குளிர்கால காற்று வீசுகிறது. சாலையிலிருந்த தூசை மழை சகதியாகி விட்டது. சிங்குவின் போராட்டக் களத்துக்கு செல்லும் சில வழிகளில் மழை நீர் தேங்கியிருக்கிறது. இப்பகுதிகளை மக்கள் தவிர்க்க முடியாது. அவர்களின் காலணிகளை சகதி அப்பிவிடுகிறது.
பல்வேறு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா மேடையை ஹரியானா-தில்லி எல்லையிலுள்ள சிங்கு போராட்டகளத்தில் தாண்டிய பிறகு அவர்களுக்கு உதவி கிடைக்கிறது. நூறு மீட்டர் தூரத்தில் ஜஸ்விந்தர் சிங் சைனியும் பிரகாஷ் கவுரும் காலணிகளை சுத்தப்படுத்தி பளபளப்பாக்கும் வேலையை செய்து கொண்டிருக்கின்றனர்.
“1986ம் ஆண்டில் எங்களுக்கு குழந்தை பிறந்தபோது, மனிதகுலத்துக்கு என்னை அர்ப்பணித்துக் கொள்ள முடிவெடுத்தேன்,” என்கிறார் கைவினை பொருட்களை ஏற்றுமதி செய்யும் 62 வயது வணிகர் ஜஸ்விந்தர்.
35 வருடங்களாக அந்த தம்பதியர் சேவை செய்யவென குருத்வாராக்களுக்கு சென்று கொண்டிருக்கின்றனர். அங்கு வரும் பக்தர்களின் காலணிகளை சுத்தம் செய்கின்றனர். நான்கு பேர் இருக்கும் அக்குடும்பம் தில்லியில் வசிக்கிறார்கள். ஹரியானாவின் அம்பாலா மாவட்ட நாராய்ண்கரில் 20 ஏக்கர் நிலம் வைத்திருக்கிறார்கள்.
அவர்களின் காலத்தை சேவைக்கு அர்ப்பணித்ததாக சொல்லும் ஜஸ்விந்தர், “கற்பனைகளுக்கு அப்பாற்பட்டு என் மனைவி சேவை செய்திருக்கிறார்,” என்கிறார். அவர் பேசிக் கொண்டிருக்கையிலேயே 50 வயது பிரகாஷ் ஒரு ஜோடி காலணிகளை துடைத்துக் கொண்டிருக்கிறார்.






