“இந்தப்போராட்டங்கள் விவசாயிகளுடையது மட்டுமல்ல, விவசாய கூலித்தொழிலாளர்களுக்குமானது“ என்று ரேஷம் மற்றும் பீயன்ட் கவுர் இருவரும் கூறுகிறார்கள். “இந்த புதிய வேளாண் திருத்தச்சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால், அது விவசாயிகளை மட்டும் பாதிக்காது, அவர்களை சார்ந்துள்ள விவசாயக்கூலித் தொழிலாளர்களையும் அதிகமாக பாதிக்கும்“ என்று அவர்கள் மேலும் கூறுகிறார்கள்.
எனவே ஜனவரி 7ம் தேதி மதியம் இவ்விரு சகோதரிகளும் பஞ்சாபின் மக்ட்சர் மாவட்டத்தில் இருந்து பயணித்து வந்து தேசிய தலைநகரின் எல்லையில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்டவர்களை ஏற்றிக்கொண்டு 20க்கும் மேற்பட்ட பேருந்துகள் இரவில் மேற்கு டெல்லியின் திக்ரி பகுதியை அடைந்தன. அது வேளாண் திருத்தச்சட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடக்கும் ஒரு பகுதி ஆகும். இந்தப்பயணத்திற்கான ஏற்பாடுகளை பஞ்சாப் கேட் மசூர் யூனியன் அமைப்பு செய்திருந்தது. விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பத்திண்டா, பாரித்கோட், ஜலந்தர், மோகா, மக்ட்சர், பட்டியாலா மற்றும் சங்ரூர் மாவட்டங்களில் இருந்து வந்திருந்தனர். ரேஷமும், பியன்டும் மக்ட்சர் மாவட்டத்தில் உள்ள தங்கள் கிராமமான சான்னுவிலிருந்து இங்கு வந்த பேருந்துகள் ஒன்றில் ஏறியிருந்தனர்.
திக்ரி மற்றும் டெல்லி மற்றும் அதனைச்சுற்றியுள்ள மற்ற போராட்டக்களங்களிலும் நவம்பர் மாதம் 26ம் தேதி முதல், போராட்ட பிராசாரத்தில் நிறைய விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். மற்றவர்கள் சில நாட்கள் மட்டும் சேர்ந்துகொள்கின்றனர். பின்னர் வீடுகளுக்கு திரும்பி, ஊரில் உள்ள மற்றவர்களுக்கு போராட்டம் குறித்து தெரிவிக்கின்றனர். “எங்கள் ஊரில் உள்ள பலருக்கு இந்த சட்டங்கள் எவ்வாறு விவசாய கூலித்தொழிலாளர்களை பாதிக்கும் என்பது தெரியாது“ என்று கூறுகிறார் 24 வயதான ரேஷம். “உண்மையில் எங்கள் கிராமத்தில் உள்ள செய்தி தொலைக்காட்சிகள், இந்த வேளாண் சட்டம் விவசாயிகளுக்கும், விவசாயத்தொழிலாளர்களுக்கும் நன்மை கொடுப்பதாகவே கூறுகின்றன. இந்தச்சட்டம் நடைமுறைக்கு வரும்போது விவசாயத் தொழிலாளர்களுக்கு நிலம் வழங்கப்படும் மற்றும் சிறப்பான வசதிகள் வழங்கப்படும் என்று அவர்கள் கூறுகிறார்கள்“ என்று அவர் மேலும் தெரித்தார்.
விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020, விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020 மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 ஆகியவையே விவசாயிகள் எதிர்க்கும் மூன்று சட்டங்கள். 2020 ஜூன் 5 அன்று அவை ஆணைகளாக்கப்பட்டு செப்டம்பர் 14 அன்று பாராளுமன்றத்தில் மசோதாக்களாக தாக்கல் செய்யப்பட்டு எதிர்ப்பையும் மீறி வேகவேகமாகாக அதே மாத 20ம் தேதி சட்டமாக்கப்பட்டிருக்கின்றன. மேலும் அரசியல் சாசனத்தின் 32ம் பிரிவு வழங்கும் குடிமக்களுக்கான சட்டரீதியான பாதுகாப்பு உரிமையையும் இச்சட்டங்கள் பாதிப்பதாக விமர்சனம் எழுப்பப்படுகிறது.




