“ஆற்றில் விவசாயம் செய்வது மிகவும் வசதியாக இருக்கிறது – அறுவடைக்குப் பிறகு பயிர்களின் அடிக்கட்டைகள் எஞ்சியிருப்பதில்லை. அதைப்போலவே இங்கே களைகளும் வளர்வதில்லை.“
மகாசாமுண்ட் மாவட்டம், கோதாரி கிராமத்தைச் சேர்ந்தவர் குந்தி பானே. தாம்தாரி மாவட்டம், நக்ரி நகரத்துக்கு அருகே உள்ள பார்சியா கிராமத்தின் வழியாகப் பாயும் மகாநதி ஆற்றின் மணற்படுகையில் விவசாயம் செய்யும் 50-60 விவசாயிகளில் ஒருவர் இவர். “கடந்த பத்தாண்டுகளாக இதைச் செய்துவருகிறேன். நானும் என் கணவரும் இங்கே வெண்டைக்காய், பீன்ஸ், கிர்னி பழம் ஆகியவற்றைப் பயிரிடுகிறோம்,” என்கிறார் குந்தி. அவருக்கு வயது 57.
புற்கள் வேய்ந்த சிறு குடிலில் அமர்ந்தபடி அவர் பேசினார். ஒரு ஆளுக்குப் போதுமானதாகவும், லேசான மழை வந்தால் நனையாத அளவு உறுதியாகவும் இருந்தது அந்த தற்காலிக குடில். முக்கியமாக, இரவு நேரங்களில் மாடுகள் உள்ளிட்ட விலங்குகள் பயிரை மேய்ந்துவிடாமல் தங்கிப் பார்த்துக்கொள்வதற்காகவே இந்தக் குடில் அமைக்கப்பட்டுள்ளது.
ராய்பூர் மாவட்டத்தின் பாராகாவ்ன் மற்றும் மகாசாமுண்ட் மாவட்டத்தின் கோதாரி ஆகிய ஊர்களை இணைக்கும் வகையில் மகாநதியின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அந்தப் பாலத்துக்குக் கீழே செல்லும் பசுமையான திட்டுகளைப் போலத் தெரிகிறது விவசாயம் செய்யப்பட்ட இடம். இரண்டு ஊர்களையும் சேர்ந்த விவசாயிகள், ஆற்றின் மணற்திட்டுகளை தங்களுக்குள் பிரித்துக்கொண்டு டிசம்பர் முதல் மே மாதக் கடைசியில் மழைக்காலம் தொடங்கும் வரை அங்கு பயிரிடுகிறார்கள்.














