அவள் ஒரு வாரமாக தூக்கமில்லாமல் இருந்தாள். ஒரு காலத்தில் வளமாக இருந்து இன்று உயிரற்று இருக்கும் யமுனாவின் நீர் படுகையில் அவள் சமீபத்தில் கண்டுபிடித்த விஷயம் அவளது வாழ்க்கையின் மிக மோசமான கண்டுபிடிப்பாக மாறிக்கொண்டிருந்தது. அவளும் அவளது குழுவும் நவீனகால ஆரியவர்த்தா முழுவதும் பயணம் செய்து கொண்டிருந்தனர், கட்டுக்கதைகள் மற்றும் கதைகளின் அடிப்படையில் நாடு முழுவதும் தோண்டப்பட்டது. ஒவ்வொரு தோண்டலும் தற்காலிகமான மயானங்களாகவும் சுடுகாடுகளாகவும் மாற்றப்பட்ட தெருக்களை சென்றடைந்தது. பழுப்பு மண்ணில் இருந்து வந்த எலும்புக்கூடுகள், மண்டை ஓடுகள் மற்றும் துண்டிக்கப்பட்ட எலும்புகள் யாவும் ஆரம்பத்தில் அவள் கொண்டிருந்த ஆர்வத்தை திகிலாக மாற்றியது.
அவர்கள் வித்தியாசமான ஒன்றைக் கண்ட தருணங்களும் இருந்தன. சில கிலோமீட்டர் தொலைவில், சரயு நதி இருந்த இடத்தில், ஒரு பழைய கோவிலின் இடிபாடுகளை அவள் கண்டுபிடித்தாள். அறியப்படாத கட்டமைப்பில் கற்களுடன் இணைக்கப்பட்ட செப்புத் தகடுகள் ஒரு பழைய சகாப்தத்திற்கு இட்டுச் செல்வதாக இருந்தன. அது வேறுபட்ட கட்டடக்கலையாக இருந்தது. சில செங்கற்களில் அறியப்படாத வரிவடிவத்தில் ஒரு வார்த்தை செதுக்கப்பட்டிருப்பதை அவள் கண்டுபிடித்தாள். அண்மையில் யமுனாவின் மேற்குக் கரைக்கு அருகே மற்றொரு கல்லறை போன்ற அமைப்பின் அருகே அவர்கள் கண்டுபிடித்த கற்பலகையின் வரிவடிவத்தை அவள் நினைவு கூர்ந்தாள். உயரமான சிலைகளையும் அவர்கள் கண்டுபிடித்தனர். சிலவை 182 மீட்டர் உயரம் கூட இருந்தன. ஆனால் எல்லாவற்றையும் விட அதிகமாக இருந்தது எலும்புக்கூடுகள்தான்.
அவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு மத்தியில் பெரிய அளவிலான ஒரு முக்கோண அமைப்பைக் கண்டுபிடித்தனர். அது ஒரு மன்னனின் நீதிமன்றம் போல காட்சியளித்தது. யமுனையின் கரையில் இறந்தவர்களை ஆட்சி செய்திருக்கக் கூடிய ஒரு மன்னனின் அரண்மனையையும் கண்டுபிடித்தார்கள். அதிர்ச்சியடைந்த அவள் அதற்கு சம்ஷன் நகர் என்று பெயரிட்டாள். புதைந்த கல்லறைகளிலிருந்து உடைந்த தூண்கள் வெளிப்பட்டன. அவள் பங்குபெற்றிருந்த, வரலாறு மற்றும் தடயவியல் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் குழு, வரலாற்றின் மிகப்பெரிய படுகொலையின் தோற்றத்தை கொடுத்த அந்த கண்டுபிடிப்பை என்னவென புரிந்துகொள்ள முடியாமல் திணறியது.
மகுடம் சூடிய தலை
ஒரு காலத்தில்
சடலங்கள் அடுக்கப்பட்டு,
மயானங்கள் காய்ந்து போய்
வாழ்க்கை ஸ்தம்பித்து
மண்ணை போல் நழுவிய போது
தன் நிலத்தில் உயரிய ரதத்தில்
வலம் வந்த மன்னனுக்கு
இதோ ஒரு பாட்டு.
மக்கள் மூச்சிக்காற்றுக்கு
திணறி அழுது மடிந்த போது
எல்லாமும் சரியாக உள்ளதாக நினைத்து
மன்னன் அவனது தனிசொர்க்கத்தில் வாழ்ந்தான்.
பளபளப்பாக ஆடம்பரத்துடன்
புதுமையான மாடத்துடன்
புதிய வீடு கட்ட கஜானாவை காலி செய்தான்
வாழ இடம் இல்லாமல் மரித்தவர்கள்
தெருக்களுக்கு தள்ளப்பட்டனர்.
சம்பிரதாயங்கள் இல்லை சடங்குகள் இல்லை
இறுதி பிரியாவிடையும் இல்லை
பிரியமான ஒரு உறவினரின் ஒரு நண்பனின்
அல்லது ஒரு அறிவான வயதான பேராசிரியரின்
மற்றுமொரு மரணச் செய்தி வருமோ என்று
ஒலிக்கும் அலைபேசியை எடுக்க
மனங்கள் ரணப்பட்டன கைகள் பயந்தன.
ஆனால் அது அந்த மன்னன் தான்
அரண்மனையின் உச்சியிலிருந்து புன்னகைத்து
சிறு கிருமி ஒன்றை அழித்த தனது பெரும் வெற்றிகளை பறைசாற்றிக் கொண்டிருந்தான்!
நாம் நம்பிக்கை கொள்வோம்
என்றோ ஒருநாள்
பெரும் ஒஸிமாண்டியாசின்
மற்றுமொரு சிறுகதையில்
அவன் நினைவுகூரப்படுவான் என்று.
ஒலி: சுதன்வா தேஷ்பாண்டே ஜனா நாத்யா மஞ்ச் என்ற நாடகக் குழுவின் நடிகரும் இயக்குநரும் ஆவார். இவர் Left Word பதிப்பகத்தின் ஆசிரியருமாவார்.
தமிழில் : கவிதா கஜேந்திரன்