலுக்குச் செல்வார். கோவிலின் தீர்த்தம் நோயை குணமாக்க உதவுமென என் பெற்றோர் நம்பினார்கள். அவர்கள் பூஜைகளும் செய்திருக்கின்றனர்.  இன்று என் மகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனாலும் நான் அதைத்தான் செய்கிறேன். அவளை அங்கு அழைத்துச் சென்று பூஜைகள் செய்து தீர்த்தம் கொடுக்கிறேன். நான் என்னுடைய பெற்றோர் அளவுக்கு அடிக்கடி கோவிலுக்குச் செல்லாமல் இருக்கலாம். ஆனால் நான் சென்று கொண்டுதான் இருக்கிறேன். இந்த நகரத்தில் வசிப்பதன் ஒரு பகுதி அது என நினைக்கிறேன்” என்கிறார் அவர்.

*****

“நான் ஒரு நான்காம் தலைமுறைப் பூசாரியாக இங்கு பணிபுரிகிறேன். சின்னம்மை, தோல் நோய்கள், கோவிட்-19, வைரஸ் தொற்றுகள் ஆகியவற்றுக்கு நிவாரணங்கள் தேடி மக்கள் இன்னும் இங்கு வருகிறார்கள்” என்கிறார் டவுன் ஹால் பகுதியில் உள்ள பிளேக் மாரியம்மன் கோவிலில் பணிபுரியும் 42 வயது எம். ராஜேஷ் குமார். “இந்த அம்மன் இத்தகைய நோய்களிலிருந்து விடுவிப்பாள் என்று ஒரு நம்பிக்கை இருக்கிறது.”

“இந்தக் கோவில் 150 வருடங்களாக இருக்கிறது. கோவையில் பிளேக் பரவிய சமயத்தில் (1903-1942), என்னுடைய தாத்தாவின் தாத்தா இன்னொரு சிலையை பிளேக் மாரியம்மனாக நிர்மாணிக்க முடிவு செய்தார்.  அவருக்குப் பின் என் தாத்தாவும் என் தந்தையும் அதைப் பார்த்துக்கொண்டனர். நான் இப்போது பார்த்துக்கொள்கிறேன். அப்போதிருந்து அம்மனின் ஆளுகைக்குட்பட்ட பகுதி எங்கும் பிளேக் நோய் வரவேயில்லை. எனவே மக்கள் அவள் மீது தொடர்ந்து நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.”

கோவை சாய்பாபா காலனியிலும் இதே போன்ற ஒரு கதை சொல்லப்படுகிறது. “இக்கோவில் 150 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது” என்கிறார் 63 வயது வி.ஜி. ராஜசேகரன். இவர் இப்பகுதியின் பிளேக் மாரியம்மன் கோவிலின் நிர்வாகக் குழு உறுப்பினர். அதாவது, இக்கோவில் பிளேக் வருவதற்கு முன்பே கட்டப்பட்டிருக்கிறது.

இதில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால் இந்த இரு கோவில்களும் இவற்றைப் போன்ற பிற கோவில்கள் பலவும் ஏற்கனவே மாரியம்மன் கோவில்களாக இருந்தவை. மாரியம்மனின் பிற அவதாரங்களாக இந்த வடிவங்களை அவர்கள் கொண்டாடுகின்றனர். பிளேக் நோய் இப்பகுதியைத் தாக்கிப் பெரும் அழிவை ஏற்படுத்தியபோது, கூடுதல் அம்மன் கற்சிலைகள் பிளேக் மாரியம்மன் எனச் சொல்லி வைக்கப்பட்டன.

கோவில் நிர்மாணிக்கப்பட்டு சுமார் 30 வருடங்களுக்குப் பிறகு பிளேக் நோய் கோவையைத் தாக்கியபோது, “ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தது ஐந்து அல்லது ஆறு பேர் இறந்தனர்” என்கிறார் ராஜசேகரன்.  “குடும்பங்கள் தங்கள் குடும்பத்தினரின் மரணத்தைத் தொடர்ந்து, அல்லது பிளேக் நோய்ப் பரவல் அதிகரித்து எலிகள் கூரைகளிலிருந்து விழுந்ததைத் தொடர்ந்து குடும்பங்கள் வீடுகளை விட்டுச் சென்றன.  மீண்டும் அவர்கள் வீடு திரும்ப கிட்டத்தட்ட நான்கைந்து மாதங்கள் ஆகின” என்கிறார் அவர்.

V.G. Rajasekaran is an administrative committee member of the Plague Mariamman shrine in Coimbatore’s Saibaba Colony.
PHOTO • Kavitha Muralidharan
The temple existed from before the plague outbreaks in early to mid-20th century
PHOTO • Kavitha Muralidharan

இடது: வி.ஜி. ராஜசேகரன், கோவை சாய்பாபா காலனியில் உள்ள பிளேக் மாரியம்மன் கோவில் நிர்வாகக் குழு உறுப்பினர். வலது: 20ஆம் நூற்றாண்டில் பிளேக் தாக்குதல்கள் நிகழ்வதற்கு முன்பே இந்தக் கோவில் இருந்தது

அப்போது சிறிய கிராமமாக இருந்த சாய்பாபா காலனி மக்கள் பிளேக் நோய் குணமாக வேண்டுவதற்கென ஒரு தனிச் சிலையை நிர்மாணிக்க முடிவெடுத்து, அதை பிளேக் மாரியம்மன் என அழைக்க முடிவு செய்தார்கள். “எங்கள் குடும்பத்தில் இரண்டு பேர் இறந்தார்கள். என் மாமாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டபோது, என் பாட்டி அவரைக் கோவிலுக்கு அழைத்து வந்து பிளேக் மாரியம்மனுக்கு முன்னால் கிடத்தினார். வேம்பையும் மஞ்சளையும் அவர் மீது பூசினார். என் மாமா குணமாகிவிட்டார்.”

அப்போதிலிருந்து அந்தக் கிராமமும் இன்னும் பல கிராமங்களும் (தற்போது அவை கோவை நகரத்தைச் சேர்ந்ததவை), மாரியம்மனைக் கும்பிட்டால் பிளேக் நோயிலிருந்து தப்பிக்கலாம் என நம்பத் தொடங்கின.

பிளேக் மாரியம்மன் கோவில்கள் பெரும் எண்ணிக்கையிலும் அருகருகிலும் இருப்பதற்கு இதுதான் காரணமாக இருக்கும் என்கிறார் இளங்கோவன். “சாய்பாபா காலனி, பீளமேடு, பாப்பநாயக்கன்பாளையம், டவுன்ஹால் மற்றும் பிற பகுதிகள் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வெவ்வேறு கிராமங்களாக இருந்திருக்கும். இன்று அவை அனைத்தும் கோவையின் பகுதிகளாக இருக்கின்றன” என்கிறார் அவர்.

எழுத்தாளரும் தமிழ்ப் பண்பாட்டின வரலாற்றைப் பதிவு செய்பவருமான ஸ்டாலின் ராஜாங்கம் இப்படிச் சொல்கிறார்: ”பிளேக் மாரியம்மன் வழிபாடு என்பது ஒரு பெரும் அழிவை ஏற்படுத்திய நோய்க்கான மிக இயற்கையான எதிர்வினை. இந்த நம்பிக்கையின் பண்பு இதுதான்: உங்கள் பிரச்சினைகளுக்கும் கவலைகளுக்கும் தீர்வு காண நீங்கள் கடவுளை வழிபடுகிறீர்கள். மனிதகுலத்தின் ஆகப்பெரிய பிரச்சினை நோய்தான்.  எனவே, நோய்களிலிருந்து நிவாரணம் பெறுவதை மையமாகக் கொண்டே நம்பிக்கைகள் அமைந்திருப்பது இயல்புதான்.”

“கிறித்துவத்திலும் இஸ்லாத்திலும்கூட இது பொதுவாக இருப்பதுதான்” என்கிறார் ராஜாங்கம். “மசூதிகளில் குழந்தைகளுக்கான நோய்களுக்கு சிகிச்சை வழங்கப்படுகின்றன. கிறித்துவத்தில் ஆரோக்கிய மாதாவை வழிபடுகிறோம். புத்த பிக்குகள் மருத்துவம் பயின்றதாக அறியப்படுபவர்கள். தமிழ்நாட்டில் சித்தர்கள் இருந்தனர். அவர்கள் அடிப்படையில் மருத்துவம் செய்தவர்கள். அதனால்தான் இங்கே சித்த மருத்துவப் பிரிவு என ஒன்று இருக்கிறது” என்கிறார் அவர்.

தமிழ்நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு மாரியம்மன் கோவில் இருக்கும். அவள் பெயர் சில இடங்களில் மாறி இருக்கலாம். ஆனால் அவளுக்கான கோவில்கள் அங்கு நிச்சயம் இருக்கும். குறிப்பிட்ட சில கடவுளர்கள், அவர்களுடைய கோபம், அல்லது குணமாக்கும் திறன் என்பவை ஒரு மதத்துக்கோ ஒரு நாட்டுக்கோ மட்டும் உரியவை அல்ல. உலகெங்கும் உள்ள அறிஞர்கள் பிளேக் நோய்கள் மற்றும் கொள்ளை நோய்களுக்கான மத ரீதியான எதிர்வினைகளுக்கு கடந்த சில பத்தாண்டுகளில் மேலும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

A temple in the Pappanaickenpudur neighbourhood of Coimbatore. Painted in red, the words at the entrance say, Arulmigu Plague Mariamman Kovil ('temple of the compassionate Plague Mariamman')
PHOTO • Kavitha Muralidharan

கோவையில் உள்ள பாப்பநாயக்கன்புதூரில் ஒரு கோவில். நுழைவாயிலில் சிவப்பு வண்ணத்தில் எழுதப்பட்டிருப்பவை ‘அருள்மிகு பிளேக் மாரியம்மன் திருக்கோவில்’ என்ற சொற்கள்

வரலாற்றாளர் டுவேன் ஜே. ஓஷைம் 2008இல் வெளியிட்ட மதமும் கொள்ளை நோயும் என்ற ஆய்வில் குறிப்பிட்டுள்ளபடி, “கொள்ளை நோய்க்கென ஒரே விதமான அல்லது கணிக்கத்தக்க மத ரீதியான எதிர்வினை எதுவும் இல்லை.  மத ரீதியான எதிர்வினைகள் எப்போதும் ஊழி குறித்தவை என்று நினைப்பதும் சரியல்ல. பாலினம், வர்க்கம், அல்லது இனம் போல மதமும் ஒரு பகுப்பாய்வு வகைப்பாடுதான் என்று ஏற்பது மேலானதாக இருக்கும். கொள்ளை நோய்க்கான மத ரீதியான பதில்வினையை, தாக்கம் ஏற்படுத்தும் நோய் மற்றும் அதற்கான மனித பதில்வினைகளை ஆய்வு செய்வதற்கான ஒரு சட்டகமாக, தொடர்ந்து மாற்றமடைந்துகொண்டிருக்கும் ஒரு சட்டகமாகப் பார்ப்பதே சிறந்தது.”

*****

வருடாந்திர அம்மன் திருவிழாக்கள் தமிழ்நாட்டில் இன்றும் வழமையாக நடக்கின்றன. பொது சுகாதாரத்துக்கும் மத நம்பிக்கைக்கும் இடையே இருக்கும் உறவைப் புரிந்துகொள்ள வேண்டிய தேவையை இவை வலுப்படுத்துவதாகச் சொல்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம். இந்தத் திருவிழாக்கள் வழக்கமாகத் தமிழ்நாட்டின் எல்லா அம்மன் கோவில்களிலும் ஆடி மாதத்தில் (ஜூலை மத்தியில் தொடங்கி ஆகஸ்டு நடுப்பகுதி வரை) நடக்கின்றன.

“அதற்கு முந்தைய மாதங்களான சித்திரை, வைகாசி, ஆனி (ஏப்ரல் மத்தியில் தொடங்கி மே நடுப்பகுதி வரை, மே மத்தியில் தொடங்கி ஜூன் நடுப்பகுதி வரை, ஜூன் மத்தியில் தொடங்கி ஜூலை நடுப்பகுதி வரை) ஆகியவை வெயில் கொளுத்தும் மாதங்கள்” என்கிறார் ராஜாங்கம். “நிலமும் உடலும் வறட்சியாக இருக்கும். வறட்சி அம்மை நோயை விளைவிக்கும். இரண்டிற்கும் குளுமைதான் நிவாரணம். திருவிழாக்கள் அதைத்தான் தருகின்றன” என்கிறார் அவர்.

முத்து மாரியம்மன் வழிபாடு என்பது சின்னம்மை மற்றும் பெரியம்மையிலிருந்து குணமாக வேண்டுவதுதான். “அந்த நோய் தோலில் சிறு கட்டிகளை விளைவிப்பதால் இந்த அம்மன் ‘முத்து’  என்று அழைக்கப்பட்டாள். அம்மை நோயைத் திறம்படக் கையாளும் மருத்துவ ரீதியான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனாலும் கோவில்களில் தொடர்ந்து மக்கள் குவிகின்றனர்.”

திருவிழாக்கள் சார்ந்த சில சடங்குகளில் அறிவியல் மதிப்பு எதுவும் இல்லாவிட்டாலும் மருத்துவத் தன்மை கொண்டவை என்கிறார் ராஜாங்கம். “திருவிழா ஓர் ஊரில் அறிவிக்கப்பட்டதும் காப்புக் கட்டுதல் என்ற சடங்கு நடக்கும். அதையடுத்து மக்கள் ஊரை விட்டு வெளியே செல்லக்கூடாது. அவர்களின் குடும்பங்களிலும் தெருக்களிலும் ஊரிலும் சுகாதாரத்தைப் பேண வேண்டும். கிருமிநாசினியாக அறியப்படும் வேப்ப இலைகள் திருவிழாக்களின்போது அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன” என்கிறார் அவர்.

கோவிட்-19 தொற்றுக்கான தீர்வை கண்டுபிடிக்க அறிவியல் சமூகம் போராடிக்கொண்டிருந்த சமயத்தில் அறிவிக்கப்பட்ட விதிமுறைகளும் இதே வகையில்தான் இருந்ததாகச் சுட்டிக்காட்டுகிறார் ராஜாங்கம். “சுகாதாரத்துக்குத் தனிநபர் இடைவெளி பேணப்பட்டது, சானிடைசர் பயன்படுத்தப்பட்டது. சில சமயங்களில் மக்கள் வேப்ப இலைகளைப் பயன்படுத்தினர். ஏனெனில் கோவிட் வந்தபோது வேறு என்ன செய்வது என்று அவர்களுக்குத் தெரியவில்லை” என்றார் அவர்.

தனிமைப்படுத்துவதும் ஏதேனும் ஒருவித சானிடைசரும் பரந்துபட்ட நடைமுறைதான்.  கோவிட் பரவலின்போது ஒடிஷாவின் பொதுச் சுகாதார அதிகாரிகள், தனிமைப்படுத்துதல் மற்றும் தனிநபர் இடைவெளியை வலியுறுத்தப் பூரி ஜகன்னாதரை உதாரணமாகப் பயன்படுத்தினர். ஜகன்னாதர் வருடாந்தர ரத யாத்திரைக்கு முன்பு தன்னைத் தனிமைப்படுத்தல் அறையில் பூட்டிக்கொள்வதை அதிகாரிகள் மக்களுக்குச் சுட்டிக்காட்டினர் .

The doorway of a Plague Mariamman temple in Coimbatore’s Peelameedu area
PHOTO • Kavitha Muralidharan

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிளேக் மாரியம்மன் கோவிலின் வாசல்

பெண் தெய்வம் நோயை எதிர்த்துப் போராடுவது “எந்த அளவுக்குப் பரவலானது என்றால் கர்நாடகாவில் எய்ட்ஸுக்கு ஓர் அம்மன் கோவில் இருக்கிறது” என்கிறார் எழுத்தாளரும் நியூயார்க்கின் சியனா பல்கலைக்கழகத்தின் மத ஆய்வுகளுக்கான உதவிப் பேராசிரியருமான எஸ். பெருந்தேவி.

மாரியம்மன் வழிபாடு என்பது “மிகவும் பரந்துபட்ட விஷயம்” என்கிறார் அவர்.  “உண்மையில் தமிழில் மாரி என்பதற்கு மழை என்றும் பொருள் உண்டு. முளைப்பாரி போன்ற குறிப்பிட்ட சில சடங்குமுறைகளில் மாரியம்மன் பயிராகக் கருதப்பட்டு வழிபடப்படுகிறாள். சில சமயஹ்களில் அவள் ரத்தினக் கற்களாக வழிபடப்படுகிறாள். எனவே அவள் நோயைத் தருபவளாகவும் நோயாகவும் நோயின் தீர்வாகவும் இருக்கிறாள். அதேதான் பிளேக் நோய் விஷயத்திலும் நேர்ந்திருக்கிறது.” ஆனால் நோயை ஆராதிப்பது பற்றிப் பெருந்தேவி எச்சரிக்கிறார். “மாரியம்மன் பற்றிய நாட்டார் வழக்காறு, நோயை எதிர்கொள்வதை வாழ்க்கையின் ஓர் அங்கமாக ஏற்றுக்கொண்டு தீர்வுகளைக் காணவைப்பதற்கான முயற்சி” என்கிறார் அவர்.

******

சரி, மாரியம்மன் என்பது யார்?

இந்தத் திராவிடத் தெய்வம் நீண்ட காலமாக ஆய்வாளர்களையும் வரலாற்றாளர்களையும் நாட்டுப்புறவியலாளர்களையும் ஈர்த்திருக்கிறது.

தமிழ்நாட்டுக் கிராமங்களிலேயே மிகவும் பிரபலமான கடவுள் மாரியம்மன். அங்கெல்லாம் அவள் காவல் தெய்வமாக வணங்கப்படுகிறாள்.  அவளைப் பற்றிப் பல்வேறு இடங்களிலிருந்து பல்வேறு விதமான கதைகள் வழங்கப்படுகின்றன.

சில வரலாற்றாய்வாளர்கள் பௌத்த மரபைச் சுட்டுகிறார்கள். நோய்வாய்ப்பட்ட மக்கள், குறிப்பாக பெரியம்மையில் பாதிக்கப்பட்டவர்கள் குணமாவதற்காக நாடிய நாகப்பட்டினத்து பௌத்தத் துறவியாக அவளை அடையாளம் காண்கிறார்கள். இந்தத் துறவி அவர்களை புத்தர் மீது நம்பிக்கை வைக்கும்படி கேட்டுக்கொண்டு, பலருக்கு வேப்ப இலைக் களிம்பு மற்றும் தொழுகையைக் கொண்டு சிகிச்சை அளித்து குணமாக்கினார். அவர் சுத்தம், சுகாதாரம், ஈகை ஆகியவை குறித்து அறிவுரை அளித்தார்.  அவர் நிர்வாண நிலை அடைந்ததும் மக்கள் அவருக்கு சிலை வைத்தார்கள். அங்கிருந்து மாரியம்மன் கதை தொடங்கியது என்கிறது மரபு.

இன்னும் பலவிதக் கதைகள் இருக்கின்றன. போர்த்துக்கீசியர் கதைகூட உண்டு. அவர்கள் நாகப்பட்டினத்துக்கு வந்தபோது அத்துறவிக்கு மேரி அம்மன் எனப் பெயர் சூட்டி அவள் கிறித்துவத் தெய்வம் என்று உரிமை கொண்டாடினார்களாம்.

Wall panels in the inner sanctum in Peelamedu temple give the details of consecration ceremonies performed in 1990 and 2018.
PHOTO • Kavitha Muralidharan
Stone figures representing three goddesses in the temple: (from the left) Panniyariamman, Plague Mariamman and Badrakaliamman
PHOTO • Kavitha Muralidharan

இடது: பீளமேடு கோயிலின் கருவறையின் பக்கவாட்டுச் சுவர்களில் உள்ள பதிவுகள், 1990 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் செய்யப்பட்ட கும்பாபிஷேக விழாக்களின் விவரங்களைத் தருகின்றன. வலது: கோயிலுக்குள் மூன்று தெய்வங்களைக் குறிக்கும் கல் உருவங்கள். இடமிருந்து: பண்ணாரி மாரியம்மன், பிளேக் மாரியம்மன் மற்றும் பத்ரகாளியம்மன்

இன்னும் சிலர் அவள் பெரியம்மை மற்றும் பிற தொற்றுநோய்களுக்கான வட இந்திய தெய்வம்  ஷீதலாவின் ஒரு வடிவம்தான் என்கின்றனர். ஷீதலா (சமஸ்கிருதத்தில் ’குளிர்விப்பவள்’ என்று பொருள்) சிவனின் மனைவியான பார்வதியின் அவதாரமாகப் பார்க்கப்படுகிறார்.

ஆனால் கடந்த சில பத்தாண்டுகளாக நடக்கும் ஆய்வுகளிலிருந்து வெளிவரும் சான்றுகள், அவள் ஒரு கிராமப்புற மக்களின் தெய்வம் எனக் கூறுகின்றன. அவள் தலித்துகள் மற்றும் தாழ்த்தப்பட்ட சாதியினரால் வணங்கப்பட்டாள் – உண்மையில், தலித் பூர்வீகத்தைக் கொண்டவள் என்கின்றன.

பல காலமாக மாரியம்மனுக்கு மிகுந்த செல்வாக்கும் ஈர்ப்பும் இருப்பதால் உயர்சாதியினர் அவளைத் தங்கள் மரபுக்குள் ஐக்கியப்படுத்தவும் கைப்பற்றவும் முயன்றிருக்கிறார்கள் என்பதில் ஆச்சரியம் இல்லை.

வரலாற்றாளரும் எழுத்தாளருமான கே.ஆர். ஹனுமந்தன் 1980இலேயே தமிழ்நாட்டில் மாரியம்மன் வழிபாடு என்ற ஆய்வில் சுட்டிக்காட்டியது போல, “தமிழ்நாட்டின் பூர்வகுடிகளால் வணங்கப்பட்ட புராதன திராவிடத் தெய்வம் மாரியம்மன் என்பது ... அத்தெய்வத்திற்கு அந்நாளைய ‘தீண்டத்தகாதோ’ரும் தமிழ்நாட்டின் திராவிட மக்களின் மிகப்பழைய பிரதிநிதிகளுமான பறையருடன் உள்ள தொடர்பில் புலனாகிறது.”

பல மாரியம்மன் கோவில்களில் பறையர்கள்தாம் “நீண்ட காலமாகப் பூசாரிகளாகச் செயல்பட்டுவந்திருப்பது போல் தெரிகிறது” என்கிறார் ஹனுமந்தன். “உதாரணமாக, சென்னைக்கு அருகே இருக்கும் திருவேற்காட்டின் கருமாரியம்மன் கோவிலில். இங்கு பறையர்கள்தான் முதலில் பூசாரிகளாக இருந்தனர். பிறகு அறநிலையச் சட்டம் [1863] நடைமுறைக்கு வந்தபிறகு அவர்களுக்கு பதிலாக பிராமணர்கள் பூசாரிகள் ஆனார்கள்” என்கிறார் அவர். விளிம்பு நிலைச் சமூகங்களின் கோவில்கள் உயர்சாதியினர் கையில் எடுத்துக்கொள்வதற்கான சட்டபூர்வ அனுமதியை இந்த பிரிட்டிஷ் காலனியச் சட்டம் அளித்தது. சுதந்திரம் பெற்ற பிறகு தமிழ்நாடு போன் மாநிலங்கள் இந்த அநீதியைச் சரிசெய்வதற்கென தங்கள் சொந்தச் சட்டங்களை இயற்றின.

*****

அதற்காக ‘கொரோனா தேவி’ கோவில் வைப்பதா? நிஜமாகவா?

தேவைதான் என்கிறார் இருகூரில் இருக்கும் அக்கோவிலின் மேலாளரான ஆனந்த் பாரதி. “பிளேக் மாரியம்மன் வழிபாட்டின் மரபில் வந்ததுதான் இதுவும்” என்கிறார் அவர். “கொரோனா தேவிக்கென ஒரு சிலையை (ஏற்கனவே இருந்த கோவிலில்) நிறுவ நாங்கள் முடிவு செய்தபோது நோய் உச்சத்தில் இருந்தது. வழிபாடு மட்டுமே நம்மைக் காப்பாற்ற முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்கிறார் அவர்.

எனவே, கோவிட்-19 வந்தபோது, 2020இன் பிற்பகுதியில் நாட்டில் இந்த நோய்க்காகக் கோவில்கள் தோன்றிய சில இடங்களில் கோவையும் ஒன்று.

ஆனால் கொரொனா மாரியம்மன் என்று இல்லாமல் ஏன் தேவி என்று இருக்கிறது? அச்சொற்களை இணைப்பதில் ஒலி மற்றும் மொழி ரீதியான சிக்கல்கள் உள்ளன என்கிறார் பாரதி. “மாரியம்மன் என்ற வார்த்தை பிளேக் என்ற வார்த்தையுடன் சரியாகப் பொருந்துகிறது, ஆனால் கொரோனா என்ற வார்த்தையுடன் பொருந்தவில்லை. எனவே தேவி என்று அழைக்க முடிவெடுத்தோம்” என்கிறார் அவர்.

There is a Mariamman temple in almost every village of Tamil Nadu. She may have a different name in some regions, but her shrines are there

தமிழ்நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு மாரியம்மன் கோவில் இருக்கும். அவள் பெயர் சில இடங்களில் மாறி இருக்கலாம்

மருத்துவ முன்னேற்றங்கள் நிகழ்ந்தாலும், இந்தத் தெய்வத்தின் வழிபாடும் தொடர்புடைய சடங்குகளும் உடல்நலப் பிரச்சினைகளுக்கான பொதுமக்களின் பதில்வினைகளின் ஒரு பகுதியாகத் தொடர்கின்றன.

ஆனால் பிளேக் மாரியம்மன் கோவில்களைப் போலில்லாமல், கொரோனா தேவி கோவில், வழிபடுபவர்களை பெரும்பாலும் நேரில் வர அனுமதிக்கவில்லை. காரணம், பொது முடக்கம். கொடிய வைரஸிடமிருந்து காப்பதற்காக உருவாக்கப்பட்ட கோவில் அதன் தெய்வத்தை மட்டுமின்றிப் பெருந்தொற்றுப் பாதுகாப்புக்கான நெறிமுறைகளையும் புனிதமாகக் கருத வேண்டியிருக்கிறது போலும். கிட்டத்தட்ட 48 நாட்களுக்கு யாகம் நடத்தி கொரோனா தேவியின் களிமண் சிலையை ஆற்றில் கரைத்ததாகக் கூறுகிறது கோவில் நிர்வாகம். தற்போது கோவில் அனைவருக்கும் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் கும்பிடுவதற்கு ஒரு கடவுள் சிலை அங்கு இல்லாதிருப்பது அவர்களுக்குக் கலக்கத்தை ஏற்படுத்தலாம்.

பிளேக் மாரியம்மன் கோவில்கள் போல் கொரோனா தேவி கோவிலும் கோவையின் பண்பாட்டுக் கூறுகளில் ஒரு பகுதிதான் என்ற கருத்தை இளங்கோவன் போன்ற எழுத்தாளர்கள் நிராகரிக்கின்றனர். “இது அதிகபட்சம் ஒரு விளம்பர உத்தி. பிளேக் மாரியம்மன் கோவில்களுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. இரண்டையும் நீங்கள் ஒப்பிட முடியாது. பிளேக் மாரியம்மன் கோவில்கள் கோவையின் வரலாறு மற்றும் பண்பாட்டில் உள்ளார்ந்த பகுதிகள்” என்கிறார் அவர்.

பிளேக் நோய் மோசமான நினைவாக மட்டுமே எஞ்சியிருக்கிறது என்றாலும் கோவையில் இருக்கும் பிளேக் மாரியம்மன் கோவில்கள் இன்றும் மக்களைப் பெருந்திரளில் ஈர்த்துக்கொண்டிருக்கின்றன. 2019இல் கோவிட் வருவதற்கு முன்பு, பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள பிளேக் மாரியம்மன் கோவிலில் ஒரு திருவிழாவின்போது ஒரு கிளி தெய்வத்தின் சிலை மீது அமர்ந்து சிறு பரபரப்பு ஏற்பட்டது. பக்தர்களுக்குத் தலைகால் புரியவில்லை.

உள்ளூர்ப் பதிவுகளின்படி, சில மணிநேரங்களுக்கு நீடித்த அந்த ‘நிகழ்வு’ இன்னும் அதிகமான மக்களைkd கோவிலுக்கு அழைத்துவந்தது. “மாரியம்மன் ஒரு கிராம தெய்வம். அவள் கோவில்கள் ஒருபோதும் சாமானிய மக்களிடம் முக்கியத்துவத்தை இழக்காது” என்கிறார் இளங்கோவன். “உதாரணமாக, டவுன்ஹாலின் கோணியம்மன் கோவில் திருவிழாவுக்குப் புனிதத் தீக்குழி, அதே பகுதியில் இருக்கும் பிளேக் மாரியம்மன் கோவிலில் உருவாக்கப்படுகிறது. இந்தச் சடங்குகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை. கோவையின் காவல்தெய்வமாக கோணியம்மன் கருதப்படுகிறது.

இன்றைய தலைமுறையில் பலருக்கு இத்தனை நுட்பமான வரலாறும் நம்பிக்கைகளும் பற்றித் தெரிவதில்லை. எனினும் இந்தக் கோவில்கள் அவர்களுக்கு முக்கியமாக இருக்கின்றன. “உண்மையில் இந்தக் கோவில்களுக்கு இத்தகைய வரலாறு இருப்பது எனக்குத் தெரியவே தெரியாது” என்கிறார் கோவையைச் சேர்ந்த 28 வயது தொழில்முனைபவரான ஆர். நாராயண். “ஆனால் கோவிலுக்கு நான் என் அம்மாவுடன் தொடர்ந்து சென்றுகொண்டிருக்கிறேன். இனியும் செல்வேன். இதனால் எனக்கு எதுவும் மாறிவிடவில்லை. அல்லது எனக்கு பயபக்தி அதிகமாகக்கூடும்” என்கிறார் அவர்.

கவிதா முரளிதரன் , பொது சுகாதாரம் மற்றும் சமூக விடுதலை பற்றிய செய்திகளை தாகூர் குடும்ப அறக்கட்டளை வழங்கிய சுயாதீன பத்திரிகையாளர் மானியத்தின் கீழ் அளித்து வருபவர். இந்த கட்டுரையின் எப்பகுதியிலும் தாகூர் குடும்ப அறக்கட்டளை தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தவில்லை.

தமிழில் : ராஜசங்கீதன்

Kavitha Muralidharan

ਕਵਿਥਾ ਮੁਰਲੀਧਰਨ ਚੇਨੱਈ ਅਧਾਰਤ ਸੁਤੰਤਰ ਪੱਤਰਕਾਰ ਅਤੇ ਤਰਜ਼ਾਮਕਾਰ ਹਨ। ਪਹਿਲਾਂ ਉਹ 'India Today' (Tamil) ਵਿੱਚ ਸੰਪਾਦਕ ਸਨ ਅਤੇ ਉਸ ਤੋਂ ਪਹਿਲਾਂ 'The Hindu' (Tamil) ਵਿੱਚ ਰਿਪੋਰਟਿੰਗ ਸੈਕਸ਼ਨ ਦੀ ਹੈਡ ਸਨ। ਉਹ ਪਾਰੀ (PARI ) ਦੀ ਵਲੰਟੀਅਰ ਹਨ।

Other stories by Kavitha Muralidharan
Illustrations : Priyanka Borar

ਪ੍ਰਿਯੰਗਾ ਬੋਰਾਰ ਨਵੇਂ ਮੀਡਿਆ ਦੀ ਇੱਕ ਕਲਾਕਾਰ ਹਨ ਜੋ ਅਰਥ ਅਤੇ ਪ੍ਰਗਟਾਵੇ ਦੇ ਨਵੇਂ ਰੂਪਾਂ ਦੀ ਖੋਜ ਕਰਨ ਲਈ ਤਕਨੀਕ ਦੇ ਨਾਲ਼ ਪ੍ਰਯੋਗ ਕਰ ਰਹੀ ਹਨ। ਉਹ ਸਿੱਖਣ ਅਤੇ ਖੇਡ ਲਈ ਤਜਰਬਿਆਂ ਨੂੰ ਡਿਜਾਇਨ ਕਰਦੀ ਹਨ, ਇੰਟਰੈਕਟਿਵ ਮੀਡਿਆ ਦੇ ਨਾਲ਼ ਹੱਥ ਅਜਮਾਉਂਦੀ ਹਨ ਅਤੇ ਰਵਾਇਤੀ ਕਲਮ ਅਤੇ ਕਾਗਜ਼ ਦੇ ਨਾਲ਼ ਵੀ ਸਹਿਜ ਮਹਿਸੂਸ ਕਰਦੀ ਹਨ।

Other stories by Priyanka Borar
Translator : Rajasangeethan

ਰਾਜਸੰਗੀਥਨ ਚੇਨਈ ਅਧਾਰਤ ਲੇਖਕ ਹਨ। ਉਹ ਤਾਮਿਲ਼ ਦੇ ਪ੍ਰਮੁੱਖ ਨਿਊਜ਼ ਚੈਨਲ ਨਾਲ਼ ਇੱਕ ਪੱਤਰਕਾਰ ਵਜੋਂ ਕੰਮ ਕਰਦੇ ਹਨ।

Other stories by Rajasangeethan