33 வயது நபா குமாருக்கு பருத்தி இழைகளும், நெசவு தறி ஏற்படுத்தும் ஓசையும் தான் தனது இளம் வயது நினைவுகளாக உள்ளன. ஆனால் ஐந்து தலைமுறைகளாக நெசவு தொழிலில் ஈடுபட்டிருந்த குடும்பத்தை சேர்ந்த அவர் தற்போது ஒரு வார்னிஷ் தயாரிப்பு நிறுவனத்தில் உதவியாளராக பணிபுரியும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார். தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பகுதியில் இருக்கும் தனது வீட்டின் பெரிய அறையில் நின்று கொண்டு “நெசவு தான் எங்கள் குலத் தொழில், இந்த அறையில் இரண்டு பெரிய தறிகள் இருந்தன” என்றார். தனது தந்தையும் அவரது சகோதரர்களும் பயன்படுத்திய தறிகள் பிரித்து அகற்றப்பட்டுவிட்டதாக அவர் வருந்துகிறார்.
சில ஆண்டுகள் முன்பு வரை நெசவு தொழில் செய்பவர்கள் பெருமளவில் வாழ்ந்து வந்த ஆரணி நகரை சென்னையிலிருந்து ஒன்றரை மணி நேர கார் பயணத்தில் அடையலாம். வெறும் 15 ஆண்டுகளில் 1000 தறிகளில் பெரும்பானமையானவை மறைந்து 400 தறிகள் மட்டுமே தற்போது எஞ்சியுள்ளன. நபா குமாரின் குடும்பமும் நெசவு தொழிலை கைவிட்ட குடும்பங்களில் ஒன்று. “இத்தொழிலால் பலன் ஏதும் இல்லை என 2009ம் ஆண்டில் நாங்கள் புரிந்து கொண்டோம். தினமும் 12 மணி நேரம் உழைத்தாலும் மாதம் 4000 ரூபாய் வருமானம் மட்டுமே ஈட்ட முடிந்தது” என கூறுகிறார். அவர் குடும்பத்தினாரால் அதிக வட்டிக்கு வாங்கப்பட்ட பத்தாயிரம் ரூபாய் கடனைக் கூட திரும்ப செலுத்த முடியவில்லை. மேலும் தறிகள் அமைக்கவும், கூட்டு குடும்பத்தின் திருமண செலவுகளும், இதர செலவுகளும் அவரது கடன் சுமையை அதிகரிக்க செய்தது. “எனது பத்தாம் வகுப்பு சான்றிதழை பெற்றுக் கொண்டு வங்கிகள் கடன் தர மறுத்து விட்டன. ஆனால், இப்போது கடனும், மானியமும் தருவதாக அவர்கள் கூறுகின்றனர். நாங்கள் வேறு பணிகளை தேடிக் கொண்டதால் இவைகளால் எந்த பலனும் இல்லை” என கவலையும் கோபமும் ஒரு சேர்ந்த குரலில் வினவுகிறார்.
அவரது தந்தை ஒரு நிறுவனத்தில் காவலாளியாக பணி புரிகிறார். இருவருமாக மாதம் ரூ.14,000/ வருமானம் பெறுகின்றனர். “எங்கள் வீட்டின் முன் பகுதியில் தான் தறி அமைத்திருந்தோம். இப்போது அதனை சமையல் அறையாக மாற்றி விட்டோம்”, என்றார்.
நபா குமார் போன்ற இளைஞர்களை ஆரணி நகர் முழுவதும் காண முடியும். அவரது வீட்டின் எதிரில் வசிக்கும் வி.எம்.விநாயகம் என்பவர் தனது வீட்டு மாடியின் அறையில் செயல்பாடற்ற தறியை பாதுகாத்து வருகிறார். அதனோடு மற்ற பயனற்ற பொருட்களும் இடம் பெற்றுள்ளன. அந்த பாழடைந்த பொருட்கள் இருக்கும் அறை தான் முன்பு அவரது குடும்பத்திற்க்கு வருவாய் ஈட்டி தந்தது. எனினும் தனது தறியை தூக்கியெறிய அவருக்கு மனம் வரவில்லை.
விநாயகமும் ஒரு தேர்ந்த நெசவாளர் தான், ஆனாலும் அவரது திறமைக்கு உரிய ஊதியம் கிடைக்கவில்லை. ஆனால் அவரது படைப்பின் அழகியல் மட்டும் பாராட்டு பெற்றது. கல்வி தகுதி எதுவும் இல்லாத அவர் சிறிது காலம் முன்பு வரை பட்டு சேலைகளை நெய்து வந்தார். சென்னையின் கடைகளில் இவரால் நெய்யப்பட்ட சேலைகள் ரூ.3000/ வரை விற்கப்பட்டன. ஆனால் அதிக சேலைகள் நெய்யும் மாதங்களில் கூட மாதம் ரூ.4,500/ வரை மட்டுமே இவருக்கு வருமானம் கிடைத்தது. அவரது மாத வருமானத்தால் அவரால் நெய்யப்பட்ட இரு சேலைகளை கூட அவரால் வாங்க முடியாத அவல நிலை தான் நிலவியது.
2011ம் ஆண்டு முதல் சென்னையின் புற நகர் பகுதிகளில் அதிக அளவில் தொழிற்ச் சாலைகள் உருவாக துவங்கின. அவரது கிராமத்திலிருந்து அரை மணி நேர பயணத்தில் அமைந்திருக்கும் கும்மிடிப்பூண்டியில் இரும்பு பொருட்கள் தயாரிக்கும் ஆலையில் மாதம் ரூ.6,000/ ஊதியத்தில் பணிக்கு சேர்ந்து விட்டார். “அத்தியாவசிய தேவைகளுக்கு இந்த சம்பளம் உதவுகிறது”, என கவலை தோய்ந்த முகத்துடன் கேமராவை நோக்கியபடி கூறினார்.
உச்சி வெயில் நேரத்தில் அவர்களது வீட்டிற்க்கு நடந்து செல்லும் போது அப்பகுதியின் முதன்மை நெசவாளரான பி.என். மோகன் உள்ளூர் நெசவு தொழில் குறித்த விவரங்களை விளக்கினார். ஆரணியில் பெரும்பாலானோர் தெலுங்கு மொழி பேசுபவர்கள். பள்ளிகளிலும் தெலுங்கு கற்பிக்கப்படுகிறது. புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நிறைந்த ஊர். 1980ம் ஆண்டுகளின் பிற்பகுதி வரை ஆரணி ஆற்றில் பருத்தி நூல்கள் சாயம் முக்கப்பட்டு 36” கெஜம் அளவிற்க்கு நெய்யும் வழக்கம் இருந்து வந்துள்ளது. அதன் பின்னர் பாலி-காட்டன் மற்றும் சில்க்-காட்டன் சேலைகள் சென்னையில் பிரபலமானதை தொடர்ந்து தறிகளின் எண்ணிக்கை அதிகரித்தது.
“தற்போது நிலை மாறி விட்டது. நெசவு தொழில் செய்பவர்களின் எண்ணிக்கை 5000 என்பதிலிருந்து 500 என குறைந்து விட்டது. இதில் 300 பேர் ஆந்திர மாநிலத்திலிருந்து புலம் பெயர்ந்து வந்த தொழிலாளர்கள்”, என மோகன் கூறுகிறார். 60 தறிகள் வரை செயல்பட்டு வந்த தனது தெருவில் வெறும் 6 தறிகள் மட்டும் உள்ளதாக தெரிவிக்கிறார். ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் சிரலா கிராமத்திலிருந்து வந்து மோகனால் பணியமர்த்தப்பட்டுள்ள லஷ்மி என்பவர் ஒரு தறியை இயக்குகிறார். செயற்கை இழைகளால் உருவாக்கப்பட்ட சேலை அணிந்திருக்கும் அவர் பட்டு சேலை நெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். ஒரு அறை மட்டும் உள்ள வீட்டில், மஞ்சள் கயிற்றை தாலியாகவும், கண்ணாடி வளையல்களை அணிகலன்களாகவும் அணிந்திருக்கிறார். ஆனாலும் இவற்றை குறித்த கவலைகள் ஏதுமின்றி மூன்று தறிகள் ஒன்றன் பின் ஒன்றாக அமைந்திருக்கும் குறுகிய அறையில் நாள் முழுவதும் மற்றொருவரின் பார்வைக்குக் கூட எட்டாத வண்ணம் பணியில் மூழ்கியிருக்குறார்.
குளிரூட்டப்பட்ட தனது அறையில் அமர்ந்து கொண்டு, “நேர்மையான நெசவாளர்கள் நேர விரயத்தை விரும்ப மாட்டார்கள்”, என கூறுகிறார் மோகன். 70 வயதான அவரது தந்தை சொக்கலிங்கம் கணக்கெழுதும் புத்தகங்களோடு அமர்ந்திருந்தார். பாவு, நாடா ஆகியவை குறித்த கவலையின்றி முதன்மை நெசவாளராக மாறிவிட்ட மோகனின் தொழில் முன்னேற்றம் காரணமாக நிம்மதி கொள்கிறார் அவரது தந்தை. (முதன்மை நெசவாளர்கள் நெசவிற்கான பொருட்களை தொழிலாளர்களுக்கு வழங்கி, அவர்களிடமிருந்து நெசவு செய்யப்பட்ட சேலைகள் மற்றும் துணிகளை பெற்றுக் கொள்வர். இப்பொருட்களை நகரங்களின் சந்தையில் அதிக லாபத்தில் விற்பனை செய்து கொள்வர்).
மோகன் கட்டியிருக்கும் புதிய வீடு அவரது தொழிலின் வெற்றியை பறைசாற்றுவதாகவே அமைந்திருக்கிறது. நகர வீடுகளின் சாயலில் சாம்பல் நிறத்தில் வண்ணம் பூசப்பட்டு மஞ்சள் நிற வண்ணத்தால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. ஆரணியின் மணல் தெருக்களுக்கு ஒவ்வாத அமைப்புடன் அவ்வீடு அமைந்திருக்கிறது. அவர்களது அண்டை வீட்டினரை போலவே சில காலம் முன்பு வரை ஓடுகள் வேய்ந்த வீட்டில் தான் இவர்களும் குடியிருந்தனர். “எங்களிடம் இரண்டு தறிகள் இருந்தன. அவற்றில் முழு நேரமும் பணி செய்து கொண்டு தான் இருந்தோம். ஒரு நெசவாளரின் வாழ்க்கை என்பது நெசவு செய்யும் போது மேலும் கீழுமாக கையசைப்பது தனது வெற்று வயிற்றிற்க்கு உணவு கிடைக்கும் என்ற நம்பிக்கையை உருவாக்குவது” என விளக்குகிறார் மோகன்.
சென்னை நகரம் அதன் சுற்றுப்புற பகுதிகளை விழுங்கி பெரும் வளர்ச்சி அடைய துவங்கிய போது இப்பகுதி நெசவாளர்களும் வேறு பணிகளை நோக்கி நகர துவங்கினர். இவர்களில் ஒரு கல்லூரி உணவகத்தில் உணவு பரிமாறும் வேலை செய்யும் வாசுவும் ஒருவர். நெசவு தொழிலை விட பன்மடங்கு எளிமையான இவ்வேலை செய்வதன் மூலம் அவருக்கு மாதம் ரூ.5,000/ ஊதியம் கிடைக்கிறது. இது மிகப் பெரிய வருமானமாக தோன்ற வாய்ப்பில்லை. ஆனால் மொத்த குடும்பமும் நெசவு செய்தால் மட்டுமே மாதம் ரூ.4,000/ ஈட்ட முடியும் என்கிறார் வாசு. “எனது ஊதியத்துடன், நூல் நூற்பதன் மூலம் மனைவி மாதம் ரூ.1,500/ ஊதியமாக பெறுகிறார்”, என கூறுகிறார் அவர். அவரது இரு மகன்களும் கணிப்பொறி மெக்கானிக், தண்ணீர் கேன் வழங்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். எந்த பலனும் இல்லை என்ற நிலையில் தனது நெசவு தறியை பிரித்து எடைக்கு விற்று விட்டார் வாசு.
“சிலர் தறிகளை பிரித்து சமையல் செய்ய எரிபொருளாக பயன்படுத்திக் கொண்டனர்”, என தனது தறிக்கான மர பொருட்களை பாதுகாக்கும் மாடத்தின் கீழ் நின்று கூறுகிறார் நாப குமார்.
அரை மணி நேர பயணத்தில் அமைந்திருக்கும் சோழவரத்தில் பணிபுரியும் குமார் மாதம் ரூ.7,000/ ஊதியம் பெறுகிறார். காலை 9 மணி முதல் மாலை 6.30 மணி வரை இவ்வூதியம் பெற வேலை செய்ய வேண்டும். அவரது தந்தை நாப கோபி காவலாளியாக பணி புரிகிறார். தினமும் 12 மணி நேரம் வேலை செய்யும் அவருக்கு ஊதியம் ரூ.7,000/. இந்த வேலையை பெற அவரது தனது தலை முடிக்கு கறுப்பு சாயம் பூசும் படி அறிவுறுத்தப்பட்டார். “நான் வயதானவனாக தெரிவதான் எனது மேலதிகாரி முடிக்கு கறுப்பு சாயம் பூசுமாறு கூறிவிட்டார்”, என நகைச்சுவையுடன் கூறுகிறார் கோபி.
இப்பகுதி ஆண்கள் நெசவு தொழிலை கைவிட மற்றொரு முக்கிய காரணமும் உள்ளது. நெசவு தொழில் செய்யும் எவருக்கும் பெண் கொடுக்க இப்பகுதியினர் தயாராக இல்லை. மோகனின் சகோதரர் 17 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொள்ள பெரும் சிரமம் கொண்டார். இப்போது அதே நிலை நாப குமாருக்கு உருவாகியுள்ளது. ஒரு நெசவாளரை திருமணம் செய்வது என்பது அறிந்தே காலம் முழுவதும் துயர வாழ்வை மேற்கொள்ள உடன்படிக்கை செய்வதற்க்கு சமம் என கருதப்படுகிறது.
இவ்வாறாக ஆரணியின் திறன்வாய்ந்த நெசவாளர்கள் உணவகங்களிலும், பேருந்துகளிலும் உதவியாளர்களாக பணி புரிய துவங்கி விட்டனர். இவர்களுக்கு ஓட்டுனர்கள், காவலர்கள், அலுவலக உதவியாளகள் பணி பெறுவது பெரும் லட்சியமாக உள்ளது. இவர்கள் இந்நிலைக்கு ஆளாகிவிட்டதன் மூலம் பல தலைமுறைகளாக செய்யப்பட்டு வந்த ஒரு சிறந்த கைவினை தொழில் அழிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. தற்போது ஒரு நாள் வேலை முடிந்தும் கலை நயம்மிக்க எந்த பொருளும் அவர்களால் உருவாக்கப்படுவது வில்லை. ஆனால் அவர்களுக்கு உண்ண உணவும், சிறிதளவேனும் பணமும் மிஞ்சுகிறது. அவர்களது அசாதாரணமான எந்த திறமைகளையும் பயன்படுத்தாமல் அவர்கள் நெசவு தொழில் செய்து சம்பாதித்ததை விட இருமடங்கு இப்போது சம்பாதிக்கின்றனர்.
இக்கட்டுரை 'கிராமப்புற தமிழகத்தின் அருகிப்போன வாழ்வாதாரங்கள்' என்ற தொடரின் ஒரு பகுதியாகும் மற்றும் என்.எஃப்.ஐ. தேசிய ஊடக விருது 2015-ன் கீழ் ஆதரிக்கப்படுகிறது.
தமிழில் ஆ நீலாம்பரன்