அவர்கள் வந்தார்கள்.பேரணி நடத்தினார்கள்.நாட்டின் பாராளுமன்றத்தின் வாயிலிலேயே கோஷங்களை முழங்கினார்கள்.அரசியல் தலைமைகளை தங்கள் முன்வந்து பேச நிர்பந்தித்தார்கள். இறுதியில் அவர்கள் நிமிர்ந்த தலைகளோடு புறப்பட்டார்கள்.
ஆனால் அது அவ்வளவு எளிதான காரியமாக அமையவில்லை.நவம்பர் 30ன் குளிர் காலையில் தூக்கம் கலைந்து எழுகையில் தாரா தேவியின் எலும்புகளில் ஓசைகள் எழுந்தன.”திறந்த வெளி தரையில(ராம்லீலா மைதானத்தில்) தூங்கினதால என் உடம்பு விரைத்துவிட்டது” என்கிறார் அவர். வாரணாசியிலிருந்து வந்திருக்கும் அவர் அந்த இரவிற்கு முன் 14மணி நேரத்திற்கும் மேல் ரயில் பயணத்தில் கழித்திருக்கிறார்.”என் கம்பளிச் சட்டையும் கிழிஞ்சுபோச்சு. என்கிட்ட கணமான போர்வையும் இல்ல” என்று கூறுகிறார். காலை 8 மணிக்கு தன்னார்வலர்கள் வழங்கிய கிச்சடியை உண்டபின் அவர் ராம்லீலா மைதானத்திலேயே அதிக பரபரப்பாக இருந்த ஒரு இடத்திற்கு செல்கிறார்.அங்கு தன்னார்வ மருத்துவக் குழுவினர் தங்களை அணுகும் அனைவருக்கும் மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்தனர்.
மத்திய டெல்லியில் இருக்கும் அந்த மைதானத்தில் தங்கியிருக்கும் பத்தாயிரக் கணக்கான விவசாயிகளில் பலர் மருந்துகள் வேண்டி மருத்துவர்களை பார்த்தனர்.நவம்பர் 28 அன்று, தெரு விளக்குகள் இல்லாத அந்த இருண்ட இரவில் வெளிச்சத்திற்காக விவசாயிகள் சிலர் தங்கள் இருசக்கர வாகனத்தின் முன் விளக்குகளை அணைக்காமல் நிறுத்திவிட்டு சென்றனர்.”பலபேர் வந்து இருமல்,சளி மற்றும் மேல்வலி பிரச்சனைகள் இருக்குன்னு சொன்னாங்க” என்று விவசாயிகளைப் பார்த்துக் கொண்டே அவர்கள் படும் சிரமங்களை விவரிக்கிறார் மருத்துவர் கே.கே.மிட்டல். ”அவங்க அவங்களோட வயல்கள விட்டு இந்த காற்று மாசுபட்ட டெல்லிக்கு வந்திருக்காங்க”.
தனது கைகள் கால்கள் மற்றும் வயிறு ஆகிய இடங்களில் வலி இருப்பதாகவும் குமட்டல் பிரச்சனை இருப்பதாகவும் தாரா தேவி கூறுகிறார்.”இந்த நாள் முடியுற வர நான் தெம்பா இருக்கணும்” என்கிறார் அவர்.
இதற்கிடையில் மேலும் பல விவசாயிகள் ராம்லீலா மைதானத்திற்குள் மேளம் வாசித்துக் கொண்டும் பாடல்கள் பாடிக்கொண்டும் நாட்டுப்புற நடனங்கள் ஆடிக்கொண்டும் வந்தவண்ணம் உள்ளனர்.எண்ணிக்கை தற்போது 50000த்தை எட்டி அந்த சூழலே புத்துணர்ச்சி ஊட்டுவதாக பேரணியின் அமைப்பாளர்கள் கூறுகின்றனர்.
150 முதல் 200 விவசாய சங்கங்களை உள்ளடக்கிய All India Kisan Sangarsh Coordination Committee(AIKSCC) நாடு முழுவதும் உள்ள விவசாயிகளை பாராளுமன்றத்தை நோக்கி அணிவகுத்து செல்வதற்கு ஒன்று திரட்டியுள்ளது. விவசாயிகள் பிரச்சனைகளுக்காக பிரத்யேக 21நாள் அமர்வு நடத்தப்பட வேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர்.1995ல் இருந்து 2015ஆம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் 3லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பல வண்ணங்களில் இங்கு வந்துள்ளனர். மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சிவப்பு வண்ணத்திலும் உத்திரப்பிரதேச விவசாயிகள் மஞ்சள் வண்ணத்திலும் மத்தியப்பிரதேச விவசாயிகள் ஊதா வண்ணத்திலும் மற்றும் தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கும் விவசாயிகள் பச்சை வண்ணத்திலும் மேல் சட்டைகள் அணிந்து வந்துள்ளனர். ராம்லீலா மைதானமே ஒரு நம்பிக்கை வானவில்லாக மாறியிருக்கிறது.
தேசிய விவாசயிகள் ஆணையத்தின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதும் கடன் தள்ளுபடிகளும் அவர்களின் முக்கிய கோரிக்கைகளாக உள்ள நிலையில் விவசாயிகளின் முதன்மை பிரச்சனைகள் அவர்கள் வசிக்கும் பகுதிகளைப் பொறுத்து வேறுபடுகின்றன.
மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு விவசாயக் குழுவினர் தேவையான நீர் பாசன வசதிகள் இல்லாமை, தண்ணீர் தட்டுப்பாடு மற்றும் நியாயமற்ற பயிர் காப்பீட்டு திட்டம் ஆகியவற்றை தங்களின் குறைகளாக கூறுகின்றனர். அதே மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடி விவசாயிகள் அவர்கள் பயிரிடும் நிலங்களின் உரிமைகளை அவர்களுக்கே வழங்கும் 2006ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வன உரிமைகள் சட்டம் அமல் படுத்தப்பட வேண்டும் என்று கோருகின்றனர்.
பஞ்சாப் மாநில விவசாயிகளுக்கு அரிசி மற்றும் கோதுமையின் குறைந்தபட்ச ஆதார விலை(MSP)யே முதன்மை கோரிக்கையாக உள்ளது.டீசல் விலை உயர்வோடு சேர்ந்து உரம் மற்றும் பூச்சிக்கொள்ளிகளின் விலையுயர்வும் பயிர்செய்யும் முதலீட்டு செலவை கூட்டி விட்டதாகவும் ஆனால் பயிர்களின் விலைகள் அதற்கேற்ப கூடவில்லை எனவும் பாட்டியாலா நகரத்தின் புற எல்லையிலிருந்து வந்துள்ள ஜித்தார் சிங் கூறுகிறார்.”கடந்த இருபது ஆண்டுகளில் விவசாயிகளின் வாழ்க்கை நிலை நாட்டின் மற்ற மக்களின் வாழ்க்கை நிலையோடு சமமாக வளர்ந்துள்ளதா?” என்ற கேள்வியினை கேட்டுக் கொண்டே ராம்லீலா மைதானத்தில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள சன்சாத் மார்க்(பாராளுமன்ற வீதி) நோக்கி காலை பத்து மணிக்கு டெல்லியின் வீதிகளில் நடந்து செல்கிறார் ஜித்தார் சிங்.”மோடி அரசு உறுதியளித்த கடன் தள்ளுபடி நிறைவேற்றப்படவில்லை. பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசும்கூட அதை செய்யவில்லை”.
ஏந்தப்பட்ட கொடிகளோடும் பலகைகளோடும் போராட்டக்காரர்கள் தடுப்புகள் மற்றும் காவலாளிகளினூடே சாலையின் ஒரு ஓரப் பகுதியை ஆக்கிரமித்துச் செல்கின்றனர். சில பெண் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட தங்கள் கணவர்களின் புகைப்படங்களை ஏந்தியிருக்கின்றனர்.பாடல்களும் முழக்கங்களும் தீர்க்கமாக மீண்டும் மீண்டும் ஒலிக்கின்றன. மதியம் 12 மணியளவில் அவர்கள் சன்சாத் மார்கில் தலைமையாளர்கள் பேசுவதற்கு மேடை அமைக்கப்பட்டிருக்கும் இடத்தை அடைகின்றனர்.
சில விவசாயிகள் மெல்லிய சாக்குகளை விரித்து அமருகின்றர். மற்றவர்கள் தாள்களை விரித்து அமருகின்றனர்.அவர்கள் வீதியின் ஒரு மூலையில் இருந்து மறு மூலை வரை நிறைந்திருக்கின்றனர்.காலையிலேயே வந்திருந்தவர்கள் பக்ரி ரொட்டியும் சட்னியும் செய்தித்தாள்களில் மடித்து கொண்டு வந்திருக்கின்றனர்.ஒரு நாளுக்கும் மேலாக டெல்லியிலேயே தங்கியிருந்த மற்றவர்களில் பலர் வீதியில் ஆங்காங்கே இருக்கும் உணவு கடைகளில் சாப்பிட சென்ற வண்ணம் இருகின்றனர்.
உரைகள் மாலை 4.30மணிவரை தொடர்ந்தன.நாடு முழுவதுமிருந்து பல முக்கிய தலைவர்கள் அக்கூட்டத்தில் பேச வந்திருக்கின்றனர். மாலை நேரம் தொடர எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் பலர் மேடையை நிறைத்த வண்ணம் உள்ளனர்.குறிப்பாக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தேசிய மாநாடு கட்சித்தலைவர் பாரூக் அப்துல்லா, சமாஜ்வாடி கட்சித்தலைவர் சரத் யாதவ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சித்தலைவர் சரத் பவார் ஆகியோர் வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் ஆளுங்கட்சியின் விவசாயிகள் பிரச்சனைகளைக் கண்டுகொள்ளாத அலட்சியப் போக்கினை கண்டித்துப்பேசி விவசாயிகளுக்கு தாங்கள் ஆதரவு அளிப்பதாக உறுதிமொழி கூறுகின்றனர்.விவசாயிகளில் சிலர் கூர்ந்து கவனிக்கின்றனர்.மற்றவர்கள் கடினமான கடந்த மூன்று நாட்களின் களைப்பை போக்க ஓய்வெடுக்கின்றனர். மாலைநேரம் முடிவுக்கு வரவும் நிகழ்ச்சிகள் நிறைவடைகின்றன. விவசாயிகள் தங்கள் உடைமைகளை உள்ளடக்கிய தோள்பைகள் அல்லது துணிப்பைகளை எடுத்துக்கொண்டு நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள தங்களின் வீடுகளுக்குத் திரும்ப புறப்பட்டனர்.
“அவ்வளவுதானா? அடுத்தது என்ன?”.சில பத்திரிக்கையாளர்கள் சந்தேகக்கேள்விகள் எழுப்பினாலும் விவசாயிகள் டெல்லி வரை வந்த தங்களின் இந்த கடின முயற்சி முழுவதும் பயனுள்ளது என்றே எண்ணுகின்றனர்.பீகாரின் நவ்வா கிராமத்தின் தலைவர் கௌசல்யா தேவி இந்தப் பேரணியிலிருந்து நம்பிக்கையை பெற்றுக் கொண்டு வீடுதிரும்புகிறார்.”அரசியல் தலைவர்கள் ஆதரவு கொடுத்துருக்காங்க,பத்திரிக்கையாளர்கள் எங்க பேரணியை படம் புடிச்சுருக்காங்க.நிறைய விவசாயிகள் வந்திருக்காங்க” என்று பேரணிக்குப்பின் நம்பிக்கையோடு கூறிக்கொண்டே சாக்லேட் ஐஸ்கிரீமை சுவைக்கிறார் கௌசல்யா.”பிரச்சனைகளை நாம மட்டும் தனியா சந்திக்கல.ஆயிரக்கணக்கான பேர் நம்மளோட வலியை பகிர்ந்துக்க இருக்குறாங்கனு தெரிஞ்சுக்கும் போது நம்பிக்கையாதான் இருக்கு”.
தமிழில்: கருப்பசாமி